மின்னல்போல் ஓடிவந்த மருத்துவர்!

மின்னல்போல் ஓடிவந்த மருத்துவர்!

'எத பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்’ – வடிவேலின் இந்த ஒரு வசனம்தான் எங்களுக்கு தாரக மந்திரம் எனலாம். இருவருமே வேலைக்குச் செல்லக் கூடியவர்கள் என்பதால், எதையும் இடைச்செருகலாக எங்களால் செய்துவிட முடியாது.

திருமணம் ஆன உடனே  இல்லாமல் சில மாதங்கள் கழித்து குழந்தை பெறலாம் என்பது ப்ளான். அதன்படியே, எட்டாவது மாதத்தில் இணையர் கருவுற்றார். பரிசோதித்த மருத்துவர் கருவை உறுதி செய்தார். பிரசவ தேதியையும், கூடவே மருந்து மாத்திரைகள் பட்டியலையும் எழுதிக் கொடுத்தார். எங்கள் இருவரின் முகத்திலும் அப்படியொரு புன்னகை. கனவுபோல் இருந்தது!

அன்றிலிருந்து இணையருக்கு இலவச ஆலோசனைகளும், யூடியூப் வீடியோக்களும் தகவலை அள்ளிக் கொட்டியதோடு, குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இறுதியில் பின்பற்றியது என்னவோ மருத்துவர் சொல்வதைதான்!

முதல் இரண்டு மூன்றாவது மாதத்திலேயே பிரசவ செலவுக்கென்று தனியாக ஒரு தொகை எடுத்து வைத்துக் கொண்டதோடு, அன்றிலிருந்தே குழந்தைக்கான பெயரையும் யோசிக்கத் தொடங்கிவிட்டோம்.

மருத்துவமனைக்குச் செல்வது, வீட்டுவேலைகள் பார்ப்பது, வீடுகட்டும் பணியை கவனிப்பது என பரபரப்பாக நகர்ந்தன நாள்கள். எனக்கிருந்த ஒரே குறை, கூட இருந்து கவனிக்க ஆள் இல்லை என்பது மட்டும்தான். இருந்தாலும் எங்கள் இருவரின் சிந்தனையும் ‘ஒரே மீட்டரில்’ இருந்தால் மேடு பள்ளம் என எல்லாவற்றையும் ஸ்பைடர்மேன் மாதிரி தாவிதாவி எட்டு மாதங்களைக்  கடந்திருந்தோம்.

எட்டாவது மாத இறுதியில் இணையரை கவனித்துக் கொள்வதற்காக என்னுடைய பெரியம்மா வந்துவிட்டார். அவர் வீட்டுவேலைகள் பார்த்துக் கொள்ள, எங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக நேரம் கிடைத்தது. அதை உடற்பயிற்சிக்கு செலவிட்டோம்.

கடைசி பரிசோதனைக்குச் சென்றபோது, “பிரசவம் உங்களுக்கு முன் கூட்டியே ஆகலாம். நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள்” என மருத்துவர் அட்வைஸ் செய்தார். காலை, மாலை என வெறித்தனமாக உடற்பயிற்சி செய்தார். அதற்கான பலன் பிரசவத்தில் தெரிந்தது.

பிரசவத்துக்கு சில வாரங்களுக்கு முன்னரே, குழந்தைக்கான துணி, டவல், இணையருக்குத் தேவையான துணி மணிகள் எல்லாம் வாங்கி வந்து, துவைத்து வைத்துக் கொண்டோம். அதேபோல், ஆஸ்பிட்டல் கோப்புகள், துணி பைகள், டம்ளர், ஸ்பூன் என எல்லாவற்றையும் ஒரு பேக்கில் போட்டு வைத்துக் கொண்டோம். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னரே பிரசவத்துக்கு தயாராக இருந்தோம்!

2024 மார்ச் 22ஆம் தேதி மாலை வழக்கம்போல் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று் கொண்டிருக்கிறேன். இணையரிடமிருந்து அழைப்பு. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வயிறு சுருக்கென்று வலிப்பதாகச் சொன்னவர், அது ஃபால்ஸ் பெயினாக (false pain) கூட இருக்கலாம் என்றார். ஆனாலும் வலி தொடர்ச்சியாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு வாக்கிங் போனால் சரியாகிவிடும் என நினைத்தோம். ஆகவில்லை. சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்தோம், கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். சரி, எது எப்படியிருந்தாலும் காலையில் மருத்துவமனைக்கு ஒரு செக்கப் போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஆனால், அது பிரசவ வலி என இருவருக்கும் தெரியவில்லை. இணையரைத் தூங்கச் சொல்லிவிட்டு. நானும் தூங்கிவிட்டேன். அவருக்கு தொடர்ந்து வலி இருந்ததால், ஏதேதோ செய்துப் பார்த்திருக்கிறார். சரியாகவில்லை. என்னையும் எழுப்பவில்லை. வலிபொறுக்க முடியாமல், விடியற்காலை நான்கு மணிக்குத்தான் என்னை எழுப்பினார். கைகால் பிடித்து விடுவது, நடந்து பார்ப்பது, சுடு தண்ணீர் குடிப்பது என ஒரு மணி நேரம் கழிந்தது. ஐந்து மணி வாக்கில் சுடு தண்ணீர் வைத்துக் கொடுத்தோம், குளித்தார். உடனே, மருத்துவருக்கு அழைத்து தகவலை சொன்னோம். அவர் வேறு ஒரு கேஸ் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், எங்களை மருத்துவமனைக்கு போய்விடும்படியும் சொன்னார். நாங்களும் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்றோம்.

வலிக்கான காரணத்தை அறிந்துகொள்ளத்தான் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கிருந்த தாதிகளும் இணையரை பரிசோதிப்பதற்காக உள்ளே அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் வெளியே வந்து தாதி ஒருவர், “உங்கள் மனைவிக்கு பிரசவ வலிதான். மதியம் பதினோரு மணிக்குள்ள பிரசவம் ஆகிடும்” என்றார். எனக்கு தலைகால் புரியவில்லை. உறவினர்களுக்கு  அழைத்து இப்படி சொல்றாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்போது மின்னல் வேகத்தில் ஒருவர் ஓடிவருகிறார். யாரென்று பார்த்தால்  எங்கள் மருத்துவர். காரை ரோட்டிலேயே நிறுத்திவிட்டு ஓடிவந்தவர், நேராக பிரசவ அறைக்குள் சென்றார். என்ன ஏதென்று புரியவில்லை.

எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னையும் உள்ளே அழைத்தார்கள். இணையரின் தலையை அணைத்துப் பிடித்துக் கொண்டேன்.  ‘தைரியமா இரு… ஒண்ணுமில்லை… பாத்துக்கலாம்’ என்றேன் நடுங்கும் குரலில். அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

 ‘ம்மா… மூச்சை மேல இழுக்க கூடாது… புஷ் பண்ணுமா’ என டாக்டர் உரத்த குரலில் சொல்ல, அவர் சொன்னபடியே இணையரும் செய்ய  கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடியை கட் பண்ணிய டாக்டர், ‘தோ… குழந்த அழுறான் பார்...!’என இணையரின் மார்புமேல் தூக்கிப் போட்டார். அந்த ஒரு நிமிடம் நான் ஏதோ வானத்தில் மிதப்பதுபோல் இருந்தது.

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அவனுக்கான பெயரை முடிவு செய்தோம். முதலில் உங்களுக்குத்தான் சொல்கிறேன், அவன் பெயர் நவிலன்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com