15 லட்சம் ரூபாய் பேரம்!

15 லட்சம் ரூபாய் பேரம்!

புலனாய்வு

கோ வில்பட்டியில் இருந்து இலக்கியம், உலகத்தரமான சினிமா இதன் மீதான ஆசையால் சென்னைக்கு வந்து சேர்ந்தவன் நான்.

விசிட்டர் என்ற பத்திரிகை எண்பதுகளில் தொடங்கப்பட்ட காலத்தில் கோவில்பட்டியிலிருந்தவாறு வெள்ளப்பாதிப்புகளைப் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி கேட்டிருந்தார்கள். எழுதி அனுப்பினேன். தொடர்ந்து அதுபோல் சில கட்டுரைகள் எழுதியபிறகு சென்னைக்கு வந்து நான் முதல் முதலில் தங்கிய இடம் தயாரிப்பாளர் ஜிவி அய்யர் இல்லம். சினிமா மீதான ஆர்வத்துடன் வந்தவன் நான். அவர் சமஸ்கிருதத்தில் எடுத்தஆதி சங்கராச்சார்யா படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். பத்திரிகையாளர் ஷ்யாம் எங்கள் ஊர்க்காரர். அந்த காலகட்டத்தில் அவர் தராசு என்ற பத்திரிகை தலைப்பு வாங்கியிருந்தார். அவருடன் நானும் நம்பிராஜன் என்கிற கவிஞர் விக்கிரமாதித்தனும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினோம். அதுதான் புலனாய்வுப் பத்திரிகையில் என் ஆரம்ப கட்டம். அந்தப் பத்திரிகை மிகசிறப்பாக வரத்தொடங்கியது. இடதுசாரிகளால் ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்களை கையிலெடுத்து மக்களிடம் சேர்த்தோம். அரசியல் அதிகாரங்களில் இருப்பவர்களின் ஊழல்களை தைரியமாக யாராவது கேட்கமாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தபோது புலனாய்வு இதழியல்மூலம் அதைக் கையிலெடுத்தோம். அரசியல், பணபலம்,  சாதிபலம்   கொண்டவர்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டோம்.

 நிறைய ஏழை எளிய சாமான்ய மக்களின் பிரச்னைகளையும் இதன்மூலம் தீர்க்க முடிந்தது.  உதாரணத்துக்கு சேலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் மனைவி சென்னையில் ஒரு விபசார விடுதியில் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அந்த இளைஞன் பதறிப்போய் எங்கள் பத்திரிகை அலுவலகம் வந்தான். நான்கே மணி நேரத்தில் அப்பெண்ணை மீட்டு அவனுடன் அனுப்பி வைத்தோம். தராசு இதழில் அலிபாபாவும் 25 திருடர்களும் என்ற தலைப்பில் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி செய்தி வெளியிட்டோம். இதைத்தொடர்ந்து மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் ரசிகர்களை நாற்காலியில் அமரவைத்துவிட்டு அமைச்சர்களை எம்ஜிஆர் தரையில் உட்காரவைத்தார். எம்ஜிஆருக்கு இருந்த பிம்பத்தை குலைத்து உண்மையைக் கொண்டு வந்தவர்கள் நீங்கள்தான் என பேராசிரியர் அன்பழகன் தராசு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

நக்கீரன் இதழ் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் அங்கே ஆசிரியர் பொறுப்பில் இருந்தேன். அப்போது நாங்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் வழக்குகள் ஏராளம்.

1990-ல் அதிமுக ஜா, ஜெ என்று பிளவு பட்டுக் கிடந்த காலத்தில் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் கொண்ட அணியினர் ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்துவந்து அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்று ஒரு நாள் விடியற்காலையில் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் புகைப்படக் கலைஞராக இருந்தவர் முத்துராமலிங்கன். அந்த தாக்குதல் நிகழ்ச்சியை அவர் மட்டுமே புகைப்படம் எடுத்தார். அதனால் தாக்குதலுக்குள்ளாகி  காமிரா பறிக்கப்பட்டது. அந்த பிலிம் ரோல் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுவிட்டது. காவல்துறை அப்படி ஒரு தாக்குதலே அதிமுக அலுவலகம் மீது நடக்கவில்லை என்று பூசி மெழுகிவிட்டது. காவல்துறையின் பொய்யை அம்பலபடுத்தக் கூடியவை அந்த படங்களே. எனவே அவற்றைக் கைப்பற்ற முடிவு செய்தோம்.

எங்களுக்கோ வேறு காமிரா வாங்கித்தருகிறோம் என்று அரசியல் தலைவர்கள் கூறினர். ஆனால் அந்த புகைப்படங்களின் வலிமை எங்களுக்கல்லவா தெரியும்? அங்கே நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி தன் கடிகாரத்தை இழந்துவிட்டார். அது கீழே கிடந்தது என்று எடுத்துக்கொண்டுபோய் (புதிதாக வாங்கி தேய்த்து..)  நக்கீரன் கோபால் அந்த போலீஸ் அதிகாரியிடம் அளித்தார். அவர் மூலமாக விவரங்கள் சேகரித்தார். பிலிம் ரோல் ஒரு டிஎஸ்பி, ஏட்டு ஆகியோர் கையில் இருந்தது. அவர்களிடம் வாங்கிக்கொள்ளுமாறு அந்த அதிகாரி சொன்னார். அவருக்கு அந்த ரோலில் இருக்கும் படங்களின் முக்கியத்துவம் தெரியாது.

அவர்களைச் சந்திக்கச் சென்றோம். நான், முத்து, ஒரு ஆட்டோ டிரைவர். அப்போது ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தனர் அந்த அதிகாரிகள்.   அந்த ஏட்டுவிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் மேலதிகாரியிடம் ஒரு கையெழுத்து வாங்க வேண்டி இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ஒரு நிமிடம் இதை வெச்சுக்கோப்பா என்று சாதாரணமாகக் கொடுத்தார். அந்த ஒரு நொடியில் அந்த பிலிம் ரோலை மாற்றி வேறோரு பிலிம் ரோலை கொடுத்துவிட்டோம். டி.எஸ்.பி உஷார் பேர்வழி.

அந்த பிலிம்ரோலை இவங்க கிட்ட கொடுத்திராதப்பா என்றார். ஏட்டு, ‘அய்யா, இதோ என்னிடம் பத்திரமாக இருக்கய்யா' என்று காண்பித்தார். அந்த ஏட்டுவை எங்கள் ஆட்டோவில் கூட்டிக்கொண்டு மைலாப்பூரில் ஒரு ஸ்டூடியோவுக்கு ப்ரிண்ட் போட அழைத்துப்போனோம்.  அங்கே ஏற்கெனவே கோபால் ரகசியமாகப் போய் இருந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை, ப்ரிண்ட் போட கெமிக்கல் இல்லை என்று சொல்லுமாறு சொன்னார். இன்று பிரிண்ட் போட்டால் அந்த பிலிம் ரோல் மாறிய குட்டு வெளிப்பட்டுவிடும் அல்லவா? ஸ்டூடியோவில் இருந்தவரும் அப்படியே சொன்னார். சரி கிளம்புவோம் என்று ஏட்டு சொல்ல, அவரை பத்திரமாக ஆட்டோவுக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு, ஆட்டோ ஒரு தெரு தள்ளிப்போனதும் திரும்ப ஸ்டூடியோவுக்குள் ஓடினோம். அப்போது போடப்பட்ட பிரிண்டுகள் நக்கீரனில் அட்டைப்படமாக வெளியாகி ஒரு கலக்கு கலக்கின. இந்த சாகசத்தைக் கேள்விப்பட்டு எழுத்தாளர் பாலகுமாரன் என்னை வந்து சந்தித்து மூன்று மணி நேரம் பேசிவிட்டுச் சென்றார். அதை வைத்து இந்தியா டுடேயில் உயிர்ச்சுருள் என்ற பெயரில் ஒரு நாவலும் எழுதினார். இந்த பிலிம்ரோல் ஜெ அணியினருக்கு முக்கிய துருப்புச்சீட்டாக தேவைப்பட்டது. ஏனெனில் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு என்று அப்போது இழுபறி. எனவே இந்த ரோலைக் கொடுக்குமாறு பேரம் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் பதினைந்து லட்சம் தருவதாகச் சொன்னார்கள். நான் அன்று இருந்த மனநிலையில் மறுத்துவிட்டு வந்தேன். கோபால் அவர்களும் அதே மன உறுதியில் நின்றார் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.

பின்னாளில் ஜூனியர் விகடன் இதழில் பணியாற்றியபோது வேலூரைச் சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு எல் ஐசி பாலிசி மறுக்கப்பட்ட செய்தி கிடைத்தது. ஜடப்பொருட்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் எல் ஐ சி பாலிசி கிடைக்கும். ஆனால் திருநங்கைகளுக்குக் கிடையாதா என்று அந்த செய்தியை எழுதி, ஜூவியின் தொடர்பு வலிமையின் மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக திருநங்கைக்கு காப்பீடு பெற்றது திருப்தியான அனுபவம்.

டிசம்பர், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com