ஆற்றோடு உரையாடுவேன்!

கொற்றலை ஆறு
கொற்றலை ஆறு
Published on

ஒரு ஊரில் ஓர் ஆறு இருந்தது என்ற பீடிகையோடு தொடங்கும் ஏராளமான கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். சிறுவயதில் கதைகளாகத் தெரிந்த இந்த பீடிகைகள் அனுவம் ஏற ஏற   அவை வரலாற்றின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அந்த வரலாற்றில் நமக்கும் ஒரு பங்குண்டு. நாமும் அந்த வரலாற்றில் இருக்கிறோம் என்பது தான் ஓர் ஊரில் ஒரு ஆறு இருந்தது என்பதற்கான பின்புலம்.

ஆற்றில் குளிப்பது ஒரு சுகம். ஆற்றில் வாழ்வது ஒரு சுகம். இவற்றை எல்லாம் அனுபவித்திருந்தால் ஆற்றைப் பற்றி நினைப்பது தொடர் சுகமாக நம் மனதிற்கு இதமாகவும் நினைவுகளை அசைபோடும் பெரும் களமாகவும் அமைந்து விடுகிறது.

சென்னையை ஒட்டி வடக்கே வந்து மீஞ்சூருக்கு அருகே கடலில் கலக்கும் கொற்றலை ஆறு பண்டைய காலத்தில் குரல்தலை ஆறு என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு கொற்றலை ஆறாகி அது சமஸ்கிருத மயமாக்கத்தால் குசஸ்தலை ஆறாக மாறியது. முன்னொரு காலத்தில் திசைமாறி ஓடிய பழைய பாலாறுதான் கொற்றலை என்றும் தொல்லியல் வல்லுநர்கள் சொல்வார்கள். சில பகுதிகளில் அந்த ஆற்றை குறத்தி ஆறு என்றும் அழைப்பார்கள்.

குறத்தியாறு என்று பெயர் கொண்ட அந்த ஆற்றோடு தான் எனக்கான நெருக்கம். நான் சென்னையிலே பிறந்து வளர்ந்தவன். கொற்றலை ஆற்றுக்கும் எனது வீட்டுக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். ஆனால் எனது அம்மா பிறந்த ஊரான மொன்னவேடு திருவள்ளூரிலிருந்து பன்னிரண்டு கிமீ தொலைவில் வடக்கே இருக்கிறது. ஆற்றுக்கும் எங்கள் அம்மா வீட்டுக்கு ஒரு அரை கிலோமிட்டர் தூரம் இருக்கும். எங்களுக்கு பூர்வீகமான வயலும் அந்த ஆற்றை ஒட்டித்தான் இருக்கிறது.

எனவே மே மாத விடுமுறை நாட்களில் இந்த கிராமத்திற்குப் போவதும் ஆற்றில் கும்மாளம் இடுவதும் மிகச்சிறந்த வாழ்க்கைப் போக்காக இருந்தது. எனது இரண்டாவது வகுப்பில் சென்னையிலிருந்து மாற்றப்பட்டு அந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில் என்னை சேர்த்து விட்டார்கள். எனவே ஓராண்டு அந்த கிராமத்தில் படித்தேன். அந்நாட்களில் பெரும்பாலும் அந்த ஆற்றிலேயே கழித்திருக்கிறேன். சனி, ஞாயிறு விடுமுறை என்றால் இரண்டு நாட்களும் காலை முதல் மாலை வரை ஆற்றிலே மிதப்பதுதான் வழக்கம்.

எங்களோடு மேயவரும் எருமை மாடுகளும் சில நேரத்தில் ஆடுகளும் கூட குளிக்கும். ஆற்றின் கரையிலிருந்து உயரமாக எம்பி நின்று எம்பி குதித்து உள்நீச்சல் அடிப்பதும் ஆற்றின் கரையிலிருக்கும் ஏற்றத்தில் ஏறி நின்று அதன் மீதிருந்து குதிப்பதும் மீன்களோடு மீன்களாக சிறுவர்களாக நாங்கள் துழாவித் துழாவி விளையாடியதுமான நாட்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்த நாட்கள் திரும்பக் கிடைக்காதவை என்றாலும் அந்த நினைவுகளின் சுகத்தைக்கூட மீண்டும் அனுபவிக்க முடியாத ஒரு பரபரப்பில் தான் இப்பொழுது மாய்ந்து கொண்டிருக்கிறேன்.

பள்ளிப்பருவத்திற்குப் பின் ஆண்டுக்கு நான்கு ஐந்து முறையாவது கிராமத்திற்குப் போய் பத்து பதினைந்து நாட்கள் தங்கி ஓய்வெடுத்து வருகின்றபோதும் ஒரு நாளும் அந்த ஆற்றை விட்டு நான் நீங்கியதேயில்லை.

பள்ளிக்கூட நாட்களில் பொங்கல் பண்டிகைக்குப் போகும்போதெல்லாம் பெரிய சட்டி நிறைய இட்லிகளை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குப் போய் கரையில் வைத்து விட்டு குளிப்பதும் சாப்பிடுவதும் திரும்பப் போய் குளிப்பதும் சாப்பிடுவதும் என்று காலை முதல் மாலை வரை பொழுதுபோகும். அலுப்பும் சலிப்பும் தட்டாத ஓர் உறவு ஆற்றோடு எனக்கு இருந்தது.

காலம் மாறி கிராமத்திற்குப் போவது குறைந்து போனது. எங்களது வீட்டில் இருந்த புங்கைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது எனக்கு ஒரு அந்நியத்தை அக்கிராமத்திடம் உருவாக்கிவிட்டது. ஏனென்றால் அந்த ஆற்றைப் போல அந்த மரத்தை நேசித்தேன். அம்மரம் எனக்கு ஒரு விளையாட்டுத் துணைவன். அது வெட்டப்பட்டதும் எனது மனம் வாடிவிட்டது. கிராமத்திற்குப் போவது குறைந்தது. எனது பாட்டி மறைந்த பிறகு அரிதிலும் அரிதாகிவிட்டது. எனவே என்னை ஆற்றுப்படுத்துவற்கு ஆற்றை நோக்கிப் போவதும் அருகிவிட்டது.

ஆயினும் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில் நெருக்கடி வந்தபோதும் நான் அந்த ஆற்றைத் தான் தேடிப் போயிருக்கிறேன். கடும் மனநெருக்கடிகள் வந்த போது அந்த ஆற்றுடன் உறவாடி இருக்கின்றேன், உரையாடி இருக்கின்றேன். அதோடு பேசுவதுகூட ஒரு நல்ல உரையாடலைத் தரும். இதெல்லாம் நமக்கு ஒருவிதமான மன மயக்கம் என்று நாம் நினைத்துக்கொண்டாலும் கூட, இதைப் படிப்பவர்கள் இதெல்லாம் ஒரு பித்து நிலை என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் அதை தவறு என்பது எனது துணிபு.

ஏனென்றால் இளம்பிராயத்தில் ஒரு ஆறு ஒரு மனிதனை ஆற்றுப்படுத்துவதில்லை. சிறுவர்களோடு ஆறு விளையாடுகிறது; கதை பேசுகிறது; உரையாடுகிறது. ஆற்றை விட்டு எழுந்து வெளியே போகும்போது சிறுவர்களின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் ஆற்றுக்குள் சேர்த்துக் கொள்கிறது, அணைத்துக் கொள்கிறது. பிரிக்க முடியாத ஓர் உறவுதான் சிறுவர்களுக்கான ஆறு. அப்படித்தான் எனக்கும் இருந்திருக்கிறது. வளர வளர இந்தப் பந்தம் படிப்படியாக குறைவது என்பது ஒரு சோகம். ஆனால் அந்த உறவு என்பது பிரிந்து விடுவதில்லை. ஆற்றங்கரையில் வாழ்ந்த எல்லா மக்களையும் நீங்கள் கேட்டுப் பார்த்தால் இந்த உறவைப் பற்றி அவர்கள் விலாவாரியாக பேசுவார்கள்.

பரந்து விரிந்த பேறாறுகள் ஒரு வகையான இன்பமென்றால் சிற்றாறுகள் நமக்கு அளிப்பது பேரின்பம். ஏனென்றால் அவை ஆபத்தில்லாதவை. அரவணைப்பவை. அப்படித்தான் கொற்றலை ஆறும் இருந்தது. இருக்கிறது.

மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் அந்த ஆற்றைக் காண்பது ஒருவகையில் அச்சம் தரும். வெள்ளம் படிப்படியாக குறைந்து குளிக்கின்ற அளவிற்கு தண்ணீர் ஓடும்போது, அதோடு நமக்கு உரையாடலும் உறவும் தொடங்குகிறது. ஆர்ப்பரித்து ஓடும்போது நம்மை எச்சரித்து கரைக்கு வெளியே நிறுத்திவிடுகிறது அதனுடைய சத்தத்தால். பெருக்கெடுக்கும் வெள்ளம் சிறுவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. ஆற்றோடு உறவு தெரியாதவர்கள் அதிலே சிக்கிக் கொள்கிறார்கள். உறவாடி இருப்பவர்கள் எச்சரிக்கையோடு நின்றுவிடுகிறார்கள்.

தண்ணீர் வற்றி வெறும் மணல் மட்டுமே தகித்துக்கொண்டிருக்கும் ஆற்றில் இன்னும் பல கதைகள் நமக்குக் கிடைக்கும். கால் வைக்க முடியாத அந்த வெம்மையில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக திட்டித்துக் கிடக்கும் ஈரத்தில் கால் வைத்துப் போகின்ற போது சூடும் குளுமையும் நிறைந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் அது கொடுக்கும். அதற்குப் பிறகு மழைக்காலம் தொடங்கி பனிக்காலத்தில் மெதுவாக ஓடும் ஆற்றின் நீரோட்டத்தோடு புகைமூட்டம்போல் பனி போகின்ற அற்புதக் காட்சியெல்லாம் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

முழுமையாக நகரத்தில் வாழ்ந்து நதியின் உறவு இல்லாமல் போனவர்களுக்கு இந்த அனுபவம் புரியாது. கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்களுக்கும் பெரும்பாலும் அந்த ஆற்றின் சுவை தெரியாது. அவர்கள் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டிருப்பதால் அதைப் உணராமலே இருப்பர். அதனால் என்னைப் போல நகரத்தில் பிறந்து வளர்ந்து ஆற்றோடு உறவு கொண்ட சிலர், ஆற்றின் உறவை தீவிரமாக உணர்ந்திருப்பார்கள்.

அதனால் தான் கொற்றலையாறு எனது வாழ்வில் ஓர் அங்கமாக இப்போதும் இருக்கிறது. அந்த ஆற்றைக் கடந்து போகும்போதெல்லாம் எழுகின்ற உள்ள எழுச்சி, நாஸ்டால்ஜியா என்று சொல்லக்கூடிய நினைவு அலை மூழ்கடித்து திக்குமுக்காட வைக்கும்.

ஒருவகையில் எனது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையையும் அந்த ஆறு தந்தது. எனது நினைவு அனுபவங்களைக் கொண்டு குறத்தியாறு என்ற பெரும் காப்பிய புதினத்தை நான் எழுதினேன். சங்க நடையும், சமண பவுத்த மரபுகள் கொண்ட புனைவு நடையும், நாட்டார் வழக்காற்றியல் கூறுகளைக் கொண்ட கதை சொல்லும் முறையும் கலந்து கூத்து மரபையும் நவீன கதை சொல்லும் பாணியையும் பின்பற்றி இசைநயத்தோடு எழுதப்பட்ட ஒரு பெரும் நூல் அது. தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையாக கருதப்பட்ட அந்த நூலை முழுமையாக அந்த ஆற்றின் நினைவுகளில் இருந்தே நான் எழுதினேன்.

அதன் எழுத்துக்குள் இருக்கும் ஓசை நயமும் ஆற்றின் தாள இசைவுகளோடு அமைந்ததுதான். தெருக்கூத்தின் ஜதிகள் அந்த ஆற்றில் பட்டுத் தெறித்த ஒலிகளோடுத்தான் நான் எழுதியிருந்தேன். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறத்தியாறைப் பற்றிய அந்த நூல்தான் எனக்கு வாழ்க்கைத் துணையையும் அமைத்துத் தந்தது. அந்த நாவலை வாசித்ததன் மூலம்தான் முனைவர் க.சுபாஷிணி எனக்கு அறிமுகம் ஆனார். அது எங்களை இணையராகும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது.

என் வாழ்வில் குறத்தியாறு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது நினைவாக மட்டும் இல்லை. நடப்பாகவும், நனவாகவும், அது என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. இனிமேலும் ஓடிக்கொண்டு இருக்கும். ஆற்றை நேசித்தால் அது உங்களைக் கடந்துபோகவே போகாது!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com