ஆவணக்காரர்!

சித்தானை
சித்தானை
Published on

தமிழ் இணைய கல்விக்கழகத்தில் திட்ட அலுவலராகப் பணியாற்றும் சித்தானை ஆவணங்களைத் தேடி அலையும் மனிதர். ஆவணமாக்கல் வேலையை பள்ளி நாட்களில் இருந்தே விரும்பி செய்துவருகிறார். தமிழக அரசின் மின் நூலகத் திட்டத்தில் இப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேர்க்கப்பட்டு அனைவரும் வாசிக்கக் கிடைக்கின்றன. இதற்கான நூல்களைத் தேடி எடுத்து சேர்த்ததில் சித்தானைக்குப் பெரும் பங்கு உண்டு. தன் வாழ்நாளை ஆவணங்களுக்காகவே செலவழித்துவரும் இவரை அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து:

 “பள்ளி நாள்களில் பெரும்பாலான நேரத்தை நூலகங்களில் கழித்துள்ளேன். அப்போது வாசித்த மூன்று நூல்கள் என்னை மாற்றின. ஒன்று உவேசாவின் என் சரித்திரம், இரண்டு ராகுல சாங்கிருத்யாயனின் ஊர்சுற்றிப் புராணமும் அவரது வாழ்க்கை வரலாறும். அப்புறம் பெரியார் எழுத்துகள்.  உவேசாவின் என் சரித்திரம் கொடுத்த உத்வேகத்தால் ப்ளஸ் 2 முடித்த பின் கொஞ்சகாலம் ஊர் ஊராகச் சென்று ஓலைச் சுவடிகள் சேகரித்துள்ளேன். அப்போது சரஸ்வதி மகால் நூலகத்தில் பெருமாள் என்ற பொறுப்பாளர் இருந்தார். இந்த சேகரங்களை தஞ்சாவூர் செல்கிறவர்கள் மூலமாகக் கொடுத்தனுப்பச் சொல்வார். இவையெல்லாம் அங்கே சேகரம் ஆயின. அக்காலத்தில் பல ஊர்களுக்குச் செல்வதுண்டு. பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே எட்டையபுரம் ராஜா அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசியுள்ளேன். அந்த அரண்மனையில் சிறு நூல் சேகரம் இருந்தது. அங்கிருந்த சுவடிகளையும் சேகரித்து அளித்துள்ளேன்.

பின்னர் மதுரையில் யாதவர் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு படித்தேன். முதலாம் ஆண்டு படிக்கையில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. சரபோஜி மன்னரின் 250 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட உள்ளோம். அதில் இந்நூலகத்துக்கு அதிகமாக சேகரங்கள் அளித்தவர்களை கௌரவிக்கிறோம். அதில் நீங்களும் ஒருவர் என்று கூறபட்டிருந்தது. மொத்தம் 9 பேர் கௌரவிக்கப்பட்டார்கள். அதில் மிகவும் இளையவன் நான் மட்டும்தான்.  இப்படித்தான் ஆவணப்பாதுகாப்பு என்கிற துறைக்குள் நுழைந்தேன். நான் சரஸ்வதி மகாலுக்கு அளித்த ஓலைச்சுவடிகள் பற்றிய பதிவுகள் இன்னும் அவர்களின் பதிவேட்டில் உள்ளது.

தற்போது அங்கே உள்ள தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் தமிழ் இணையக் கல்விக் கழகம்தான் மின்வடிவம் ஆக்கியது. அதன் ஒரு பகுதியாக நானும் செயல்பட்டேன் என்பது பெருமையான விஷயம். 1989-இல் அந்நூலகத்துக்காக சுவடிகள் சேகரம் செய்தபோது, பின்னாளில் அங்குள்ள சுவடிகள் அனைத்தையும் மின்வடிவம் செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்று நினைத்திருக்கவில்லை.

யாதவா கல்லூரியில் நூலகத்தை பேராசிரியர் தமிழ்க்குடிமகன் நிர்மாணித்திருந்தார். அங்கே அரிய நூல்கள் நிறைய இருந்தன. இளநிலை மாணவர்களை நூலகத்துக்குள் விட மாட்டார்கள் ஆய்வு மாணவர்கள் மட்டும்தான் போக முடியும். ஆனால் நான் மட்டும் எப்படியோ உள்ளே போய் விடுவேன்.  நான் நூல்களை புரட்டிக் கொண்டிருப்பதை பார்த்த நூலகர் உன்னை கட்டி வைக்க போகிறேன் என்று கூறியதும் உண்டு. ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களே என்னை அனுமதித்தார்கள். எனக்கு அது நல்ல வாசிப்பு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இளமையில் மரபு, நவீன இலக்கியம், அரசியல் நூல்கள் என எல்லாவற்றையும் கோவில்பட்டியில் உள்ள அரசு நூலகம், பம்பாய் பகுப்பாய்வுக்கழக பால்ராஜ் அவர்களின் இல்லம், கோணங்கி அவர்களின் இல்லம் என நான் தேடித்தேடி வாசித்திருந்தேன். அது மதுரை யாதவர் கல்லூரியிலும் தொடர்ந்தது.

அப்போது டிஜிட்டல் வடிவங்கள் இல்லை. எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எழுத அச்சு நூல்கள் தேவைப்படும். எனக்கு நூல்களுடன் பரிச்சயம் நன்கு இருந்ததால் அவர்களுக்கு நானே பரிந்துரைகள் செய்வேன். மெல்ல மெல்ல இந்த தகவல் மதுரை கல்லுரி மாணவர்களிடம் பரவி, என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள். கவிஞர் மீரா, பேராசிரியர் தொ.பரமசிவன் ஆகியோர் அறிமுகம் ஏற்பட்டு பெரிய நட்பு வட்டாரமும் உருவாகியது.

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனின் நட்பு ஏற்பட்டு, ரோஜா முத்தையா நூலகத்தில் பணியாற்ற ஆரம்பித்தேன்.. ஆவணங்களைத் தேடும் என் களப்பணி அங்கும் அதிகாரபூர்வமாகத் தொடர்ந்தது. நான் 1999-இல் பணியில் சேர்ந்து 2004-இல் வெளியேறும் வரை மிகக் கணிசமான அளவுக்கு பங்களிப்பு செய்திருந்தேன்.

அயோத்திதாசருடன் இருந்த பெரியசாமிப் புலவரின் சேகரிப்புகள் அனைத்தையும் எடுத்துச் சென்று மைக்ரோ பிலிம்கள் எடுத்தேன். அங்கே எனக்கு நல்ல பயிற்சி கிடைத்தது. நூல்கள் மட்டுமல்லாமல், அச்சுப்படங்கள், அட்டவணைகள், அழைப்பிதழ்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள், சலனப் படங்கள், சுவரொட்டிகள், சுவரோவியங்கள், செய்தி நறுக்குகள், தட்டச்சுப் பிரதிகள், ஓவியங்கள், மரச்செதுக்குகள் என சேகரித்துக் கொடுத்துள்ளேன்.

அங்கே பணிபுரிந்தபோது ஒரு நோட்டு வைத்திருப்பேன். அதில் தினமும் செய்தித்தாள்கள் பார்த்து உடல் நலிவாக இருக்கிற முதிய ஆளுமைகள், மரணமடைந்த ஆளுமைகள் என குறிப்பு எடுத்து வைப்பேன். இறந்த ஆளுமைகளின் குடும்பத்துக்கு இரங்கல் கடிதம் அனுப்புவோம். ஒரு மாதம் கழித்து மீண்டும் தொடர்புகொண்டு அவர்களின் புத்தக சேகரங்களை மக்களுக்காக எங்கள் நூலகத்துக்குத் தர விரும்புகிறார்களா எனக் கேட்போம். சிலர் பதில் அனுப்புவர்கள்; பலர் பதில் அளிக்கமாட்டார்கள் இருந்தாலும் மீண்டும் தொடர்புகொள்வோம்.  ’இந்த நோட்டில் சித்தானை யார் பெயரையும் எழுதினால் அவர்கள் விரைவில் மரணமடைந்துவிடுவார்கள்’ என்று எங்கள் அலுவலகத்தில் கிண்டல் செய்யும் அளவுக்கு தீவிரமாக இருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி நிறைய சேகரித்தோம்.

மதுரையில் தெபொமீனாட்சி சுந்தரனார் அவர்களின் மரணத்துக்குப் பின்னர் அவரது நூல்சேகரங்களைப் பார்வையிடச் சென்றேன். அவர்களோ உடனே எடுத்துச் செல்லலாம் என அனுமதி வழங்கினர். நான்கைந்து நாட்கள் அங்கேயே அறைபோட்டு தங்கி, அவற்றை கட்டி, லாரியில் ஏற்றிக் கொண்டுவந்து சேர்ந்தேன்.

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான தியாகராயர் முதல்முதலில் 1916- இல் வெளியிட்ட பிராமணரல்லாதோர் இயக்க அறிக்கையின் நூலின் முதல்படியை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கண்டெடுத்தபோது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அழகுமுத்துக்கோனின் காலம் என்ன என்பது தீர்மானிக்கப்படாமல் இருந்தது. எட்டையபுரம் அரண்மனையில் வம்சமணி தீபிகை என்ற அந்த ராஜாக்களின் வரலாற்று நூல் உண்டு. அதை எடுத்துவந்து அவரது காலத்தை நானும் பேராசிரியர் ஷாஜகான் கனியும் தீர்மானித்துச் சொன்னோம். அப்போது நான் எம்பில் மாணவன்.

 உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தொல்லியல்துறை ஆணையராக இருந்தபோது, மாநிலத்தில் உள்ள ஆவணக்காப்பக அலுவலகங்களில் இருக்கும் ஆவணங்களை சேகரித்துக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார். மாவட்ட அலுவலகங்களுக்கு நான் நேரே செல்லமாட்டேன். அருகில் உள்ள டீக்கடைகளுக்கு வரும் அந்த அலுவலகப் பணியாளர்களிடம் பேச்சுக் கொடுத்து எனென்ன ஆவணங்கள் அங்கே இருக்கின்றன என தகவல் சேகரிப்பேன். பிறகே உள்ளே போவேன். தஞ்சாவூரில் உள்ள அலுவலகத்தில் ஏராளமான ஓலைச் சுருணைகள் இருந்தன. திருவாங்கூர் சமஸ்தானத்தில் காகிதம் தீட்டு எனக் கருதப்பட்டதால் நீளமான பனைஓலை சுருணைகளில் எழுதுவார்கள். பெரும்பாலும் நிலம் தொடர்பான பதிவுகள். திருவாங்கூரில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்தபோது நமக்கு அளிக்கப்பட்ட பதிவுகள் அவை. பத்மநாபபுரம் அரண்மனையில் சிலகாலம் வைக்கப்பட்டு பின்னர் இடம்மாறி இங்கே வந்துசேர்ந்துள்ளன. அவற்றை மூன்று மாதகாலம் வேலை பார்த்து பிரித்து பத்திரமாகக் கட்டுகளாக கட்டினோம். உதிர்ந்துவிடக்கூடாது என்பதால்  உயர்ந்த பேக்கிங் பொருட்களை வாங்கி அவற்றில் பொதிகளாகக் கட்டினோம்.

இது ஒன்றரை லாரி அளவுக்குச் சேர்ந்தது. அதை சென்னைக்குக் கொண்டுவந்தோம். அண்ணா நூலகத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் அரசு கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் வைக்கவேண்டும். லாரியைக் கொண்டுவந்துவிட்டோம். ஏற்றுவதற்கு ஆள் பலம் ஏதும் இல்லை. எப்படி ஏழாவது மாடிக்குக் கொண்டு போவது? லாரிக்காரர்கள் அவசரப்படுத்துகிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அங்கே ஓர் அறையில் ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவர்கள் சுமர் 150  பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று, நண்பர்களே.. என அழைத்து..  ‘தஞ்சாவூரில் இருந்து ஆவணங்களைக் கொண்டுவந்துள்ளேன்.. ஏற்றுவதற்கு ஆள் பலமே இல்லை.. நீங்கள் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன்’ என்று மட்டும் சொன்னேன். அவர்கள் எல்லோரும் எழுந்து வந்தார்கள். வரிசையாக லிப்ட் வரைக்கும் நின்று கைமாற்றி கைமாற்றி ஒரு மணி நேரத்தில் அனைத்தும் மேலே கொண்டு போகப்பட்டன. ‘ஒரு பொதுக்காரியத்தை சுயநலம் இல்லாமல் செய்தோமெனில் அதற்கு நிறைய ஆதரவு கிடைக்கும்’ என்ற உண்மையை நான் நேரடியாக அறிந்த தருணம் அது.

மைசூரில் இருந்து தமிழ்க் கல்வெட்டுப் படிகள் சென்னைக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை மின் படியாக்கம் செய்யவேண்டும். அதுபோல் சரபோஜி மன்னர் காலத்து மோடி எழுத்து ஆவணங்கள் மின்படியாக்கம் செய்யவேண்டி இருக்கிறது. ஓலைச்சுவடிகளை மேம்பட்ட முறையில் மின்படியாக்கம் செய்யும் பணியும் அரசு சார்பில் போய்க்கொண்டுள்ளது.

திராவிட இயக்கப் பத்திரிகைகளை, தலித் இயக்கப் பத்திரிகைகளை பெரும்பாலும் தேடி எடுத்து மின்படியாக்கம் செய்துள்ளோம். ஜஸ்டிஸ் பத்திரிகைகளின் பிரதிகளை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்காக  எடுத்த அனுபவம் மகிழ்ச்சி.

பெர்சி மெக்யூன் என்ற ஆங்கிலேய கால அதிகாரி ஒரு மொழியியல்வாதி. அவர் தமிழ்நாட்டு, மலையாள நாட்டுத் தனிப் பாடல்கள், வட்டார வழக்கு ஆவணங்களைச் சேகரித்துள்ளார். ஒரு பாட்டுக்கு ஒரு அணா தருவாராம். இந்த சேகரத்தில் இடம்பெற்ற பாடல்களைத்தான் கி.வா.ஜ பின்னாளில் மலையருவி என்ற பெயரில் பதிப்பித்துள்ளார். இதன் முதல்பதிப்பில் தான் பெர்சி மெக்யூன் பெயர் உள்ளது. பெர்சி மெக்யூன் தொகுப்பில் இன்னும் அச்சில் வராத தமிழ்ப் படைப்புகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரது குறிப்பேடுகளை சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் கண்டெடுத்தோம்.  பல காலமாக அங்கே உறங்கிக் கொண்டிருந்த அந்த குறிப்பேடுகள் நம் கண்ணில் தென்பட்டது பெரும் மகிழ்ச்சி. அவரது சேகரத்தில் அச்சில் வராத மலையாளப் பாடல்களும் உள்ளன. அவற்றை மலையாள ஆவணக் காப்பகம் ஒன்றுக்கு அளித்தோம். மறுநாள் அங்கே அனைத்து முக்கிய செய்தித்தாள்களும் பெரும் செய்திக்கட்டுரைகளை வெளியிட்டன. அதே நூலகத்தில் இருந்து கணித மேதை ராமானுஜத்தின் கணக்கு நோட்டும் எடுத்து மின்படியாக்கம் செய்தோம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சம்பரத்து அந்தாதி பழைய மலையாள எழுத்துருவில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியம். அந்த ஓலைச்சுவடிகளை தமிழில் ஒலிப்பெயர்ப்பு செய்து ஓர் ஆசிரியை பதிப்பித்துள்ளார். அந்த ஆசிரியையைத் தேடி சமீபத்தில் பாலக்காடு பகுதியில் சந்தித்து பொன்னாடை போர்த்திப் பாராட்டினோம். அழிந்துபோன ஒரு தமிழ் இலக்கியத்தைக் கண்டறிந்துள்ளார் அல்லவா?

மெட்ராஸ் கூரியர் இதழ்கள், பழைய சுதேசமித்திரன் இதழ்கள், பழைய மாத இதழ்கள் என பலவற்றை சேகரித்துள்ளோம்.

இன்னும் ஏராளமான நூல் சேகரங்கள் நம் நாட்டில் பலர் கைவசம் இருக்கின்றன. அவற்றை மக்களுக்காக பொதுவில் வைக்கவேண்டும். அறிவு அனைவருக்குமானதாக ஆகவேண்டும் என்பது என் எண்ணம்.

வேதங்களை மறைத்து வைத்தார்கள் அல்லவா? அந்த எண்ணம் தமிழ்ச் சமூக மனதிலும் ஆழமாக இருக்கிறது என்று தோன்றுகிறது. எந்த ஆவணமும் லேசில் கிடைக்காது.

எங்கோ ஒருவர் ஆய்வுக்காக ஒரு நூலைத் தேடும்போது அது இந்த தமிழ் இணையக் கல்விக்கழக  நூலகத்தில் அதன் மின்னணுப் படி கிடைத்தது என்று சொல்லும்போது எனக்குண்டாகும் மகிழ்ச்சிக்கு இணை ஏதும் இல்லை. இச்சமயத்தில் இந்த மின்னணுப் படியாக்கும் திட்டத்தை நிர்மாணித்து, அதில் என்னைப் பணி செய்யப் பணித்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்குத்தான் இந்த பெருமை உரித்தானது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஆவணமாக்கம் என்பதே அதிகாரத்துக்கு எதிரானது. அறிவுக்கு எதிரான அரசுகள் இதை அனுமதிக்காது. இப்போதைய திராவிட மாடல் அரசின் அணுகுமுறை இந்த விஷயத்தில் பாராட்டத்தக்கது.

பட்டுப்பூச்சியின் இயல்பு நூல் நூற்றல். எனக்குப் பிடித்ததை நான் செய்துகொண்டிருந்தேன். தினமும் ஆவணக்காப்பகத்திலோ நூலகத்திலோ அமர்ந்து அதன் தூசியை சுவாசிக்காவிட்டால் தூக்கம் வராது,’ என முடித்தார் சித்தானை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com