சாமானியனும் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகவேண்டும்!

நாராயணன் திருப்பதி,  மாநிலத் துணைத்தலைவர், தமிழக பாஜக

கட்சிகளுக்கு நிதி வழங்க தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதன் சாதக பாதகங்கள் என்ன? பாஜகவுக்குத் தானே அதிக நிதி குவிகிறது?

தேர்தல் பத்திரங்களைப் பெறுவதன் மூலம் யார் கட்சிக்கு நிதி அளித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்படுகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி, நீதிமன்றத்

துக்கு இவர்கள் செலுத்தும் பணம்பற்றிய தகவல்கள் தேவைப்பட்டால் அளிக்கத்தான் வேண்டும்.

இதற்கு முன்னால் கறுப்புப்பணம் நிறைய இருந்தது. இப்போது கட்சிகள் தங்களிடம் வரும் பணத்தை வெளிப்படையாகச் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பாஜக இப்போது வெளிப்படையாகத் தானே சொல்கிறது? முன்பு சொல்லமாட்டார்கள். ஆனால் அதிகமான பணம் பாஜகவுக்கு வருகிறது என்று சொன்னால் எங்கள் கட்சி சிறந்த ஆட்சியை நடத்துகிறது. நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. தொழில் பெருக உதவுகிறது. எனவே மக்கள் அதிக அளவில் பாஜகவுக்கு நிதி அளிக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஏன் அரசியல் கட்சிகள் பணம் வாங்கவேண்டும்?

அரசியல் கட்சி என்பது ஜனநாயகப் பாதையில் நடைபோடும் ஓர் அமைப்பு. அரசியல் நடவடிக்கைகள் செய்வதற்கு கட்சிகளுக்கு கட்டாயம் பணம் தேவைப்படுகிறது. அதை நாம் மறுக்கவே முடியாது. அந்த பணம் எங்கிருந்து வரும்? கட்சிகள் தொழில் நடத்துவதோ பணம் சம்பாதிப்பதோ இல்லை. கட்சிகளை வலுப்படுத்துவது என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே. ஆகவே பெரு நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி அளிப்பதை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அவை செய்வதாகவே கொள்ளவேண்டும். தங்களுக்கு எந்த கட்சி பிடிக்கிறதோ எந்த கொள்கை பிடிக்கிறதோ அதைச் செயல்படுத்தும் கட்சிகளுக்கு அவர்கள் நிதி அளிக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கட்சிகளின் நிதியாதாரத்தைப் பாதித்ததா?

அனைத்தும் கணக்கில் வரவேண்டும் என்பதுதான் இப்போதைய நிலை. அரசியல் கட்சிகள் தவறான வழியில் லஞ்சம் பெறுவது ஊழல் செய்வது என்பது இனி வெளிப்படையாகத் தெரிந்துவிடும். பாஜக அதிகமாகப் பணம் பெற்கிறது என்றால் அனைத்துக்கும் கணக்கும் இருக்கிறது. கணக்கு இல்லாவிட்டால் அது ஊழல் பணமாகவே கருதப்படும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணமாக பெரிய தொகையை அளிக்கமுடியாது என்ற சூழல் உருவானது. கறுப்புப் பணமும் கள்ள நோட்டுப் பணமும் குறைந்துள்ளது. பெருநிறுவனங்கள் பினாமி கணக்குகளை வைத்து ஊழல் செய்துவந்த நிலையில் அது தடுக்கப்பட்டு, அவற்றில் வெளிப்படைத் தன்மை உருவாகி உள்ளது.

கட்சிகளுக்கு யார் நிதி அளிக்கலாம்?

யாரிடத்தில் வேண்டுமானாலும் கட்சிகள் நிதி பெறலாம். அதை யாரும் தடுக்கமுடியாது. கட்சிகள் நிதி பெற்று தங்கள் கட்டமைப்பைப் பெருக்கிக் கொள்வது அவற்றின் கடமை.

தேர்தலில் வேட்பாளர் இவ்வளவுதான் செலவு செய்யவேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் கட்சிகள் செய்யும் தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடு இல்லை. அது எல்லா கட்சிகளுக்குமான சமமான சூழலைப் பாதிக்கிறது இல்லையா?

அப்படி நீங்கள் சொல்கிறீர்கள். வேட்பாளர் செய்யும் செலவு அவர் கணக்கில் சேரும். பொதுவான செலவுதான் கட்சிகளின் கணக்கில் சேரும். ஆனால் கட்சிகளுக்கும் அப்படி நினைத்ததுபோல் செலவு செய்ய,முடியாது. கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால்இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை. செலவைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சாதாரண மனிதனும் தேர்தலில் போட்டியிடும் நிலை வேண்டும்தான். தமிழகம் போன்ற மாநிலத்தில் கோடிக்கணக்கில் செலவிடுகிறவர்கள்தான் போட்டியிட முடியும். அதுமட்டுமல்ல பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் இருப்பதும் வருத்தமளிக்கிறது. என்னைப் போன்ற அரசியல்வாதி போட்டியிடும் நிலை இல்லவே இல்லை என்பது உண்மைதான்!

(நம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியிலிருந்து)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com