அஞ்சலி: நூறு கரங்கள் கொண்டவர்
அந்திமழை என்ற இதழை 1990-ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கியதிலிருந்து தன் இறுதிமூச்சு வரை தன் குழந்தையாகவே அதைப் பாவித்து தன் ஒவ்வொரு செயலையும் அதன் வளர்ச்சிக்காகவே மாற்றி அமைத்துக்கொண்டவர் அந்திமழை இளங்கோவன். ’அந்திமழை என நாம் பத்திரிகை நடத்தவில்லை. இயக்கம் நடத்துகிறோம்’- அடிக்கடி அவர் சொல்வது இது.
சின்னவயதில் இருந்தே எழுத்து, வாசிப்பு, இலக்கியம் என்று இருந்தாலும் இவற்றில் சாதிப்பதற்கு பொருளீட்டவேண்டியது அவசியம் என அவர் கருத்தில் கொண்டிருந்தார். கல்லூரிக்காலங்களில் அவர் விடுதி அறைக்குச் செல்பவர்கள் அங்கு கிடக்கும் இலக்கிய இதழ்களை, நூல்களைப் பார்த்து பிரமிப்பு அடைவார்கள். ஆனால் அதே அளவுக்கு அங்கு இருக்கும் பொருளாதாரம், தொழில்துறை, சுயமுன்னேற்றம் குறித்த நூல்களையும் கண்டு ஆடிப்போயிருக்கிறார்கள்.
அவருடைய சம்பாத்தியத்தில் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நூல்கள் வாங்க செலவழிப்பார். அவர் சேகரித்த நூல்கள் பெங்களுருவில் தனியாக ஓர் இல்லத்தில் அடுக்கப்பட்டிருக்கின்றன.
வேகமாக வாசிக்கக் கூடியவர். ஒரு விமானப் பயணத்தில் ஒரு நூலை வாசித்துவிடுவார். சென்னையில் குறிப்பிட்ட தமிழ் நூல்கள் வெளியானதும் பெங்க ளூரில் இருந்து எங்களுக்கு மின்னஞ்சல் பறக்கும். வாங்கி அனுப்பிவிடுவோம். சில குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு ஆதரவு அளிப்ப தற்காகவே கணிசமான எண்ணிக்கையிலான பிரதிகளையும் வாங்கச் சொல்வார். எழுத்தை நம்பி இருப்பவன் என்றைக்கும் துயரப்படக் கூடாது என்பார்.
உழைப்பாளி என்றால் அப்படியொரு உழைப்பாளி. அவருக்கு மட்டும் நூறு கரங்கள் இருக்குமோ என்று தோன்றும். நிறைய வேலை இருக்கிறதே என்று யாரும் சொன்னால் அவர் சிரித்துக்கொண்டே,’ வாங்க… எங்கூட பெங்களூருவில் ஒரு நாள் இருங்க…. எவ்வளவு வேலை செய்றேன் பாருங்க… வேலை அதிகம் என்று அதன் பின் ஒருநாளும் சொல்ல மாட்டீர்கள்’ என்பார்.
ஒரு பக்கம் தொழில் நிறுவனம் சார்ந்த கடினமான உழைப்பு. சந்திப்புகள், நீண்ட பயணங்கள்... தான் கட்டமைத்த பெரிய தொழில் நெட்வொர்க்கை விரிவுபடுத்த திட்டங்கள், கூட்டங்கள், அறிக்கைகள் என்று அவரது நாள் நீண்டு கிடக்கும். இன்னொரு பக்கம் நண்பர்களுக்காக, திரைப்படத்துக்காக, அந்திமழை இதழுக்காக, இணைய தளத்துக்காக, சமூக ஊடகத்துக்காக என நேரத்தை ஒதுக்கி இருப்பார்.
அவரது நட்பு வட்டமோ மிகப் பெரிது. பள்ளிக்காலம் தொடங்கி இந்தியா முழுவதும் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்த அனுபவக் காலம் தாண்டி, முதல் முதலில் கவிதை எழுதும் இளைஞர் வரைக்கும் ஆயிரக்கணக்கான முகங்களை அவர் நட்புப் பட்டியலில் வைத்திருந்தார். அவ்வளவு பேருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள், திருமணநாள் கேக்குகள் பறந்துகொண்டே இருக்கும். அதை ஒரு சிஸ்டமாகவே கொண்டிருந்தார்.
முழுமையான அதே சமயம் மிகச் சிறந்த பிஸினெஸ்மேன்... தன் துறையில் உச்சகட்ட வெற்றியை எட்டியவர். ஆனால் ஓட்டல்களில் கதவுகளைத் திறக்கும் ஊழியர்கள், வரவேற்பாளர்கள், வாகன ஓட்டிகள், சர்வர்கள் வரை எல்லோருக்கும் அவர் வழங்கும் புன்னகை அவருக்கு பேரழகைத் தந்திருக்கிறது.
வேலை தொடர்பாக கடும் கோபத்துடன் ஊழியர்களிடம் பேச நேர்ந்தாலும் மறுநாளே சகஜமாகப் பேசுவதும், சண்டையிட்டுப் பிரிந்து சென்றவர்களிடம் சில காலம் கழித்து மீண்டும் நட்பு பாராட்டுவதும் அவரது குணம்.
அவரை கிண்டல் செய்யலாம்; விமர்சிக்கலாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வார்.
தன் சாதனையாக அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டிருப்பது, நான் ஏராளமான தொழிலதிபர்களை உருவாக்கி இருக்கிறேன் என்பதே. அவரது இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தவர்களில் பலர் எனக்கு தொழில் செய்யக் கற்றுக்கொடுத்தவர் என்றே அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்திமழை சிறப்பிதழ்களுக்கு இனி அவர் அறிமுகக் கட்டுரைகள் எழுதப்போவது இல்லை. நள்ளிரவைத் தாண்டி மின்னஞ்சலில் வந்துவிழும் அந்த கட்டுரைகளின் வெற்றிடம் எங்களைத் தொடரப்போகிறது.
திங்கள் காலைகளில் வாட்ஸப்பைத் திறப்பவர்கள் அவர் அனுப்பியிருக்கும் சுய முன்னேற்ற தன்னம்பிக்கை செய்திகளை இனி நிச்சயம் தேடி ஏமாறக் கூடும்!
வலது கை செய்வதை இடது கை அறியாமல் செய்யவேண்டும் என்பார்கள். அவரிடம் உதவி பெற்ற குடும்பங்கள், நண்பர்கள் பற்றி அவர் எங்கும் வாய் திறந்தது இல்லை. உதவி என நீளும் நண்பர்களுக்கு கரங்களுக்கு அவர் பெரும்பாலும் மறுத்ததே இல்லை. அந்த கரங்களைப் பற்ற இனி யார் வரப்போகிறார்கள்?
அந்திமழை இளங்கோவன் அவர்களின் மறைவால் உருவாகி இருக்கும் வெற்றிடம் மிகப்பெரியது. பன்முகம் கொண்ட அவர் போன்ற ஆளுமைகள் மிகக்குறைவே. தலைமைப்பண்பு கொண்டவர் அதே சமயம் தன்னைப் பெரிதாக எந்த இடத்திலும் முன் வைத்துக்கொள்ளாதவர் என்பதும் ஓர் அரிதான குணமே.
பெங்களூரு மின் மயானத்தில் அவரை நெருப்புக்குத் தின்னக் கொடுத்த அந்த தருணத்தில் திரண்ட கண்ணீர்த் துளிகளிடையே அவர் மீண்டும் ஒருமுறை தன் நூறு கரங்களுடன் எழுந்து நிற்பது போல் தோன்றியது. அவை பல முறை தன் நண்பர்களின், ஊழியர்களின் கண்ணீர்த்துளிகளைத் துடைத்த கரங்கள்!