பெண்ணின் அக உலகம்
Office

பெண்ணின் அக உலகம்

‘இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிப்போம்' என்ற தலைப்பில் புஷ்கர்-காயத்ரி தம்பதி பேட்டி படித்தேன், அருமை. அழகான பேட்டி. ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...'என்ற கண்ணதாசன் காதல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.இயக்குநர் என்றால் ஆண் இயக்குநர். தனிக்காட்டு ராஜாவாக சாதனை படைத்த காலம் மாறி, தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அழகான படம் எடுக்கிறார்கள். விக்ரம் வேதா அனுபவித்துப் பார்த்தேன். அடுத்த தேடுதலை நோக்கி கதை நகர்ந்து செல்கிறது. நல்ல வேளை அவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதவில்லை. மாவட்ட ஆட்சியர் ஆகியிருந்தால் விக்ரம் வேதா போன்ற கதை சொல்ல எங்களுக்கு யார் கிடைப்பார்கள்? அம்புலி மாமாவில் வரும் வேதாளம் கேட்கும் கேள்விக்கு விக்கிரமாதித்தன் என்ன பதில் சொல்வான்? அந்த காத்திருப்பின் நேரத்தில் தான் கதை செல்கிறது. வண்ணதாசனின் அற்புதமான கதை முதலில் பார்ப்பவள் - பெண்களின் அக உலகை அழகாகச் சொன்ன கதை.

எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக்குளம் - 642113

வித்தியாசமான பதில்கள்

முள்ளரும்பு மரங்கள் கட்டுரைத் தொடர் சூப்பர். அதற்கான படங்கள் டபுள் சூப்பர். திரையில் படிந்த நிழல் தலைப்பிலான கட்டுரைகள் சூப்பர். அதற்கான கடைசி வரி மட்டும் செம தூள் தலைவா!

ரவிக்குமார் எம்.பி. பேட்டி சூப்பர். மிகவும் வித்தியாசமான கேள்விகளுக்கு வித்தியாசமாகப் பதில் தந்துள்ளார். அம்பேத்கர் பற்றிய அவரது நூல் வெற்றிகரமாக வெளிவர வாழ்த்துகள்.

அ.முரளிதரன், மதுரை - 03

எப்படி?

புறக்கணிப்பை புறந்தள்ளி இன்னொரு படம் கேட்டு இற(ர)ங்கிய சீனுராமசாமியின் இசைஞானி மீதான பக்தியை கட்டுரை முழுவதும் கண்டு மனம் கலங்கியது. மகன் கார்த்திக் ராஜாவே பற்ற வைத்தாலும், இயக்குநர் இல்லாமல் பாடல்

கம்போசிங்கோ, ரீ- ரிக்கார்டிங்கோ செய்ய இளையராஜா எப்படி இசைந்தார்! என்னத்த சொல்வது! விளக்குக்கு கீழேயும் இருட்டு உண்டே!

மல்லிகா அன்பழகன், சென்னை - 78

எம்பூட்டு ஆசை தெரியுமா?

‘அந்திமழை'யின் அம்பூட்டுப் பக்கங்களுமே அலசல் பக்கங்கள் தான் என்றாலும் எனது மனசு மட்டும் வாங்கின உடனே கடைசிப் பக்கத்திற்குப் போகும். எம்பூட்டு ஆசைத்தெரியுமா ‘திரைவலம்' பகுதியில் உலாவர! பரவாயில்ல ‘விக்ரம்'ல ஆரம்பிச்சது! ஏன்னா அதுவெறும் சத்தம் தானே! கமல் நல்லவரா கெட்டவரான்னு உதயநிதிகிட்ட தான் கேட்டுச் சொல்லணும்! நல்ல வேளை.

‘ஓ2' பட விமர்சனம் ஓகே! ‘பட்டாம்பூச்சி' தான் சிட்டாப் பறந்துடுச்சே! ‘மாமனிதன்' இந்த ஆண்டு மாம்பழ சீசன் போல அச்சு! ‘சுழல்' தான் தணல்! பத்திக்கிட்டுச்சு! குட்!

ஆர். உமாராமர், திசையன்விளை- 627657

வெள்ளித்திரை

கோடீஸ்வர ராவ் அவர்களின் ‘புஷ்பா எவனுக்கும் அடங்க மாட்டான்' கட்டுரையில் வெள்ளித்திரையில் குற்ற உலகை சிறப்பாக சுட்டிக் காட்டியுள்ளார்.

கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய் நல்லூர்

பிறவிஜோடி

புஷ்கர் காயத்ரி தம்பதியின் நேர்காணல் அருமை. இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிப்போம் என்ற கருத்தில் கூட உறுத்தும் மாறுபாட்டைக் காண முடியவில்லை. கல்லூரிக் காலம் முதல் சேர்ந்து எழுதி வரும் ஜோடியின் ‘நாடி‘யைக் கணக்கிட்டதில் ஒன்று புரிந்தது இது பிறவி ஜோடி என்று!

ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை- 627657

எண்ணத்தக்கது

ராஜாசந்திரசேகர் எழுதும் அகம்முகம் மனித மனங்களை படம் சொல்லும் கதை வழியே அப்படியே படம் பிடித்திருப்பது சிந்தனையை செப்பமிடுவதாக அமையப் பெற்றிருந்தது. கத்தரிக்கோல் மனோபாவம் துயரத்தின் நினைவுகள் நம்மைக் கட்டிப்போட்டு வரும் எனில் மிகையல்ல!

மனம் ஒத்த தம்பதியராக சினிமா உலகில் சுவடு பதிக்கும் புஷ்கர் காயத்ரி நேர்காணல் நன்று. கணேஷ் சுப்புராஜ் எழுதியிருக்கும் குற்ற உலகில் நேர்மையான கதாநாயகன் கட்டுரை, சுவைபட சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மார்த்தி, எம்.கே.மணி, கருந்தேள் ராஜேஷ், கோடீஸ்வர ராவ் மற்றும் மதியழகன் சுப்பையா எழுதியிருந்த கட்டுரைகளும் அழுத்தமாக பதிவாகியிருந்தன. இந்தியாவில் சாதி அடையாளங்களைக் கடந்து, சாதியற்ற ஒரு தன்னிலை அடையாளமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே முன் வைக்கப்பட்டதுதான் ஆதிதிராவிடர் என்ற அடையாளம். அது எந்த சாதியின் பெயரும் கிடையாது. சாதிகளைக் கடந்த சொல் அது. ரவிக்குமார் கருத்து எண்ணத்தக்கது.

பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை

சுவாரசியம்

ஜூலை மாத அந்திமழை இதழ் ஐம்பது ஆண்டு கால திரைப்பட வரலாறு. இன்றைய சந்ததியினருக்கு ஒரு தெளிவு கிடைக்கும். டாக்டர் எஸ்.முத்துகிருஷ்ணன் கட்டுரையில் நாகத்திற்கு எப்படி வைத்தியம் செய்வது. மாட்டை எப்படிப் பிடிப்பது என்று உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுள்ளார்கள் என்பதை வாசிக்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது.

தோழர் இரா.சண்முகவேல், கீழக்கலங்கல் - 627 860

மேன்மை நோக்கி

எழுத்தாளர் வண்ணதாசன் வழக்கம்போல் தன் சிறுகதையில் பல நுணுக்கமான மடிப்புகளை வைத்து நெய்து உள்ளார். ஆட்களின் அக உலகுக்குள் அனாயசியமாகப் புகுந்து புறப்படுகிறாரே? எழுத்தும் சொற்களும் மென்மையாகத்தான் இருக்கின்றன. ஆனால் அதன் பின்னிருக்கும் மானுட உணர்வுகள் பிரமாண்டம். ரெங்கம்மா

சின்னம்மைகள் அபூர்வமானவர்கள் என்றால் கிட்டுச் சித்தாப்பாக்கள் இன்னும் அபூர்வமானவர்கள். மேன்மையை நோக்கி விரிந்து செல்லும் வண்ணதாசன் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என்பது என் அவா.

ஏ.சீனுவாசன், காட்பாடி

நிஜம்

ஓபிஎஸ் சட்டரீதியாகவும் இபிஎஸ் பொதுக்குழுவிலும் பலமுள்ளவரென கட்டுரையின் முத்தாய்ப்பு வரியை நாங்கள் வாசித்த நேர நிலவரப்படி, சட்டரீதியாகவும் இபிஎஸ் பலமானார். யாரென்றே தெரியாமல் தமிழக முதல்வரான இபிஎஸ் கடும் நெருக்கடி, போராட்டத்திற்கிடையே நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்தியதும், அதிமுக-வை சட்டசபையின் பிரதான எதிர்க் கட்சியாக்கியதும் அவர் மீதான் நம்பிக்கையை வலுப்படுத்தியது. ஒற்றைத் தலைமை தான் சரிப்படுமென்று உணர்ந்துதானே பெரும்பாலான நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் அவரை ஆதரிக்கின்றனர். மீண்டும் அதிமுக- வை அரியணையிலேற்ற வாக்குகளை வாங்கும் வசீகரம் இபிஎஸ்-க்கு உண்டா என்பதை இனிவரும் தேர்தல் தான் நிரூபிக்க வேண்டும். அரசியல் அனாதையான ஓபிஎஸ்ஸால் அதிமுக பிளவுபடாது. பலவீனமாகாது என்பது நிரூபணமாகி வரும் நிஜம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை - 611102

என்ன சொல்ல?

ஆதி திராவிடர் என்ற சொல் சாதிகளைக் கடந்தது...என்கிற ரவிக்குமாரின் நேர்காணல் சிந்திக்க வைக்கும் பல சுட்டுதல்களை உணர்த்தியது. அதில் முத்திரை வாக்கியமாக... உலகளாவிய எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்தும் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்... என்பது சரியான கோணத்தைக் கொண்டது.

திரையில் படிந்த நிழல்...அழுத்தமான பார்வையில் அந்த உலகின் 50 ஆண்டுகளைக் குறிப்பிட்ட தனித்துவமான நோக்கில் அணுகியுள்ளது.

சிறப்புப் பக்கங்களின் முகப்புக் கட்டுரை அருமை. மார்லன் பிராண்டோவின் காட்பாதருக்கான ஆஸ்கர் விருது நிகழ்வு நெகிழ வைத்தது. இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சிகரட் பிடிப்பது என்பது எப்படி வணிக ரீதியில் நாகரீகப் பார்வை கொண்டதாக மடைமாற்றப்பட்டதோ... அத்தகைய பாதிப்பு தமிழகத்தில் கிரிமினல்களை ஹீரோவாக்கிய பின்புதான் மது என்பதும் உணர்வுக்கு ஏற்ற உற்சாக பானம் என்கிற அடையாளத்தைப் பெறத் தொடங்கியது.

இன்றோ இன்பம், துன்பம் இரண்டுக்குமான அடையாளமாகி அது வணிக வளர்ச்சியில்...என்ன சொல்ல...?

தஞ்சை என்.ஜே.கந்தமாறன் சென்னை - 89

ஆரம்பப்புள்ளி

வெள்ளித்திரையில் குற்ற உலகு என்ற தலைப்பில் இவ்வளவு விரிவான சினிமா தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி. இந்த இதழ் ஓர் ஆவண இதழாகவே அமைந்துவிட்டது. வெறும் தகவல்களாக சினிமாக்களின் பெயர்களைத் தருவதற்கும் அந்த படங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களைஉருவாக்கித் தருவதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அந்த விதத்தில் இந்த இதழில் எழுதியிருந்த கட்டுரையாளர்கள் கொண்டிருந்த கருத்துகளும் அவை படைக்கப்பட்ட கோணங்களும் முக்கியமானவை. தமிழில் கேங்க்ஸ்டர் சினிமா என்று யாரும் பேச முற்பட்டால் முதலில் இந்த அந்திமழை இதழை ரெபரன்ஸ் புள்ளியாக வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும். ஒவ்வொரு இதழுக்கும் உழைக்கிறீர்கள். ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துகள்.

திருச்சிற்றம்பலநாதன், சென்னை-87

காளைகளின் பின்னே

அடடே, ஜல்லிக்கட்டுக்களில் இளைஞர்கள் மாடு பிடிப்பதை மட்டுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதன் பின்னால் இவ்வளவு கதைகள் இருக்கின்றனவா?

வாடி வாசலில் இருந்து ஓடிச்செல்லும் காளைகளைப் பின் தொடர்ந்தால் மேலும் பல இலக்கியங்கள் உருவாகலாம் போலிருக்கிறதே... அந்த கால்நடை டாக்டரின் அனுபவங்களைப் படித்தால் திக் திக் என மனசு அடித்துக்கொள்கிறது.

அம்பலவாணன், மயிலாடுதுறை

ஆகஸ்ட், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com