நம்பகத்தன்மை
Editorial

நம்பகத்தன்மை

மகப்பேறு, தத்தெடுத்தல், குழந்தைப்பேறு போன்றவற்றின் பல்வேறு பக்கங்களை பல்வேறு தளத்தில் பலரது தேர்ந்த எழுத்துகளில் படித்தது இனிய அனுபவமாக இருந்தது. இந்த அனைத்துப்பார்வைகளுக்கும் மாற்றாக அல்லது அனைத்தையும் நிரப்பும் பார்வையாக, முத்தாய்ப்பாக அமைந்திருந்தது விடுதலை ராசேந்திரன் அவர்களின் உரையாடல்.

குழந்தைப்பிறப்பு என்ற ஓர் இயற்கை நிகழ்வு பெண்ணடிமைத்தனம், சொத்து வெறி, பொருந்தாத்திருமணம், சாதி வெறி என பல்வேறு அவலங்களுக்கு காரணமாகி இருப்பதை வெகு இயல்பாக சொல்லி இருந்தார் விடுதலை ராசேந்திரன். தான் சொல்லும் இக்கருத்துகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கை அமைந்திருப்பதை அவர் சொன்னவிதம் அக்கருத்துகளுக்கு மிகப்பெரிய நம்பகத்தன்மை அளித்தது. இவ்வளவு ஆழமான ஒரு விவாதப்பொருளை வெகு சகஜமான நகைச்சுவையுடன் பகிர்ந்தது அபாரம்.

பெரியாரியம் என்றால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என விவாதிக்கும் தத்துவம் என்ற சிலரது பாமரப் புரிதல்களை மாற்றி பெரியாரியம் என்பது அனைத்தைக் குறித்தும் நவீனமான முற்போக்குப் பார்வையை வைத்து பல்வேறு அற்புதமான பெரியாரியர்களை உருவாக்கிய, உருவாக்கி வரும் தத்துவம் என்பதை உணர்த்தும் வண்ணம் பேட்டியை வடிவமைத்தமைக்குப் பாராட்டுகள்!

 பிச்சைக்காரன், சென்னை (மின்னஞ்சல் வழியாக)

விஸ்வரூபம்

இரண்டே பக்கத்தில் ஐந்து பட விமர்சனங்களைக் கோர்த்துக் கொடுப்பது அந்திமழையின் ஸ்பெஷாலிட்டி. அதுவும் ஆர்வமோ, முயற்சியோ இல்லாமல், சினிமாவின் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த நல்லாண்டி, கடைசி (யாக) விவசாயி படத்தின் ஹீரோவாகி, அப்படத்தைப் பார்க்காமலே மறைந்ததுதான் அப்படத்தின் நிஜ (கன)மான கிளைமாக்ஸ்.

வம்சம் தழைக்கவும், மனிதகுலம் செழிக்கவும் மகப்பேறு அவசியம். அந்த பாக்கியம் கிடையாதென மருத்துவம் முடிவெடுத்தால் தத்து எடுப்பது நல்ல பரிகாரம். குழந்தைகளும், குடும்பமும்தான் வாழ்வை முழுமையாக்கும் என்பதை தீர்மானித்தது சிறப்பு பக்கம். ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் வாழ்க்கை வசமாகும் என்ற ஆட்டோகிராஃப் பாடல் வரிக்கு இன்னொரு உதாரணமானவர் கூர்மன் இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ். விடா முயற்சி விஸ்வரூபம்.

அ.யாழினி பர்வதம், சென்னை - 78

வாசிப்பின் மகத்துவம்

நாம் மற்ற தலைமுறையை விட அதிகமாக ஆன் லைனில் நேரம் செலவழித்து தவறான ஒரு சார்பான தகவல்களையே பெறுகிறோம் என்ற ரயான் ஹாலிடேயின் எச்சரிக்கை அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்குமான ‘ரெட் அலர்ட்‘ டாகும். அலைபேசியின் மூளைச் சலவைக்கு அடிமையாகாமல் தடுக்கும் தற்காப்பு கவசம் தான் சுய சிந்தனையாகும். அந்த சுய சிந்தனையைத் தூண்டுவது நிச்சயம் வாசிப்பு பழக்கம் தான். பெரியார் புத்தகங்களோடு வாரியார் புத்தகங்களையும் படித்தால் தான் தெளிவு பிறக்கும். கூடவே அனுபவங்கள் தான் மிகப்பெரிய ஆசான் என்பதால் தான், பிறர் அனுபவங்களைப் பெற, அவர்களது புத்தகங்கள் நமக்கு இன்னொரு பள்ளிக்கூடமாகும். பட்டப்படிப்பு படித்திருந்தாலும், புத்தகப் படிப்பு இல்லையென்றால் எழுத்தறிவு இல்லாதவராகவே கருதப்படுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்விதமாக மார்ச் 2022 அந்திமழையின் 68 பக்கங்களில் எங்கோ ஒரு பத்தி என் சிந்தனையைக் கிளறியது தான் வாசிப்பின் மகத்துவம்

அண்ணா அன்பழகன் , அந்தணப் பேட்டை - 611102

வலிமை

அந்திமழையில் ஓர் ஆனந்தக் குளியலாகக் களிப்பூட்டும் திரைவலம் பகுதி வழக்கம் போல் நயமாக ரசிக்க வைக்கிறது! பிப்ரவரியில் 10 படம் வந்தாலும் மகான், எஃப்.ஐ.ஆர் கடைசி விவசாயி, வீரபாண்டிய புரம், வலிமை என ஐந்து படங்களை அந்திமழை ஸ்டைலில் வாசகர்களுக்கு விமர்சன விருந்து வைத்த விதம் கூட ஒரு நல்ல படம் பார்த்த நிறைவைத் தருகிறது. சுருக், நறுக் ஆக ‘வலிமை‘ வரை தீட்டிய கூர்மை வெகு அருமை. கடைசி விவசாயி மட்டுமே பெருமை என்பதைப் புரிந்து அந்திமழை பொழிந்தது மட்டும் தான் நிஜ வலிமை.

என்.ஜே.ராமன், செல்வமருதூர்

நல்ல பதிவு

மார்ச் அந்திமழை தேர்தல் கால விமர்சனம், தாலாட்டு பாடவா போன்ற கருத்துகள் அடங்கிய சிறப்பு மலர். சமூக நீதி என பெரிதாக பேசும் காலத்தில் ஆளும் கட்சியே போட்டிப் போட்டுக் கொண்டு பணம் கொடுக்கிறது. திருமங்கலம் மாடலில் நடந்த தேர்தல் நாட்டிற்கு தேவையா? டாஸ்மாக் விலை உயர்வு ஆட்சியைக் காப்பாற்ற எவ்வளவு கீழ்த்தரமான செயல்பாடு. ஊழல் தான் அரசியல் என்ற முடிவுக்கு வந்த பிறகு சுதந்திரம் பெற்ற பலன் யார் யாருக்கு! இதில் வேலி தாண்டிய வெள்ளாடுகளாய் போட்டி வேட்பாளர்கள். இப்படி ஒரு அரசியல் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. பிள்ளை வேண்டாம் என்று கூறும் மக்கள் ஒருபக்கம், பிள்ளை வேண்டும் என்கிறவர்கள் இன்னொருபக்கம், தத்தெடுத்தல், கருவூட்டல் சிகிச்சை பற்றி தெளிவான கட்டுரைகள் காலத்திற்கேற்ற கருத்துகளை அந்திமழை பதிவு செய்துள்ளது.

இரா.சண்முகவேல், கீழ்க்கலங்கல் - 627 860

சுவாரஸ்யம்

கிளியே உன் குறுநகை போதுமடி கட்டுரை படிக்கப் படிக்க  சுவாரஸ்யமாக உள்ளது. பிள்ளை நிலா - கட்டுரை சூப்பர். கடைசி 13 வரிகள் கொட்டை எழுத்துகளால் போட்டிருக்கலாம். உண்மையாகவே இதழின் அட்டைப் படம் டபுள் சூப்பர். வெளிநாட்டுப் பத்திரிகை போல் உள்ளது.

அ.முரளிதரன், மதுரை -03

வியப்பு

மருத்துவர் காமராஜ் -ஜெயராணி கட்டுரை உண்மையிலேயே சிறப்பு பக்கங்கள் தான். விந்தணு பற்றிய விழிப்புணர்வை வெகு அழகாக கூறியிருந்த விதம் வியப்பை ஏற்படுத்துகிறது.

குப்புசாமி, கள்ளக்குறிச்சிவிவரிக்கிறது ஆயிரம் மீடியாக்கள் இருந்தாலும் ரஷ்யா&உக்ரைன் போரை பங்காளிச் சண்டை என்று வர்ணித்து வன்மத்தைக் குறைக்க வழிகண்டிருக்கும் அந்திமழையின் சிந்தனையில் உலக அமைதியின் உள்நோக்கம் புலப்படுகிறது. ராணுவ நுண்ணறிவுத்துறை நிபுணர் ஹரிஹரனின் கட்டுரை சோவியத் யூனியனின் சிறப்பு,

செழிப்பு, இறப்பு, இருப்பு, வெறுப்பு, பொறுப்பு எனமறுப்பு கூறமுடியாத வரலாற்றுத் தடங்களோடு வகைப்படுத்தி விவரிக்கிறது.

மருதூர் மணிமாறன், இடையன்குடி - 627651

தத்து விவரங்கள்

‘தத்து‘ சட்டம் என்ன சொல்கிறது? என்ற கட்டுரை மூலம் வழக்கறிஞர் அஜிதா தந்துள்ள விவரங்கள் இல்லங்களுக்கான வரங்கள் தான்! இந்துத் தத்தெடுப்பு சட்டம் 1956க்கு முன்னும் பின்னுமாகத் தொடரும் பிராக்டிகல் நிலைப்பாடுகளில் தெளிவற்ற நிலை தொடருகிறது. ஆங்காங்கே விற்கப்படும்

சிறார்களின் எண்ணிக்கை பிடிபடுவதைக் காட்டிலும் அதிகம் தான்! அதிகம் பெற்ற காலங்களில் உறவு முறைகளுக்குள்ளேயே தத்துக்கள் முத்துக்களாகப் பாவிக்கப்பட்டன. பாசமும் நேசமும் உரிமையும் பெருமை சேர்த்தன! இப்போதைய அணுகுமுறைகள் தத்து பித்தென சத்தற்று சாரமற்று செல்கின்றன.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

பலே!

‘சிறுகை அளாவிய கூழ் ‘ சிறப்பு பக்கத்தில் சிறுகதை வடிவில் கிடைத்தது எங்கள் ஊழ்.

மரணத்திலும் தொன்றுதொட்டு விதைக்கப்பட்டு முளைத்து, கிளைத்து, தழைத்துத் தொடரும் சாஸ்திர சம்பிரதாயங்களின் சமகாலத்தாக்கம் உயிரோட்டத்துடன் சித்திரிக்கப்பட்டிருப்பதில் அந்திமழை இளங்கோவனின் எழுத்தாளுமை பிரகாசமாகி உள்ளது. தத்து புத்திரனின் அனுபவம் சற்று மாறுபட்டாலும் மாசுபடாமல் கேள்விகளும் பதில்களும் இறுகமுடிந்து இலக்கியத் தேனை சோக நிகழ்விலும் மருந்து விருந்தெனப் படைத்திருப்பது 'பலே' ரகம்தான்!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி - 628 653

பாராட்டுகள்

அந்திமழை மார்ச் மாத இதழில் காலச்சித்தன் எழுதியுள்ள ‘கட்டம்‘ என்ற சிறுகதை அருமையும் பெருமையும் திறமையும் வாய்ந்த ஒரு கதையாக அமைந்திருக்கிறது. அது ஒரு கதையாக மட்டுமல்லாமல், வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்திருக்கிறது.

பெரியவர்கள் ‘கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்‘ என்று சொல்வார்கள் அதுபோல், கதாநாயகன் சிவராஜ் ஊருக்கெல்லாம் ஜோதிடம்  சொன்னவர். ஜோதிடத்தின் உண்மையை உணர்ந்தபோதும், அவரின் ஆணவம் தான் அவரை அழித்தது என்பதை மிக அருமையாக சொல்லியிருக்கிறார் கதையாசிரியர்.

தன் வினை தன்னைச் சுடும் என்பது இந்தக் கதையில் ஒரு பாடமாக இருக்கிறது. அந்த சிறிய கதையில் சில சிறப்பான பாடங்கள் அமைந்திருக்கிறது. இதை ஒரு கதையாக அல்லாமல், ஒரு பாடமாக எடுத்துக் கொண்டால் எதிர்காலம் நன்மை பயக்க கூடியதாக இருக்கும்.

இந்தச் சிறப்பிதழில் உள்ள அனைத்து கட்டுரைகளும் மிகத் தெளிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறன. பாராட்டுகள். காமாட்சி சத்யநாராயணன், வேலூர் (குரல் வடிவில்)

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com