மதியத்துக்குப் பின், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் திடீர் வாகன நெரிசலில் எங்கள் சுற்றுலா வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.
வழியோரமாக, ஒரு காவல்துறை அதிகாரி எதிரே நின்ற வாகனத்தின் கண்ணாடியை லத்தியால் தாக்கினார். சாரதி எதையோ விளக்க முயன்றபோதும், அவர் மீண்டும் வந்து அவரது முகத்தையே தடியால் அடித்தார். அந்தக் கோரக் காட்சியைச் சகிக்க முடியாமல் நான் முகத்தை மூடிக்கொண்டேன்.
சில நிமிடங்களில் நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றடைந்தோம். பூட்டியிருந்த இரும்புக்கதவுகள் எங்கள் வருகைக்காகத் திறக்கப்பட்டன. உள்ளே நுழைந்ததும், வரவேற்பறையில் நின்றிருந்த பெண் ஒருவர் உடனே கவனத்தை ஈர்த்தார். அவரது உடை ரத்தத்தில் தோய்ந்திருந்தது. இரு சிறிய குழந்தைகளைப் பிடித்தவாறு, திகைப்பும் துயரமும் கலந்து, “எனது கணவரைக் காணவில்லை!” என்று ஆங்கிலத்தில் அழுதுகொண்டிருந்தார்.
அவரது ஆங்கிலத்தில் ஒரு மலையாளச் சாயல் இருந்தது. அவளது முழுமையான கூற்றுகள் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது. அவருக்கு நாம் எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது.
அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த வரவேற்பறையில், அந்தக் காட்சியின் பயங்கரத்தன்மை எங்கள் மூச்சை முட்டியது. நாங்கள் அமைதியாகப் பார்த்தபோது, உடையிலிருந்த ரத்தக் கறைகளைக் கழுவ, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
குழந்தைகள் எட்டும் ஆறும் வயதுடையவர்கள். அவர்கள் முகங்களில் பதற்றமும் குழப்பமும் மாறிமாறி தோன்றின. அவர்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால், என் பேரப்பிள்ளைகளை நினைவுக்கு வந்தார்கள்.
அறைக்குள் சென்று தொலைபேசிகளைத் திறந்தவுடன், பயணத்தின்போது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் ஒரு அத்தியாயம், மனக்கண்ணில் மேடை நாடகமாய்அரங்கேறத் தொடங்கியது. இணையச் செய்திகள் அதைக் கொண்டு வந்தன:
நாங்கள் நின்ற அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இறந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருந்தது.
அந்தச் செய்தியை வாசித்தவுடன், ஒரு சிலிர்ப்பு, உடல் முழுவதும் பரவியது. நாமே சில மணிநேரங்களுக்கு முன் பார்த்த காட்சிகள்—தடியால் தாக்கப்பட்ட வாகன ஓட்டுநர், அழுதுகொண்டிருந்த பெண், பதற்றம் நிறைந்த குழந்தைகள்—இவை அனைத்தும் அந்தக் கோரச் சம்பவத்துடன் இணைந்தன.
தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. எங்கள் நண்பர்கள், உறவினர், நலம் விசாரித்தனர். தாக்குதல் நடந்த இடம் எது எனக் கேட்டனர். அதே இடம்! பயணத்தின் முதல்நாளே நாங்கள் குதிரை ஏறிச் சென்ற மலைப்பாதையே தான்.
"நாம் அங்கேயே இருந்தோம்!" என்று நாம் எம்மை வியப்புடன் பார்த்தோம். "நாம் அதிர்ஷ்டசாலிகள்!" என்று ஒருவரினால் சொல்லப்பட்டது.
அந்தச் சம்பவம் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்தது—மலைகளால் சூழப்பட்ட, இயற்கையின் அற்புத காட்சிகளைக் கொண்ட பிரதேசம். பல பிரபல இந்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் அது. புதுமணத் தம்பதிகளின் தேன்நிலவுக்கான இடமாகவும் இருந்தது.
அது பாதையற்று, வண்டிகள் செல்ல இயலாத இடம். மலைச் சரிவுகளைத் தாண்ட, நீர்வீழ்ச்சிகளைக் கடக்க, குதிரைமேல் மட்டுமே பயணிக்க இயலும். மழைக்காலத்தில், அங்கு நீர்ப்பாய்ச்சல்கள் அதிகம். ஆனால், நாங்கள் சென்றது கோடை நாட்கள் என்பதால், பெரிய பாறைகள், உருண்டக் கற்கள், சிற்றோடைகள் என்பன மட்டுமே காணப்பட்டன.
சம்பவத்துக்குச் முதல் நாள், நாங்கள் அங்கே குதிரைச் சவாரியாக சென்றிருந்தோம். மலைச் சரிவுகளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குதிரைமீது அமர்ந்தபடி கீழே வந்தனர். பெரும்பாலானவர்கள் இளம் வயதுடையவர்கள். அவர்களது முகங்களில் பயமும் மகிழ்ச்சியும் ஒன்றாகக் கலந்திருந்தன.
முப்பது ஆண்டுகளுக்கு முன், தென் அவுஸ்திரேலியாவில் ஆறு மாதங்கள் நான் குதிரை வைத்தியராகப் பணியாற்றியிருந்தேன். மகளுக்குக் குதிரை ஏற்றம் பழக்கம் செய்யவே நான் இரண்டு நாட்கள் மட்டும் குதிரை ஏறியிருந்தேன். எனக்குக் குதிரை வைத்தியமும் சவாரியும் விருப்பமில்லை. ஆனால் அந்த பழைய அனுபவம் இப்போது காஷ்மீரில் என் கை பிடித்தது.
அன்றுதான் குதிரையின் திறமையை உணர்ந்தேன். மலைச்சரிவுகளின் வழியாக, உருண்டைக் கற்களை விலக்கி, குளம்புகளை நுட்பமாக பதித்து நகரும் குதிரைகளைப் பார்த்து மனம் வியந்தது.
அன்று பயங்கரவாத தாக்குதல் நடந்த இரவு, ஹோட்டலில் பணியாற்றியவர்களின் முகங்களில் மாற்றம் தெரிந்தது.
அவர்களின் கண்களில் ஒளி இல்லை. பதற்றம், துயரம் நிழல்போல் இருந்தது. எவரும் அதிகம் பேசவில்லை.
ஆனால் என் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது:
"நாளை அவர்களுக்கு உணவு கிடைக்குமா?"
அந்த ஓர் இரவில் பயங்கரவாதிகள் 28 பேரை மட்டும் கொலை செய்யவில்லை. பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தையும் வேரோடு அறுத்தனர்.
உணவுக் கடைகள், சிறு வியாபாரிகள், வழிகாட்டிகள்... அனைவரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நம்பிக்கையுடன் இருந்தவர்கள்.
நாம் ஐந்து நாட்கள் நாங்கள் ரசித்த காஷ்மீரின் அழகு — பூங்காக்களில் பூத்த செடிகள், கதவோரப் புன்னகைகள், யன்னல்களில் மலர்ந்த தாமரைகள் இப்போது வெறிச்சோடி விட்டன.
அடுத்த நாள் காலை, நாங்கள் நகருக்குத் திரும்பும் வழியில் சென்றோம்.
வரும்போது பார்த்த குதூகலமாக இருந்த வீதிகள், இப்போது மரணவீட்டின் சோகம் மூடிய பாதைகளாக மாறியிருந்தன.
"யாருமற்ற அநாதரவான டால் லேக்" அருகே நின்றோம். படம் எடுத்தோம்.
அடுத்த நாள் ஶ்ரீநகரை விட்டு புறப்பட்டபோது, மலர்கள், நீர்வீழ்ச்சிகள், குதிரைகள், ஏரிகள் இவற்றின் நினைவுக்குப் பதிலாக, ஒரு கனமான அமைதி நெஞ்சில் உறைந்திருந்தது.