டாக்டர் எஸ். வடிவேல் முருகன், எம்.டி.,
முதல்வர் (ஓய்வு) கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி
டாக்டர் எஸ். வடிவேல் முருகன், எம்.டி., முதல்வர் (ஓய்வு) கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி

உயிர்பெற்ற சிறுநீரகங்கள்!

டாக்டர் எஸ். வடிவேல் முருகன், எம்.டி.,

அது 1991ஆம் ஆண்டு. அப்போதுதான் எனது முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து, மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் பொது மருத்துவத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியேற்றுக் கொண்ட நேரம். 60 வயது நோயாளி ஒருவர் அதிகமான வயிற்றுப் போக்கு, வாந்தியால் பாதிக்கப்பட்டு எங்களது மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது எங்களது மருத்துவப் பிரிவின் தலைமை மருத்துவர், மறைந்த மூத்த பேராசிரியர் டாக்டர்.சந்திரமோகன். அவர் மிகவும் நீண்ட கால அனுபவம் கொண்டவர். மருத்துவத்துறையில் சுயமாக பல ஆராய்ச்சிகள் செய்தவர். ரிஸ்க் எடுத்து மருத்துவம் பார்ப்பார். சவால்களை எதிர்கொள்வார்.

இந்த குறிப்பிட்ட முதியவருக்கு வயிற்றுப் போக்கினால் உடலிலிருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறி அதனால் சிறுநீரகம் செயலிழந்து விட்டது. இரத்தத்தில் யூரியா அளவு 40மிகிக்குக்கீழ் இருக்க வேண்டியது. 160 மிகி.(ஏறத்தாழ 4 மடங்கு ஆக அதிகரித்துவிட்டது. கிரியாட்டினின் என்ற மற்றும் ஒரு கழிவுப் பொருள் 1 மிகிக்குக் கீழ் இருக்க வேண்டியது 10 மிகி என அதிகரித்தது. இப்போது இருப்பது போல இரத்தத்தை சுத்தப்படுத்தும் டயாலிஸிஸ் வசதிகள் அப்போது இல்லை.

வெளியேறிய நீர்ச் சத்தை டிரிப் மூலம் ஏற்ற வேண்டும். சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்யவில்லை என்பதால் டிரிப் மூலம் அதிகமாக நீர்ச்சத்து ஏற்றினால் அது நுரையீரலில் சென்று தங்கி உயிருக்கே ஆபத்தாக மாறலாம். எனவே மிகவும் கவனமாக நீர்ச்சத்தைக் கொடுத்து அவருடைய சிறுநீர் வெளியேறும் அளவை நாள் தோறும் கண்காணித்து வந்தோம். அவரது வயது, யூரியா அளவு, கிரியாட்டினின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்த்தால் பிழைப்பது கடினம். இதை அவரது பிள்ளைகள், மனைவி ஆகியோரிடமும் கூறிவிட்டோம். அவரது மகள் 'என்ன ஆனாலும் சரி டாக்டர்! உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கடைசி வரை பாருங்கள்.' என்று நம்பிக்கையுடன் கூறியதால் அவரைத் தொடர்ந்து கவனித்து சிகிச்சை அளித்து வந்தோம். பொதுவாகவே இம்மாதிரி நோயாளிகளை -ஐசீயு- என்றழைக்கப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி விடுவோம். ஆனால் எங்களது தலைமை மருத்துவர் பேராசிரியர். சந்திரமோகன், ‘நீயே பாருப்பா' என்று சொல்லி விட்டார். பெரிய ரிஸ்க் என உணர்ந்தேன். தினமும் 3 முறை அந்த நோயாளியைச் சென்று பார்ப்பேன். அவருக்குச் செலுத்தப்பட்ட திரவங்களின் அளவு அவர் கழித்த சிறுநீர் அளவு போன்றவற்றை கண்காணிப்பேன். இவ்வாறு ஏறத்தாழ பத்து நாட்கள் கழிந்தன. தினமும் 100 மில்லி சிறுநீர் கழிப்பதே அதிகம். நாங்கள் நம்பிக்கை இழக்கும் நேரம். பதினொன்றாவது நாள் 300 மிலி. பதினைந்தாம் நாள் 500 மிலி என்று படிப்படியாக அவரது சிறுநீரகங்கள் உயிர் பெற்று சிறுநீரை வெளியேற்றத் தொடங்கின.

அதன் பிறகு நடந்தவை சினிமா பாணியில் சொல்வதென்றால் ''மெடிக்கல் மிரக்கிள்'-ஏறத்தாழ ஒரு மாத காலம் அவருக்கு சிகிச்சை அளித்தோம். டிஸ்சார்ஜ் செய்யும் போது யூரியா-30மிகி. கிரியாட்டினின்-1மிகி. அவருடைய குடும்பத்தினரின், குறிப்பாக அவரது மகளின் இடைவிடாத பிரார்த்தனை, எங்கள் மீது வைத்த நம்பிக்கை, தலைமை மருத்துவர் அளித்த ஊக்கம் - எல்லாவற்றுக்கும் மேலாக பரம்பொருளின் கருணை ஆகியவை, நவீன மருத்துவ வசதிகள் இல்லாத (33 ஆண்டுகளுக்கு முன்பு) அந்த காலகட்டத்தில் விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரை மீட்டெடுத்தன.

(சந்திப்பு: ப.திருமலை)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com