ரஜினியுடன் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்
ரஜினியுடன் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை!

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்

“நடிகர்களின் உடல்மொழி; அவர்களால் செய்ய முடிந்தது. இதை வைத்துத்தான் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பேன்! விஜய்யின் உடல்மொழியில் ஒருவித நக்கல் நையாண்டி கலந்த ஸ்டைல் இருக்கும். ரஜினி என்றால் பார்வையும், 'பன்ச்'சும் அனல் பறக்கும். அஜித் நடப்பது, பார்ப்பது, மிதிப்பது போன்றவை மிரட்டலாக இருக்கும்.'' என நடிகர்களின் தனித்துவத்தை ஓரிரு வார்த்தைகளில் விவரிக்கிறார் ஸ்டண்ட் மாஸ்ர் திலீப் சுப்பராயன். தன் அப்பா, சூப்பர் சுப்பராயன் போலவே தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். கடந்த பதினைந்து வருடங்களில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பெரியது. அவரை அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம்.

‘எனக்கு ஸ்டண்ட் தொழில் வாசமே இருக்கக் கூடாது என்பதால், என்னை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். இருந்தாலும் சிலம்பம், கராத்தே, மியூசிக் எல்லாம் கற்றுக் கொண்டேன். ஆனால் எனக்கு பைலட் ஆக வேண்டும் என்பது தான் ஆசை.

பதினோராம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். விஜய் சார் நடித்த தமிழன் படப்பிடிப்பைத்தான் முதன்முதலாக நேரில் பார்த்தேன். பன்னிரண்டாவதுக்கு பிறகு ஏரோநாட்டிக்கல் படிக்க சொன்னார்கள். நான் மறுத்துட்டேன். எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தென்னிந்திய திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன்.

 கல்லூரி சேர்ந்த பிறகு அங்குப் பலர் பேசும் ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. அதனால் நிறைய ஆங்கிலப் படங்களை சப் டைட்டிலுடன் பார்த்தேன். கூடவே கதை எழுதுவது, அதை படம்பிடிப்பது, எடிட் செய்வது என முழுமூச்சாக சினிமாவை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இன்னொரு பக்கம், அப்பாவின் படப்பிடிப்பு தளத்திற்கும் செல்ல ஆரம்பித்தேன். எனக்கு ஃபைட்டராக ஸ்டண்ட் யூனியன் கார்டு எடுத்துக் கொடுத்தார். நான் கார்டு எடுத்து வேலைப் பார்த்தது அஜித் நடித்த ஜீ படம் தான். 

கல்லூரியில் ப்ராஜெக்ட் கைடாக (Project Guide) வந்தார் காயத்ரி (புஷ்கர் காயத்ரி). நான் எல்லா மாணவர்களும் ப்ராஜெக்டை முடித்திருந்தார்கள், நான் தொடங்கவே இல்லை. உடனே என்னை அழைத்து ‘ஏன் ப்ராஜெக்ட் செய்யவில்லை' எனக் கேட்டு, எச்சரித்தார். உடனே ஒரு ஐடியாவை சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. அடுத்த நாள் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவு செய்து, கல்லூரியிலேயே செட்போட்டு படப்பிடிப்பு நடத்தினேன். அதையும் கையோடு எடிட் செய்து அவரிடம் ஒப்படைத்தேன். மற்றவர்களின் ப்ராஜெக்ட்டை விட என்னுடையது அவருக்கு பிடித்திருந்தது. பிறகு, அவருடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. அவர் அப்போது, ‘ஓரம்போ' - வை குறும்படமாக எடுக்க இருந்தார். அதில் என்னை ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்க்க சொன்னார். முதன் முதலாக அதில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்தேன். உதவி இயக்குநராகவும் இருந்தேன். பின்னர், நிறைய விளம்பரப் படங்களில் அவருடன் வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் தான் தியாகராஜன் குமாரராஜா அறிமுகமானார்.

இன்னொரு பக்கம் அப்பாவின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லத் தொடங்கினேன். இருவரும் ஒரே வீட்டிலிருந்து கிளம்பினாலும், நான் ஃபைட்டர்களுடன் தான் செல்வேன். நேரடியாக அவருடன் பேசியதே கிடையாது.

ஒருநாள் அப்பாவை பார்க்க வசந்த பாலன் வந்திருந்தார். வெயில் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்ப்பதற்கு அப்பாவை கேட்டார். அவர் ஏற்கெனவே சில படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், என்னை அழைத்து ‘நீ நேத்து காட்டுனியே அந்த வீடியோவை காட்டு' என்றார். வசந்த பாலனும் பார்த்தார். ‘நான் தம்பியை வைத்தே படத்தை எடுத்துக்குறேன் மாஸ்டர்' என சொல்லிவிட்டார். நான் ஒரு ஃபைட்டராக வெயில் படத்தின் சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொடுத்தேன். அதன் பிறகு நிறைய க்ளாஸ் ஒர்க் கொடுக்க ஆரம்பித்தார் அப்பா. பல படங்களில் அப்பாவின் பெயர் இருக்கும், ஆனால் அந்தப் படத்துக்கு நான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருப்பேன். மீண்டும் காயத்ரியிடமிருந்து அழைப்பு. ஓரம்போ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்க்க சொன்னார். ஸ்டண்ட் யூனியனில் கார்டு எடுத்து ஐந்து வருடங்கள் ஆனால் தான் மாஸ்டராக முடியும். அதனால், அந்த வாய்ப்பு தவறிப்போனது. இருந்தாலும் படத்தின் ஆக்‌ஷன் ரைட்டிங் மற்றும் உதவி ஸ்டண்ட் மாஸ்டராக வேலைப் பார்த்தேன். அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. பின்னர், ஆரண்ய காண்டம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தாலும், அதே யூனியன் பிரச்னை. டைட்டிலில் அப்பாவின் (சூப்பர் சுப்பராயன்) பெயரைப் போட்டுவிட்டு, வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என தியாகராஜாவிடம் சொல்லிவிட்டேன். படப்பிடிப்பு தொடங்கி முடிவதற்குள் ஸ்டண்ட் யூனியன் கார்டு எடுத்து ஐந்து வருடங்கள் ஆனது. இருப்பினும் நான் ஸ்டண்ட் மாஸ்டராவதற்கு சிலர் யூனியனில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பேசி சரிகட்டினேன். ஆரண்ய காண்டம் படத்தின் இறுதி சண்டைக் காட்சியை நூற்று ஐந்து பேரை வைத்து எடுத்தேன். எல்லோரும் அசந்து போனார்கள்.

அதனைத் தொடர்ந்து துரோகி, பலே பாண்டியா, தீராத விளையாட்டு பிள்ளை, தூங்கா நகரம், குள்ளநரி கூட்டம், தமிழ்ப்படம் என நிறைய படங்களில் வேலை பார்த்தேன். முதலில் செய்த படம் ஆரண்ய காண்டம் என்றாலும், அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் தான் வெளியானது. இப்படி தொடங்கிய என் ஸ்டண்ட் மாஸ்டர் பயணம் ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், கார்த்தி,ஜெயம் ரவி என தமிழின் எல்லா முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளேன்.' 

எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில், ஏறக்குறைய நூற்றைம்பது படத்தில் வேலை பார்த்துள்ளீர்கள்?

 

‘பொதுவாக எல்லோருக்கும் என்னுடைய வேலை பிடிக்கும். ரொம்ப வேகமாக வேலையை முடித்துக் கொடுப்பேன். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுப்பேன். படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சி இருந்தாலும், படத்தின் முழுக்கதையும் கேட்பேன் அல்லது படிப்பேன். கதையில் எதாவது சேர்க்க வேண்டும் என்றால் இயக்குநரிடம் சொல்வேன். சண்டைக் காட்சிகளை படப்பிடிப்புக்கு முந்தைய நாளே டிசைன் பண்ணிவிடுவேன். ஒத்திகை, சிஜி, ஸ்டோரி போர்ட் எல்லாம் முதலிலேயே செய்துவிடுவேன். நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகத்தான் இதெல்லாம்.

அதேபோல், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் தனியாக தெரியக் கூடாது என்று நினைப்பேன். நான் இயக்கும் சண்டைக் காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். அதுதான் என்னுடைய வெற்றி.' 

முன்னணி ஹீரோக்களுடன் வேலை பார்த்த அனுபத்தை சொல்லுங்களேன்?

‘அஜித்தின் ஜி படத்தில் உதவி ஃபைட்டராக வேலைப் பார்த்த நான் தான், அவருடைய மங்காத்தா படத்தின் க்ளாஸ் ஒர்க் பண்ணேன். என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து அஜித் ரொம்ப சந்தோசப்பட்டார். அவருடைய விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் பணி செய்துள்ளேன். விஜய்யின் தெறி, புலி, வாரிசு போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

எங்க அப்பா போன்ற சீனியர்களுடன் வேலைப் பார்த்தவர்கள், என்னுடன் வேலை பார்க்கும் போதும் ரொம்ப சவுகரியமாகவே உணர்ந்தார்கள். ரஜினி அதற்கு சிறந்த உதாரணம். காலா படத்தில் வேலைப் பார்த்த போது, தீரன் படத்தின் சண்டைக் காட்சிகளைக் கண்டு வியந்ததாக சொன்னார்.

ஒருநாள் ஈவிபி பிலிம் சிட்டியில் காலா படத்தில் வரும் ரயில் சண்டையை எடுத்துக் கொண்டிருந்தேன். ‘எதுக்கு இவ்ளோ ஷாட் எடுக்குறீங்க?' என கேட்டார் ரஜினி. நான் பதில் சொல்லவில்லை. எடுத்த வீடியோவை உடனே எடிட் செய்து, உணவு இடைவேளையில் அவரிடம் காட்டினேன். வீடியோ பார்த்தவர், எழுந்து வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். ‘மஜா பா... சூப்பர்' என சொல்லியவர், அதன் பிறகு எதுவுமே பேசவில்லை. ‘நீங்க சொல்றதை செய்றேன்' என்ற அளவுக்கு, இறுதி சண்டைக் காட்சிகளில் நடித்தார்.'

 உங்கள் அப்பா இந்த துறையில் சீனியர், உங்களின் வேலையைப் பத்தி அவர் எதாவது சொல்லியதுண்டா?

‘இதுவரை என்னை நிறைய பேர் பாராட்டி உள்ளார்கள். விருதுகள் வாங்கியிருக்கிறேன். சென்ற வருடம் வரை, அவர் என்னை பாராட்டியதே இல்லை. ஒருநாள் இரவு படபிடிப்பு தளத்தில் இருக்கிறேன், அப்பா கால் பண்ணி ‘உன் கூட கொஞ்சம் பேசணும்.. சூட்டிங் முடிந்ததும் கால் பண்ணு' என்றார். படப்பிடிப்பு முடிந்து இரவு ஒரு மணிக்கு அவருக்கு கால் பண்ணினேன். ‘விஸ்வாசம் படம் போன வாரம் தான் பார்த்தேன் பா. ரொம்ப நல்லா பண்ணிருக்கே' என நாற்பது நிமிடங்கள் பேசினார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது. ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன், எங்க அப்பாவை மாஸ்டர் என்று தான் கூப்பிடுவேன். குரு மரியாதைக்காக அப்படி அழைக்கிறேன்.

ஸ்டண்ட் என்றாலே ஆபத்துதான். படப்பிடிப்பு தளத்தில், பாதுகாப்பை ரொம்ப முக்கியமானதாகப் பார்ப்பேன். சின்ன படமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ், டாக்டர் கண்டிப்பாக இருப்பார்கள். இதுவரை என்னுடைய திட்டமிடலை மீறி சில விபத்துகள் நடந்திருந்தாலும், அதனால் யாரும் பாதிக்கப்பட்டது கிடையாது. ரொம்ப ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை சிஜியில் பண்ணிட சொல்வேன். இந்தியாவிலேயே சிறந்த ஃபைட்டர்கள் தமிழ் சினிமாவில் தான் உள்ளனர். எதையும் துணிந்து செய்வார்கள். அதேபோல், இதுவரை என்னுடைய படங்களில் அதிகம் டூப் போட்டது கிடையாது.

தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பணி புரிந்துள்ளேன். அது ஓர் உலகத்தரமான படமாக இருக்கும். அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காகக் காத்திருக்கிறேன்,'' என்று தனது நீண்ட உரையாடலை முடித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com