கூண்டை உடைக்கும் குரல்!

கூண்டை உடைக்கும் குரல்!

Published on

சினிமா என்பது பொதுவாக நாயக பிம்பங்களைக் கோருவது. பணக்கார எதிரிக்கு எதிராக ஏழை நாயகனை முன்வைத்துச் செல்வதுதான் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கதைக்கரு. அந்த நாயகனின் சமூகப்பின்னணி பெரும்பாலும் நேரடியாக உணர்த்தப்படாமலேயே எடுக்கப்படும் என்பதுதான் பொதுவிதி. இதில் சில குறிப்பிட்ட சமூகப்பின்னணி கொண்ட நாயகர்கள் தங்கள் அடையாளங்களுடன் காட்டப்பட்டதும் அவை ரசிகர்களால் ஏற்கப்படுவதும் உண்டு. இந்த அடையாளங்கள் பெரும்பாலும் இடைநிலை சாதியினரைக் குறிப்பதாகவே இருந்துள்ளன. அதுதான் வெற்றிக்கான பார்முலா.

மதுரைவீரன் என்ற படத்தில் எம்ஜிஆர் நிகழ்த்தியது அருந்ததிய நாயகனின் கதை. முழுமுதல் தலித் கதையாக தன் அடையாளத்தை மறைக்காமல் வந்த சினிமா. கொங்குமண்டலத்தில் அருந்ததிய சமூகத்தவரால் தங்களில் ஒருவராக எம்ஜிஆர் பார்க்கப்பட்டார். ஆனால் அதன் பின்னரும் கூட ஒடுக்கப்பட்ட சமூக பின்னணி கொண்ட நாயகர்கள் அரிதாகவே வந்தனர். திராவிட இயக்க திரைப்படங்களில் சாதிய இழிவு வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. அதில் தலித் பாத்திரங்கள் இடம்பெற்றனர். கலைஞரின் ரத்தம் ஒரே நிறம் படத்தில் முக ஸ்டாலின் ஏற்ற பாத்திரம் குறிப்பிடத்தகுந்தது. ஒடுக்கப்பட்ட சாதியினர் தமிழ் சினிமாவில் பிரதிநிதித்துவம் பெற்றனரே தவிர நாயக பிம்பம் பெறாதிருந்தனர். நாயக பிம்பம் பெற்ற சேரன் பாண்டியன் சரத்குமார்.

(கே எஸ் ரவிகுமார் தான் அறியாமலேயே எடுத்த தலித் படம் அது என்று சில விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்), பாரதி் கண்ணம்மாவில் பார்த்திபன் பாத்திரம் என்று சில உண்டு. ஆனால் சாதி ஒழிப்புக் குரல் என்பதையெல்லாம் மீறி, எங்களுக்கும் ஒரு வாழ்வு உண்டு என்று தலித்தியம் சினிமாவில் இடம்பெற ஒரு பா.ரஞ்சித் வரவேண்டி இருந்தது. 2012-இல் அட்ட கத்தியுடன் நுழைந்தவர் மெட்ராஸ் என்ற அச்சு அசலான தலித்திய படத்தை அளித்தார். அதுவரையில் தமிழ்த் திரையில் நுழையாதிருந்த அம்பேத்கர் படங்கள், மாட்டுக்கறி குறியீடுகள் போன்றவையும் (இவற்றையெல்லாம் கவனமாகத் தவிர்த்துவிட்டு எடுக்கப்படும் ஹவுசிங்போர்ட் திரைப்படங்கள் பல உண்டு) தமிழ்த் திரையில் நுழைந்தன. உண்மையில் திமுகவினரையும் உருப்படியாக கருப்பு சிவப்பு துண்டுடன் காட்டியவரும் அவர் தான் (சார்பட்டா பரம்பரை).

இந்த சமயத்தில்தான் தமிழ் சினிமாவின் மிகமுக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படும் கபாலி நிகழ்கிறது. மிக உச்சநிலை நடிகரான ரஜினிகாந்த் எல்லா இடங்களிலும் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பவர். அவரையே தன்னை கால் மேல் கால் போட்டு அமரப் போராடும் ஒரு தலித் நாயகனாக முன்வைக்க முனைந்தது மிகமுக்கியமான ஒர் உடைவு. இது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சியையும் அதிகாரத்தை நோக்கிய நகர்வையும் முதல்முதலாக தமிழ் சினிமா அங்கீகரித்ததற்கான அடையாளமாகக் கொள்ளலாம். கபாலிக்குப் பின் வந்த காலா, சார்பட்டா பரம்பரை போன்றவற்றின் கலாபூர்வமான வெற்றியும் வணிக வெற்றியும் இந்த அங்கீகாரம் இனி மாற்ற இயலாதது என்ற முத்திரையை ஆழப்பதித்தன.

இச்சமயத்தில்தான் இயக்குநர் ராம் பட்டறையிலிருந்து வந்து ரஞ்சித்தின் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் தருகிறார் மாரி செல்வராஜ். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர் தன் கல்விக்கனவை, அவர் சூழலில் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறையை வன்முறையைத் தாண்டி வெல்வதன் மூலம் அடைகிறார். அசலாக தென்மாவட்ட வாழ்வியலை சாதிய சூழலைக் காண்பித்தபடம்.

இதற்கு அடுத்து அவர் எடுத்த படம் கர்ணன். பெரிய ஹீரோவான தனுஷ் தலித்திய எழுச்சியின் முகமாக தன்னை முன் வைத்த படமும் கூட. இந்த படத்தின் வெற்றிதான் உதயநிதி ஸ்டாலின் போன்ற அதிகார மையத்தில் இருக்கும் நடிகரையும் மாமன்னன் என்ற படக்தில் அருந்ததிய இளைஞராக நடிக்கச் செய்தது. வடிவேலுவும் உதயநிதியும் நடித்த இப்படத்தில் நாற்காலியில் அமர்வது என்பது குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. வெகுமக்களால் தலித் படங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது தலித் அரசியலையும் அதிகாரத்தையும் இனி புறந்தள்ளமுடியாது என்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

வெற்றிமாறனின் அசுரனும் இந்தப் பாதையில் புதியதொரு உடைப்பை ஏற்படுத்தியது. இப்படத்திலும் நாயகன் தனுஷ்தான்.  ‘ஒடுக்கப்பட்ட சாதிக்குரிய’ விலகலைக் காண்பித்துக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் திருப்பியடிக்கும் நாயகனாக எழும் நாயக பாவத்தை இப்படம் கொண்டிருந்தது. வழக்கமான நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதல் தான் என்றாலும்கூட பூமணியின் வெக்கை நாவலின் பிராந்திய அடையாளத்தால் அசுரன் முக்கியத்துவம் பெற்றான். ‘நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிக்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்’ என்று அசுரன் பேசும் வசனம், ஒடுக்கப்பட்டவர்கள் எடுக்கவேண்டிய தற்காப்பு ஆயுதமாக கல்வியை வலியுறுத்திற்று.

பன்றி இறைச்சியைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சேத்துமான் இந்த வரிசையில் நாயகபின்புலம் என்கிற தமிழ் சினிமா பார்முலாவை உடைத்தெறிந்து கவனம் பெற்ற படம்.

இன்னும் தலித் மக்களின் பொருளாதாரம் என்பது சராசரியான இந்திய பொருளாதார அளவை எட்டிவிடவில்லைதான். ஆனால் கல்வியின் மூலமாக ஓரிரு தலைமுறைகள் பொருளாதாரப் படிநிலையின் முக்கியக் கட்டத்தைத் தாண்டிய நிலையில் சமூக அதிகாரத்தையும் கைப்பற்ற விழைகின்றன. அதன் விளைவுகள்தான் திரையுலகில் அப்பட்டமாக ஒரு தலித் நாயகன் என தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்பவன் அடையும் வெற்றி எனப் பொருத்திக்கொள்ளமுடியும்.

இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப்பின் ரைட்டர் படம்கூட அதிகார மட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் ஒரு காவலரை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட படம். அவன் நிலையும் சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தலித்தின் நிலையும் ஒன்றுதான். அவனால் காப்பாற்ற விழையப்படும் அந்த இளைஞன் தலித் கிறித்துவனாக காட்சிப்படுத்தப்படுவதும் தற்செயல் எனச் சொல்வதற்கில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com