எவன் ஒருவன் தன் இளம் வயதில் முதியவரைப் பேணிப் பாதுகாக்கிறானோ, அவன் வயதாகும் பொழுது அவனைக் கவனிக்க இளைஞர் ஒருவரைக் கடவுள் நியமிக்கிறார்.
- வேத நூல்
நம் நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டான கூட்டுக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறி வருகிறது. தன்னைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி நல்லதொரு நிலைக்கு வருவதற்குக் காரணமாயிருந்த பெற்றோர்களைப் புறக்கணிக்கலாமா? தெய்வத்தை வணங்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நடமாடும் தெய்வங்களான பெற்றோர்களை வணங்காமலும் மதிக்காமலும் மட்டும் இருக்க வேண்டாம் என்பது நமது மரபு. ஆனால் இன்றைய நிலை என்ன? பெரும்பான்மையான முதியோர்கள் இளைஞர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவமதிப்புக்கும் ஆகிறார்கள்.
முதுமைக் காலத்தில் திடீர் மாற்றம் எதுவாக இருந்தாலும் அது அவர்கள் வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும், உதாரணமாக, உணவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். சில பேர் என் கிளினிக்கில், என் அப்பாவுக்கு வயது 60, 70 என்று கூறி, அதற்கு ஏதாவது ஸ்பெஷல் உணவு உண்டா என்று கேட்பார்கள். ‘அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக சாப்பிட்டு வந்த உணவு முறையைத் திடீர் என்று மாற்றவேண்டாம். அது அவர்கள் வாழ்க்கை முறையை பாதிக்கும்’ என்று சொல்வேன். ஏதாவது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு போன்ற நோய்கள் இருந்தால் மட்டிலும் அவர்கள் உணவில் டாக்டரின் ஆலோசனைப்படி மாற்றம் செய்ய வேண்டும்.
இதைப்போலவே அவர்களுடைய நடைமுறைகளையும் அன்றாடப் பழக்க வழக்கங்களையும் தேவையில்லாமல் திடீரென்று மாற்றக்கூடாது. கடந்த 50, 60 ஆண்டுகளாக ஒரே விதமான உணவு, ஒரே விதமான வாழ்க்கை முறையைக் கடைப்பித்திருப்பார்கள். அதைத் தேவையின்றி மாற்றினால், இந்த மாற்றத்தைவிட இறப்பதே மேல் என்று கூடச் சில முதியவர்கள் எண்ணக்கூடும்.
முதியவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்லது, கெட்டது என்று பல நிகழ்வுகளைச் சந்தித்தவர்கள். அவர்களிடம் இளைஞர்கள் பேசும்போது மிக சாந்தமாக, அமைதியாகப் பேச வேண்டும். உங்களின் இருக்கை பெரியவரின் இருக்கைக்கு மேல் உயரமாக இருக்கக்கூடாது. பேசும்போது மிக உரக்கவும் மிகக் குறைந்த குரலிலும் பேசக்கூடாது. அவருக்கு புரியவில்லை என்றால் முகம் சுளிக்காமல் மறுபடியும் பேச வேண்டும். சில சமயத்தில் அவர் சொன்னதையே மறுபடியும் சொல்வார். அதற்கு முகம் சுளிக்காமல் அவருக்கு தக்க பதிலை அளிக்க வேண்டும். கண் பார்வை குறைவினால் ஏதாவது ஒரு பொருளைத் தேடினால், அவரைக் கேட்காமலேயே உதவ முன் வர வேண்டும்.
உங்கள் பேச்சில் எதிர்மறை வார்த்தைகள் ஏதுமிருக்கக் கூடாது. மாறாக நேர்மறை வார்த்தைகள் தான் இருக்க வேண்டும். அவர் ஏதாவது ஒன்று கேட்டால் அதற்கு தக்க பதிலைத் தான் அளிக்க வேண்டும். மாறாக பதில் கேள்வி இருக்கக்கூடாது. அவருடைய சொல்லிலும், செயலிலும் ஏதாவது குறை இருப்பின் அதை நேரடியாக சுட்டிக் காட்டக் கூடாது. அதை மறைமுகமாக அவர் மனது புண்படாதவாறு தெரிவிக்க வேண்டும்.
மொத்தத்தில் பெரியவர் ஒரு குழந்தையைப் போல. அவரிடம் மென்மையாக பேசி, அவருடைய அன்பை எளிதில் பெற்று விடலாம்.
குடும்பத்தில் முதியவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் குறைவு. உண்மையான அன்பு, பாசம், தனக்குப் பிடித்த குறைந்த அளவு உணவு, நேரம் கிடைக்கும்போது குடும்பத்தாரிடம் உறவாய்ப் பேசும் அன்னியோன்யம். இளைஞர்கள் இவற்றைத் தாராளமாக வழங்க முன்வர வேண்டும். பெரியவர்களின் திருமணநாள், பிறந்தநாள் போன்ற முக்கிய நாள்களில் ஒரு சிறிய பரிசைக் கொடுத்து இளைஞர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். இதுமாதிரி சின்னச் சின்ன செயல்கள் பெரியவர்களின் மனத்துக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும். இதைத்தான் அவர்கள் மறைமுகமாய் எதிர்பார்க்கிறார்கள்.
கல்யாணத்துக்கு முன் பெற்றோர்களை நன்கு கவனித்துக்கொண்டு இருந்த மகன், திருமணத்துக்குப் பின் மனைவியின் வீட்டார் பக்கம் சாய்வது அதிகமாக உள்ளது. தன் பிறந்த இடம், உற்றார், உறவினர் அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு பெண் தன் கணவன், அவன் உறவினர்களை நம்பிப் புகுந்த வீட்டுக்கு வருகிறாள். ஆகையால் மனைவி, அவளுடைய உறவினர்களிடம் கணவன் தனி அக்கறை காட்டுவதில் ஆச்சரியமில்லை. இது அவசியமும் கூட. ஆனால் தராசில் உள்ள இரண்டு தட்டுக்களும் சமமாய் இருக்க வேண்டும். அதாவது பெற்றோர்களையும், மாமியார், மாமனார்களையும் கவனிப்பதில்.
ஆனால் பல சமயங்களில் மாமனார், மாமியார் தட்டு இறங்கி இருப்பதையே நான் காண்கிறேன். புதுச் சொந்தத்தை வரவேற்கலாம். ஆனால் பழைய உறவுகளைப் புறக்கணிக்க வேண்டாம். தராசில் உள்ள இரண்டு தட்டுக்களும் சமமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது இன்றைய இளைஞர்களின் கடமை.
குடும்பத்தில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், முதியவர்களைத் தம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும். தம்மை ஈன்றெடுத்து வளர்த்து, ஆளாக்கி உயர்நிலைக்குக் கொண்டு வந்துள்ள பெற்றோர்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது.
வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்ததே. இன்றைய இளைஞரே நாளைய முதியவர். இதை இளைய தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது.
ஒருவர் குடும்பத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அவரைச் சில கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கும். அந்தக் கண்கள் வேறு யாருடைய கண்களும் இல்லை. அவை அந்தக் குடும்பத்தாரின் குழந்தைகளுடைய கண்கள் தான்.
ஒரு தாத்தாவின் வயது தொண்ணூறு, அவர் தன பேரனை அழைத்து, தான் ஒரு ‘மை' வைத்திருப்பதாகவும் அதன் மூலம் எல்லோரையும் தன் வயப்படுத்தி நட்புடன் தொல்லையின்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் கூறினார். பேரன் மிக்க ஆவலாக ‘தாத்தா அந்த மையை எனக்குக் கொஞ்சம் தாருங்கள், எனக்கும் நல்ல பயனளிக்கும் அல்லவா’ என்று கேட்டான். தாத்தா அமைதியாக அதுதான் ‘பொறுமை’ என்றார். இதை இளைஞர்கள் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் பல தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
தாத்தா உண்ணும் பாத்திரத்தைப் பின்னாளில் தன் அப்பாவுக்குக் கொடுப்பதற்காகப் பத்திரமாக எடுத்து வைக்குமாறு கூறிய பேரன் ஒருவன் கதை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆகையால், தம் சுயநலம் கருதியாவது இளைஞர்கள், முதியோர்களைக் குடும்பத்தோடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பலனை அந்த இளைஞர் முதுமை அடையும் பொழுது கண்டிப்பாய் அனுபவிப்பார்.