நீண்டகால நோக்கில் இந்தப் போக்கு ஆபத்தானது!

அரசியல் பிரச்சார பணிகளில் பெருநிறுவனங்களின் தலையீடு இரண்டு வழிகளில் நிலவுகிறது. ஒன்று, எல்லாவிதமான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி என தகவல்தொடர்புத் தளங்கள் (Platforms) பெரும்பாலும் பெருநிறுவனங்கள் வசமே இருக்கிறது.

இரண்டாவது, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உள்ளடக் கத்தையும் பெரு நிறுவனங்கள் வசமாக்கியுள்ளன.‌ சினிமா, பாடல்கள், இசை, குறுங் காணொளிகள் என அனைத்தும் பெருநிறுவனங்களி‌‌ன் சொத்தாக உள்ளன.‌ அவர்களே மக்களின் ரசனையையே தீர்மானிக்கிறார்கள்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் கருத்தையே உற்பத்தி செய்வது சாத்தியம். அதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல, உலகமெங்கும் சமூக ஊடகங்கள் வழியாக, அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் விவரங்களைத் தரவுகளாகத் தொகுத்து, தேவைக்கு ஏற்ப கருத்துகளை உருவாக்குவது முடியும்.  பெரிய அளவில் அவற்றை தொகுத்து, செய்திகளை உருவாக்கி குறிப்பிட்ட மனப்பாங்கை, சிந்தனையை வளைக்க முடியும். தாங்களும் இதை செய்தால்தான் கட்சிகள் அரசியல் செய்யமுடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாஜகதான் அதை பெருமளவில் செய்கிறது. பிற முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் அதற்கு எதிராக அதே வழியை தம்‌ சக்திக்கு ஏற்ப முயற்சி செய்கிறார்கள்.

நீண்டகால நோக்கில்‌ இந்தப்  போக்கு ஆபத்தானது; ஏனென்றால், இது நிலைத்துவிட்டால் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகிவிடும். மக்களின் விருப்பத்தைப் பெற்று ஆட்சி நடத்துவதுதானே ஜனநாயகமாக இருக்கமுடியும்?. அதுவே இல்லாமல் போய் விருப்பங்களை உருவாக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டால் ஜனநாயகமே கேள்விக்குள்ளாகும்.

விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியான எங்களின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதுமே இந்தப் பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பு எங்களிடம் இல்லை. அதை உருவாக்கி தற்காத்துக்கொள்ள முயல்கிறோம்.

பொதுவாக, எல்லா ஊடகத் தளங்களிலும் எங்களின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இருப்பினும் நாங்கள் முழுமையாகச் சார்ந்திருப்பது எங்களுடைய அமைப்பையும், அரசியல் செயல்பாட்டையும்தான். அதன் வழியாகவே மக்களிடம் செல்கிறோம்.

சி.பி.எம். கட்சியின் பத்திரிகையான தீக்கதிர் இப்போது சமூக ஊடகத்திலும்  வருகிறது. எங்கள் கட்சிக்கென்று சமூக ஊடகங்கள், வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. அதை எல்லாவற்றையும் நிர்வகிக்கிறோம்.எதிர்க்கருத்துகளை எதிர்கொள்ள ஆதரவாளர்கள் மூலமாக இயல்பாக நடக்க வேண்டும் என நினைக்கிறோம். எதிர்காலத்தில் அதற்காக ஒரு தனி அமைப்பை உருவாக்கலாம்.

சமூக ஊடகங்கள் மூலம் கட்சியை எப்படி வளர்க்கமுடியும் எனக் கேட்கப்படுகிறது. அதன் வழியாக வரக்கூடிய ஆதரவாளர்களை முதலில் மக்களுக்காக செயல்படும் அமைப்புகளில் பணியாற்ற வைப்போம். அதன் பிறகே கட்சியில் சேர்ப்போம். எங்களின் ஆதரவுத் தளத்தை இப்படித்தான் விரிவாக்குகிறோம். நிச்சயமாக எழுதுவது படிப்பதோடு மட்டுமே ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது. எனவேதான் மக்களோடு வேலை பார்க்கச் சொல்கிறோம். சமூக ஊடகத்தின் மூலமாகவே அரசியலைச் செய்திட முடியும் என்று நினைப்பவர்களுக்கு, அதுபோதாது என சொல்வதுதான் எங்களின் வேலை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது தி.மு.க.&விடமிருந்து சி.பி.எம். நிதி வாங்கியது என்று பலரும் அவதூறாக பேசுகிறார்கள். இதைப் பற்றி எங்கள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 27-09-2019ஆம் தேதி விளக்கமாக அறிக்கை கொடுத்துவிட்டார். பணத்தை சட்டத்துக்கு புறம்பான வழியில் எடுத்துச் செல்வதைவிடவும், வங்கிக் கணக்கில் செலுத்தி, அதை செலவு செய்தார்கள். கட்சிகள் தேர்தல் செலவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. வேட்பாளர் செலவுக்கு மட்டுமே‌ கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என சி.பி.எம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

தேர்தல் என்றாலே அரசியல் கட்சிகள் அதிகமாக செலவு செய்வது வாடிக்கையான ஒன்று. ஒட்டு மொத்தமாக நாம் மாற்று வழியைத்தான் யோசிக்க வேண்டும். சி.பி.எம். தேர்தல் பத்திரம் வாங்காத கட்சி என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

(சிந்தன், மாநிலக் குழு உறுப்பினர், சி.பி,எம்., நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

logo
Andhimazhai
www.andhimazhai.com