
நானும் அவர்களுடன் போகலாம் என எடுத்த முடிவு என்னைப் பொறுத்த வரையிலும் ஒரு தைரியமான முடிவு. பின்னால் திரும்பிப் பார்த்தேன். வின்சி பாவாடை சட்டையிலும் அருண் டவுசர் சட்டையிலும் நின்றார்கள்.ஆனாலும் எனக்கு அங்கு போக பயம். அதைவிட உம்மாவை நினைத்தால் இன்னும் பயம். உம்மா தனியாகப் போனால் முதுகுத் தோலை உரித்துவிடுவாள். எனக்கு நன்றாகத் தெரியும், ரோஸி மாமி சொன்னா குழப்பம் இருக்காது, ஆனாலும் உள்ளுக்குள் எனக்கு அந்த பயம் இருந்தது போல வின்சிக்கும் இருந்தது.
தோமாயி மாமா வழக்கமாக செய்யும் வேலைதான் இது என முன்னமே எங்களுக்குத் தெரியும். ஆசாரி வேலைக்குச் செல்லும் மாமா காசு கிடைத்ததும் மாம்பட்டை அடித்துவிட்டு எங்கேயாவது சிக்கில் கிடப்பார். இம்முறை மாமா கேரளாவில் இருந்து வர தாமதமானதால் வேலை, வசமாக எங்கள் தலையில் கட்டப்பட்டது.
எனக்கும் இந்த வேலைக்கும் சம்பந்தம் இல்லைதான்; ஆனால் ரோஸி மாமி சொல்லிவிட்டாள்.
‘…நீ வின்சி அருண் கூட துணைக்கு போ கண்ணே நான் பாத்திமா கிட்ட சொல்லியேன்…’ ‘…குட்டியே பேசாம பிரவினயும் அருணையும் போவச் சொல்லுவோம். எனக்கு பயமா இருக்கு நான் வர்ல…’
‘…குட்டேய் தாத்தாட்டி நாம மூணு பேரும் போவோம்…..’
நான், வின்சி, அருண் விளையாடச் செல்லும் அனுவின் வீட்டுக்குப் போகும் கடைசியில் இருந்து துவங்குகிறது சிமித்தேரி விளை. நல்ல செம்மண். அங்கிருந்து காடு தொடங்கிவிடும். பகலிலேயே சிமித்தேரி விளை பக்கம் யாரும் செல்ல அச்சப்படுவார்கள். ஆனால் பகல் நேரங்களில் எங்களுக்கு அங்கு போக பயமே இருக்காது. ஆனால் அந்தி கருக்கலுக்குப் பிறகு நாங்கள் போக மாட்டோம். மா மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் நிறைந்த சிமித்தேரி விளை ஊர் திருச்சபைக்குச் சொந்தமான வஸ்து.
அனு வீட்டு முற்றத்தில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அந்தி கருக்கலில் புளிய மரம் ஏதோ தலைவிரி கோலத்துடன் பிசாசு போல நிற்கும். அங்கிருந்து பார்த்தால் சிமித்தேரி ஒரு கண்ணாடி போல தெரியும். எப்போதும் கருக்கலுக்கு முன்னே வீட்டுக்கு சென்று விடும் எனக்கு அன்று விளையாட்டில் நேரம் போனதே தெரியாமல் இருட்டி விட்டது. உம்மா என்ன சொல்வாள் எனும் பயம் வேறு சிமித்தேரி விளை பயம் வேறு என்னை ஆட்கொண்டது.
‘எனக்கு தனியா போக பயமா இருக்குல அருண்.. என்னைய வீட்ல கொண்டு விடுல …’
‘சிமித்தேரி விளையின் அந்தப் பக்கம் இருந்து மல்லிகைப்பூ வாசனை வந்தது, யாரோ வெள்ளைச் சீலை உடுத்துட்டு தலை முடியை பிரிச்சிட்டு காத்துல மிதந்து போனத கண்ணால கண்டேன்ட்டி…’
அருண் சொல்லும் கதைகள் போல எங்கள் பகுதியில் நிறைய சிமித்தேரி கதைகள் உலாவின. இரவில் சிலுவையைச் சுமந்தபடி செல்லும் அருளப்பர், சப்பரத்தை தலையில் சுமக்கும் கிருஷ்டி இவர்கள் எல்லாம் சிமித்தேரியில் அடக்கமானவர்கள்.
ஆனாலும் இரவு நேரங்களில் வெளிக்கு ஒதுங்க கழிவறைகள் இல்லாதவர்களுக்கு அந்த சிமித்தேரி விளை மறைவிடம்.
அனு வீட்டின் ஓரத்தில் இருந்து பார்த்தால் தெரியும் அடர்ந்த மரங்களைத் தாண்டி அரசலாக குருசுகள் அங்காங்கே தெரியும் கருப்பு நிறம் ரோஸ் நிறம் பூசிய கல்லறைகள் அடங்கிய கல்லறைத் தோட்டம் தான் எங்களை பயமுறுத்தியது. அங்கிருந்து பறந்து வரும் பூனைக்குருவிகளைக் கண்டாலே எனக்கு பயம்.
இங்கிருந்து குத்து மதிப்பாக கைகளை நீட்டாமல்,‘…அதோ அங்க தான் எங்க தாத்தாக்க கல்லறை..’ என ஏதாவது ஒரு குருசை காட்டுவாள். குழிக்கறையை பார்த்து கை நீட்ட கூடாது என்று யார் சொல்லித் தந்தார் என்பது எனக்கு நினைவில்லை.
ரோஸி மாமி கொடுத்துவிட்ட இரண்டு ஈக்கு வாரியலையும் ஒரு தண்ணீர் வாளியையும் எடுத்துக் கொண்டு வந்த அருணின் சட்டையைப் பிடித்துக் கொண்டு நடந்தேன்.
‘…குட்டியே பேய் வந்தா உன்னப் பிடிச்சு கொடுப்பேன் இன்னா…’ என சிரித்து வைத்தான்.
எனக்கு அழுகை வந்தது போல ‘… நீ பிடிச்சுக் கொடுத்தா நாளைக்கு உனக்கு ஹோம் வொர்க் எழுத நீ கேப்பல்லா நோட்டு தரமாட்டேன்…’
‘...தராண்டாம் போட்டி….’
‘..அப்போ எனக்க வாப்பா வந்து கேட்டா என்னல செய்வா..’
‘… நான் மாமாட்ட சொல்லுவேன் ஆவி அவளப் பிடிச்சுட்டு போச்சுன்னு…’
எனக்கு அழுகையாக வந்தது.
‘….யாம்ல அண்ணா அவள பயமுறுத்திய. அப்படிலாம் ஒண்ணு இலட்டி அவிய இறந்துட்டாவ ஏசு கிட்ட அவிய ஆத்மா போய்ட்டு…’ வின்சி எனக்கு ஆதரவாக நின்றாள்.
‘…இஞ்ச வாங்கட்டி …’என வலப்புறம் இருந்து இடப்புறமாக என்னையும் வின்சியையும் இழுத்தான் அங்கு ஒரு ஓணான் செத்து கிடந்தது.
‘...ம்ம்.. தெரியும் உம்மா கூட சொல்லி இருக்கா ஒருத்தர் இறந்துட்டா அல்லாஹ் கிட்ட உயிர் போயிருமாம்…’
‘…சொன்னாவள்ல பொறவு என்னத்துக்கு பயந்து சாவிய…’
சிமித்தேரி விளையின் மரங்கள் இருந்த இடத்தைத் தாண்டி நேராக நாங்கள் கல்லறைத் தோட்டத்திற்குள் புகுந்தோம். எங்களைப் போலல்லாத பெரியவர்கள் சிலர் ஆங்காங்கே கல்லறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மணலில் கட்டிய குழிக்கறை மார்பிள் சிமெண்ட் டைல்ஸ் என்று பலவகை வேலைப்பாடுகள் நிறைந்த கல்லறைகள் இருந்தன. அளவில் சிறியது பெரியது என ஒவ்வொன்றும் ஒரு விதம். சின்ன பிள்ளைகள் குழிக்கறையும் இருந்தது. பாவமாக இருந்தது எனக்கு. பெரியவர்களானால் தான் மரணம் வரும் என நினைத்திருந்தேன். குழந்தைகளாக இருக்கும் போது கூட மரணம் நிகழும் என நினைத்த போது எனக்கு பகீரென இருந்தது.
சுட்டெரிக்கும் வெயிலில் அருண் தாத்தாவின் கல்லறையைத் தேடிக்கொண்டிருந்தான். இதென்ன உறவினர் வீடா அவ்வப்போது வந்து போக? ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் கல்லறைத் தோட்டத் திருவிழா அதுவும் பயந்துகொண்டே போகிறோம். இப்போது நான் திருமணமாகி வெளியூருக்கு வந்தாலும் சிமித்தேரி விளை கல்லறை விழாவை நினைத்தால் யாரோ ஒரு அறிஞன் கூறியது நினைவுக்கு வரும்
‘மரணத்திற்குப் பிறகு மனிதர்கள் எவ்வளவு சீக்கிரம் அவனை மறப்பார்கள் என நினைத்தால் ஒரு மனிதன் பூமியில் வாழவே விரும்பமாட்டான்….’
ஆனால் அருணின் தாத்தா அப்படி எளிதில் மறக்கக் கூடியவரல்ல. திருநெல்வேலி தாத்தா என்றுதான் தெரியும் அவர் நல்ல கருப்பு அவருடைய வீட்டிற்கு பின்னால் வீட்டில் வாடகைக்கு நாங்கள் வசிக்கிறோம். எங்கள் வீட்டுக்கும் அருண் வீட்டுக்கும் இடையில் ஒரு சுவர் மட்டுமே இருந்தது. கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ஊரில் எங்களது வீடு மட்டும் சாய்பு வீடாக இருந்தது. இருவர் வீட்டு சமையல் புகைகளை மட்டுமே பகிராமல் பகிர்ந்துகொள்ள எங்களுக்குள் நிறைய இருந்தன. சுவருக்கு மத்தியில் நாங்கள் நுழைந்து நடமாடுவது போல் அவர்களும் எங்கள் உப்பா சாய்பு வீட்டில் நடமாடினார்கள். ஒருபோதும் இன்னொருவரின் நம்பிக்கையை மிதித்திடாதவாறு.
பிழைப்பு நிமித்தம் எங்கள் உப்பா இந்த ஊருக்கு வந்தபோது சாய்புக்கு தன் வீட்டை வாடகைக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ‘சாய்பு கடையில எல்லாரும் பண்டம் வாங்குங்க...’ என திருநெல்வேலி தாத்தா அந்த ஊரில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு அதிகம் இஸ்லாமியர்கள் இல்லாத பகுதி என என் தந்தை உடன் பிறந்தோர்கள் பக்கத்து ஊர்களான குளச்சல் திருவிதாங்கோடு என குடிபெயர்ந்துவிட என் வாப்பா மட்டும் இங்கேயே இருந்துவிட்டார்.
பாட்டனார் மவுத்தா போன நேரம் சுற்றுவட்டார மக்கள் தான் உதவிக்கு வந்திருந்தனர். ஜமாத் ஆள்களுடன் அருண் தாத்தா தான் எனது பாட்டனாரின் சந்தூக்கை தூக்கினார். கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர். பொடிநடையாக பாட்டனாரின் ஜனாசாவை மையவாடி வரை தூக்கிச்சென்றார்.
அருண் ஒருவாறு தாத்தாவின் கல்லறையை அடையாளம் கண்டுவிட்டான். கல்லறை மேல் அருளப்பன் என பொறித்த கல் அருகே நாங்கள் போய் நின்றோம். முன்னொரு காலத்தில் திருநெல்வேலியில் தாத்தா மாட்டுவண்டி வைத்திருந்ததாக பாட்டி சொல்லி தெரியும். வாசலில் நார் கட்டிலில் வேட்டி மட்டும் உடுத்தி மேலை ஒரு சிவப்பு நிற டவ்வல் போட்டிருப்பார். கழுத்தில் ஒரு பச்சைநிற செபமாலை தொங்கும். வெற்றிலையுடன் புகையிலையையும் மென்று குதப்பிக் கொண்டிருப்பார். வாயின் இருவோரமும் லேசாக கிழிந்திருக்கும். எப்போதாவது வழக்கத்திற்கு மாறாக ‘…சாய்பே இப்பாவா வாறிய..’ என உம்மாவிடம் ஏதாவது கதைப்பார். மாம்பட்டை கொஞ்சம் உள்ளே போனால் ‘ஓசனா பாடுவோம் ….ஏசுவின் தாசரே…’ வில் துவங்கி ‘….தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே…’ வந்து பாட்டியை வம்பு பண்ணும் விதமாக செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள் என்று கொஞ்சும் குரலில் முடிப்பார். மற்றபடி எந்த தொந்தரவும் இல்லாத நல்ல அமைதியான மனுஷன்.
கிறிஸ்துமஸ் காலங்களில் கடைசி பத்து நாட்கள் பஜனை வரும். அதில் ஏசுவின் திருவுருவச் சிலைக்கு ரோசாப்பூ மாலையிட்டு காணிக்கை போடுவார். அப்போதுதான் அவர் சட்டை அணிந்து நான் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் வீட்டைக் கடந்து பஜனை கூட்டம் செல்லும் போது இவரும் கூடவே செல்வார். மற்றபடி அவர் ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு போவதுக்கூட இல்லை. பாட்டியை கல்யாணம் பண்ணிய பிறகே கிறிஸ்துவத்துக்கு மாறியிருந்தார். ஆனாலும் யேசுவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது என்பதை அவர் சூசையப்பர் கதைகளையும் தாவீது கதைகளையும் எங்களுக்கு கூறும்போது அறிய முடிந்தது. அவர் கதைகள் சொல்லும் போது மிரளும் கண்களைப் பார்த்தால் தாத்தா ஒரு கைதேர்ந்த கதை சொல்லி எனப் புரியும்.
பெத்லகேமில் பிறந்த ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீது, கோலியாத் என்ற ராட்சசனை வீழ்த்தி, சவுல் அரசருக்குப் பின் அரியணை ஏறிய கதையைச் சொல்லும் போது அவர் வலிமையான தொடையைத் தட்டி வீட்டு திண்டில் ஏறி நிற்பார்.
உம்மா இதே கதைகளைத்தான் தாவூத் (அலை) அவர்களின் வரலாறாக இஸ்ரவேலின் மன்னர் எனவும் அல்லாஹ் அவருக்கு ‘ஜபூர்' (சங்கீர்த்தனம்) எனும் வேதத்தை வழங்கினான் மற்றும் இரும்பை மென்மையாக்கும் அற்புத ஆற்றலை அளித்திருந்தான் என்றபடி பீடியைச் சுற்றியவாறு கூறுவாள். எங்கள் வீட்டு தாவுது(அலை) சுவரின் வழியாக அருண் வீட்டில் கோலியாத்தை சந்தித்து விட்டு அப்படியே பத்திரமாக திரும்புவது வேறு எங்கும் நிகழாத அதிசயம். இரண்டு கதைகளும் வாய்மொழியாகக்கூறும் போது ஒன்றாகவே தோன்றியது எனினும் அதனுள் ஒரு மெல்லிய கயிறு போல் ஒரு வேற்றுமை இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் அன்பியம் கூடுகையில் வட்டாரத்தில் இருக்கும் கிறித்தவ பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் கலந்துகொள்வார்கள். அதில் ஏதாவது ஒரு தீர்க்கதரிசியின் வரலாறு மற்றும் விவிலிய வசனங்கள் கூடவே குழந்தைகளுக்கு பாடல்களை தாத்தா சொல்லிக் கொடுப்பார். அது பெரும்பாலும் எங்கள் வீட்டு முற்றத்தில் நிற்கும் கொல்லாமரத்தின் நிழலில்தான் கூடும். நாங்கள் திண்ணையில் இருந்து கேட்போம் அல்லது கூட்டாளிகளோடு அமர்ந்தும் கேட்போம். இப்படி ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீது, கவண் கற்கள் மூலம் கோலியாத்தை வீழ்த்திய கதைகளையும் நோவாவின் பேழை ஒவ்வொன்றையும் விவரிக்கும் போதும் அதன் இன்னொரு வகைமை கதையை உம்மா இரவில் கூறுவாள்.
ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது தாத்தா இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். ஆனால் முதலில் போய் எட்டிப் பார்க்கவில்லை. தோமாயி மாமாவும் ரோஸி மாமியும் கண்ணீர் வடிந்த கண்களோடு நின்றிருந்தனர். அன்று தோமாயி மாமா வயிறு முட்டக் குடித்திருந்தார். இறந்த வீட்டில் சமைக்கவில்லை என்பதால் எல்லோருக்கும் உம்மா தான் சேர்த்து சமைத்தாள். வின்ஸியும் அருணும் எங்கள் வீட்டிலேயே உறங்கினார்கள். மறுநாள் பயிறு கஞ்சி காய்ச்சி ரோஸி மாமி எங்களுக்கு சாப்பிட தந்தார்கள் ஏதோ முறை என்று நினைக்கிறேன்.
எப்படியும் இது நடந்து சில வருடங்கள் கழிந்திருந்தது. வருடா வருடம் கல்லறைத் தோட்ட விழா நடக்கும் என்று தெரியும் அன்று எங்களுக்கு மதியம் மூன்று மணிக்கே பள்ளி விடுமுறை கொடுத்து விடுவார்கள். இந்த முறை அதற்கான முன்னேற்பாடாகத் தான் நானும் வின்ஸியும் அருணும் சுத்தம் செய்யப் போனோம். தாத்தாவின் கல்லறையில் புதர் மண்டி கிடந்த இடத்தின் புற்களை கைகளால் பிடுங்கி அகற்றினாள். அருண் வாரியலால் அவற்றை தள்ளி விட்டுக் கொண்டிருந்தான். நான் கதிகலக்கத்தோடு அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கல்லறையின் பின்னால் ஒரு கிரேந்திப்பூ செடி முளைத்து பூ விட்டிருந்தது அதை பார்க்கும் போது தோட்டம் என்றாலே மலர்கள்தானே இருக்க வேண்டும் ஆனால் இங்கு பார்த்தால் எங்கும் குருசுகள். போனால் போகட்டும் என்று இதுமட்டும் பூத்திருக்கிறதோ என எனக்கு தோன்றியது. இதை மட்டும் பிடுங்க வேண்டாம் என்றேன். அருண் எதை என்றான். இந்த கிரேந்திப்பூ செடியை என்றேன். மறுகணமே பிடுங்கி வீசி விட்டான்.
. ‘..போல இனி உங்கூட பேசமாட்டேன்..’ என்றேன்.
‘…பேசாத உனக்கு பம்பரம் சுத்தச் சொல்லி தரமாட்டேன்டி…’ என்றான் பதிலுக்கு.
‘…யாம்ல அவள்ட சண்டைக்குப் போறா!..’
‘..இருங்கட்டி உங்க ரெண்டு பேரையும் இங்கனயே விட்டுட்டு போறேன்...’
‘…போல... எங்களுக்கு வழி் தெரியும்…’
ஒரு வழியாக புல்லைப் பிடுங்கியெறிந்த போது கிரானைட் கல்லில் அருளப்பன் பிறப்பு இறப்பு என்று குறிப்பு தெரிந்தது.
‘பானு…ஏன் உங்களுக்கு இப்படிலாம் உண்டா?..’ வின்சி கேட்டாள்.
‘…கிடையாதுட்டி அதுவந்து யாராவது இறந்தா பள்ளிவிளைல கொண்டுபோய் அடக்குவாங்கோ அங்கே பெண்ணுவ போவப்படாது…’
‘ஓஓ.. ஏன்..?
‘தெரியாது!
ஒரு வழியாக அவர்கள் சுத்தம் செய்து முடித்தார்கள். பின் நாங்கள் மெதுவாக வீட்டை நோக்கி நடந்தோம். அருண் தான் உன்ன மாதிரி பேடிச்சான்தூறிகளை வச்சுட்டு என்று துவங்கினான். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக வின்சென்ட் மாமா கிட்ட சொல்லிக் கொடுத்தேன். ‘மாமா அருண் என்ன அடிச்சான். பேய்ட்ட பிடிச்சு கொடுப்பேன்னு சொன்னான்.’ மாமா அருணை முறைத்தார்.
உம்மா அடுப்படியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவ்வளோ நேரம் எங்க போன'
‘விளையாட... ஓஓ.. ஆமாம்.’
‘இல்ல மாமி நாங்க கல்லறைத் தோட்டத்திற்கு போனோம்’ என்றான் அருண்.
உம்மா சொல்லாமல் போனதிற்கு அடி போட்டாள்.
இதை மனதில் வைத்துவிட்டு நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவன் ‘A ' கிளாஸில் ஒரு பெண்ணைப் பார்க்கச் சென்ற விஷயத்தை ரோஸி மாமியிடம் சொல்லி அதேமாதிரி பூசை வாங்கி கொடுத்தேன்.
அன்று மாலை கல்லறை பூசைக்கு பாதிரியார் வெள்ளை அங்கி அணிந்து பைபிளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கையில் ஜெபமாலையுடன் கடந்து போனார். அவர் பின் ஆண்கள் மற்றும் பெண்கள் சென்றனர்.அனைவரும் ஒருவித மௌனத்தை சுமந்து நடந்தனர். தாத்தாவின் கல்லறையில் வைக்க மெழுகுவர்த்தி ஊதுபத்தி மற்றும் ரோசாப்பூ மாலை அடங்கிய பாலித்தீன் கவரை சுமந்தபடி வின்சியும் அருணும் சென்றனர்.
பாதிரியார் பைபிளின் வசனங்களை சொல்லியிருப்பார் ரோஸி மாமி மாலையை கல்லறையில் போட்டிருப்பார். வின்சி ஊதுபத்திகளைக் கொளுத்தி இருப்பாள்.அவர்கள் ஆளுக்கொரு மெழுகுவர்த்திகளை கொளுத்தி வைத்திருப்பார்கள். அது அங்கும் இங்கும் ஆடி ஒளியைப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். புதுப்பிக்கப்பட்ட கல்லறை தோட்டம் இரண்டு மூன்று நாள்களுக்கு புதிதாக இருக்கும். இவற்றையெல்லாம் இந்த அருண் அங்கிருந்து கவனித்து வைத்து மல்லிகை மணக்குது ஆவி பறந்தது என பயமுறுத்துவான்.
நான் எதைக் கூறினாலும் அதற்கு எதிராக செய்வான் அருண். ஆனால் எனக்கு நிச்சயம் செய்திருந்த சமயம் இவரது செல்போன் கடைக்கே சென்று விசாரித்து வந்தவன்,
‘பாக்க நல்ல மனுஷர் போல தான் இருக்காரு நீ ஒண்ணும் பயப்படாத...’ என்றான். அசலூர் மாப்பிள்ளை என்பதால் அவன் பார்த்துச் சொன்ன பிறகே எனக்கு பெரும் நிம்மதி வந்தது. திருமணம் ஆகி திருநெல்வேலிக்கு கிளம்ப தயாரான போது மட்டும் அவனது கண்கள் கலங்கியிருந்தன.வீட்டில் நாங்கள் இருவரும் பெண்பிள்ளைகள் என்பதால் எனது திருமணத்தில் ஒரு அண்ணனைப் போல அருண் தான் நின்று வாப்பாவுடன் எல்லா வேலைகளையும் ஓடியாடி கவனித்துக்கொண்டான். எவ்வளவு பெரியவளாக இன்று மாறினாலும் இன்னும் சிமித்தேரி விளை பயம் என்னை விட்டுப் போகவில்லை என்பது அருணுக்கு தெரியும். திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்புக்கு நான் என் கணவருடன் சென்ற காரை ரோஸி மாமி, தோமாயி மாமா, என் உம்மா, வாப்பா, தங்கைகள் என அந்த சுற்றுவட்டாரமே வழியனுப்பி விட – ஏதோ நினைவு வந்தவனாக அருண் காருக்கு பின்னால் ஓடி வந்தான்.
நான் காரை நிறுத்த சொன்னேன்.
‘யாம்ல அருண் இப்படி ஓடிவார.’
‘ஒண்ணுமில்ல காரு இப்ப சிமித்தேரி விளை வழியா தான் திருநெல்வேலி போகும்… பயந்துடாதே! இறந்தவர்கள் திரும்ப மீள்வார்கள் என்பது ஏசு என்கிற ஈசாவோடு முடிஞ்சு போச்சு… நாம அற்பமான மனுஷன்கள் திரும்ப மாட்டோம்….’ என்றான்.
இ.பீமா ராஹினாவின் சொந்த ஊர் குமரி மாவட்டம், திங்கள் நகர். தற்போது வசிப்பது ஏர்வாடி. விலங்கியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, ஆசிரியையாக பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், இன்று ஒரு தொழில்முனைவோராக பாதையைத் தொடர்பவர்.
2025-ஆம் ஆண்டு இக்றா பதிப்பகம் நடத்திய ரமலான் கால நினைவலைகள் கட்டுரைப் போட்டி, கானல் அமீரகம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றுள்ளன.