பாலபாரதி
பாலபாரதி

போராட்டத்தின் போது வந்த கலைஞரின் அழைப்பு!

கலைஞர் காலத்தில் அவரின் செயல்பாடுகளை நேரில் அறிய வாய்ப்பு கிடைத்தது, மறக்கமுடியாத மதிப்புக்குரிய அனுபவம். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவது, சட்டப்பேரவைச் செயல்பாடுகள், இடதுசாரிகள் மீதான மதிப்பு என பலவற்றைச் சொல்லமுடியும். 

அதிமுக ஆட்சி முடிந்து 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார நேரம் அது. எங்கள் சிபிஐஎம் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, கூட்டணிப் பிரச்சாரத்துக்காக கலைஞர் இங்கு வந்தார். பல ஆண்டுகளாக திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான பேருக்கு பட்டா கிடைக்காத பிரச்னை பெரிய அளவில் இருந்தது. பல போராட்டங்களைச் செய்துவிட்டோம். முந்தைய ஆட்சியில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டும் தீர்வு வரவில்லை. மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டபோது, போடப்பட்ட ஓர் அரசாணைதான் காரணம். புதிய மாவட்டம் உருவாக்கப்படும்போது அரசு அலுவலகங்களுக்காக இடத்தை எடுப்பதற்காக, திண்டுக்கல்லைச் சுற்றி 16 கி.மீ. சுற்றில் அரசு நிலங்களில் இருப்பவர்களுக்கு பட்டா தரப்படுவதில்லை என்றார் ஓ.பி. இதற்காக ஒரு தனி ஆணையே வெளியிடப்பட்டிருந்தது. குறைந்தது 4 ஆயிரம் பட்டா மனுக்கள் நிலுவையில் இருந்தன. மனு தராமல் நிறைய பேர் இருந்தார்கள்.

எங்கள் கூட்டணி பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த கலைஞரிடம், புது மாவட்டம் உருவாகி, அரசு அலுவலகங்களும் கட்டப்பட்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது; அந்த ஆணையை நீக்கினால் ஆயிரக்கணக்கான பேருக்கு பட்டா கிடைக்கும் என்று கோரிக்கை மனுவைக் கொடுத்தேன். அவர் சற்று அதிர்ச்சி அடைந்தாலும், ‘என்னம்மா இன்னும் நம்ம அரசாங்கமே வரவில்லையே... அதற்குள் கோரிக்கை மனுவா?' என்றார். மறைந்த தலைவர் தோழர் என்.வி.யும் அருகில் இருந்தார். ஆனால் மனுவை வாங்கிக் கொண்டார். ஆட்சிக்கு வந்ததும் அதற்கான அரசாணையை வெளியிட்டார். குமரன் திருநகர், கக்கன் நகர், தோமையார்புரம், சவேரியார்பாளையம், ரேடியோ மைதானம், செட்டிநாயக்கன்பாளையம் வண்டிப்பாதை, பேகம்பூர், மலையை ஒட்டிய பகுதிகள் இப்படி பல பகுதிகளில் பட்டா இல்லாமலே இருந்த இடங்கள்...

திண்டுக்கல் அப்போது நகரமாக இல்லை. ஓராண்டில் நான்காயிரம் பட்டாக்கள் தரப்பட்டன.

இதைப் போல திண்டுக்கல்லில் அவர் தந்த இன்னொரு நிர்வாகரீதியான தீர்வு, மாநிலம் முழுவதற்கும் பயன் தந்தது. 1980 -களில் எம்ஜிஆர் காலத்தில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய வீடுகள் பிரச்னை... மாதத் தவணைகள் முடித்தாலும் கடைசியாக பட்டா வாங்கும்போது நிலத்தின் சந்தை விலை எவ்வளவோ அதைச் செலுத்தியாக வேண்டும். எல்லாரும் தவணை கட்டிக்கொண்டே இருந்தாலும் கடைசியாக சந்தை விலைக்கு நிலத்தின் மதிப்பைக் கொடுக்கமுடியாமல் பட்டா பெற முடியவில்லை. நிலம் தொடர்பான வழக்குகள் இழுத்துக்கொண்டே போக... சந்தை விலை உயர்ந்துகொண்டே இருந்தது. நாமும் போராட்டங்களை நடத்திப் பார்த்தோம். கலைஞர் கவனத்துக்குக் கொண்டுபோனதும், நில மதிப்பில் 40% தள்ளுபடி செய்து அரசாணை போடவைத்தார். இதனால் எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னையில் சிக்கியிருந்தவர்களுக்கு விடிவு கிடைத்தது. பொதுவாக, அதிகாரிகள் இந்த அளவுக்கு நுட்பமாக கவனித்து செய்யமாட்டார்கள்தானே... இதுதான் கலைஞரின் தனித்தன்மை.

பிசி, எஸ்சி விடுதியைப் போல, முடியாத குடும்பத்து இசுலாமிய மாணவிகளுக்கு திண்டுக்கல்லில் தனி விடுதி அமைத்துத் தரவேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தேன். உடனே, திண்டுக்கல் உட்பட ஐந்து மாவட்டங்களில் இசுலாமியர் பெண்களுக்கு அரசு விடுதிகள் அமைக்க அறிவிப்பு செய்தார். நாம் கேட்டது, திண்டுக்கல்லுக்குத்தான். ஆனால் அவருடைய சமூகப் பார்வை மற்ற பல மாவட்டங்களுக்கும் அந்த வசதியை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சியில் கூட்டுறவுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக புறக்கணித்துவிட்டது. சிபிஎம் பங்கெடுத்தது. ரெட்டியார்சத்திரம் அருகில் கங்காருபுரத்தில் தேமுதிக, சிபிஎம் மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்ததாகத் தகவல் வர, நான் அங்கே போனேன். ஒரு டிஎஸ்பிதான் அறிவிப்பை ஒட்ட, நீங்க ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள் எனக் கேட்டு, மறியலில் உட்கார்ந்துவிட்டோம். உடனே கைதுசெய்து ஒட்டன்சத்திரத்தில் திருமண மண்டபத்தில் வைத்தார்கள். ஓரிரு நிமிடம்கூட இல்லை. அங்கிருந்த போலீஸ்காரர்கள் ஓடிவந்தார்கள்... என்னவோ வேறு பிரச்னையோ என நினைத்தோம். ‘சிஎம் ஆபீசில் இருந்து போன்..ங்க' என்றார்கள். கலைஞர்தான் பேசினார். 'என்னம்மா நடந்தது' எனக் கேட்டார்.

எனக்கு படபடப்பாகி விட்டது. அவர் குரல் கரகரப்பாக இருக்கும்தானே... எனக்கு பேச்சே ஓடவில்லை. ‘ஐயா வணக்கம்' என அதே படபடப்போடு

சொல்லிவிட்டு, ‘எங்கள் மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டார்கள். இங்கே தேர்தலைத் தள்ளிவைத்து நாங்களெல்லாம் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும்.' என நான் சொன்னேன். உடனே எங்களை விடுவித்துவிட்டார்கள். வீட்டில் வந்து தொலைக்காட்சியில் பார்த்தால், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் தேர்தலை ரத்துசெய்துவிட்டார்கள். இன்றைக்கும் திமுககாரர்கள் என்னிடம், உங்களால்தான் அப்போது ரத்தாகிவிட்டது என்பார்கள்.

ஒரு போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போது தலைவர்கள் பேசுவது, குறிப்பாக முதலமைச்சர் பேசுவதெல்லாம் பெரிய விசயம் அல்லவா? அதிகாரிகளுக்கு போன் அடித்தாலே பல நேரம் எடுக்கமாட்டார்கள். உள்ளூர் அமைச்சர்கள்

எடுக்கமாட்டார்கள். நான் முதலமைச்சருக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. அவரே பேசினார். எஸ்பிக்கு கூப்பிட்டு அவரே பேசியது, என்னுடைய மனசுல மறக்க முடியாத ஒரு நிகழ்வு. போராட்டத்துக்கு அவ்வளவு மதிப்பு கொடுத்தவர் அவர்.

சட்டமன்றத்தில் ஒரு நகைச்சுவை. புதிய சட்டமன்றக் கட்டடத்தில் கூட்டம். இடதுசாரிகள் ஒரு பிரச்னைக்காகக் குரல் எழுப்புகிறோம். அவையிலிருந்து வெளியேற்றச் சொல்லி உத்தரவு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் சிவபுண்ணியம் கொஞ்சம் பெரிய உருவம் கொண்டவர் இல்லையா? அவரால் சட்டென உட்கார்ந்தபடி எழுந்து வர முடியவில்லை. உடனே அவைக் காவலர்கள் மூன்று பேர் வந்தும் அவரை எழுப்ப முடியவில்லை. உட்கார்ந்தே இருந்தார். உடனே கலைஞர் தன்னுடைய மைக்கை எடுத்து, ‘(அவர் தொகுதி மன்னார்குடி) மன்னார்குடியைப் போய் இழுக்கமுடியுமா... அவரை விடுங்க..' எனச் சொன்னதும், சூழலை மறந்து எல்லாரும் சிரித்துவிட்டார்கள்.

இப்படி நாம் எதிர்பார்க்கவே மாட்டோம். அவருடைய நகைச்சுவை சமயோசிதமாக இருக்கும். அவருடைய கேள்வி நேரம் அருமையாக இருக்கும். உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள்... அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்,... அந்த நேரத்தில் குறுக்கிட்டு கலைஞர் பேசினால் அவையே சிரிக்கும். அவர் பேச ஆரம்பித்தால் எல்லா கட்சிக் காரர்களும் சிரித்துதான் முடிப்பார்கள். அவையை கலகலப்பாக, சுவையாகக் கொண்டுசெல்வதில் அவருக்கு மாற்று வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். எவ்வளவோ சண்டை சச்சரவுகள் இருக்கும்; அந்த நேரத்தில் ஒரு ஜோக் அடித்துவிடுவார். அப்படி சபையை எல்லா கட்சிக்காரர்களையும் கவர்ந்திருப்பார். அவருடைய பதில்கள் வெறுப்பாகவோ காழ்ப்புணர்ச்சியோடோ இருக்காது.

தமிழை அழகாகக் கையாள்வார். எங்கள் கட்சித் தோழர் மதுரை நன்மாறன், ‘மதுரை தகவல் தொழில்நுட்பப் பூங்கா எந்த நிலையில் இருக்கிறது?' எனக் கேட்டார். உடனே கலைஞர், ‘ அந்தப் பூங்கா அரும்பும் நிலையில் இருக்கிறது' என்று பதில் சொன்னார்.

அவையில் பல கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் கலைஞருக்கு உண்டு. முதலமைச்சரைத் தேடிப் போய் பேசவேண்டியது இல்லை. அவராகவே அழைத்துப் பேசுவார். அப்படி ஒரு நட்பு, உறவு குணம் அவருக்கு!

logo
Andhimazhai
www.andhimazhai.com