தி பரமேசுவரி
தி பரமேசுவரி

எனக்கே எனக்கென மலர்ந்த ரோஜாப் பூ!

வீறிட்டு அலறிய என் குரலைக் கேட்டு, நானே வித்தியாசமாக உணர்ந்தேன்; மயங்கினேன்; கண்விழித்துப் பார்க்கையில் என் அருகில் ரோஜாப்பூக்குட்டியாய் ஒரு குழந்தை பூத்திருந்தது. உண்மையிலேயே ரோஜாப்பூ நிறம்; மணிக் கண்களும், சொப்பு வாயும் சப்பை மூக்கும் சின்னக் கைகால்களும் பார்க்கப் பார்க்க மலைத்தேன். அந்தப் பேருணர்வை விவரிக்க என்னிடம் சொற்களே இல்லை.

குழந்தை ஏதும் மாறிவிட்டதோ என்று அப்போது சந்தேகப்பட்டதை நினைத்து இப்போதும் சிரித்துக் கொள்கிறேன். அப்படியொரு மகிழ்ச்சி, ஆனந்தம். அறுவை செய்யத் தேவையின்றி, இயற்கைப் பிரசவமாகவே குழந்தை பிறந்தது இரட்டிப்பு சந்தோஷம். அன்றைக்கெல்லாம் திரும்பத்திரும்பக் குழந்தையைப் பெருமிதத்துடன் பார்த்தபடியே இருந்தேன், என் குழந்தை.. என் குழந்தை. ‘அம்மா கண்ணு தான் பொல்லாத கண்ணு’ என் அம்மா சிரித்தபடியே சொன்னார்.

உண்மையில், குழந்தை பெற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய தீவிரமான வாசிப்பும் எழுத்தும் வரலாற்றைப் பதிவு செய்யும் ஆர்வமும் அதற்கு எதிர்ப்பான மனநிலையைத் தந்திருந்தது. குழந்தைகளை மிகவும் பிடிக்கும், அதுவேறு விஷயம்; ஆனால் குழந்தைகள் என்றால் பொறுப்பும் அல்லவா! அதற்கான நேரத்தை என்னால் வழங்க முடியுமா, அத்தகைய பொறுப்புள்ளவளா நான் என்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது.

எனக்கு, இளங்கலை முதலாண்டு படிக்கும்போதே திருமணம் நடந்தது. முதுகலை முதலாண்டில் குழந்தை பெற்றேன். அதுவரையிலும் தள்ளிப் போட்டதே சாதனை எனுமளவுக்குச் சோதனை. படிக்க வேண்டுமென்னும் வெறி ஒருபக்கம் உந்த, இல்லறக் கடமைகளோடு குழந்தைப் பொறுப்பையும் ஏற்றுப் படித்தேன்; அப்படித்தான் முனைவர் பட்டமும் பெற்றேன்.

வயிற்றில் கரு உருவாகியிருக்கிறது என்பதை உறுதி செய்தபோதே, என்னுடைய தேர்வுகள் எப்போது தொடங்கும், பிள்ளைப்பேற்றுக்கான தேதியோடு ஏதும் இடையீடு இருக்காதே என எல்லாவற்றையும் சிந்தித்து, சிக்கலிருக்காது என்பதை உணர்ந்து நிம்மதியடைந்தேன். பிறகே, குழந்தையைக் கவனித்தேன். தாயின் வயிற்றில் இருக்கும்போதே கல்வி கற்ற குழந்தைகளின் கதைகளைப் புராணங்களில் படித்திருக்கிறேன். சுபத்திரையின் வயிற்றில் இருக்கும்போதே பத்ம வியூகத்துள் நுழைவதைக் கற்ற அபிமன்யு கதையும் அறிவேன். என் குழந்தையும் அப்படியொரு அறிவாளியாக உருவாக வேண்டும் என்னும் தீராத ஆர்வத்துடன், வாசிப்பை மேலும் தீவிரப்படுத்தினேன்.

முதுகலை தமிழ், முதலாம் ஆண்டு பயின்ற காலம் என்பதால் தொல்காப்பியம் உட்பட்ட  இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம் ஆகியவை எனக்குப் பாடமாக இருந்தன. இவை தவிர ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவையும்; எல்லாவற்றையும் இந்தா பிடி, இந்தா பிடி என்று வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையுடன் உரையாடியபடியே படித்தேன். போதாததற்கு, அவ்வப்போது நவீன இலக்கிய வாசிப்பு. பக்திப் பாடல்கள் கேட்டால் குழந்தைக்கு நல்லது என்று சொன்னதால் எப்போதும் சஷ்டிக் கவசம் கேட்டபடியே இருப்பேன்.

சிறுவயது முதலே வீட்டு வேலைகள் செய்வதிலோ, சமையலிலோ எனக்கு ஆர்வம் இல்லை. விளையாட்டும் கிடையாது. எப்போதும் படிப்பது; கனவில் ஆழ்ந்திருப்பது; சாப்பிட்டோமோ இல்லையா என்பதே பல சமயங்களில் மறந்து போகுமளவுக்கு வாசிப்பு. இப்படியிருந்ததால் என் வீட்டில் எல்லோருமே எனக்கு அறுவை சிகிச்சையில் தான் (ஸிஸேரியன்) குழந்தை பிறக்குமென்று திரும்பத்திரும்பச் சொல்லி வெறுப்பேற்றினார்கள். சரி, அப்போதாவது செய்து பார்ப்போமென்றால், சமையல் வாசனையே குமட்டியது. முதல் மூன்று, நான்கு மாதங்கள் இலேசான தலைசுற்றலும் வாந்தியும் இருந்தது. கொய்யாக் கனியென்றால் பிரியம் என்பதால் ஒரு நாளில் அரை கிலோ கூடச் சாப்பிடுவதுண்டு; நன்றாகப் பசிக்கவும் செய்யும் அல்லவா?

குழந்தை சார்ந்து சில நேரம் பீதியாக இருக்கும்; சில நேரம் மிக மகிழ்ச்சியாக இருக்கும்; அவ்வப்போது வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொள்வேன். ஓர் உயிர் என்னுள் வளர்கிறது என்னும் எண்ணம், இன்னதென்று சொல்லவியலாத பல உணர்வுகளை அளித்த காலம் அது. இடையிடையில் பூ முடித்தல், சீமந்தம் என்று சடங்குகள் வேறு. தனிமையிலிருப்பவள் நான் என்பதால் எனக்கு, உறவினர்களுடன் அவ்வளவு புழக்கமிருந்ததில்லை. இந்தக் காலத்தில் தான் அவர்களுடன் பேசி மகிழ்தல், அவர்கள் செய்து கொண்டு வரும் உணவை ரசித்துச் சாப்பிடுவது என்று பல உறவுகளை அறிந்து, பழகினேன்.

அவ்வப்போது பிரசவ வலி எப்படி இருக்கும், உயிரோடு இருப்போமா இல்லை பிரசவத்தில் இறந்து விடுவோமா.. இப்படி ஏதேதோ எண்ணங்கள் தோன்றி பயமுறுத்தியபடியே இருக்கும். ஆனால் குழந்தை வயிற்றுக்குள் சுழலுதல், தலையால் முட்டுதல், கால் விரல் வயிற்றில் தெரிதல், உதைத்தல் இவையெல்லாம் எல்லையில்லா ஆனந்தத்தை அளித்தது. என் தங்கைகளிடம் காட்டி மகிழ்வேன். முதல் தங்கைக்கு அப்போது குழந்தை பிறந்திருந்தது. எனவே அவள் சொன்ன அறிவுரைகள் பலதும் எனக்கு உதவியாக இருந்தது.

பிரசவம் இயற்கையானதாக இருக்க வேண்டுமென்பதற்காக எப்போதும் நடந்தபடியே இருந்தேன். மாதமாக ஆக, உணவு செரியாமைச் சிக்கல் இருந்தது என்பதால் எளிமையான உணவு, அதற்குப் பிறகு நடை என்பதாக அமைத்துக் கொண்டேன். ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்; சிறுவயது முதலே எல்லா வீட்டு வேலைகளையும் அதற்குப் பழக்கித் தர வேண்டும் என்பது என் அப்போதைய ஆசையாக இருந்தது.

பிப்ரவரி 11 விடியற்காலை 3 மணி போல வயிற்றில் சுருக் சுருக் என வலி தொடங்கியது. மெல்ல மெல்ல வலி அதிகமானதுடன் வலி வருவதன் இடைவெளியும் குறைந்தது. அம்மாவை எழுப்பிச் சொன்னால், அவர் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட்டுப் படுத்துக் கொண்டார். நேரமாக ஆகத் தாங்க முடியவில்லை. கழிவறைக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றியபடியே இருந்தது; முக்கிமுக்கி அமர்ந்தேன். அம்மா கஷாயம் வைத்துக் கொடுத்தார். கழிவறைக்குப் போகக் கூடாது, அப்படித்தான் இருக்கும், பேசாமல் இரு என்று அம்மா தன் எப்போதுமான நிதானத்துடன் சொல்ல, நான் பொறுமை இழந்து, தாத்தாவிடம் நேரே சென்று, வலி தாங்க முடியவில்லை யென்றேன். பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தாத்தாவால் பொறுத்துக் கொள்ளவே முடியாது; வீடு ரணகளமானது.

அப்போது வீட்டுக்கு வந்த தங்கையின் கணவர் வண்டி ஓட்ட, முன்னரே வாங்கி வைத்து அடுக்கப்பட்டிருந்த குழந்தைக்கான பழைய துணிகள், மருத்துவமனைக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு காலை 10 மணி போல மருத்துவமனைக்குள் நுழைந்தோம். 11.45 மணிக்கு என் வீறிட்ட அலறலும் குழந்தையின் அழுகையும் இணைந்து ஒலித்தது. என் மகள் கிருத்திகா பிறந்தாள். ரோஜாப்பூ நிறம்; என் குழந்தை தானா என்று ஆச்சர்யம்; என் அருகில் ரோஜாப்பூக்குட்டி மலர்ந்திருந்தது. அது, தன் சின்னஞ்சிறுகாலால் இந்தப் பிரபஞ்சத்தையே உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com