மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்!

மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்!
Published on

முதல் குழந்தையைப் பெற்றெடுப்பது எப்போதுமே ஒரு அலாதியான அனுபவம்தான். அந்த அனுபவத்தைத் தமிழ் சினிமா எப்படிக் கையாண்டிருக்கிறது என்பதைக் கவனித்தால் அன்பு, கோபம், நகைச்சுவை, விசித்திரம் போன்ற பல உணர்வுகள் நம்மை ஒட்டுமொத்தமாகத் தாக்கும். எத்தனையோ நடிக நடிகையர் ஏராளமான படங்களில் முதல் குழந்தை பெற்ற காட்சிகளில் உணர்வுகளைக் கொட்டி நடித்திருக்கின்றனர். அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் கவனிப்போம்.

சோழபுரம் பாளையத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆந்தைகள் பிளிறும் நேரத்தில் மாமன்னர் மொக்கையப்பருக்கு இருபத்தி இரண்டு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்தபின் இருபத்து மூன்றாவதாக எட்டாவது மாதத்திலேயே பிறந்த இம்சை அரசன் புலிகேசியை உங்களுக்குத் தெரியுமல்லவா? தனது தள்ளாத வயதில் பிறந்த அந்தக் குழந்தை தனக்குப் பின்னர் வெள்ளையனை எதிர்த்துப் போரிடவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் கோமாளியாக மாறிய அந்தக் குழந்தை என்ன அட்டூழியங்களெல்லாம் செய்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். புலவர் பாணபத்திர ஓணாண்டியைக் கேட்டால் தெரியும். பல வருடங்கள் காத்திருந்து பிறந்த குழந்தை இப்படியும் இருக்கும் என்பதற்குப் புலிகேசி ஒரு உதாரணம்.

அதுவே, மலர்புரியின் ராணிக்குப் பிறந்த குழந்தையை அவளது தம்பி நாகநாதன் இறந்துபோன இன்னொரு குழந்தையை வைத்து இடம் மாற்றிவிட, ஆச்சரியமாக ராணிக்கு உடனே இன்னொரு குழந்தை பிறக்க, அந்தக் குழந்தைக்கு நாகநாதனையே பாதுகாவலராக இருக்கச் சொல்லிவிட்டு மன்னர் பிற்பாடு இறந்துவிடுகிறார். மாமா நாகநாதனின் கட்டுப்பாட்டில் வளரும் போக்கற்ற பிள்ளை விக்ரமனாக சிவாஜி கணேசன் நடித்தார். ஊதாரியான கொடுங்கோல் இளவரசன் விக்கிரமன்.  இறந்த பிள்ளையுடன் மாற்றப்பட்ட முதல் குழந்தை பார்த்திபன். காட்டில் வளர்கிறான். அதுவும் சிவாஜி கணேசன் தான். என்ன படம் என்று தெரிகிறதல்லவா? உத்தமபுத்திரன். தர் திரைக்கதை வசனம் எழுதி, டி. பிரகாஷ்ராவ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட படம்.

இந்த இரண்டு படங்களிலுமே குழந்தைகள் பிறந்து அவற்றால் மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்பட்டு, பின்னர் அவை சரியாவதை வைத்தே கதை செய்யப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் குழந்தைகள் பிறப்பதை வைத்து உருவாக்கப்படும் பிரச்னைகளுக்கு இவை இரண்டும் உதாரணம். சரியான நபர் இருக்கவேண்டிய இடத்தில் போலியான நபர் இருந்தால் என்னாகும் என்பதே இந்தப் படங்களின் கரு.

மைக்கேல் மதன காம ராஜனை எடுத்துக்கொண்டால், நான்கு குழந்தைகள் ஒரு செல்வந்தருக்குப் பிறந்துவிட, அடுத்த வாரிசு தான்தான் என்று எண்ணிக்கொண்டிருந்த தம்பியின் தலையில் இடி விழுந்துவிடுகிறது. உடனடியாக அந்தக் குழந்தைகளை அப்புறப்படுத்தச்சொல்லி அடியாளை நியமிக்கிறான். ஆனால் அந்த அடியாளே அவற்றில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, பாக்கி மூன்று குழந்தைகளை எங்கங்கோ வைத்துவிட, அவற்றில் ஒன்று அந்த செல்வந்தரிடமே வந்து சேருகிறது. இதை வைத்து உருவாக்கப்பட்ட அட்டகாசமான ஆள் மாறாட்ட நகைச்சுவைப் படம் அது. இதுவுமே முதன்முதலாகப் பிறந்த குழந்தைகளை வைத்தே உருவாக்கப்பட்ட படம். குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியைக்கூடக் கொண்டாட முடியாமல் மனநிலை மாதிக்கப்பட்டுவிடும் தந்தை, அவரைப் பிரிந்த மனைவி, சூழ்ச்சி செய்யும் தம்பி ஆகிய கதாபாத்திரங்கள் அடங்கியது.

இந்த மூன்று படங்களுக்குமான ஒற்றுமை, குழந்தைகளை மாற்றி வைப்பது நெருங்கிய உறவினரே.

அப்படியே கட் செய்து பாகப் பிரிவினை படத்தைக் கவனித்தால், ஹீரோ சிவாஜி கணேசனின் கூட்டுக்குடும்பம், வில்லன் சிங்கப்பூர் சுந்தரமாக வரும் எம்.ஆர்.ராதாவின் சதியால் இரண்டாகப் பிரிந்துவிடும். பாகப்பிரிவினை நடக்கும். வீட்டுக்குக் குறுக்கே சுவர் எழுப்பப்படும். கூடவே, தனது தம்பி மணி(நம்பியார்)யை இதனால் சிவாஜி பிரிய நேரிடும். காரணம் சிங்கப்பூர் சுந்தரத்தின் மகள்தான் மணியின் மனைவி. அந்த நேரத்தில் சிவாஜிக்குக் குழந்தை பிறக்கும். அப்போது அந்தக் குழந்தையிடம் ’ஏன் பிறந்தாய் மகனே?’ என்று சோகமாகப் பாடுவார். ’பண்ணுறதையெல்லாம் பண்ணீட்டு ஏன் பிறந்தாய் மகனேன்னு பாடுறியேப்பா’ என்று இதைப் பகடி செய்யலாம். ஆனால் அந்தப் படத்தில் கையாளப்பட்ட உணர்ச்சிகள் நம்மைப் பகடி செய்ய விடாது.  சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் நடிப்பில் பிய்த்து உதறியிருப்பார்கள். குறிப்பாக எம்.ஆர்.ராதா சிவாஜியைத் தாண்டி நடித்திருப்பார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கடும் நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதியாகக் கமல்ஹாஸன் வருவார். வில்லன்கள் தர்மராஜ், சத்தியமூர்த்தி, நல்லசிவம் மற்றும் ஃப்ரான்சிஸ் அன்பரசன் (கொடூரமான வில்லன்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களைக் கவனியுங்கள்) ஆகியோரைத் தெருவில் அரைநிர்வாணமாக இழுத்து வருவார். இதனால் பாதிக்கப்பட்ட வில்லன்கள் - குறிப்பாக தர்மராஜாக வரும் நாகேஷ் - சேதுபதியை அடித்துப்போட்டுவிட்டு கர்ப்பமாக இருக்கும் சேதுபதியின் மனைவியின் வாயில் அவரது கண் முன்னர் விஷத்தை ஊற்றுவார். இதனால் பாதிக்கப்பட்டு உயரத்தில் சிறிய முதல் மகன் பிறப்பான். அப்பு என்ற பெயரில் சர்க்கஸ் கோமாளி. அந்தப் படம் முழுதுமே தன்னைப் பற்றிய கழிவிரக்கம் அவனுக்கு இருக்கும். ஒரு காட்சியில் தாயாக வரும் வித்யாவே அப்புவின் உயரம் பற்றிப் பொதுவாகப் பேசுகையில் தவறான வார்த்தைகளை விட்டுவிட, அதனால் மனம் பாதிக்கப்படுவான். அபூர்வ சகோதரர்கள், வில்லனால் பாதிக்கப்பட்ட கருவில் இருக்கும் குழந்தைகளை மையமாக எடுத்துக்கொண்டது.

மணி ரத்னத்தின் தளபதி இன்னொரு ரகம். மைனராக இருக்கும்போதே ஶ்ரீவித்யாவின் கதாபாத்திரம் கர்ப்பமாகிவிடும். குழந்தை பிறக்கும். என்ன செய்வது என்பதே தெரியாமல் ஓடும் கூட்ஸ் ரயிலில் குழந்தையை அந்தக் கதாபாத்திரம் விட்டுவிடும்.  பின்னர் எடுத்து வளர்க்கப்படும் சூர்யா என்ற அந்தக் குழந்தைக்குத் தனது தாய் மீது தீராக்கோபம் இருக்கும். மகாபாரதக் கர்ணனை வைத்து எழுதப்பட்டது என்பதால் தாயின் சேலைத்துணியும் இறுதிவரை சூர்யாவாக நடித்த ரஜினியிடம் பத்திரமாக இருக்கும். குழந்தை பிறந்தும் அதை வைத்து மகிழ முடியாமல் வாழ்க்கை முழுதும் அந்தக் குழந்தை என்ன ஆனதோ என்றே வருந்தும் கதாபாத்திரத்தில் வித்யா நடித்திருப்பார். இது குழந்தைப் பிறப்பு பற்றிய வேறொரு கோணத்தைப் பதிவு செய்தது.

அதே மணி ரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படமுமே குழந்தையை வைத்தே எடுக்கப்பட்டதுதான். இலங்கையில் கர்ப்பமடையும் அந்நாட்டுப் பெண் ஒருத்தி, கணவனைப் போர்ச்சூழலில் காட்டில் பிரிய நேர்கிறது. வேறு வழியில்லாமல் இந்தியா - ராமேஸ்வரம் வந்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால் மீண்டும் இலங்கைக்கே திரும்பிச் செல்கிறாள். காரணம், போராளியாக இருந்த கணவனைக் கண்டுபிடிக்கவும், கணவனின் போரைத் தொடரவும். அவளால் விடப்பட்ட குழந்தையை ஓர் எழுத்தாளர் எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைக்கு உரிய வயது வந்ததும் அதனிடம் அது ஒரு வளர்ப்புக் குழந்தை என்று சொல்ல, தனது தாயைப் பார்க்கவேண்டும் என்று அந்தக் குழந்தை விரும்புகிறது. தாயைப் பார்க்க வளர்ப்புத் தந்தையுடன் அந்தக் குழந்தை செய்யும் பயணமே கன்னத்தில் முத்தமிட்டால். இப்படத்தில் எங்கிருந்தோ வந்து குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் வந்த இடத்துக்கே அந்தக் குழந்தையை நிராதரவாக விட்டுவிட்டுச் செல்லும் ஒரு தாயின் பிடிவாதத்தைப் பார்த்தோம்.

குழந்தைகள் மணி ரத்னத்தின் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களாக வந்திருக்கின்றனர். அஞ்சலி அப்படிப்பட்ட படமே. பிறந்த குழந்தை ஒரு கொடுமையான வியாதியால் சீக்கிரம் இறந்துவிடும் என்பதால் அது இறந்தே பிறந்துவிட்டது என்று சொல்லி, தாய்க்கே தெரியாமல் அந்தக் குழந்தையைக் காப்பகத்தில் வைத்து வளர்க்கும் தந்தையாக ரகுவரன். அந்தக் குழந்தையைப் பார்க்கப்போகும்போதெல்லாம் மகன் மற்றும் மனைவியின் கண்ணில் ஓரிருமுறைகள் பட்டு, வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறான் கணவன் என்று மனைவியால் சந்தேகப்படப்பட்டு, பின்னர் அஞ்சலி என்ற அந்தக் குழந்தை பற்றி மனைவியிடம் சொல்கிறார் ரகுவரன். அந்தக் குழந்தை தங்களிடமே வளரட்டும் என்று தாய் முடிவு செய்கிறாள். இந்தப் படத்தில் தாய்க்கே தெரியாமல் குழந்தை வளர்க்கப்படும். தந்தை அவ்வப்போது சென்று குழந்தையைக் கவனித்துக்கொள்வார். ஒரு வித்தியாசமான படமாக அஞ்சலி இருந்தது.

ரகுவரன், குழந்தை என்றதும் உடனே பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படமும் நினைவு வரும். இதுவும் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே. தங்களது குழந்தை இறந்துவிட்டதால் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் சத்யராஜ் - சுஹாசினி தம்பதியினருக்கு அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோரான ரகுவரன் - ரேகாவால் பிரச்னை வருகிறது. ரகுவரன் தனது குழந்தைக்காகத் தொடர்ந்து சத்யராஜிடம் பிரச்னை செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதை உணர்ச்சிகரமான ஒரு படமாக ஃபாஸில் கொடுத்திருப்பார். தன் குழந்தையை நினைத்து மனநிலை பாதிக்கப்படும் கதாபாத்திரமாக ரேகா. குழந்தையை நினைத்து வருந்தும் மனைவியின் வலியைத் தாங்கமுடியாத கணவனாக ரகுவரன்.

இவையெல்லாம் ஒரு வகை என்றால் ரஜினி படங்கள் முற்றிலும் வேறு வகையானவை. ஏழைக் குடும்பத்தில் குழந்தையாகப் பிறந்து பல இன்னல்களை சிறுவயதில் அனுபவித்து, வளர்ந்து அனைவரையும் பந்தாடும் வேடங்களில் பல படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். பணக்காரன் ஒரு உதாரணம். பிரபல பாடகிக்கு மகனாகப் பிறப்பார். ஆனால் இன்னும் திருமணம் செய்துகொள்ளாததால் கர்ப்பத்திலேயே அழித்துவிடும்படி பிரபல பாடகியான சுமித்ராவின் காதலர் விஜயகுமார் சொல்ல, அவரைவிட்டுப் பிரிந்து தனியே குழந்தையைப் பெற்றுக்கொள்வார்.

ஆனால் நாம் ஏற்கனவே பார்த்த ஃபார்முலாப்படி, அவரது தம்பியான ராதாரவி குழந்தையை செந்தாமரையிடம் கொடுத்துவிட்டு, குழந்தை இறந்தே பிறந்திருப்பதாகப் பொய் சொல்லிவிடுவார். குடிகார செந்தாமரையிடம் வளர்ந்து, அதற்காகவே ‘மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற பாட்டெல்லாம் பின்னணியில் வைத்து, வளர்ந்து பின்னர் தனது தாயிடம் சேர்ந்துகொள்வார் ரஜினி. மனிதனும் அப்படிப்பட்ட ஒரு கதையே. அமாவாசையில் பிறந்த குழந்தை ரஜினி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்துப் பின்னர் வெளியே வந்து மக்களுக்கு நல்லது செய்ய முயல்வார். அவரது அக்காவாக வித்யா. பாபா படத்தில் ரஜினி குழந்தையாகப் பிறக்கும் முன்னரே சாமியார்கள் அடங்கிய ஒரு பெரிய படையே வந்து அது ஓர் அவதாரம் என்று சொல்லிவிடுவார்கள். சிவராத்திரியில் பிறப்பார். ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம் என்று பாடலே உண்டு. இப்படியாக மகாவதார் பாபாஜிக்கு ஒரு பிரச்சாரப் படமாக பாபா அமைந்தது.

இப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போது பாரதிராஜாவின் கருத்தம்மா ஒரு முக்கியமான பிரச்னையைத் தொட்டுச் சென்றது. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் கள்ளிப்பாலை ஊற்றிக் குழந்தையைக் கொன்றுவிடும் அவலம் கிராமங்களில் இருந்ததை கருத்தம்மா பேசியது. மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் பெற்ற பெண்ணையே கள்ளிப்பால் ஊட்டிக் கொல்லச்சொல்லும் தந்தையாகப் பெரியார் தாசன் நடித்திருந்தார். உண்மையாகவே கருத்தம்மா வந்தபோது கள்ளிப்பால் ஊட்டிக் கொல்லும் வழக்கம் நடப்பில் இருந்தது தமிழகத்தில் பல இடங்களில் போய்ச் சேர்ந்தது. ஒரு சிறிய விவாதமாவது அதைப்பற்றிச் சில இடங்களில் நடந்தது என்றால் அதற்குக் காரணம் கருத்தம்மாவும் பாரதிராஜாவுமே.

பி.வாசு இயக்கிய வால்டர் வெற்றிவேல் படத்திலும் குழந்தைப் பிறப்பு பேசப்படும். அதில் வில்லன்களால் பார்வையிழந்த கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்திருப்பார். அவருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியான வால்டர் வெற்றிவேலுக்கும் (சத்யராஜ்) குழந்தை ஒன்று பிறக்கும். குழந்தை மீது அத்தனை அன்பு வைத்திருக்கும் சுகன்யா, வில்லனின் சூழ்ச்சியால் விஷம் கலந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்துவிட, குழந்தை இறந்துவிடும். இந்தக் காட்சி, அதற்கு முந்தைய ‘மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா’ என்ற இளையராஜா இசையில் சுனந்தா பாடிய பாடல் ஆகியவை மிகவும் உணர்ச்சிகரமானவை.

அதேபோல், குழந்தை பிறக்கும் தருணத்தைக் காட்டிய பல படங்கள் உண்டு. அவற்றில் கொஞ்சம் வித்தியாசமாக, நவாசுதீன் சித்திக்கி நடித்த Serious Men படத்தில் ஒரு குழந்தை பிறப்புக் காட்சி உண்டு. கர்ப்பமான மனைவியை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் அழைத்துச் செல்வார். அங்கே நீச்சல் குளத்தின் அருகே ஓய்வாகப் படுத்திருக்கும்போது மனைவிக்குப் பிரசவ வலி வந்துவிடும். வேறு வழி இல்லாமல் அந்த இடத்திலேயே சுற்றிலும் டவல்களைப் பெண்கள் பிடித்துக்கொள்ள, மருத்துவர் வந்து பிரசவம் நடக்கும். அப்போது அவரது மனைவி ஊரில் இருக்கும் அனைத்துத் தமிழ் கெட்ட வார்த்தைகளையும் உரக்கக் கத்திக்கொண்டே முக்கிக்கொண்டிருப்பார். அதைக் கேட்டு நவாசுதீன் சித்திக்கி, பக்கத்தில் இருப்பவரிடம், இதெல்லாம் கடவுளின் பெயர்கள் என்றும், குழந்தை நல்லபடியாகப் பிறக்கக் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறாள் என்றும் சொல்வார். அப்போது அருகே இருப்பவர், நானும் தமிழ்தாங்க.. அவங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது என்பார்.  கேட்பவர்கள் காது பிய்ந்து தொங்கும் அளவு கெட்ட வார்த்தைகள் அவை. பார்க்கும்போதே சிரிப்பு வந்துவிடும்.

குழந்தைப் பிறப்பு என்று தொடங்கினால் எத்தனையோ எழுதலாம். ஒரு முழுப் புத்தகம் எழுதும் அளவு தமிழில் குழந்தைப் பிறப்புக் காட்சிகள் இருக்கின்றன. அந்தக் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்களும் இருக்கின்றன. அவற்றில் சில உதாரணங்களை மட்டுமே இந்தக் கட்டுரையில் பார்த்தோம்.  உங்கள் மனதில் தோன்றும் குழந்தைப் பிறப்புக் காட்சியை யோசித்துப் பாருங்கள். தமிழில் எப்படியெல்லாம் அக்காட்சிகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். பல புதிய விஷயங்கள் மனதில் தோன்றக்கூடும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com