பிரக்ஞானந்தாவைத் தோற்கடித்த கார்ல்ஸன் ஒரு தமிழனா?

பிரக்ஞானந்தாவைத் தோற்கடித்த கார்ல்ஸன் ஒரு தமிழனா?

இந்தியா நிலவில் கால் வைத்தது அதே சமயம் பிரக்ஞானந்தா உலக செஸ் போட்டியில் இறுதியில் ஆடியது ஆகியவை நாட்டுக்கே பெருமிதத்தை தந்தன. அதே சமயம் தமிழர்களான நமக்கு கூடுதல் பெருமை விளைந்துள்ளது.

சந்திராயன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் விழுப்புரம் தமிழர் என்பது ஒரு புறம்; பிரக்ஞானந்தா நம் சென்னை மண்ணின் மைந்தன் என்பது இன்னொருபுறம்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது அவர்களின் சாதி. அவர்கள் பொதுவாக தமிழ்ச்சாதி என்றாலும் ஒவ்வொருவரும் அவர்கள் எங்கள் சாதி என்று எழுதி மகிழ்ச்சியைக்காட்டிக்கொண்டனர்.

இதையெல்லாம் மீறி  நம்மை யோசிக்க வைக்கிறது பத்திரிகையாளர் மோகனரூபன் முகநூலில் எழுதி இருக்கும் இந்த பதிவு. இந்தப் பதிவை ஊன்றிப்படித்தால் நாம் இக்கட்டுரைக்கான தலைப்பை சும்மா வைக்கவில்லை என்று புரிந்துகொள்வீர்கள்.

உலக சதுரங்க வாகையர் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனும், தமிழகத்தின் நெற்றியில் நீறணிந்த பிரக்ஞானந்தாவும் மோதிக் கொண்டார்கள்.

நார்வேஜியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு முட்டல் ஏற்கெனவே நடந்திருக்கிறது. சதுரங்கப் பலகையில் அல்ல. உலகப் பெருங்கடலில்.

 தென்அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. அந்த பெரு நாட்டில் ஒருகாலத்தில் தலைவராக இருந்தவர் கோன்-டிகி.

இந்த கோன்-டிகியும், அவரது கூட்டத்தாரும், பெரு நாட்டில் இருந்து கட்டுமரங்களுடன் பசிபிக் கடலில் இறங்கி, பசிபிக் கடல் தீவுகள் சிலவற்றில் குடியேறி மறைந்ததாக நம்பப்படுகிறது.

கோன்-டிகியும் அவரது கூட்டத்தினரும் வெள்ளைநிற தோல், சிவப்புநிற தலைமுடி, நீண்ட காது, நீண்ட தாடிகளுடன் இருந்திருக்கின்றனர்.

 தென்பசிபிக் கடலில் ஒதுங்கி ஓர் ஓரமாய் நிற்கும் ஈஸ்டர் தீவில் உள்ள உயரமான மனித்தலை சிலைகள் கூட இந்த கோன்-டிகியின் வழிவந்தவர்களின் கைவண்ணமே என்று கருதப்படுகிறது.

நம் காலத்தில், நார்வே நாட்டைச் சேர்ந்த தோர் ஹெயர்தால் என்பவர், இந்த கோன்-டிகியை தன்குலத்தின் முன்னோடியாகவும் கருதினார்.

பால்சா மரக்கட்டைகள் மூலம் கோன்-டிகி என்ற பெயரில் கட்டுமரம் கட்டி, தன்னுடன் ஐவர் அணி ஒன்றை சேர்த்துக் கொண்டு பெரு நாட்டில் இருந்து புறப்பட்டார். பசிபிக் மாகடலில் நீண்ட தொலைவு பயணித்து ராரோயியா என்ற பவளப்பாறைத் தீவைப் போய் அடைந்தார்.

பெரு நாட்டின் பெயரே தமிழ்ப்பெயர்தான்

 தோர் ஹெயர்தாலின் கருத்துப்படி கோன்-டிகி, நார்வே நாட்டுக்காரர். வெள்ளையர். ஆனால், கோன்-டிகி தொடர்பான கதையாடல்கள், வர்ணனைகளைப் பார்த்தால் அவர் தமிழினத்தைச் சேர்ந்தவர் என்றே தோன்றுகிறது.

கோன்-டிகி என்ற பெயரில் வரும் கோன் என்ற சொல்லே மன்னனைக் குறிக்கும் தமிழ்ச் சொல்தான். தவிர, தென் அமெரிக்காவின் மாயன், இன்கா இன மக்களுக்கும், பிற்காலச் சோழர்களுக்கும் இருந்த ஒற்றுமையை சுட்டிக்காட்டி ஆய்வாளர் மீ.மனோகரன் ‘தென் அமெரிக்காவின் சோழர்கள்’ என்ற ஆய்வுநூலை ஏற்கெனவே எழுதிவிட்டார். பெரு நாட்டின் பெரு என்ற பெயர்கூட தமிழ்ப்பெயர்தான்.

 சிவனடியார்கள்

 எனக்கென்னவோ, கோன்-டிகியும் சரி, அவரது கூட்டத்தினரும் சரி. சிவனடியார்களாக இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

செஞ்சடையும் அதன்மேல் கொன்றை மலரும் அணிந்தால் தலை சிவப்புநிறமாகத்தான் தெரியும். கோன்-டிகி கூட்டத்தார் சிவந்த தலையை உடையவர்கள்.

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் தரித்தால் உடல் வெள்ளையாகத்தான் தெரியும்.

கோன்-டிகி கூட்டத்தார் வெள்ளைநிற உடலைக் கொண்டவர்கள். தவிர, கோன்-டிகி கூட்டத்தாருக்கு நீண்ட காதும் இருந்திருக்கிறது. இதுபோல வடிகாது வைக்கும் பழக்கம் தமிழர்களிடம் அதிகம் இருந்த பழக்கம். அண்மையில் வெளிவந்த ராஜராஜசோழரின் ஓவியம் கூட வடிகாதுடன்தான் தோற்றம் அளிக்கிறது.

ஈஸ்டர் தீவில் உள்ள சிலைகளின் தலைகளின் மேலே சிவப்புக்கற்கள் நிறுவப்பட்டுள்ளன. இது அந்தக்கால சிவன் படையாரின் செஞ்சடையையும், அதன்மேலிருந்த கொன்றை மலரையும் நினைவூட்டும் குறியீடாக இருந்திருக்க வேண்டும்.

தவிர பூவாகை எனப்படும் பால்சா மரங்களில் கட்டுமரம் கட்டி பயணிப்பது தென்னாட்டு பரதவர்களுக்குக் கைவந்தகலை. ஆதிநாளில் அவர்களே சிவன் படையாராக இருந்திருக்க வேண்டும்.

அண்மையில், எனது முகநூல் பதிவு ஒன்றில் ஐரோப்பாவில் ஆண்மை வலதுபுறம், பெண்மை இடதுபுறம் என்ற கருத்தாக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தேன். நண்பர் உண்ணிகிருஷ்ணன், ‘அந்தக் காலத்திலேயே சிவன் ஐரோப்பா சென்றிருந்தாரா?’ எனக் கேட்டிருந்தார்.

சிவன் ஐரோப்பாவுக்குச் செல்லவில்லை. தமிழர்களின் வடிவில் சிவனியம் ஐரோப்பாவுக்குச் சென்றது. அதனால் முகிழ்த்ததுதான் ஆண்மை வலதுபுறம், பெண்மை இடதுபுறம் என்ற ஐரோப்பிய கருத்தாக்கம்.

அவ்வளவு ஏன்? பிரிட்டனில் முதல் மன்னரே ஈதல்தன் என்பவரே தமிழர்தான். லண்டன் புனித பால் கதீட்ரலில், சிவன்கல் உண்டு என எங்கோ படித்திருக்கிறேன்.

 ‘தென்னிந்திய தமிழர்கள்தான் கடல்கடந்து ஐரோப்பா முதலிய கண்டங்களில் குடியேறி வாழத் தலைப்பட்டிருக்கிறார்கள். மெசப்பட்டோமியா மேற்கிலும் சென்று பிரிட்டிஷ் தீவுகளில் வாழ்ந்தவர்களும் தென் இந்திய மக்களே’ என்று அருட்திரு ஈராஸ் அடிகளார் அன்றே சொல்லிவிட்டார்.

கோன்-டிகி விடயத்தில் நார்வேக்கும், தமிழகத்துக்கும் ஏற்கெனவே ஒரு கருத்து மோதல் இருக்கிறது. கோன்-டிகி திருநீறணிந்த தமிழர்தான் என்று நாம் சொல்கிறோம்.

இப்போது திருநீறணிந்த தமிழர் ஒருவருக்கும், நார்வே நாட்டுக்காரருக்கும் சதுரங்கப் பலகையில் ஒரு மோதல் நடந்து முடிந்திருக்கிறது.

முடிவு இனிப்பானதாக இல்லை. ஆனால், இனிவரும் காலங்களில் அது எந்தப் போட்டியாக இருந்தாலும், அதன் முடிவு தமிழர்களுக்கே இனிப்பானதாக அமையும்.

……………….

இந்த கருத்தின் படி பார்த்தால் கார்ல்சனின் வேர்களும் தமிழகத்தில் இருந்து போயிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே மக்களே, தமிழனை வென்றதும் ஒரு தமிழன் தான் என மகிழ்வீர்!

logo
Andhimazhai
www.andhimazhai.com