நியூட்டனின் செல்பேசி

நியூட்டனின் செல்பேசி

மதுரையிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் அமர்ந்திருக்கிறேன். அபூர்வமாக கொஞ்சம் முன்னதாகவே வந்துவிட்டேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மூச்சு வாங்க வந்தமர்கிறார். சென்னைப் பயணம் உறுதியாகிவிட்டதான திருப்தியும் ஆசுவாசமும் அவர் முகத்தில் தெரிகிறது.

பார்வையால் என்னை அளந்துவிட்டு ‘முன்பின் தெரியாதவனோட என்ன பேச்சு மயிறு வேண்டியிருக்கு!‘ என்பதான முகபாவத்தில், பயணப் பெட்டி, பைகளை முறையாகப் பத்திரப்படுத்திய வேகத்தில் முக்கியமான ஒன்று நினைவு வந்ததுபோல் அவசரமாக செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தார். எதிர்முனையில் எடுத்திருக்கவேண்டும். ‘ம்ம்... வந்துட்டேன். கோச்சில உக்காந்துட்டேன். ம்... இன்னும் நேரம் இருக்கு. பெட்டி சுத்தமா இருக்கு.. ஆமா... சரி .. வச்சிர்றேன்' செல்பேசியை அணைத்து பைக்குள் செருகிக் கொண்டார். முக்கிய கடமையைச் செய்து முடித்த திருப்தி அவரிடம். அவர் பேசியது அவர் மனைவியுடன் என்று ஊகித்துக்கொள்ள முடிந்தது. அவர் ஒரு ஆசிரியர் - பேராசிரியர் - அரசு ஊழியர் - தனியார் நிறுவன மேலாளர் - இப்படி எதனோடும் கச்சிதமாகப் பொருந்திப் போகக் கூடியவராக இருந்தார். எது எப்படி இருந்தாலும் அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவராக இருப்பார் என்று தோன்றியது. இதற்குள் பயணிகளால் பெட்டி நிறைந்துவிட்டது. வண்டி அசைந்து நகரத்தொடங்கிவிட்டது. அதற்காகவே காத்திருந்ததுபோல் நம் நண்பர் செல்பேசியை எடுத்து பேசத் தொடங்கினார். ‘டிரெய்ன் கிளம்பிருச்சுப்பா... கரெக்ட் டைம்... ஆமா... இன்னும் இல்ல... கொஞ்சம் நேரம் ஆகட்டும்' என்று போனை வைத்தார். இன்னும் இல்லை... கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று எதற்குச் சொல்லியிருப்பார்? என்ற யூகிக்கத் தொடங்கினேன்.

கொடைரோடு வந்தபோதும் ஒரு முறை போனில் பேசினார். திண்டுக்கல் தாண்டியபோது பையிலிருந்து பயன்படுத்தி தூக்கியெறியத்தக்க டப்பாவில் இருந்த உணவைப் பக்குவமாய்ச் சாப்பிட்டுவிட்டு கைகழுவி துடைத்து, படுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து முடித்து மீண்டும் போனையெடுத்தார். அவருக்கு எதிர்ப்புறமாகத் திரும்பிக்கொண்டு காதை கூர்மையாக்கிக் கொண்டேன். ‘சாப்டேன்...படுக்கப் போறேன். தம்பி தூங்கிட்டானா? பின்வாசலை ஞாபகமா பூட்டிரு.. காலைல கூப்டுறேன்' என்று உரையாடலை முடித்துக்கொண்டார். இவர் சொல்லாவிட்டால் அந்தப் பெண்மணி பூட்டாமலே படுத்துவிடுவாரா என்ன? அவ்வளவு அப்பாவிகளாகவா மனைவிகள் இருக்கிறார்கள். காரணமில்லாமலா பின் கதவைப் பூட்டாமல் இருக்கப் போகிறார்கள். நண்பரின் மேற்கண்ட உரையாடல்கள் இல்லாமலே அவருடைய வீடும் மனைவியும் பத்திரமாகத்தானே இருப்பார்கள்? செல்போன் யுகத்துக்கு முன்னால் பின்கதவை யார் பூட்டினார்கள்?

நம் எதிரில் இருக்கும் நண்பர் மட்டுமில்லாமல் எல்லா பெட்டிகளிலும் இதுபோன்ற அல்லது இதற்கிணையான உரையாடல்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். ஏன் நான் உட்பட அனைவருமே இம்மாதிரியான அநாவசியமான உரையாடல்களை அத்தியாவசியமாக மாற்றிக்கொண்டுவிட்டோம் அல்லவா? மற்றவர்களை ஒட்டுக்கேட்கும்போதுதான் இத்தகைய செல்போன் உரையாடல்கள் எத்தனை அபத்தம் என்பது புரிகிறது. செல்போன்கள் எல்லாச் சமூகங்களின் நடத்தை முறைகளையும் மாற்றி இருக்கிறது. இரண்டு தசாப்தங்களில் வாழ்க்கை முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துவிட்டன நாமறியாமலே.

செல்பேசிகள் வந்தபிறகு உலகத்தை கி.பி., கி.மு., என்றில்லாமல் செல்பேசிக்கு முன் / செல்பேசிக்குப் பின் என்று பிரித்துக்கொள்ளலாம்.

செல்பேசிகள் அறிமுகமானபோது உலகம் சுருங்கிவிட்டது. உலகின் எந்த மூலையிலிருக்கும் மனிதனோடும் உரையாடும் விரிந்த வெளி உருவாகியிருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக செல்பேசிகளால் நாம் அவரவர்க்கான சிறிய வட்டங்களை உருவாக்கிக் கொண்டுவிட்டோம். அந்த வட்டத்திற்குள் பெரும்பாலும் நம் சொந்த குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அலுவலக வம்புபேசுவதற்கான நபர்களால் பிணைக்கப்பட்டுள்ளோம். செல்பேசிகளால் அவர்கள் நம் அருகிலேயே இருப்பதாக உணர்கிறோம். எந்த நேரத்திலும் அந்த சிலரோடு தேவைக்கு அதிகமாகப் பேசத்தலைப்படுகிறோம். அதனாலேயே பல புதியவர்களுடனான உரையாடல்களுக்கான வாசல் களைச் சாத்திவிடுகிறோம். பஸ்நிறுத்தங்களில் காத்திருக்கும்போது, ரயில் பயணங்களில், திரையரங்க வரிசைகளில் முன்பின் அறிமுகமில்லாதவர்களோடு தொடங்கும் உரையாடல்கள், அதனால் கிடைக்கும் எதிர்பாரா நட்புகள் எதற்கும் இடமளிக்க முடியாதவர்களாக ஆகிவிட்டோம்.

நகரப் பேருந்துநிறுத்தத்தில் நிற்கும் ஒருவர் அதிகபட்சம் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டியிருக்கிறது. அந்தச் சிறிய காத்திருத்தலை அவரால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. வந்துநின்ற சில வினாடிகளில் செல்பேசியை எடுக்கிறார். யாரோ ஒருவரை அழைக்கிறார். அவர் எடுக்காவிட்டால் இன்னொருவரை அழைக்கிறார். அல்லது செல்பேசியில் ஏதாவது ஒன்றைத் தேடவோ பார்க்கவோ ஆரம்பித்துவிடுகிறோம். அன்றைக்கு ஒருநாள் ஒரு மாணவர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஜோரில் செல்பேசியில் ஒருவரை அழைத்தார். என்ன மச்சி என்ன செய்ற? சும்மாதான் இருக்கேன் என்றது எதிர்முனை. நீ என்ன மச்சி செய்ற? நானும் சும்மாதான் பஸ்ஸ்டாப்பில நின்னுகிட்டு இருக்கேன் என்கிறார் இவர். ரெண்டு மச்சிகளும் சும்மா இருப்பதை பரஸ்பரம் உறுதி செய்துகொள்வதற்காகவே நடந்த உரையாடலாகிவிடுகிறது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக சொகுசுப் பேருந்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு முன்னிருக்கையில் ஓர் இளம்பெண். இரவு பதினொரு மணிக்கு பேருந்து கிளம்பியபோது அவருடைய செல்பேசியில் பேசத்தொடங்கியவர். வண்டி சென்னையைக் கடக்கும்போது ஏறத்தாழ அனைத்துப் பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழைந்துவிடுகிறார்கள். இப்போதும் குரலைத் தாழ்த்தி கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொண்டு இருக்கிறார். இரவு மூன்று மணிக்குத் திருச்சியைக் கடக்கும்போதும் பேசிக்கொண்டு இருந்தார். அவர் அவருடைய காதலரிடம்தான் பேசிக் கொண்டிருக்கவேண்டும். காதலரிடம் அவர் என்ன புவி வெப்பமயமாவதைப் பற்றியா பேசியிருக்கப் போகிறார். மேலும் தொடர்ந்து ஐந்து மணிநேரம் உரையாடியபிறகு அந்தக் காதல் என்னவாகும் என்ற கவலை ஒருபக்கம். இந்த அர்த்தமற்ற உரையாடல்களெல்லாம் எங்கோ அண்டவெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு செயற்கைகோளால் பெறப்பட்டு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் வேடிக்கையான விசயம். பாவம் அந்த செயற்கைக் கோள். செல்பேசிகள் இயற்கையை, சூழலை, மனிதர்களை உற்றுக் கவனிப்பது, வேடிக்கை பார்ப்பது என்ற அடிப்படை மனித சுபாவத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டன. நியூட்டன் கைகளில் செல்பேசி மட்டும் இருந்திருந்தால் ஆப்பிள் விழும் நேரத்தில் ஒரு வாட்ஸ் அப் ஜோக்கை ரசித்துக் கொண்டிருந்திருப்பார்தானே.

முன்னாள் முதல்வர் விலையில்லா கணினி கொடுத்த காலத்தில் ஒரு மாணவர் விடுதிக்கு செல்ல நேர்ந்தபோது, பெரும்பாலான அறைகளில் மடிக்கணினிகளில் வெவ்வேறு திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. நள்ளிரவு- தாண்டியும் மாணவர்கள் திரைப்படங்களைப் பரிமாறி பார்ப்பது சாதாரண நடைமுறைதான் என்றார் விடுதிக்காப்பாளர். இப்போது செல்பேசிகளில் தினசரி கோட்டாவான இரண்டு ஜி.பி. தீர்ந்தபிறகே படுக்கைக்குச் செல்கிறார்கள் என்கிறார் ஓர் இளம் பேராசிரியர்.

ஆக இந்தத் தலைமுறை ஒரு உருப்படாத தலைமுறை என்பதை நிறுவுவதல்ல நமது நோக்கம். இந்தப் புதிய கலாச்சாரங்களை இளம் தலைமுறையினர் அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று நான் கருதவில்லை. வழக்கம்போல மூத்த தலைமுறை-யிடமிருந்தே இத்தகைய நோய்க்கூறுகள் பரவுகின்றன. என் மகள் சிறுமியாக இருந்தபோது ஒரு மிதிவண்டி வாங்கி உற்சாகமாக ஓட்டிக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் வண்டி ஓட்டும்போது தன் தலையை தோளோடு சாய்த்து வைத்துக்கொண்டு ஓட்டியதைப் பார்த்துக் கேட்டேன். ஏன் தலையசாச்சு வைச்சுருக்க? என்று. நா போன் பேசிக்கிட்டே ஓட்டுறேன்ப்பா என்றாள். மிதி-வண்டியை ஓட்டுவதை மட்டுமல்ல போனில் பேசிக்கொண்டே தான் ஓட்ட வேண்டும் என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்ள விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டேன்.

அரசு விழாக்கள், பள்ளி கல்லூரி விழாக்கள், பொது விழாக்கள், படவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட குடும்பவிழாக்கள் எதிலும் மேடையில் இருப்பவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் செல்பேசிகளை நோண்டத் தொடங்கிவிடுகிறார்கள். அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், நெஞ்சைப் பிளந்து இதய அறுவைச் சிகிச்சைகள் செய்யும் மருத்துவர்கள், அடுத்து ஆஸ்கர் விருதுவாங்கும் வரிசையில் நிற்கும் நம் திரை நட்சத்திரங்கள் யாரும் இதற்கு விலக்கல்ல. விளைவு. இன்றைக்குக் கல்லூரி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனை, வகுப்பறைக்குள் செல்பேசிகளை நோண்டிக் கொண்டிருக்கும் மாணவர்களை என்ன செய்வது?

இறுதி அஞ்சலி கூட்டங்களில், பிரார்த்தனைக் கூடங்களில் செல்பேசிகள் ஒலிப்பதை இப்போதெல்லாம் யாரும் அசந்தர்ப்பமாகக் கருதுவதில்லை.அகால மரணமடைந்த ஒரு நண்பரின் வீட்டில் கூடி, அவருக்கு இறுதிமரியாதை செய்துகொண்டிருந்தபோது ஒருவரின் செல்பேசி அழைத்தது. அவருடைய அழைப்பொலி ஒரு மூன்றாம்தரமான சினிமாப்பாடலாக இருந்தது. அவர் ஒரு பெரும் பொறுப்பிலிருக்கும் மெத்தப்படித்த அதிகாரி என்பதுதான் விந்தை.

ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த-போது அவருடைய போனில் ஒரு அழைப்பு வந்தது. போனை எடுத்து பெயரைப் பார்த்தவர், பேசுனா நிறுத்தமாட்டானே... என்றவாறு ம்... சொல்லு என்ன விசேசம்? என்றார். சில வினாடிகளில் செல்பேசியை நிறுத்தாமலே அருகில் வைத்துவிட்டு, என்னிடம் பேசத் தொடங்கினார். சில நிமிடங்கள் கழித்து போனை எடுத்து.. ‘அப்படியா... ம்ம்... ஓகோ' என்று மீண்டும் போனைக் கீழே வைத்துவிட்டார். இப்படியே ஏறத்தாழ ஒரு மணி நேரம் போனது. இவனுக்கு சரக்குபோட்டுட்டு பேசத் தொடங்குனா நேரம் காலம் கெடையாது. போனை எடுக்கலைன்னா கோவிச்சுக்குவான் என்றார். இந்த நடவடிக்கை நட்புக்குச் செய்கிற மரியாதையா? அவமரியாதையா?

மூன்றுவயதான குழந்தைக்கு அப்பாவான பரிச்சயமுள்ள இளைஞர் ஒருவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பதாகச் சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘இன்னைக்கு மத்தியானம் என்ன குழம்பு வைக்கணும்னு என் மாமியார்தான் சார் முடிவு பண்ணுவாங்க.' அதெப்படி? என்றேன். ‘அதான் போன் இருக்கே. எத எடுத்தாலும் என் மனைவி அம்மாவுக்கு பேசுவாங்க. அல்லது அவங்க அங்கருந்து கூப்புடுவாங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். முடியல' என்றார் விரக்தியாக. குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் வக்கீல் நண்பர்களும் கூட இந்தவிதமான தாய்-மகள், தாய் - மகன் அன்றாட செல்பேசி உரையாடல்கள் பல குடும்பங்கள் பிரிவதற்கு காரணமாக இருக்கிறன என்கிறார்கள். செல்பேசி இல்லாத காலங்களில் ஒரு குடும்பத்துக்குள் முரண்கள் ஏற்படும்போது சம்மந்தப்பட்டவர்கள் தாங்களே அதை நிதானமாகத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பிருந்தது. ஆனால் இன்று தினப்படி குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கணவன் - மனைவியின் தனி வெளிக்குள் மூன்றாவது நபர்கள் தேவையின்றி நுழைய இடமளித்துவிடுகிறது.

நான் விடுதியில் தங்கிப் பயிலும் என் மாணவர்களிடம் பேசும்போது கேட்பதுண்டு. உங்கள் குடும்பத்தினரிடம் வாரத்திற்கு எத்தனை முறை பேசுகிறீர்கள்? என்பதற்கு ஏறத்தாழ எல்லா மாணவர்களும் தினசரி பேசுவதாகவும், அம்மாக்களுடன் நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறை பேசுவதாகவும் தெரியவந்தது.

தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களிடம் தேவைக்கு அதிகமாக உரையாடும் ஓர் இளைஞன்/ இளைஞி தொட்டியில் வளரும் செடியைப் போன்றவர்கள்தான்.

இந்த ஆண்டு என் மகளை கல்லூரிப் படிப்பிற்காக வேறொரு நகரத்திற்கு அனுப்பி வைத்தோம். என் துணைவியாரும் தினப்படி அவளை அழைத்து விசாரித்தபடி இருப்பார். தானாக விசயங்களைப் புரிந்துகொண்டு சிக்கல்களை எதிர்கொள்ளப் பழகவேண்டும் என்பதற்காகவும் தானே விடுதிக்கு அனுப்புகிறோம். அந்த நோக்கத்தை அர்த்தமிழக்கச் செய்கிறமாதிரி தினமும் என்ன சாப்பிட்டாய்? என்ன நடந்தது? என்று விசாரித்துக்கொண்டும் கண்காணித்துக் கொண்டும் இருப்பது சரியான அணுகுமுறைதானா? என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது கலீல் ஜிப்ரானின் மேற்கோள் ஒன்று என் நினைவுக்கு வந்தது.

‘பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு என்பது ஒரு வில்லுக்கும் அம்புக்குமிடையேயான உறவைப் போன்றது. ஓர் அம்பு, வில்லைச் செலுத்த வேண்டுமே தவிர அம்போடு கூடவே போகமுடியாது‘ என்பது அதன் கருத்து.

இதை என் துணைவியாரிடம் சொன்னபோது, உங்க கலீல் ஜிப்ரானுக்கு பெண்குழந்தை இருந்து அதை ஹாஸ்டலில் சேர்த்திருந்தா தெரியும்! என்றார். என்ன செய்வது மனைவிகளைவிடவா ஞானிகள் பெரியவர்கள்?

மார்ச், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com