மலைத்தேன்

மலைத்தேன்
Published on

முதுமையின் தளர்ச்சி துளியும் இல்லாமல் அடையாறு ஆலமரம் போல கம்பீரமாக நிஜமாகவே 94 வயது இளைஞனாக தத்ரூபப்படத்தில் சிங்கீதம் சீனிவாசராவை பார்த்தபோது மலைத்தேன். 2026 புத்தாண்டு பரிசாக அந்திமழை விருது பெற்றதோடு இன்றும் படம் இயக்குகிறார் என்றதும் திகைத்தேன். சமீபத்திய அமீர்கான் படத்தையும் பார்த்திருக்கிறார் என்றபோது அப்டேட்டாக இருக்கும் அவரது ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன். வயது என்பது ஒரு எண்தான். முதுமை என்பதும் ஒரு பருவம்தான் என்று என் 65 வயதுக்கு பாடம் எடுத்தாரே! நெகிழ்ந்தேன். பூஸ்ட் ஆஃப் எனர்ஜியாக அமைந்தது அவரது நேர்காணலின் ராஜபார்வை பக்கங்கள்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

சிறப்பு

டிசம்பர் மாத இதழில் வந்த அனைத்துச் செய்திகளும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. மகாகவி பாரதி, தன்னை உயிராக நேசித்த பரலி சு. நெல்லையப்பருக்கு ஒரு கடிதம் எழுதினார் நூறு ஆண்டுகளுக்கு முன்.

ஒரு சிறந்த பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று தனது கனவை, அந்தக் கடிதத்தில் மிக ஆழமாக எழுதியிருந்தார் அமரகவி.

அதில், “புதிய புதிய செய்தி… புதிய புதிய யோசனைகள்… புதிய புதிய உண்மை… புதிய இன்பம்… தமிழில் எழுதிக் கொண்டே போக வேண்டும்.” என்ற அவரது வரிகள் உன்னதமானவை.                                                       

அன்று அவர் கூறியதற்கேற்ப, அந்திமழை இதழும், மாதா மாதம் புத்தம் புது விவாதங்கள், நல்ல தரமான, வாழ்க்கைக்குத் தேவையான சிறப்புப் பக்கங்களுடன் வெளியாகிறது.

லயன் கா. முத்துகிருஷ்ணன், மதுரை.

தகவல்கள்

நடிகர் அஜித்குமார் அவர்களின் கார் பந்தயத் தகவல்கள் படிப்பதற்்கு சிறப்பாக இருந்தன.

விஜயன், பல்லடம்.

அவசியம்

டிசம்பர் இதழின் சிறப்புப் பக்கங்களில், பிசினஸ் முதல் இலக்கியம் வரை – பொறுமை என்னும் முதலீடு என்ற தலைப்பிலான கட்டுரைகள் பொறுமையின் அவசியத்தை வலியுறுத்தின

காசி யோக அக்‌ஷயா, கோவை.

கனமானது

ரவிராம் தொகுத்தளிக்கும் அட்டைப்பட நாயகர் அஜித்தின் கார்காலம் கட்டுரை சிறிதாயினும் சிந்திக்கத்தக்க கருத்துகள் அதிகம். இப்போதுதான் 54இல் காலடி எடுத்து வைக்கிறேன் இன்னும் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு கார் பந்தயத்தில் என்னை முழுமையாக அர்ப்பணிக்கவே ஆசைப்படுகிறேன் என்னும் தன்னம்பிக்கை தரும் அஜித்தின் விழைவு வெற்றி பெறுவதாகும்.

அந்திமழை விருது பெற்ற 94 வயதான இளைஞர் சங்கீதம் சீனிவாச ராவ் அவர்களின் சந்திப்பை மிகச்சிறந்த நேர்காணலாகப் பதிவுசெய்து நிறைவான தகவல்களை புதியவர்கள் அறிய தந்திருக்கிற அந்திமழை செய்தியாளர்களின் பணி பாராட்டத்தக்கதே! ஐஏஎஸ் எனும் பதவி எவ்வளவு பொறுப்பு மிக்கது, முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தொகுத்தளித்திருக்கும்  ‘நீங்கள் போட்டியிட வேண்டியது உங்களுடன் தான்’ மதிமலர் நேர்காணல் கட்டுரை கனமானது.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை.

பாடங்கள்

நடிகர் அஜித் சினிமாவில் நல்ல கதைகளில் நடித்து மக்களுக்கு அறிவுரை சொல்லலாம். சங்கீதம் சீனிவாச ராவ் 94 வயதிலும் படம் தயாரிப்பதைப் பாராட்டலாம். பீகார் தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டணிக்கு ஒரு பாடம். யுபிஎஸ்சி சஜ்ஜன் யாதவ் தன் முயற்சியில் படித்து ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பது இன்றைய இளைஞர்களுக்குப் பாடம். மனது வைத்தால் சாதிக்கலாம் என்பதற்கு நிழல் திருநாவுக்கரசு ஒரு பாடம்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்.

அருமை

டிசம்பர் இதழில் கட்டுரைகள் படிப்பதற்கு அருமையாக இருந்தன.

எஸ். பரமேஸ்வரி பெருமாள், பழனி.

கருத்துகள்

தொடரட்டும் தங்கள் பணி. தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு விவரமாக இதழ்கள் எழுதியதில்லை. நல்ல பல கருத்துகளைத் தாங்கி வலம் வருகிறது.

இராமு பிள்ளை, பெரம்பலூர்.

காலத்துக்கு ஏற்ப

உங்கள் பொறுமைக்கு அளவே இல்லையா? என்ற அருமையான சிறப்புப் பக்கங்கள் அனைத்தும் படித்தேன். காலத்திற்கு ஏற்ற சிறந்த கட்டுரைகளைத் தந்தமைக்கு மிக்க நன்றி. எல்லா வயதினரும் படிக்க வேண்டிய, மிக உன்னதமான கட்டுரைகள்.

ஜே, மகரூப், குலசேகரன்பட்டினம்.

ஏமாற்றம்

புண்தேர் விளக்கு கவிதை அருமை. இதழிற்கே மணிமகுடம் சூட்டியது போலுள்ளது. படமும் அருமை.

பீகார் வெற்றியைப் பற்றிய கட்டுரை சூப்பர். கடைசி வரிகளை கொட்டை எழுத்துகளில் போட்டிருக்கலாம். அஜித்தின் கார்காலம் கட்டுரை அருமை. அவர் ரேஸ் வீரராக சாதனை செய்ய வாழ்த்துகள். அஜித்தின் சினிமா ரசிகனாக இந்த பேட்டியை படித்து ஏமாற்றம் அடைந்தேன்.

அ. முரளிதரன், மதுரை.

நன்றி

அறிவுமதியின் அறிவுப்பூர்வமான கவிதை படித்தேன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே போர்க்களத்தில் புண்பட்ட வர்களை ஆற்றுப்படுத்தி, ஆறுதல்படுத்தி வீரர்களுக்கு முறையான சிகிச்சை செய்து கையில் விளக்குடன் அந்திமழையில் அழகான காட்சி தருகிறாள் என்றால் தாய் வழிச்சமூகம் ஒருகாலத்தில் வலிமையாக இருந்திருக்கிறது. எழுத்து அறிவுமதி, தூரிகை ரவிபேலட் இருவருக்கும் நன்றி.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.

பொறுமை

பொறுமையைப் பற்றி வெளியான கட்டுரைகளைப் படித்தேன், பொறுமை கடலினும் பெரிது என்று முன்னர் எங்கோ படித்தது சிந்தையில் உதித்தது. பொறுத்தார் பூமியாள்வார் என்பதும் புலப்பட்டது.

உத்தமன்ராஜா, தென்காசி

பதில்

 பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் தஞ்சம் புகுபவர்களில் அதிகம் பிகாரிகள்தான். இன்னும் வளர்ச்சியே காணாத வறண்ட மாநிலம், 20 வருடங்களாக ஒருவரை(நிதீஷ் குமாரை)யே முதல்வராக்குவது அறியாமையின் வெளிப்பாடா! அல்லது அரசியல் புரிதல் வரவிடாத பொதுபுத்தியின் அடிமைத்தனமா?

சுயசிந்தனையோடு பகுத்தறிவை நடுநிலையோடு வளர்த்துக் கொள்ளும் அறிவியல்தனம் இந்தியர்களுக்கு அத்யாவசியம் என்பதே "பீகார் வெற்றி. அடுத்தது என்ன?" என்ற கட்டுரை கேள்விக்கு பதிலாகும்.

 அ. யாழினி பர்வதம், சென்னை-78.

பாடம்

சிங்கீதம் சீனிவாசராவ் பாடும் சங்கீத வாழ்க்கை, தனது 94 வது வயதிலும், அனைத்து 'வயதான'வர்களுக்கும், ஒரு பாடம். சிங்கீதம் சீனிவாசராவ் வாழ்க்கை, 94 வயதிலும் திரைப்படம் இயக்குகிறார் என்கிற அனுபவம், ஒரு சுகானுபவம், மனதுக்கு ஒரு மாமருந்து. இப்படிப்பட்ட செய்திகள் நாளும் பரவட்டும்...

ந. செளந்தரராஜன், புழுதிவாக்கம்,

வெளிச்சம்

புண் தேர் விளக்கு!' என்ற (அகநா -111) விளக்கம் இலக்கிய வெளிச்சம்! மூவாயிரம் ஆண்டுக்கு முன்னரே சங்கத் தமிழ்க் களத்தில் மருத்துவ விளக்கேற்றிய தமிழச்சியை ஆராதனை புரிந்திருப்பது அற்புதம் !

ஆர். உமா காயத்ரி, மணலிவிளை

வைராக்கியம்

அஜித்தின் கார் காலம்!' என்ற தொகுப்பு சிறிதாக இருந்தாலும், 'கார் ரேஸ்' பற்றிய அவரது பித்த நிலை நிஜத்தில் ஒரு  ‘சித்த'(ர்) நிலை தான் ! 54 வயதில் வேகம் குன்றாமல் மேலும் கால் நூற்றாண்டுக் கான வைராக்கியத்தோடு அவர் முழங்குவதைப் பார்த்தால் கார்காலத்திற்கு ஓர் பொற்காலம் என்றே தோன்றுகிறது!

ஆர்.விநாயகராமன்,செல்வமருதூர்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com