நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

"அதுக்கு இன்னும் உயிர் இருக்கு!''

தமிழக தேர்தல் களத்தில் மிக முக்கியமான பரப்புரை பேச் சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். அவருடைய பரப்புரை அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். தன் உரை போலவே மழையெனக் கொட்டினார்.

1984 சட்டமன்றத் தேர்தலில் குளச்சல் தொகுதியில் பரமணிதாஸ் தி.மு.க. வேட்பாளராக இருந்தார். நான் அப்போதுதான் கல்லூரியிலிருந்து வெளியே வந்த காலம். மாணவர் தி.மு.க.வில் வேலைசெய்து, எங்கள் மாவட்டத்தில் ஒரு சொற்பொழிவாளனாக அறிமுகமாகிவிட்டேன். பரமணிதாஸ் என்னிடம் வந்து, தம்பி எனக்காக நீ வந்து பிரச்சாரம் செய்யவேண்டும் எனக் கேட்டார். மொத்தத் தொகுதியில் எல்லா ஊர்களிலும் தினசரி ஐந்து ஊர் தேர்வுசெய்து, அவரே பயணத் திட்டம் வகுத்துத் தந்தார். சாதாரணமான என்னை அழைத்துச்சென்று, பிரச்சாரம் முடிந்து அவரே என்னை வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார். அதில் பரமணிதாஸ் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், மேடைப்பேச்சில் உச்சத்தைத் தொடுவதற்கு அந்தப் பிரச்சாரம் எனக்கு பாடம் எடுத்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அதற்குப் பிறகு, நான் அரசியலில் இல்லை.

1989 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் செய்தபோது, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி... இத்தனை ஊர்களுக்கும் கலைஞர் ஒரு நாள் வந்தார்.

வீட்டிலோ, எங்கேயாவது வேலைக்குப் போ இல்லை என்றால் வியாபாரம் செய் என வற்புறுத்திக்கொண்டு இருந்தார்கள். அந்த சூழலில், இந்தக் கூட்டங்களில் பேசவேண்டும் என நான்கு நண்பர்களுடன் சேர்ந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு, நாகர்கோவிலுக்குப் போனோம். கலைஞர் சரியாக 4 மணிக்குப் பேசுகிறார்... நான் 3 மணிக்கு அங்கே போய், தலைமையில் என்னைதான் முதலில் பேசச் சொன்னாங்க என்று ஒரு பொய்யைச் சொல்ல, உடனே என்னைப் பேசவிட்டாங்க. அங்க பேசிட்டு கலைஞர் வருகிற நேரமாகப் பார்த்து, திருநெல்வேலிக்குப் புறப்படுவேன். இப்படி, நாகர்கோவில்ல இருந்து அருப்புக்கோட்டைக்குப் போய்ச்சேர இரவு மணி பத்து ஆயிற்று.

'ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை; ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் ஆதவன் மறைவதில்லை எனும் பாட்டை மக்கள் திலகத்துக்காக எழுதிய கலைமாமணி முத்துக் கூத்தன் ஐயா, அந்த மேடையில் பொம்மலாட்டம் நடத்திக்கொண்டிருந்தார். நான் போய் இறங்கினேன். அப்போதைய மாவட்டச்செயலாளர், தங்கபாண்டியன், அவர்தான் வேட்பாளர். இப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசின் தந்தை. என்னைப் பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சியில வாரி அணைத்துக்கொண்டு என் கன்னத்தில் முத்தமிட்டு, ஆபத்சகாயன் நீ தாண்டா, வாடா தலைவர் வர்றவரை நீ தான் பேசணும்.. பொம்மலாட்டாம் முடியப்போகுதுன்னார்.

பொம்மலாட்டாம் பத்து மணிக்கு முடிஞ்சது. தலைவர் எப்ப வருவார்னு கேட்டேன். அதை எப்படிடா சொல்லமுடியும்... அவர் வர்றவரைக்கும் சப்ஜெக்ட் அடிச்சு விளையாடுன்னார். இரவு 10 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு முடிச்சேன். 9.30 மணி நேரம் பேசினேன். இந்த ரெக்கார்டை தமிழ்நாட்டுல இதுவரைக்கும் யாரும் செய்யலை.

தலைவர் காலை ஏழரை மணிக்குதான் மேடைக்கு வந்தார். என்ன அப்படியே பாத்துட்டு, எவ்வளவு நேரமா பேசுறன்னு கேட்டுட்டு, ஒன்பதரை மணி நேரம் பேசுகிறேன்னு சொன்னேன். அப்டியே சிரிச்சிட்டு புன்னகை பூத்திட்டு, சரி முடி அப்படின்னாரு... அந்தால, பெரிய கடை திறக்கப் போகிறது; பெட் டிக்கடையை மூடுகிறேன்னு சொல்லி என் பேச்சை நிறுத்தினேன்.

தலைவர் சொன்னாரு, பத்து மணி நேரம் சைக்கிள் மிதிக்கலாம், வித்தை காட்டலாம், மேஜிக் செய்யலாம், புராண இதிகாசங்களைக்கூடப் பேசிவிடலாம்; தேர்தல் பிரச்சார மேடையில ஒன்பதரை மணி நேரம் பேசு வது அபூர்வம்; ஆச்சர்யம்; அந்த ஆச்சர்யத்தை தம்பி சம்பத் நிகழ்த்தியிருக்கான்; இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை; செயல்படுங்கள்...னு சொல்லிட்டு, ஐந்து நிமிடத்தில பேச்சை முடிச்சிட்டு, ஐந்து விரல்களையும் உதய சூரியனாகக் காட்டி மேடையில இருந்து கீழே இறங்கிட்டாரு. இது அப்போ எல்லா நாளேடுகளிலயும் செய்தியா வந்தது.

அதே 89ஆம் ஆண்டில ஈரோட்டில தி.மு.க.வுல சுப்புலட்சுமி ஜெகதீசன் நின்னாங்க. அன்னைக்கு முத்துசாமி அண்ணன் ஜானகி அணியில் நின்னாரு. சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரிச்சிப் பேசினேன். வீரப்பன்சத்திரத்தில ஏழரை மணி நேரம் பேசினேன். கலைஞர் வர்றவரைக்கும்...

பவானியில கிட்டு என்கிற கிருஷ்ண சாமி தி.மு.க.வுல நின்னாரு... இதுமாதிரி அங்கயும் ஏழரை மணி நேரம் ஆகிருச்சு. கலைஞர் வரும்வரை பேசினேன்.

அதே ஈரோடு தொகுதியில ஒரு நாள் வி.பி.சிங் வந்தாரு... அவர் வர்றவரைக்கும் நாலு மணி நேரம் பேசினேன்.

அதுக்குப் பிறகு, 91 நாடாளுமன்றத் தேர்தல்ல தி.மு.க.வுக்கு ஆதரவா என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா ஊரிலும் போய்ப் பேசினேன். பிறகு 1993இல கட்சியில கலகம்செய்து வைகோகிட்ட வந்துட்டேன்.

1996, 98, 99, 2001 - னு வைகோகூட இருந்த பதினெட்டு ஆண்டுகளும் பேசினேன். தனியாக எனக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு அண்ணன் வைகோகிட்ட அனுமதி வாங்கிட்டுப் பேசினேன். 98 நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை முடிச்சிட்டு, ஈரோட்டுல பார்த்து, பிரச்சாரம் முடிஞ்சது; ஊருக்குப் புறப்படறேன்னேன்... அப்போதான் தலைமைக்கழகத்தில ஆறு டிராக்ஸ் வண்டி வாங்கினாங்க. அந்த டிராக்சை நீங்களே வச்சிக்கிடுங்கனு வைகோ சொன்னார். நாங்க பெரிய குடும்பம்...25 பேர். வீட்டுலயும் கார் இல்லை. எங்கயும் போறதுக்கு வச தியா இருக்கும்.. அதுக்குப் பிறகு வைகோ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்வோம்.

அதுக்குப் பிறகு ஒரு தடவை, தேர்தலைப் புறக்கணிச் சாரு வைகோ. அந்தக் காலகட்டத்திலயே புறக்கணிப்பை சரியான நிலைப்பாட்டா எடுக்கல. ஆறு தொகுதி கொடுக்கிறாங்கன்னு அ.தி.மு.ககிட்ட சண்டைபோட்டார். அதில அவர் உறுதியா நிக்கலை. தி.மு.க. நிக்கிற தொகுதியில அ.தி.மு.க.வுக்கு எதிரா போய்ப் பேசச் சொன்னார். சங்கரன்கோவில்ல ஒரு பட்டிமன்றமே நடத்தினேன். அத முடிக்கும்போது, சூரியன் உதிக்கிறத எந்த சக்தியாலும் தடுக்கமுடியாதுன்னு பேசினேன். அதுக்குப் பிறகு கருப்பசாமி பாண்டியன் அண்ணன் தென்காசியில நிக்கிறாரு... அங்க பேசும்போது, இலை கருகும்; சூரியன் உதிக்கும்னு சொன்னேன். கோவில்பட்டி கூட் டத்தில இலைக்கு இன்னும் இடமில்லை; மாங்கனி தித்திக்கும்னு சொன்னேன். அங்க பா.ம.க. நின்னுச்சு. புறக்கணிப்புல அவர் பேசச்சொன்னார்...இப்படிப் பேசினேன்.

அண்ணா தி.மு.க.வுல சேர்ந்த காலகட்டத்தில் திமுக சார்பாக அண்ணன் ஸ்டாலின் மாநிலம் முழுக்கப் பேசினார். ஜெயலலிதா என்னைக் கூப்பிட்டு, ஸ்டாலின் பேசுற எல்லா ஊர்லயும் நீ அடுத்த நாள் பேசணும்னாங்க. 5 மணிக்கு மயிலாப்பூர்ல பேசுறார்னா அதே இடத்தில அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீங்க பேச ணும்னாங்க. ஒரு டெம்போ டிராவல்லர எனக்காக தந்து பேசச் சொன்னாங்க... அதுக்குப் பிறகு, ஒரு சட்டமன்றத் தேர்தல், ஒரு நாடாளுமன்றத் தேர்தல்ல அ.தி.மு.க.வுக்காகப் பேசினேன்.

பிறகு அரவக்குறிச்சி இடைத்தேர்தல். தி.மு.க. சார்பில அண்ணன் கேசிபி நின்னாரு... கடைசி நாள் பிரச்சாரத்துக்கு நீ வரணும்னு சொன்னாரு... காலை 6 மணிக்கு பேசத் தொடங்கி, ஒரு இடம் விடாம சாப்பாடில்லாம 57 இடத்தில ஒரே நாளில பேசினேன். அத முடிச்சிட்டுதான் வீட்டுக்குப் போனேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தல்ல... தி.மு.க.வை ஆதரிச்சுப் பேசிகிட்டிருந்தேன்... தி.மு.க. அப்போ பிரசாந்த் கிஷோர் அமைப்புகிட்ட பிரச்சார வடிவமைப்பைக் கொடுத்திட்டாங்க. அவங்க ஒரு நாள் திருவல்லிக்கேணின்னு போட்டாங்க; அடுத்த நாள் அம்பாசமுத் திரம்னு போட்டாங்க. என்கிட்ட கார் இல்லை. ஜெயலலிதா தந்த காரைத் திருப்பிக் கொடுத் திட்டு வந்திட்டேன். பிறகு ஐபேக்கில இருந்த நிர்வாகிட்ட தொடர்புகொண்டு, ‘எத்தனை பிரச்சாரம், சுற்றுப்பயணத்தை நானே வகுத் திருப்பேன்... திருவல்லிக்கேணில பேசிட்டு அடுத்த நாள் எப்படி அம்பாசமுத்திரம் போவேன்... இனிமே என் பிரச்சாரத்தை நீ தீர்மானிக்காத; நான் தீர்மானிச்சிக்கிறேன்'னு சொல்லிட்டு, என்னைக் கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் போனேன்.

கடைசி நாள் பிரச்சாரத்துக்கு நீ வரணும்னு கும்பகோணம் தொகுதி வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் கூப்பிட்டாரு... என் மேல ரொம்ப அன்பா இருப்பாரு... அவருக்குப் போகணும்னு விரும்பினேன். வழக்கம்போல எனக்குதான் வரணும்னு செந்தில்பாலாஜி கூப்பிட்டாரு... அங்கயும் போகமுடியல. கேகேஎஸ்எஸ்ஆர் நீதான்னு எனக்கு பிரச்சாரத்தை முடிச்சுவைக்க வரணும்னு சொல்லிவிட ஐபேக்குல பேசி, தலைமையில நீங்களே சொல்லிடுங்கன்னு, அவருக்காக அருப்புக்கோட்டையில கடைசி நாள் பிரச்சாரத்தை போன முறை முடிச்சேன்.

நாட்டு மக்களை கட்சிசாராத நடுநிலையாளர்களை ஈர்க்கும்வகையில, கனிவா, சர்ச்சைக்குரியபடி இல்லாமப் பேசப் பாத்துக்கிடுவேன். வழியிருக்கக் குழியில் விழுந்துவிடாதீர்கள், கரும்பிருக்க இரும்பை மென்றுவிடாதீர்கள், உடைந்து சிதறிய நெஞ்சத்தோடு கேட்கிறேன், உருக்குலைந்த உள்ளத்தோடு கேட்கிறேன், கணக்கற்ற கவலையோடு கேட்கிறேன், காலில் மாலையாக விழுந்து கேட்கிறேன், மடிப்பிச்சை கேட்கிறேன், மன்றாடிக் கேட்கிறேன், எங்கள் கழக வேட்பாளருக்காக வாக்களியுங்கள்னு உருக்கமா வேண்டுகோளும் விண்ணப்பமுமாக என் பேச்சை முடிப்பேன். இப்படித்தான் தமிழ்நாடு முழுக்கப் பேசுறேன்.

இனி வர்ற தேர்தல்ல தி.மு.க.வ ஆதரிச்சுப் பேச ணும். திராவிட இயக்கச் சொற்பொழிவாளரா -  வகுப்புவாத, பாசிச சக்திகளை எதிர்த்துப் பேசுவேன்.‘ முடித்தார் நாஞ்சிக் சம்பத்.

*************

பெட்டிச்செய்தி: பிரச்சார காலத்தில்...

அண்ணா தி.மு.க.வுல ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்து கௌரவமா டெம்போ டிராவல்லர ஏற்பாடு செய்து டூர் போட்டுத் தந்து, மரியாதையா நடத்தினாங்க.

போன சட்டமன்றத் தேர்தல்ல சம்பத்தைப் பயன்படுத்தணும்னு சொல்லி என்னைப் பிரச்சாரத்துக்குக் கூட்டிப்போனாங்க அண்ணன் ஸ்டாலின்.

தேர்தல் காலம்னா பொதுவா அதிகம் சாப்பிடமாட்டேன். ரொம்பக் குறைவாதான்... காலைல ஒரு இட்லி, ஒரு காப்பியோட முடிச்சிடுவேன். இடையில இளநீரோ எலுமிச்சம்பழச் சாறோ குடிச்சிக்கிடுவேன். மதியம்னா ஒரு சப்பாத்தியொ ஒரு பிடி சோறோனு முடிச்சிக்குவேன். பொதுவா இப்படி இல்ல. நல்லா சாப்பிடுவேன். தேர்தல் காலத்தில ஊர் சுத்தவும் மேடையேறிப் பேசவும் உடம்பு ஒத்துழைக்கும். இருபது நாள் பிரச்சாரம்னா அந்த இருபது நாளும் இப்படித்தான். உணவுக் கட்டுப்பாட்டிலேயே இருந்துருவேன்.

குரல் வளத்தைப் பேணுவதற்குத் தனியா எதுவும் செய்துக்கிறதோ மெனக்கெடலோ வச்சிக்கிடறதில்ல. இளம் வயதில ஐஸ்வாட்டரே குடிப்பேன். இப்போ இந்தக் காய்ச்சல் எல்லாம் வந்தபிறகு அப்படி செய்றதில்ல.

பேசப் போகும் ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் சொல்லிப் பேசும்போது அதற்கான வரவேற்பும் ஆதரவு அதிகமா இருக்கும்.

நிறைய பேர் நினைச்சுகிட்டிருக்காங்க... பல பேரு தவறா நினைக்கிறாங்க... மேடைப் பேச்சுக்கு ஒரு தொய்வு வந்திடும்னு நினைக்கிறாங்க. முகத்துக்கு முகம் இதயத்துக்கு இதயம் அதுக்கு இன்னும் உயிர் இருக்குன்னு நிரூபிச்சி ட்டுதான் நான் சாவேன்.

முன்னாடி மேடைப் பேச்சாளர்களுக்கு இருந்த மரியாதை இப்போ சிலர் கொடுக்கிறதில்லைனு சொல்றாங்க. நான் மரியாதை இருக்கிற இடத்துக்குதான் பேசப்போவேன். இதையெல்லாம் சகித்துக்கொள்ளவும் தாங்கிக்கொள்ளவும் இளைய தலைமுறை பக்குவப்படலை.

பேசியும் எழுதியும் வளர்ந்த தி.மு.க. இதற்கு தனி திட்டமிட்டு புதிய சொற்பொழிவாளர்கள உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சிகொடுக்கணும்... வரும் காலத்தில திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கக்கூடிய கலாச்சார யுத்தம். தேர்தலைத் தாண்டி பிரச்சாரம் என்பதை ஆயுதமாக ஏந்த தி.மு.க. தயாராகணும். அதுக்கு என்னால ஆன முடிஞ்ச உதவியைச் செய்வேன்.

மறக்கமுடியாத நிகழ்வுகள்னா, ஒரு முறை மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்... என்னுடைய மகள் மதிவதனிக்கு திருவனந்தபுரம் காஸ்மோபாலிட்டன் மருத்துவமனைல குழந்தை பிறந்தது. நாற்பது தொகுதிகளிலயும் பிரச்சாரப் பயணம் முடிவுசெய்துட்டு வேன்ல ஏறிப் போயிகிட்டிருந்தேன். என்னாலப் போகமுடியல்ல. எப்படி வாரது திருவனந்தபுரம்வரைக்கும் வந்து திரும்பவும் எப்படி வாரதுன்னு மனைவிகிட்டயும் மருமகன்கிட்டயும் சொல்லிகிட்டிருந்தேன். பிறகு ஒரு நாள் திண்டுக்கல்ல பேசினேன்... அடுத்த நாள் பொள்ளாச்சில பேசணும். அப்போ சீலக்காம்பட்டி தம்புங்கிற நண்பர், பார்ச்சூனர் கார் வச்சிருந்தார். அவர் கார்ல திருவனந்தபுரம் போய் குழந்தையப் பாத்திட்டு வந்திரலாம்னு சொன்னார். அதன்படியே குழந்தையப் பாத்திட்டு திட்டமிட்டபடி பொள்ளாச்சிக்கு வந்து வேன்ல ஏறி, பேசினேன். மகேஸ்குமார்ங்கிற ஒரு தம்பி டிரைவரா இருந்தான். அவனைப் போல ஒரு டிரைவரப் பாத்ததில்ல.

அதப்போல சாயங்காலம் 4 மணிக்கு தென்சென்னை, தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மயிலாப்பூர்ல ஆரம்பிச் சிட்டு செம்மஞ்சேரில முடிக்கிறேன். மாவட்டச்செயலாளர் மா.சுப்பிரமணியன் என்கூட வந்திட்டிருக்காரு... அப்பவும் அதே தம்பிதான் டிரைவர். ஒரு இடத்தில வேகமா போயி ஒரு வண்டியில மோதிட்டது வண்டி. அதையும் கடந்து பிரச்சாரம் செய்தேன்.

இதப்போல ம.தி.மு.க.வுல இருக்கும்போது என் அண்ணன் மகன் ஓட்டுனான். திருநெல்வேலியிலயிருந்து மறுநாள் சென்னையில பேசணும். பயணத்தில எனக்குப் பழக்கம்... தூங்க மாட்டேன். என் மகன் ஓட்டுறான்னு தூங்காம இருந்தேன். ஏழரை மணிக்கு சென்னையில நுழையுறேன்... ஒரு வண்டில கொண்டு லேசா மோதிட் டான்.

இப்படி விபத்து வராமல், காயம் ஏற்படாமல், எவ்வளவுதான் எச்சரிக்கையா இருந்தாலும், வந்துவிடுமோனு கவலையோடதான் பயணிக்கணும். சில நேரம் எதிரிகள் இருப்பாங்க. என்னைத் தாக்கணும்னு திட்டமிட்டவங்க இருப்பாங்க. அதையெல்லாம் தேர்தல் நேரத்தில தேர்தல் ஆணையமும் காவல்துறையும் பாத்துக்கிடும்... இருந்தாலும் எச்சரிக்கையா பயணம் செய்யணும்னு சொல்வாங்க. பொது வாழ்வுனு வந்தா அதெல்லாம் இருக்கத்தான் செய்யும்னு போய்கிட்டே இருப்பேன்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com