அவர் பேசும் இரண்டு வார்த்தைகள்!
கலைஞரை ஊரோடு ஊராக ரொம்ப தள்ளி நின்றுதான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எங்கள் ஊரான துவரங்குறிச்சிக்கு பிரசாரத்துக்காக வந்தவரை, பக்கத்து வீட்டு உறவினர் வீட்டு மாடியிலிருந்து என் தோழிகளுடன் சேர்ந்து பார்த்ததுதான். அதற்கடுத்து எம்.பி. கனிமொழியின் பழைய வீட்டில் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். சரியாக கலைஞர் வரும் நேரத்தில் நேருக்கு நேராக தென்பட்டுவிட்டேன்.
எனக்கோ முதல் முறையாக அவரை மிக அருகில் இப்படிப் பார்த்ததில் ஒருவித தயக்கமும் பயமும்! கனிமொழி, ‘என் ஃபிரெண்டு... கவிஞர், பேரூராட்சிதலைவர்...' என அறிமுகப்படுத்த, உடனே, நெடுநாள் பழகியவரைப் போல பேசினார்.
பெயரென்ன எனக் கேட்டவரிடம், இராசாத்தி சல்மா என்றேன். கனிமொழியின் அம்மாவின் பெயரும் அது என்பதால், எப்படி இந்தப் பெயர் வைத்தார்கள் என ஆர்வமாக விசாரித்தார். யாரையும் பெரிய ஆள், சின்ன ஆளெனப் பார்க்கமாட்டார். முதல் சந்திப்பையே நட்புரீதியாக மாற்றிவிடும் பண்பு அவருடையது. என் முதல் சந்திப்பே நெகிழ்வாகவும் பிரமிப்பாகவும் அமைந்துவிட்டது.
அடுத்து, 2004ஆம் ஆண்டில் நேரு அண்ணன் மூலம் கட்சியில் சேர்ந்தேன். பேராசிரியர், தளபதி முன்னிலையில் உறுப்பினர் அட்டை தந்தார்கள். அப்போது, ‘கனி தோழி... கவிஞர், பேரூராட்சித் தலைவர்..' என ஒன்றுக்கு இரண்டு முறை பேராசிரியரிடம் அழுத்தமாகச் சொன்னார். இன்றைக்கும் அந்தக் காட்சி நினைவில் இருக்கிறது.
2006 தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டேன். 2007 மார்ச்சில் அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது. அதையொட்டி வாழ்த்துப்பெறப் போயிருந்தேன். ‘இலெட்டர் வந்திருச்சா இல்லையா?' என்று தலைவர் கேட்டார். நானோ ‘அதெல்லாம் வந்து, நூலகத் துறைக்குப் போய் (ஆணைக்காக வரக்கூடிய நூல்களை ஆய்வுசெய்து ஒப்புதல் அளிக்கும்) வேலைய செய்யத் தொடங்கிட்டேன்..' என்று ஒழுங்கு மாணவரைப் போல பதில்சொல்ல, அவர் விடாமல், ‘டெல்லியில இருந்து லெட்டர் வரலையா?' எனக் கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்காததால், மையமாக, இல்லையென்று தலையாட்டிவிட்டு வந்தேன்.
அது, சமூக நல வாரியத் தலைவர் பதவிக்கான நியமன அறிவிப்புக் கடிதம். மாநில அரசின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படும். பிறகு ஒரு வாரத்துக்குள் அந்தக் கடிதம் வந்து, அவர் தந்த பதவியில் 3 ஆண்டுகள் தாண்டி, மீண்டும் இருந்தேன். அதிமுக ஆட்சி வந்ததால் விலக வேண்டியதாயிற்று.
உலக மகளிர் நாளை முன்னிட்டு ஒரு முறை என் நூலின் மொழிபெயர்ப்புடன் சந்திக்கப் போனேன். அது எதைப் பற்றியது, என்ன என விவரமாகக் கேட்டார். சந்திக்கும் சிறிது நேரத்தில் நம்மை சந்தோஷப்படுத்த பல கேள்விகளைக் கேட்பார். ‘எங்கிருந்தோ வந்து எந்த இடத்துக்கோ போயிட்ட...' எனக்கூறி ‘மனமார்ந்த வாழ்த்துகள்' என்று எழுதித்தந்தார்.
‘கிராமத்துல இருந்து வந்த புள்ளை என்னென்னமோ பண்ணுது..' என பக்கத்திலிருந்த ஆ.இராசா. டி.கே.எஸ். இளங்கோவனிடம் பாராட்டிச் சொன்னார்.
நான் தந்த சில புத்தகங்களை மற்றவங்ககிட்டப் படிக்கச் சொல்லியும் தருவார். துரைமுருகன் அண்ணன் ‘தலைவர் உன் புத்தகம் தந்தார்; நல்லா இருந்ததும்மா' என்று சொல்வார்.
எழுத்தாளர் என்கிற முறையில் இலண்டன் புத்தகக்காட்சியில் பங்கேற்க அழைப்பு.. 10 நாள் பயணம். சரியாக அது 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரம்... முதல் முறையாக அப்படியொரு வாய்ப்பு... என்ன முடிவை எடுப்பது என குழப்பமோ குழப்பம். கனிமொழியும் மற்ற சிலரும், ‘தலைவரிடம் கேட்கவேணாம்; கோபமாகிவிடுவார்..' என்கிறபடி சொன்னார்கள். அரசியல் கட்சியில் அது முற்று முழுக்க நியாயம் என்றாலும், தலைவரைப் பார்த்து குறைந்தது தகவலையாவது சொல்லிவிடுவோமே எனப் போனேன். தளபதியும் கூட இருந்தார்.
கேட்டதும், ‘போயிட்டு வா; மனமார்ந்த வாழ்த்துகள்.' என உளமார வாழ்த்தி அனுப்பிவைத்தார். எழுத்து, இலக்கியம் என்றாலே அவருக்கு உற்சாகம் வந்துவிடும்.
அது மட்டுமில்லாமல், சிறுபான்மை சமயத்தைச் சேர்ந்தவள் என்கிற கரிசனத்தோடும், ஒவ்வொரு வேலையையும் கவனித்து ஒப்பிட்டு, மனதார வாழ்த்துவார்.
2006 சட்டமன்றத் தேர்தல். போட்டியிட நானும் மனு கொடுத்திருந்தேன். மாவட்டச்செயலாளர் நேரு அண்ணனுக்கோ வேறு ஒரு வேட்பாளர் என முடிவாக இருந்தது. எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. மாவட்டச்செயலாளரை மீறி போட்டியிடுவது உகந்ததாக இருக்காது. வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டேன். செய்தியில் என் பெயரை அறிவித்ததாக வந்தது. தொகுதியில் அதிருப்தியாளர்கள் சுவரொட்டி மூலம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தலைவரிடம் போய், விலகிக்கொள்வதாகச் சொன்னேன். ‘எல்லாம் சரியாகிடும். போய் வேலையைப் பார்... மாத்த மாட்டேன்..' என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.
வழக்கம்போல அவரை வாய்ப்பு கிடைக்கும்போது சந்திப்பேன். ஒரு முறை கல்லூரி மாணவனாக இருந்த மகனையும் கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்துச் சென்றிருந்தேன். எதிரே தொலைக்காட்சி செய்தியைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார். இடையிடையே ஐயா சண்முகநாதன் அவர்களிடம் திருத்தங்களைச் சொல்லிக்கொண்டும் இருந்தார். ஏதோ ஒன்றை அவரே வாங்கி கையால் எழுதியும் தந்தார். கையில் வைத்திருந்த செய்தித்தாளையும் படித்தபடி இருந்தார். எங்களுடனான உரையாடலும் தொடர்ந்தது.
காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவருடைய இந்த தன்மையைப் பார்த்து, என் மகன் பிரமிப்பு நீங்காமல் பேசிக்கொண்டே வந்தான். அவருடைய ஒவ்வொரு சந்திப்பும் மகிழ்ச்சியானதாகவும் மனநிறைவானதாகவும் இருக்கும். இரண்டு வார்த்தைகளையாவது பேசிவிடுவார். கட்சி இயக்கத்துக்கும், சிறுபான்மை சமூகத்தைக்குமான நெருக்கத்தை உணர வைப்பார்.
இன்றைக்கும் தலைவரின் வழியில் தொடர்ந்து பயணித்தபடி இருக்கிறேன். அந்த அளவுக்கு தலைவர் கலைஞர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் காட்டிய வாஞ்சையும். இதைவிட மேலாக எதை சொல்லிவிடமுடியும்?