மாமியார் மருமகள் கதைகளை உடைக்க வேண்டும்!

மாமியார் மருமகள் கதைகளை உடைக்க வேண்டும்!

சுந்தர் கே. விஜயனைத் தவிர்த்துவிட்டு தமிழ்த் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பற்றிப் பேச-முடியாது. இதுவரை சுமார் பதினைந்தாயிரம் எபிசோடுகளுக்கு மேல் இயக்கி இருக்கிறார். சன் டிவியில் வெளியான ‘குங்குமம்', ‘ஜன்னல்', ‘ஊஞ்சல்', ‘அண்ணாமலை', ‘நிறங்கள்', ‘அலைகள்', ‘செல்வி', ‘அரசி' என அவர் இயக்கிய நெடுந்தொடர்களின் பட்டியல் மிக நீளம். அந்திமழைக்காக இவரிடம் பேசியதிலிருந்து.

 ‘‘சிறு வயதிலிருந்தே எனக்குப் படிப்பு சரியாக வரவில்லை. இதனால், என் அப்பா இயக்குநர் கே.விஜயன் அவர்களுடன் படப்பிடிப்புக்குப் போவேன். வீட்டிலிருக்கும் நேரத்தில் நாற்காலியை சூட்டிங்கில் ட்ராலி தள்ளுவதைப் போல் தள்ளி விளையாடுவேன். இதை அம்மா கவனித்திருக்கிறார். அதோடு, நான் எட்டாவது படிக்கும் போது இந்தி தேர்வில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை என்பதால், அந்தப் பள்ளியின் முதல்வர், என் அம்மாவிடம் ‘அழுத்தம் கொடுத்து இவனைப் படிக்க வைக்கிறதை விட, அவனுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ, அதில் கொண்டு போய் விடுங்கள்‘ என்று சொல்ல..அதனை அப்படியே ஆமோதித்த அம்மா அப்பாவிடம் தெளிவாக விவரித்து, என்னைஅ வருடைய உதவி இயக்குநராகப் பணியாற்ற வைத்தார்.

அப்பா கே.விஜயன் தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரிடம் பணியாற்றும்போது சினிமாவின் சூட்சுமத்தை முழுமையாக அறிந்தேன். இவ்விதம் அப்பாவுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது 'தீபம்', 'தியாகம்' போன்ற படங்களைத் தயாரித்த கே.பாலாஜி அவர்களின் தயாரிப்பில் ‘பந்தம்' என்ற படத்தை அப்பா இயக்கினார். அந்த படத்தில் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்தேன். அந்த படத்திற்கு சிவாஜி

சார் கொடுத்த இருபது நாள் கால்ஷீட் பதினோரு நாட்களாக மாறிப்போனது. அப்போது சிவாஜி சார், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் அடிக்கடி அவர் டெல்லி செல்ல வேண்டியிருந்தது. அதனால், அந்த படத்தை பதினோரு நாட்களில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பரபரப்பாக அதிவேகத்தில் அதேநேரத்தில் நேர்த்தியோடு அப்பா இயக்கிக்கொண்டிருக்க, நான் அந்த டென்ஷனான சூழலிலும் இயல்பாக பொறுப்போடு வேலைபார்ப்பதை கவனித்த பாலாஜி சார் என் அப்பாவிடம்“விஜயன், எனது அடுத்த படத்தில் நீங்கள் இயக்குநர் இல்லை. உங்க பையன் தான் இயக்குநர்' என்று சொல்ல அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி. உடனே என் முதுகில் தட்டிக்கொடுத்து,‘வாழ்த்துகள் டைரக்டர் சுந்தர்

சார்‘ என்றார்.

அப்பாவின் அந்த வாழ்த்துகள்தான் இந்த நிமிடம்வரை உற்சாகமாக என்னை இயங்கவைத்துக் கொண்டிருக்கிறது.

கே.பாலாஜி சார் கொடுத்த முதல் வாய்ப்பின் மூலம் என்னுடைய முதல் படம் ‘ரேவதி' உருவானது. இதில், ரேவதி, சுஜாதா, சுரேஷ் ஆகியோர் நடித்தனர். அதற்கடுத்ததாக, கார்த்திக், ரஞ்சனி ஆகியோரை வைத்து ‘வெளிச்சம் 'என்ற படத்தை இயக்கினேன். அதன்பிறகு இளையராஜாவின் இசையில் ‘என்னருகில் நீ இருந்தால்' படத்தை இயக்கினேன். ஆனாலும் ஏனோ தெரியவில்லை,  சினிமாவில் பெரிய அளவில் ப்ரேக் கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த இடைவெளியில் விளம்பரங்கள், சீரியல்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

அதில் என்னுடைய ‘மடிசார் மாமி' தொலைக்காட்சிதொடர் பெரியளவில் பேசப்பட்டதால் தொடர்ந்து நிறைய தொடர்களை இயக்குகிற வாய்ப்புகள் வந்தது.அதனால், எதற்காக இதைவிட்டுவிட்டு சினிமாவிற்கு போக வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே சீரியலிலேயே நீண்ட காலம் பயணித்துவிட்டேன்.

இதுவரை பதினைந்தாயிரம் எபிசோடுகளுக்கும் மேல் இயக்கியிருக்கிறேன். ஆனால் இப்போதுதான். மீண்டும் திரைப்படங்களை இயக்கவேண்டும் என்கிற ஆசையும் ஆர்வமும் வந்திருக்கிறது.இப்படி சினிமாவின்மீது பேரார்வம் எழுந்தாலும், சினிமாவைவிட சின்னத்திரைத் தொடர்களைத்தான் மனதுக்கு மிக நெருக்கமாகப் பார்க்கிறேன். காரணம் தொடர்களில் இயக்குநர்களுக்கான சுதந்திரம் அதிகம். குறிப்பாக ஒருகாட்சியை பதிவு செய்வதில்

 சினிமாவிற்கு நேர அளவு என்பது இருக்கிறது. ஆனால் சீரியலில் அப்படி இல்லை. சொல்ல நினைக்கும் விஷயங்களை அழகாகவும் நுணுக்கமாகவும்

சொல்லலாம். மற்றபடி தற்போது காட்சிகளை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் சினிமா, சின்னத்திரை இரண்டுமே ஒன்றுதான். அத்துடன். சினிமா,சீரியல் இரண்டிற்கும் மக்கள் தான் பார்வையாளர்கள் என்பதால் இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது என் கருத்து.

மற்றபடி, என்னைப் பொறுத்த அளவில், தினந்தோறும் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வாரத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்விதத்தில் நான் இயக்கிய ஜன்னல், ஊஞ்சல், என் பெயர் ரங்கநாயகி, கேள்வியின் நாயகனே, மழலை யுத்தம் போன்ற வாராந்தரத் தொடர்கள் இன்னும் என்னுள்

ஆச்சர்யமாக பதிந்துள்ளன.

இந்தத் தொடர்கள் அனைத்தும் யூடியூபில் பதிவாகியிருப்பதால் நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். அப்போது 'பரவாயில்லையே நாம நல்லாத்தான் சீரியல் எடுத்திருக்கிறோம்' என்கிற மகிழ்வும் பெருமிதமும் உண்டாகிறது. அடுத்து என்னைப்பற்றி நான் சற்று உரத்தகுரலில்

சொல்வதென்றால் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் மிகவேகமான இயக்குநர் சுந்தர் கே.விஜயன் என பத்திரிகையாளர்கள் பதிவுசெய்ததை சொல்லலாம். இந்த பெயர் எனக்கு வர முக்கியக்காரணம் என்னுடைய திட்டமிடல்தான். குறிப்பாக ஒரு காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்த காட்சிக்கு ஆயுத்தமாகிவிடுவேன். ஒருகாட்சியை எடுத்து முடிப்பதற்குள் அருகிலேயே அடுத்த

காட்சிக்கான செட், லைட்டிங், பிராபர்ட்டிஸ், நடிகர்கள் அத்தனையும் தயார்நிலையில் இருக்கும்படி எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருப்பேன்.

இந்த திட்டமிடல் தயாரிப்பாளர் கே.பாலாஜி சாரிடமிருந்து நான் கற்றது. அவரது தயாரிப்பில், ‘விதி' என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் நடேசன் பூங்காவில் நடந்தபோது நான் அதில் இணை இயக்குநராக பணியாற்றினேன் அப்போது திடீரென கனமழை வந்துவிட்டது. அது எப்படியும் இரண்டு மூன்று மணிநேரம் தொடரும் என்கிற சூழலில் நேரத்தை வீணாக்காமல் உடனே, அதற்கு எதிர்புறத்திலிருந்த படப்பிடிப்பு இல்லத்திற்கு அனுமதி வாங்கி உடனே அங்குசென்று டைப்பிங் இன்ஸ்டிடியூட் காட்சியை எடுக்கவைத்தார். படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் திட்டமிடவேண்டும் என அங்கு நான் கற்றுக் கொண்டது இதுவரை என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

 இதற்காக நான் எனது படப்பிடிப்பில் எப்போதும் இரண்டு கேமராக்களை வைத்துக் கொள்வேன். இதனால், கன்டினியூட்டி, பெர்பாமன்ஸ் போன்றவற்றை கூடுதலாக சிறப்பாக பதிவு செய்யமுடியும். அத்துடன் நேரம், லைட்டிங், நடிகர்களின் பங்களிப்பு எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டுவிடுவேன். அதேபோல், ஸ்க்ரிப்ட்டில் இருக்கும் வசனத்தைத் தான் நடிகர்கள் பேச வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்களைப் பேசவிட்டு, எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வேன். இப்படி நடிகர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுப்பதால் அவர்களால் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த முடிந்தது.

அதேபோல் ஆரம்பத்தில் நாடகத்தனமாக இருந்த தொடர்களை சினிமாவைப்போன்று விஷூவல் மீடியத்திற்கு மாற்ற முயற்சித்து வெற்றிகண்டேன். குறிப்பாக ஆரம்பக்கால சீரியல்களில் நடிகர்கள் வந்து சோபாவில் உட்காருவார்கள், வசனம் பேசுவார்கள், பிறகு எழுந்து சென்றுவிடுவார்கள். ஒரு மாஸ்டர் ஷாட், அடுத்து சில குளோசப் ஷாட்ஸ், சில ஓவர் ஷோல்டர் ஷாட்ஸ் மீண்டும் ஒரு மாஸ்டர் ஷாட் என நிலையான கேமராவில் ஒரு காட்சி எடுக்கப்படும். பெரும்பாலான தொடர்கள் இதுபோன்று சற்று நாடகத்தனமாக இருந்தது. அதை நான் இயக்கிய தொடர்களில் மாற்ற ஆரம்பித்தேன். அதற்கான என் முதல் முயற்சி ஹாலில் இருக்கும் சோபாவை தூக்கவேண்டும் என்பதுதான். அதற்காக ஸ்டடி ஷாட்களை மாற்றி நடிகர்களை நடக்க வைத்தேன், கேமராக்களை நிலைப்படுத்தாமல் டிராலியிலும், கிரேனிலும், ட்ரோனிலும், தோள்களிலும் இயங்கவைத்து நிலையான காட்சிகளை நகரும் காட்சிகளாக, வேகமான காட்சிகளாக நான் மாற்றியதில் ஒரு திரைப்படத்தை காண்கிற உணர்வை தொடர்களின் பார்வையாளர்களுக்கு உருவாக்க முடிந்தது..

அடுத்து, ஒரு தொடரை இயக்கும்போது அதில் இடம்பெறுகிற கதாபாத்திரங்கள் வெறுமனே வசனம் பேசும் பாத்திரமாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான, உயிர்ப்புடன் உள்ள பாத்திரமாக இருக்கவேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்துவேன். அதனால் நான் கதாசிரியரிடம் கதையைக் கேட்கமாட்டேன். கதாபாத்திரங்களின் தன்மை அதனுடைய குணாதிசயம் அது எத்தகைய உணர்வுகளைக் கொண்டது என கேட்பேன். அதை ஆழமாக உள்வாங்கி அது எப்படி இயங்கும் என்கிற தன்மையில் கதையை வடிவமைப்பேன்.

அதனால் தான் என்னுடைய தொடர்களின் கதாபாத்திர உருவாக்கம் என்பது ஹீரோவில் துவங்கி இரண்டு நாட்களுக்கு மட்டுமே வருகிற சிறிய கேரக்டர்கள் வரை அத்தனை வலுவானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும் இருந்தது. இதுபோன்று என் தொடர்களின் கதாபாத்திரங்கள் இயல்பாக உயிர்ப்புடன் இருப்பதால்தான் பார்வையாளர்கள் அதனை ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதனாலயே தொடர்களின் பெயர்களைச்சொல்லாமல் அவர்கள் நடிக்கும் கேரக்டர்களின் பெயர்களில் ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

அடுத்து, நான் எல்லா விஷயத்திலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன். இது நான் பணியாற்றிய விகடன், ராடான், கவிதாலயா போன்ற நிறுவனங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனாலேயே தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு தளத்திற்கே வரமாட்டார்கள். என்னை முழுமையாக நம்பினார்கள். அத்துடன் என் சுதந்திரத்தில் எந்த குறுக்கீடும் செய்யமாட்டார்கள். அந்த சுதந்திர உணர்வினால் என்னால் மிக உற்சாகமாக வேலைபார்க்கமுடிந்தது. அதனால் மிகவேகமாக ஒருநாளைக்கு ஒன்றரை எபிசோட் வரை, அதிகபட்சமாக ஐந்து முதல் ஆறு காட்சிகள் வரை இரண்டு இடங்களிலேயே வீடு, போலீஸ்ஸ்டேஷன், ஆபீஸ், ஆஸ்பெட்டல் என செட்டப் செய்து எடுத்துவிடுவேன். 'இந்த இடத்திலா இதை எடுத்தார்கள்?' என்று கேட்கும் அளவுக்கு அந்தக் காட்சியி ன் பின்புலம் தத்ரூபமாக இயல்பாக இருக்கும்.

அடுத்து நான் இயக்கிய பெரும்பாலான தொடர்களில் அனுபவம் மிக்க சிறந்த நடிகைகள் நடிகர்களோடு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் குறிப்பாக, ராதிகா, குஷ்பு, லட்சுமி, தேவயானி போன்ற பெரிய நடிகைகள் என் இயக்கத்தில் நடித்துள்ளனர். அவர்களோடு பணியாற்றும்போது காட்சியமைப்பில் ஒரு பாத்திரத்திற்காக முக்கியத்துவத்தில் அவர்களின் தலையீடு இருக்கும். ஆனால் அதனை மிக

சாமர்த்தியமாக சமாளித்து அவர்களின் மனது மகிழ்வடையும் விதத்தில் காட்சிகளை நகர்த்திச் செல்வேன்.

அவர்களும் தொழில்முறை நடிகர்கள் என்பதால் சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கான சுதந்திரம் தந்து என்னை இயங்கவைத்ததால்தான் பதினைந்தாயிரம் எபிசோடுகள் என்கிற எண்ணிக்கையை என்னால் தொடமுடிந்தது.

இந்த நீண்ட பயணத்தில், எனது மனதிற்கு நிறைவான நெகிழ்ச்சியான அடையாளம் எதுவென கேட்டால் நொடியில் நான் சொல்லக்கூடிய பதில் நான் இயக்கிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘மௌனம் ஒரு பாஷை' தொடர் என்பேன்.ஜெயகாந்தன் 1963ஆம் ஆண்டு இந்தத் தலைப்பிலான நூலை வெளியிட்டார். அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன்.

அந்த கதையை கே.பாலச்சந்தரின் கவிதாலயாவிற்காக சின்னத்திரைக்கு தொடராக இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை எனது வாழ்க்கையில் மறக்கமுடியாக ஒன்றாக, என் பெருமைக்குரிய பதிவாகக் கருதுகிறேன். மற்றபடி, நான் இயக்கிய எல்லாத்தொடர்களும் என்னை மகிழ்வித்த நெகிழ்வுறச்செய்த படைப்பாகவே பார்க்கிறேன்.

அதோடு, எனது நீண்ட பயணத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் சுமார் இருபது பேர் இன்று சின்னத்திரை இயக்குநர்களாக வளர்ந்து பரபரப்பாகவும் உற்சாகமாகவும் பணியாற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்து மனது பெருமிதம் கொள்கிறது.

இப்படி நெகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் தொடரும் எனது பயணத்தில் அடுத்து வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்கிற முயற்சியில் முனைப்பாக இருக்கிறேன். அதனுடன் தொலைக்காட்சி தொடர்களை மிகவும் வித்தியாசமான கதைகளோடு இயக்க வேண்டும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கப்படுவதைப்போன்று, குறைந்த அளவிலான நடிகர்களை வைத்து, புதுவிதமான கதைக்களத்தில் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்களை எடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறேன். அதன்மூலம் வழக்கமான மாமியார், மருமகள் கதைகளை உடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான சந்தர்ப்பமும் சூழலும் வெகுவிரைவில் வசமாகும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com