"என் அப்பாவை மீண்டும் பார்த்தேன்!''

"என் அப்பாவை மீண்டும் பார்த்தேன்!''
Published on

அப்போது பரா சக்தி பட வேலை முடிந்திருந்தாலும் ரிலீஸ் ஆகியிருக்கவில்லை. எம்.ஜி.ஆர் நடித்த“அந்தமான் கைதி” படம் தோல்வி. சமூகப்படம்.

சிவாஜி கணேசனின் திருமணம் சுவாமி மலையில் நடந்தது. திருமணத்திற்கு தாமதமாக வந்த எம்.ஜி.ஆர் பந்தியில் அமர்ந்திருக்கும் போது புதுமாப்பிள்ளை சிவாஜி ஏதோ எம்.ஜி.ஆரை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு  சொல்லியிருக்கிறார்.

 “  நீங்க ஏன்னே கோட்டும் சூட்டும் போட்டு ஆக்ட் பண்றீங்க. நீங்க கத்திய எடுத்து சுழட்டுனா ரசிகர்கள் கை தட்டுவாங்களே” திரும்பிச்செல்லும்போது  அரங்கண்ணலிடம் எம்.ஜி.ஆர் ‘கணேசு என்னைப் பார்த்து என்ன கேட்டது பார்த்தீங்களா? இருக்கட்டும்.. பாத்துக்கறேன்.’

பின்னால் ஃபுல் சூட்டில் மாடர்னாக எப்படியெல்லாம் புரட்சி நடிகர் கலக்கினார்.

 தமிழ்த்திரையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரும் இணைந்து நடித்த சமூகப்படம் கூண்டுக்கிளி ராமண்ணா இயக்கத்தில் வெளியான  அதே வருடத்தில் சிவாஜி சரித்திரப்படங்களிலும் நடிக்கத்தான் செய்தார்.

“மனோகரா”. பராசக்தி சமூகப்படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி வசனம் எழுதிய சரித்திரப்படம். எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார்.

வாள் வீச்சு விஷயத்தில் எம்.ஜி.ஆரை மிஞ்ச முடியாது என்பதால் கணேசன் சரித்திரப்படங்களில் கனல் தெறிக்க வாய் வீச்சு தான் செய்தார். “குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே.”

தூக்கு தூக்கி – ‘கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொடுத்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன்.’

 நானே ராஜா என்ற ஒரு சரித்திரப்படம். ‘மேகத்திரை பிளந்து, மின்னலைப் போலே நுழைந்து வில்லினிலிருந்து வெளிப்பட்ட அம்பு போலே அங்கே போகுது பார் வெண்புறா!’. சிவாஜிக்கு தம்பியாக வில்லன் பாத்திரத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தார்.

தெனாலிராமன் கதையும் திரையில் வந்திருக்கிறது. பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமாராவ் நடித்தார். அப்பாஜியாக வி. நாகையாவும் ராஜகுருவாக நம்பியாரும் பங்காற்றினார்கள். பானுமதியும் ஜமுனாவும் நடித்திருந்தார்கள். “உலகெலாம் உனதருளால் மலரும் கிருபாகரியே, மஹேஸ்வரியே” விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்.

ராஜாராணி சரித்திரப்படமல்ல. ஆனால் அதில் சேரன் செங்குட்டுவனாக மேடையில் நடிக்கும் சிவாஜியின் வசனம்:

“காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களம் அமைத்து சேர, சோழ, பாண்டிய மன்னர், கோபுரத்துக்  கலசத்திலே யார் கொடி தான் பறப்பதென்று போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது,” என ஆரம்பித்து நான்கரை நிமிடங்களுக்கு ஒரே ஷாட்.

தங்கமலை ரகசியம் “ அமுதைப் பொழியும் நிலவே” என்று  கு.மா.பாலசுப்ரமண்யம் எழுதிய பாடலுக்கு ஆடிப்பாடிய ஜமுனா பாடல் காட்சி முடியும் போது காட்டுமிராண்டியாக சிவாஜியைப் பார்த்து அலறும் காட்சி.

வணங்காமுடி படத்தில் ‘பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார். தங்கவேலு திகைத்து தவிக்கும் போது நம்பியார் ஒரு அடி பலமாக  கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக  “ பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

‘அம்பிகாபதி’ பாடல்கள் எஸ்.ராமனாதன் இசையால் ஜீவிதத்தன்மை பெற்றன. ‘சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே’ இந்தப் பாடலை சிவாஜி பாடுகிற காட்சியில் அந்தப் பாடல் வரிகளை ஏ.கருணாநிதி உடனே பதிவெடுப்பதாக இருக்கும். பாடல் வரிகளை கவனித்து உடனே எழுதும்ஏ. கருணாநிதியின் gesture, expression! ஆஹா! குழந்தைத்தனமான காமெடியன்! பக்கத்தில் டணால் தங்கவேலு! பானுமதி, எம்.கே.ராதா, நம்பியார்.

‘மாசிலா நிலவே நம் காதலை மாநிலம் கொண்டாடுதே, கண்ணே’

டி.பிரகாஷ்ராவ் இயக்கிய  ‘உத்தமபுத்திரன்’ பி.யு.சின்னப்பா நடித்த படத்தின் ரிமேக்.

காத்தவராயன் மற்றுமொரு சின்னப்பா பட (ஆரியமாலா) ரீமேக். “ வா கலாப மயிலே, ஓடி நீ வா கலாப மயிலே... ஆரியமாலா! ஆரியமாலா!”

சாவித்திரியும் சிவாஜியும் காதல் பார்வை பரிமாறிக்கொள்ளும் காட்சி ஒன்று உண்டு. அதனால் தான் இவர் நடிகையர் திலகம்! அவர் நடிகர் திலகம்!

சம்பூர்ண ராமாயணம் பார்த்த ராஜாஜி பாராட்டு “பரதனை மிகவும் ரசித்தேன்”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து‘தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’ என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர். ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.

இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ‘படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன்  சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”

குறவஞ்சி படத்தில் கணேசனின் குமுறல்“ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்.”

சிவாஜி நடித்தும் ஒரு ‘ஸ்ரீவள்ளி’ வந்திருக்கிறது.

அரிச்சந்திரா - ஜி.வரலட்சுமியின் கணவர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் சிவாஜி நடித்த புராணப்படம். பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கவேண்டியிருந்ததும் மனைவியையும், மகனையும் ஏலம் விடுகிற காட்சியில் “ இந்த உலகம் அறியாத புதுமை, என் உடல் பொருள் ஆவியை கடனுக்கே விற்பது இந்த உலகம் அறியாத புதுமை”. இடூச்ண்ண்டிஞி குடிtதச்tடிணிண! சிவாஜியின் வழக்கமான பீறிட்டு கொப்பளிக்கும் சோகத்தை இதில் பார்க்க முடியாது. மிக நேர்த்தியாக உள்ளடக்கிய துயரத்தை  காட்டியிருந்தார்.

கப்பலோட்டிய தமிழன் பார்த்த வ.உ.சி.யின் மகன் விம்மினார். “என் அப்பாவை மீண்டும் பார்த்தேன்”

பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களுக்குப் பிறகு - ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி  படப்பிடிப்பில் இருக்கிறார்.

மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்.

பக்கத்தில் பந்துலு வருகிறார்.

‘ யோவ்! என்ன அத்திப்பூத்தாப்பலே.... காத்து இந்தப்பக்கம் அடிக்குதா... ’

பந்துலு ‘பவ்யம் பாவ்லா ’ எதுவும் செய்ய மாட்டார். மரக்கிளை ஒன்றில் பார்வை நிலைத்துள்ள நிலையில் சிரித்துக்கொண்டே உட்கார்வார்.

பந்துலு மெதுவாக வேறுபக்கம் பார்த்துக்கொண்டே

சொல்வார் “புதுசா ஒரு படம் பண்ணப்போறேன் ”

சிவாஜி: ‘ என்ன கதை?’

பந்துலு: ‘ மகாபாரதத்திலே இருந்து ”

சிவாஜி:  ‘படத்து பேர் என்னவோ ‘

பந்துலு ‘ கர்ணன் ’

சிவாஜி கொஞ்சம் முகத்தை சுருக்கி கொஞ்சம்  இடைவெளி  விட்டு

‘ யாரு ஹீரோ ?’

பந்துலு வானத்தை தற்செயலாக பார்த்தவாறு விட்டேத்தியாக ‘ சிவாஜி கணேசன் யா.. ’

சிவாஜி கண்ணை விரித்து, மூக்கை விடைத்து, குரலை செருமி விட்டு ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போதே பந்துலு எழுந்து விடுவார் .

‘ நாளைக்கு பூஜை ’.

மறு நாள் அதிகாலை,

 சூரியன் உதிப்பதற்கு  முன்பே  முழு மேக் அப்புடன்  பந்துலு பட பூஜையில் சிவாஜி ஆஜர் !

பந்துலு -சிவாஜி நட்பும் தொழில் பங்களிப்பும் இப்படித்தான் இருந்திருக்கிறது.

தமிழ்த் திரை கண்ட அசுர நடிகன் சிவாஜியின் நடிப்புப் பாணிக்கு மிகைத்தன்மை கொண்ட புராண அதீத கதாபாத்திரங்கள் தேவையாகத்தான் இருந்தன.

ஏ.பி. நாகராஜன் – சிவாஜி பிணைப்பு  புராணங்களை திரையில் காட்சிப்படுத்தியதில் முக்கிய பகுதியெனச் சொல்ல வேண்டும்.

பரம சிவனாக  நடித்த ‘திருவிளையாடல்’ உள்ளடக்கிய நட்சத்திரக் குவியல் பிரமிக்க வைக்கிறது.  சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், டி.எஸ்.பாலையா, நாகேஷ், டி.ஆர்.மஹாலிங்கம், தேவிகா, முத்துராமன், ஒ.ஏ.கே.தேவர் இவர்களோடு நக்கீரனாக ஏ.பி. நாகராஜனும்.

‘சரஸ்வதி சபதம்’ -கல்வியா? செல்வமா? வீரமா?

 நாரதராகவும், சரஸ்வதி அருள் பெற்று பெரிய அறிவாளியாக மாறிய ஒரு மூட ஊமையாகவும் இரண்டு வேடம்.

அலைமகள் கிருபையால் மகாராணியாக மாறிய பரம ஏழைப்பெண்ணாக கே.ஆர் விஜயா. “ ராணி மகாராணி, ராஜ்ஜியத்தின் ராணி, வேகவேகமாக வந்த நாகரீக ராணி”

சரஸ்வதியாக சாவித்திரியும் பார்வதியாக பத்மினியும்.

எபிசோட் பாணியை அதிக பட்சமாக தன் படங்களில் திரளான நட்சத்திர நடிகர்களை வைத்து ஏ.பி.என் திறம்பட செய்து காட்டிய இயக்குநர்.

‘திருவருட்செல்வர்’- தொகையறா முடிந்து பல்லவியின் முதல் வரி ‘மன்னவன் வந்தானடி’க்கு ஒரு நடை நடக்கும் போது தியேட்டரில் பரவச ஆர்ப்பரிப்பு.

காஞ்சி பெரியவரை இமிடேட் செய்து முதிய அப்பராக சிவாஜி நடித்து பாராட்டு பெற்ற படம் திருவருட் செல்வர்.

 “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே” பாடலுக்கு ஜெமினி கணேசன். ஒரு சிறிய பாத்திரத்தில் சாவித்திரி. முத்துராமனின் மனைவியாக.

‘திருமால் பெருமை’  ஆழ்வார்களாக சிவாஜி. ‘மலர்களிலே பல நிறம் கண்டேன், திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்’ ‘பச்சை மாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா, அமரரேறே, ஆயர்தம் கொழுந்தே..’ ‘கோபியர்  கொஞ்சும் ரமணா, கோபால கிருஷ்ணா’

‘கந்தன் கருணை’ ஜெமினி, சாவித்திரி, அசோகன், சிவகுமார் நடித்த படத்தில் வீரபாகுவாக இடுப்பை ஆட்டி நெளித்து நடந்து, வசனம் பேசினார்.

1968ல் வெளி வந்த தில்லானாமோகனாம்பாள் பாரம்பரியமிக்க கலைகள் சம்பந்தப்பட்டது. ஆனந்த விகடனில் தொடராக கொத்தமங்கலம் சுப்பு எழுதினார். வாசகர்கள் சிக்கல் சண்முகசுந்தரத்தையும்,  மோகனாம்பாளையும் மிகவும் நேசித்து படித்தார்கள். நாயகன் – நாயகி இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக அழகான கல்யாண பத்திரிக்கையே ஆனந்த விகடனில் இணைத்த போது நிறைய வாழ்த்து தந்திகள் பத்திரிகை அலுவலகத்தில் குவிந்தனவாம்.

கதை நடக்கும் காலம் 1940களில் இருக்கலாம். ஏ.பி. நாகராஜனின் மாஸ்டர் பீஸ் என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டும்.  ‘சங்கராபரணம்’ எடுத்த கே.விஸ்வநாத் வரிசையில் வைத்து மதிக்கப்பட வேண்டிய இயக்குனர் நாகராஜன்.

 நாகேஷ் செய்த வைத்தி பாத்திரம் விசேசமானது. (திருவிளையாடலில் தருமி) பாலையாவுக்கு தவில் வித்வான் பாத்திரம். சிவாஜிக்கும் பத்மினிக்குமே மிக முக்கியமான படம் தில்லானா மோகனாம்பாள்.

‘தர்மம் எங்கே’ இயக்கியவர் சிவாஜிக்கு மிகவும் பிடித்த ஏ.சி.திருலோல்கசந்தர். ஜெயலலிதா, முத்துராமன், நம்பியார், நாகேஷ் நடித்திருந்தார்கள்.

‘சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்’

‘வீரமென்னும் பாவை தன்னை கட்டிக்கொள்ளுங்கள். வெற்றி எனும் மாலை தன்னை சூடிக்கொள்ளுங்கள்’ விசேஷமாக சொல்ல ஏதுமில்லை.

‘சித்ரா பௌர்ணமி’ தான் சரித்திரக் கதை வகை படங்களில் கடைசியாக நடிகர் திலகம் நடித்த படம்.

‘வந்தாலும் வந்தான்டி ராஜா,அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா’ 

‘என்னடி சின்னக்குட்டி போட்ட புள்ளி சரிதானா?’

பி.மாதவன் இயக்கத்தில் ஜெயலலிதா, முத்துராமன், விஜயகுமாரி, சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர் நடித்திருந்தார்கள். தோல்வியடைந்தது.

சிவந்த மண் போல, தர்மம் எங்கே, சித்ரா பௌர்ணமி இரண்டிலும் அநியாய  சர்வாதிகார ஆட்சிக்கெதிரான புரட்சிக்காரன் கதை தான். எல்லாவற்றிலும் முத்துராமனுக்கும் எப்படியாவது முக்கியமான வேலை இருந்தது.

பிப்ரவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com