இந்திய அரசியலில் 10 திருப்புமுனைகள்

இந்திய அரசியலில் 10 திருப்புமுனைகள்

1. 1922 சௌரி சௌரா:

உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் சௌரி சௌரா. 1922ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை தன்னார்வலராகப் பிணைத்துக் கொண்டிருந்த பகவான் ஆஹிர், தனது சக தன்னார்வலர்களுடன் ஊரின் கடைவீதியில் இருந்த கள்ளுக் கடை முன் மறியலில் இறங்கினார். இன்ஸ்பெக்டர் குப்தேஷ்வர் சிங் தலைமையில் வந்த போலீஸ் படை அவர்களை அடித்து விரட்டியது. சிலரைக் கைது செய்து காவல் நிலைய லாக்கப்பில் அடைத்தது.

அந்தச் சிற்றூர் மக்கள் அச்சம் கொள்ளவில்லை. மாறாக ஆத்திரம் கொண்டனர். இரண்டு நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 4ஆம் தேதியன்று 2000 பேர் சினம் கொண்டசிங்கங்களாக காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். காவலர்களோடு மோதல் நடந்தது. முதலில் தனது 13 அதிகாரிகளை வானை நோக்கிச் சுடச் சொல்லி ஆணையிட்டார் குப்தேஷ்வர். கூட்டம் கலையவில்லை. கூட்டத்தை நோக்கிச் சுடச்சொன்னார். மூன்று பேர் அங்கேயே சுருண்டு விழுந்தனர். ஆத்திரத்துடன் மக்கள் கூட்டம் காவலர்கள் மீது பாய்ந்தது. போலீஸ் பின் வாங்கி காவல் நிலையத்திற்குள் பதுங்கியது. காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டது குப்தேஷ்வர் சிங் உட்பட 22 காவலர்கள் உள்ளேயே கருகிச் செத்தார்கள்.

ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்த காந்தி திகைத்துப் போனார். அஹிம்சை வழியிலான போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்யாமல் அழைப்பு விடுத்து விட்டேன் என வருந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டது.

காந்தி அவசரப்பட்டு எடுத்த முடிவு அது என்றும் சுதந்திரத்தை அடைவதற்கான வேளை நெருங்கி வந்த போது காந்தி எடுத்த முடிவு அந்த வாய்ப்பைத் தள்ளிப் போட்டது என்றும் நேரு தன் சுய சரிதையில் எழுதுகிறார்

காந்தியின் அகிம்சை போராட்டம் அவரது கண்ணெதிரே நொறுங்கி விழுந்த ஆண்டு 1922.

2. 1947 இந்தியப் பிரிவினை

ஆகஸ்ட் 14 , 1947 அன்று இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் இரு புது நாடுகள் உருவாகின. மதத்தின் பேரால் நடந்த இந்தப் பிரிவினையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பார்சிகள் என எல்லா மதத்தவரும் பாதிக்கப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர் இரு நாடுகளுக்கிடையே இடம் பெயர்ந்தார்கள். பலர் வழியிலேயே இறந்து போனார்கள். பெண்கள் வன்புணர்வுக்குள்ளானார்கள். வன்முறைச் சம்பவங்-களில் பலர் இறந்தார்கள். தில்லி-யிலும் பஞ்சாபிலும் வீதிகளில் அகதிகள் குவிந்தார்கள். பலர் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிய நேரிட்டது. அப்போது பெற்றோரிடமிருந்து பிரிந்த மன்மோகன் சிங் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பெற்றோரைக் கண்டடைந்தார். வைஸ்ராய் மாளிகையின் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் உட்பட எல்லாம் கணக்குப் பார்த்து பாகப்பிரிவினை நடந்தது.

இந்த அபத்தத்தின் பின்விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. இருநாடுகளிலும் இன்னும் வெளித்தெரியாத கசப்புணர்வுகள் நிலவுகின்றன. அவை பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து கிரிக்கெட் போட்டி ஆதரவு வரை பல விதங்களில் வெளிப்படுகின்றன.

3.  1949 இந்திய அரசமைப்புச் சட்டம்

நவம்பர் 26, 1949 அன்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அவையால் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசமைப்புச்சட்டத்தின் வரைவைத் தயாரிக்க ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்ட அவையில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ‘வரைவை உருவாக்க அவையால் நியமிக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவில் ஒருவர் ராஜினாமா செய்தார். ஒருவர் இறந்து போனார்; ஒருவர் அமெரிக்காவிற்குப் போய்விட்டார்; ஒருவர் அரசு நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இதில் முழுமையாக கவனம் செலுத்த இயலவில்லை; இருவர் தில்லிக்கு அப்பால் வெகு தொலைவில் வசிக்கின்றனர்; அவர்கள் உடல் நிலை காரணமாகப் பயணம் செய்ய முடியவில்லை. எனவே இதன் மொத்த சுமையும் அம்பேத்கர் மீது விழுந்தது' என்று பேசினார்.

அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து அம்பேத்கர் நம் அரசமைப்புச் சட்ட வரைவை உருவாக்கினார். 165 நாட்கள் விவாதத்திற்குப் பின் அந்த வரைவு ஏற்கப்பட்டது.என்றாலும் நம் அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளைப் போதிய அளவு நிறைவேற்றவில்லை என்ற கருத்து நிலவுகிறது. டிசம்பர் 2021 வரை 104 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தை சீராய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வெங்கடாசலாச்சய்யா தலைமையில் 2000 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலோ, உட்பிரிவுகளிலோ, கூட்டாட்சி (Federal) என்றசொல் எங்கும் இடம் பெறவில்லை.

4. 1967 மாற்றங்களின் தொடக்கம்

1964இல் நேருவும் 1966இல் சாஸ்திரியும் மறைந்த பின் இந்திரா தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டாலும் முன்பை விட 78 இடங்களைக் குறைவாகப் பெற்றது. அது குஜராத், தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தில்லி ஆகிய ஏழு மாநிலங்களில் பின்னடைவைச் சந்தித்தது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, திமுக, ஜனசங் ஆகியவை மக்களவையில் வலுப் பெற்றன.

அப்போதெல்லாம் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்ந்தே தேர்தல் நடைபெறுவது வழக்கம். காங்கிரசிற்குப் பல முன்னணித் தலைவர்களைத் தந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அங்கு சரண்சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஏற்பட்டது.கேரளத்தில் காங்கிரஸ் 9 இடங்கள் மட்டுமே பெற்றது. அங்கு ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் இடதுசாரி அரசாங்கம் உருவாயிற்று. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது.. காமராஜரே தோற்றுப் போனார்.

அதன் பின் இன்றுவரை காங்கிரசால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. திராவிடக் கட்சிகளே ஆட்சி செய்து வருகின்றன.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சி என்ற ஜனநாயகப் பரிசோதனைகளின் முதல் சோதனைக் குழாய், 1967.

5. அதிமுகவின் தோற்றம்

1969இல் அண்ணாவின் மறைவிற்குப் பின், எதிரணியில் காமராஜும் ராஜாஜியும் கை கோர்த்து நிற்க, கருணாநிதி தலைமையில் 1971இல் தேர்தலை சந்தித்த திமுக 184 இடங்களில் வென்றது. இன்றுவரை தமிழகச்சட்டமன்றத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த எண்ணிக்கையில் இடங்களை வென்றதில்லை என்பதால் திமுக ‘கண்ணுக்கெட்டியவரை எதிரிகளே இல்லாத' கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே, அதாவது 1972ஆம் ஆண்டு அன்றைய திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சி நிர்வாகிகள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் குரல் எழுப்பியதையடுத்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் 1972, அக்டோபர் 17 அன்று அண்ணா திமுக என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். மதுரை ஜான்சி பூங்காவில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது

பலர் அறியாத செய்தி ஒன்றுண்டு. அப்போது அந்தக் கொடியில் கறுப்பு சிவப்பு நிறங்களுடன் தாமரைச் சின்னமும் இடம் பெற்றிருந்தது பின்னரே தாமரைக்கு பதில் அண்ணாவின் படம் இடம் பெற்றது.

தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் 1977 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்துத் தன் வாழ்வின் இறுதிவரை முதல்வராக பதவி வகித்தார். உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது பிரசாரத்திற்குச் செல்லாமலே வென்றார். தமிழ்நாட்டை இதுவரை அதிக காலம் ஆண்ட கட்சி அதிமுக.

6. 1974: ஊழலுக்கு எதிரான குரல்கள்

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான குரலெழுப்பிய அதே காலகட்டத்தில் குஜராத்தில் மாணவர்கள் அங்கிருந்த காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக நவ நிர்மாண் என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள். ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் அரசு பதவி விலகியது. தேர்தல்கள் நடந்தன. 1975 ஜூன் 12ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 167 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 140 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் 75 இடங்கள் மட்டுமே பெற்று படு தோல்வி அடைந்தது.

குஜராத்தில் மாணவர் இயக்கம் நடந்து கொண்டிருந்த போதே பிகாரிலும் பிகார் சத்ர சங்கர்ஷ் சமிதி என்ற மாணவர் இயக்கம் தோன்றியது. அதன் தலைவராக பட்னா பல்கலைக்கழக மாணவராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத், பிகார் இயக்கங்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் வழி நடத்தினார்.

காங்கிரஸ் படுதோல்வி கண்ட குஜராத் தேர்தல் முடிவுகள் வந்த அதே ஜூன் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதி மன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்திரா பதவி விலக வேண்டிய கட்டாயம் எழுந்தது

இது போன்ற நிகழ்வுகளால் நிலைகுலைந்த இந்திரா அவசரநிலையை அறிவித்தார்.1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ‘உள்நாட்டுக் குழப்பங்களால்' அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மாநில உரிமைகள் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மாற்றப்பட்டன. அரசமைப்புச் சட்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற

நீதிபதிகள் பணி மூப்பு அடிப்படையிலன்றி அரசின் விருப்பத்திற்கேற்ப நியமிக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டன. மக்கள் கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டனர். எளிய மக்கள் வாழ்ந்த தில்லி துருக்மான் கேட் பகுதி புல்டோசர்களால்‘சுத்தப்படுத்தப்பட்டது.'

7. 1974: வலிமையின் எழுச்சி

அரசியல் அரங்கில் குழப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த அதே 1974இல் மே மாதம் 18ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. உலகில் அதுவரை அணு ஆயுதம் ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இருந்தது. வல்லரசாக அறியப்படாத, அங்கீகரிக்கப்படாத ஒரு நாடு முதன் முதலாக அணு ஆயுத வல்லமை பெற்றது என்றால் அது இந்தியாதான். (இந்தியாவின் இந்த வல்லமையைப் பொறுத்துக் கொள்ள முடியாத மேற்குலகம் இந்தியாவில் அரசியல் குழப்பங்களைப் பின்னின்று தூண்டியது எனச் சொல்வாரும் உண்டு)

இந்த அணு வெடிப்பு இந்திய மக்களிடையேதேசத்தைப் பற்றிய பெருமிதத்தையும் மன எழுட்சியையும் ஏற்படுத்தியது. அதே நேரம் வல்லரசு நாடுகள் இந்தியாவைத் தனிமைப்படுத்த முயன்றன. விண்வெளி ஆய்வு, தொலைத்தொடர்பு, ஏவுகணைத் தயாரிப்பு ஆகியவற்றிற்கான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. எரிசக்தித் தேவைகளுக்கான உதவிகளை கனடா நிறுத்தியது.

1998இல் மீண்டும் இந்தியா இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. அப்போது இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

8. 1991: புதிய பொருளாதாரக் கொள்கை

நெடுங்காலமாக நாம் பின்பற்றி வந்த சோஷலிசக் கொள்கைகளின் காரணமாகத் தொடர்ந்து நலிவடைந்து வந்த இந்தியப் பொருளாதாரம் 1990களின் இறுதியில் கடும் நெருக்கடிக்குள்ளானது. 1950 முதல் 1980 வரை இந்தியப் பொருளாதரத்தின் வளர்ச்சி 3.5% என்ற அளவில் தேக்கம் கண்டு நின்றது. தனிநபர் வருமானம் சராசரியாக 1.3% மட்டுமே உயர்ந்திருந்தது. 1990இல் நம்முடைய இறக்குமதியின் அளவு ஏற்றுமதியின் அளவை விட அதிகமாக இருந்ததால் அன்னியச் செலாவணி பெரிய அளவில் வெளியே போய்க் கொண்டிருந்தது. அந்நிய நாடுகளிடம், நிதி அமைப்புகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்தோம். நம்மிடம் இரண்டு வாரங்களுக்கான அந்நியச் செலாவணி மாத்திரமே கையிருப்பு இருந்தது. நம்மிடம் இருந்த தங்கத்தை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம்.

1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார். தொழில், வர்த்தகத்துறைகள் மீதிருந்த அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்வது தாராளமயம். இவற்றுடன், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் ஆகிய முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. LPG(Liberalisation,Privatisation,Globalisation) என்ற மும்முனைத் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம் நிமிர்ந்தது.

1991இல் 266 பில்லியன் டாலர்களாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2018இல் 2.3 டிரில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. 1992இல் இருந்ததை விட அன்னிய முதலீடு 316.9% சதவீதம் அதிகரித்திருக்கிறது. 1993-&94இல் 36% ஆக இருந்த வறுமை 24.1% ஆகக் குறைந்திருக்கிறது

கண்முன்னே காட்சிகள் மாறியிருக்கின்றன. மத்திய தர வர்க்கம் விரிவடைந்திருக்கிறது. முன்பு சைக்கிள்தான் அவர்களது வாகனமாக இருந்தது. அந்த நாட்களில் பேருந்துகளில் மக்கள் பலாக்காய்களைப் போல பிதுங்கிக் கொண்டு போகும் காட்சிகளை எல்லா நகரங்களில் பார்க்கலாம். இன்று அநேகமாக மத்திய தர வர்க்கத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு மோட்டார் வாகனம் வைத்திருக்கிறார்கள். அன்று பல வீடுகளில் தொலைபேசி கிடையாது. இன்று ஒவ்வொருவரும் ஒரு கைபேசி வைத்திருக்கிறார்கள். (அன்று அந்தஸ்தின் அடையாளமாக சிலர் இரு மனைவிகள் வைத்திருந்தது போல இன்று இரு கைபேசிகள் வைத்திருக்கிறார்கள்!) பணப் புழக்கம் காரணமாக தீபாவளிக்கும் பண்டிகைகளுக்கும் பிறந்த நாட்களுக்கும் புத்தாடை வாங்குவது என்பது போய் எப்போது வேண்டுமானலும் புதுத் துணி வாங்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஊரெங்கும் உணவு விடுதிகள் முளைத்திருக்கின்றன. எல்லா நகரங்களிலும் புதுக் குடியிருப்புகள் எழுந்து கொண்டிருக்கின்றன. விமானப் பயணம் சகஜமாகி வருகிறது. உயர்கல்விக்கும் வெளிநாட்டிற்கும் படிக்கச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

9. 2013 செவ்வாய்க்கு ஒரு முத்தம்

நம்மவருக்கு ‘ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால் தெரியாது. எமனுக்கு வாகனம் என்ன என்றால் உடனே எருமைக் கடா என்பான்... அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது.' என்று இந்தியர்களது அறிவியல் அறிவு பரிகாசம் செய்யப்பட்டது ஒரு காலம். 2013 நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மற்ற கிரகங்களுக்கு கலன்கள் அனுப்பும் முயற்சியில் முதலாவதாக செவ்வாய் கிரகத்திற்குத் தன் விண்கலத்தை அனுப்பியது. 298 நாள்கள் பயணம் செய்து 2014 செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய விண்கலம் செவ்வாயை நெருங்கியது. முதல் முயற்சியிலேயே அமெரிக்காவால் செவ்வாயை நெருங்க முடியவில்லை. ரஷ்யாவால் நெருங்க முடியவில்லை. ஐரோப்பியர்களால் முடியவில்லை ஆனால் இந்திய விண்கலம் நெருங்கியது. முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, இந்தியப் பொறியாளர்கள் விஞ்ஞானிகள் வெறும் 450 கோடி ரூபாய் செலவில் நிகழ்த்திய இந்த சாதனையை டைம் வார இதழ் உலகின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்று என்று குறிக்கிறது

10. 2014 தலைநகரில் தாமரை

1984 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டே இடங்களைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 1996ல் மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வலுப்பெற்றது. அதற்கு அவர்கள் அந்த இராமருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் ஆட்சியில் நீடிக்க அவர்களுக்கு இராமரின் அருளாசி கிட்டவில்லை. 13 நாள்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.1998 இல் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததாலும் 13 மாதங்களில் கவிழ்ந்து மீண்டும் 1999-இல் ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆட்சி ஐந்தாண்டு காலமும் நீடித்தது. காங்கிரஸ் அல்லாத கட்சி முழுமையாக ஐந்தாண்டு காலம் ஆட்சி நடத்த முடியும் என்பது முதன் முறையாக நிரூபணமாயிற்று. 2004 தேர்தலில் தோற்று பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த அதை 2014 தேர்தலில் நரேந்திர மோதி மீண்டும் அரியணை ஏற்றினார். தனிப்பெரும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த அது 2019இல் முன்பிருந்ததை விட அதிக இடங்கள் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.இன்று இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் அது தனியாகவும் பிற கட்சிகளுடனும்சேர்ந்து 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.கொரானா காலத்தில் மக்களுக்கு 219 கோடி டோஸ் தடுப்பூசிகளை முற்றிலும் இலவசமாகச் செலுத்தியது ஓர் உலகசாதனையாகக் கருதப்படுகிறது. அதைத் தவிர 100 நாடுகளுக்கு 66 மில்லியன் டோஸ்களை அனுப்பி வைத்தது. நூறு கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட போது ‘அபாயத்தின் விளிம்பில் இருந்த மக்களைக் காத்தமைக்குப் பாராட்டுகள்' என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ், மோதிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.(21 அக்டோபர் 2021) 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 முதல் 27 வரை நடைபெற்ற ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துப் பேசினார்கள்.

கோவிட் தாக்கம் அதன் நீட்சியான முடக்கம், உக்ரைன் & ரஷ்ய யுத்தம் இவற்றின் காரணமாக உலகின் பெரிய பொருளாதாரங்கள் தடுமாறிக் கொண்டிருக்க்கின்றன. அவற்றின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் சரிந்து கொண்டிருக்கின்றன( உதாரணமாக 2021இல் சீனாவின் வளர்ச்சி விகிதம் 8.1%. 2022க்கான மதிப்பீடு 4.4% அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 5.7% 2022க்கான வளர்ச்சி விகித மதிப்பீடு 3.7% 2023இல் இது இன்னும் குறைந்து 2.3% ஆக ஆகுமாம். ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று 2022ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகித மதிப்பீடுகளை வெளியிட்டுள்ள IMF சொல்கிறது. உலக நாடுகளிலேயே விரைந்து வளரும் பொருளாதாரம் (fastest growing major economy) கொண்ட, அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடு இந்தியா! 8.2% என்கிறது அது. (ஓப்பீட்டிற்காக மற்ற நாடுகளின் வளர்ச்சி விகிதம்:

அமெரிக்கா: 3.7%‘ பிரிட்டன்: 3.7% சீனா: 4.4% கனடா: 3.9% ஜெர்மனி: 2.1%ஜப்பான்: 2.4%) பத்தாண்டுகளுக்கு முன் உலக நாடுகளிடையே இந்தியா பொருளாதாரத்தில் 11ஆம் இடத்தில் இருந்தது. இன்று பிரிட்டனைப் பின் தள்ளி ஐந்தாம் இடத்திற்கு வந்துள்ளது(https://www.weforum.org/agenda/2022/09/india-uk-fifth-largest-economy-world)

ஏழை மக்களுக்கான மானியங்களை இடைத் தரகர்கள் விழுங்கி விடாமல் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிற்கே மாற்றும் முறையைக் கண்டு வியக்கும் ஐ எம் எஃப், ‘இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது' என்கிறது (https://www.livemint.com/news/india/lot-to-learn-from-india-says-imf-on-govt-scheme-11665628152606.html)

வளர்ந்த நாடுகளின் குழு எனப்படும் ஜி 20 குழுவின் தலைமைப் பொறுப்புக்கு அண்மையில் இந்தியா தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா தெரிவித்த கருத்துகள் பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன1947இல் நம்மோடு விடுதலை பெற்ற பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ‘பிச்சைப் பாத்திரம்' ஏந்திச் செல்வதாகச் சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர். ‘அவர்களது அயலுறவுக் கொள்கையைப் பாருங்கள், எவ்வளவு சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள்,' என்கிறார், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர். ஒருகாலத்தில் நம்மை விட படிப்பறிவு அதிகம் கொண்டிருந்த நாடாக இருந்த இலங்கை இன்று இந்தியாவின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறது.இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல, எதிர்காலமும் பெருமைக்குரியது.

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com