நெஜம்மாவே அலப்பறைதானா?

நெஜம்மாவே அலப்பறைதானா?

சென்ற மாதம் வந்த படங்களில் சிரிப்பு சர்ப்ரைஸ் தந்தது 'DD ரிட்டர்ன்ஸ்'. பெப்சி விஜயனால் துரத்தப்படும் சந்தானம் & கோ ஒரு பாழடைந்த பங்களாவுக்குள் நுழைகிறார்கள். பேய்கள் ‘அதுக' பாட்டுக்கு  இருக்கும் அந்த பங்களாவில் இவர்கள் நுழைய, இவர்களைத் துரத்திக்கொண்டு வில்லன் கேங் நுழைய எல்லாருமாய் ஆடும் காமெடி கதகளி ஆட்டம்தான் டிடி ரிட்டர்ன்ஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வந்த இப்படம் சென்ற மாதம் பரவலாகப் பாராட்டுப் பெற்றது.

சந்தானம் ரிட்டர்ன்ஸ் என்றே  வைத்திருக்கலாம் என்றபடிக்கு தன் ஃபேவரைட் ஒன்லைனர் காமெடிகளில் கலக்கியிருக்கிறார் சந்தானம். கூடவே பெப்சி விஜயனும் சர்ப்ரைஸாக காமெடிக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் எல்லாருமே படத்திற்கு தேவையான அளவு பங்களிப்பு செய்திருப்பதும், ஓவர் டோஸான பேய்ப்பட க்ரிஞ்சுகள் இல்லாமல் பேயைக்  காமெடிக்குப் பக்கபலமாக ஸ்கிரிப்டில் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொண்டதும் படத்துக்கு பெரும் பலம்.  சந்தானத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: ஸ்கிரிப்ட்டை முழுவதும் முடித்து,  சென்சிபிளான ஆளைப் பிடித்து அவரிடம் அதைக் கொடுத்து,

 ‘ உருவகேலி எதும் இருந்தால் திருத்திக்கொடுங்கள்‘ என்று கேட்டுக்கொள்ளலாம். ஊர், உலகமே அதைத் தவிர்க்க முற்பட்டுக்கொண்டிருக்கும்போதும் நாமும் மாறி ஆகவேண்டும் பாஸ்!

‘பீட்சா 3-தி மம்மி'  - இதுவும் எதிர்பார்க்காமல் போய், ஏமாற்றமளிக்காத படமாக இருந்தது.   அஸ்வினின் உணவகத்தில் நடக்கும் அமானுஷ்யங்களின் காரணம் அறியாமல் அவர் குழம்பிக்கொண்டிருக்க, கொலைப்பழிக்கும் ஆளாகிறார். அமானுஷ்யங்களுக்கும் என்ன காரணம், கொலைகளைச் செய்தது யார் என்பதே படம்.

அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்துக்கு நல்லதொரு தொடக்கம். இன்னொரு ஆச்சர்யம்  பின்னணி இசை. இந்த ஜானர் படங்களுக்கு காதுகிழிய இசையமைக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியை மீறி அடக்கி வாசித்து காதுகள் கவர்கிறார் இசையமைப்பாளர் அருண்ராஜ்.

 தமிழர்கள் எவ்வளவு விவரமானவர்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தது சென்ற மாத இறுதியில் வெளியான இன்னொரு படமான LGM. தோனியை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடலாம்; அதெல்லாம் கிரிக்கெட்டோட. அதுக்காக இப்படி மொக்கைப் படம்லாம் தயாரிச்சா சும்மா தலைல தூக்கி வெச்சுக்க முடியாது என்று காட்டினர். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தல!

ஆகஸ்ட்டில் ஹாட் ஸ்டாரில் வெளியானது மத்தகம் - வெப் சீரிஸ். கிடாரி இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, நிகிலா,கௌதம் மேனன், இளவரசு உள்ளிட்டோர் நடிக்க ஓரிரவில் நடக்கும் பரபர கதை.

‘நான்தான் இங்க கிங்கு' என்று காட்டிக்கொள்ள ஒரு ரௌடி பார்த்டே பார்ட்டி கொண்டாடுகிறான். அதற்கு சென்னையில் அத்தனை ஏ,பி,சி,டி கிரேடு ரௌடிகளும் கலந்து கொள்கிறார்கள். எதேச்சையாக ஒரு நைட் ரவுண்ட்ஸில் இதுகுறித்து அறியவரும் காவல்அதிகாரி அதர்வா ரகசியமாக காய்களை நகர்த்தி....

அவ்வளவுதான். ஐந்து எபிசோடுகளில் இடைவேளை விட்டுவிட்டதால் அந்தரத்தில் நிற்கிறது கதை. டக்னு அடுத்ததையும் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்.  ஓரிரவுக் கதையெல்லாம் இப்படி ப்ரேக் தேவையில்லை.

இயக்குநர் பிரசாத் முருகேசனின் சமூகப் புரிதலும், அரசியல் அறிவும் குட்டிக்குட்டி காட்சிகள், வசனங்களில் தெரியவருகிறது. ‘குடும்பத்தை மிரட்றதெல்லாம் சினிமா பாத்து கத்துகிட்டீங்களா, எதிக்ஸ் இல்ல அதெல்லாம்' என்று கமிஷனர் சொல்வது, குழந்தைக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரை திராவிட நிறத்தில் காண்பித்திருப்பது என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். அடுத்த எபிசோடுகளுக்கு வெய்ட்டிங்!

ஆகஸ்ட்டில் திரையரங்குகளை ஆக்கிரமித்து நான் ஒற்றை நடிகனல்ல, ஒரு இண்டஸ்டிரி என்று காட்டிக் கொண்டிருக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். ஜெயிலர். 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். இன்னொரு பாட்சா, இல்ல அதுக்கும் மேல என்றெல்லாம் குரல்கள்.

முதல் முறை அப்படி ஒரு ஃபீலும் எனக்கு ஆகவில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

சிவராஜ் குமார்தான் கைதட்ட வைத்தார். ரஜினி ஏமாற்றவில்லை என்றாலும் ஹீரோயிக் மொமண்டுகள் என்பது காட்சிகளே. ஸ்லோ மோஷனும், பின்னணி இசையும் அல்ல. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்று காட்சியும், உட்கார சேர் இல்லாத நிலையில் துண்டைத் தூக்கிப் போட்டு ஊஞ்சலில் உட்கார்வதும் கொடுக்கும் புல்லரிப்புகளை இந்தப் படத்தில் இசை தந்தது.

தன் மகன், வில்லன் குழுவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவர அமைதி வாழ்க்கை வாழும் ரஜினி, ஆக்ரோஷ வேடம் பூணுகிறார். ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், மோகன்லால் என்று தேசிய ஒருமைப்பாடு.. - ச்சே இல்லல்ல - ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் ஆட்களைத் திரட்டி வில்லன் விநாயகனை அடக்கும் கதை.

ரஜினி, தமன்னா, அனிருத், நெல்சன் ஆகியோருக்கு ஆளுக்கு கால்வாசி டிக்கெட் பணம் செரித்துவிட்டது. ரைட்!

logo
Andhimazhai
www.andhimazhai.com