கலவரத்தின் நடுவே...
ஜீவா

கலவரத்தின் நடுவே...

அது 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.  அடுத்த இரு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருந்தது. நான் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்துகொண்டிருந்தேன்.

தேர்தலுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலின்,  அன்று திமுக  சார்பில் எங்கள் மாவட்டத்தில் பிரச்சார பயணத்தில் இருந்தார். அது திமுக ஆட்சிக் காலம். விழுப்புரம் மாவட்டம் அந்த காலகட்டத்தில் சற்று உரசினாலும் பற்றிக்கொள்ளும் அளவில் வகுப்பு வாதம் உச்சகட்டமாக இருந்த மாவட்டம். தேர்தல்காலம் என்பதால் எங்கள் முழுக் கவனமும் தேவைப்பட்டது.

ஆய்வுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அந்த அதிர்ச்சித் தகவல் வந்து சேர்ந்தது. திண்டிவனத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு செருப்புமாலை போட்டு யாரோ அவமரியாதை செய்துவிட்டார்கள்! அது மட்டுமா? அந்த மாலையுடன் பாமகவின் மாம்பழச்சின்னத்தையும் வைத்துச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து மக்கள் ஆயிரக்கணக்கில் அதனருகே சாலை மறியலில் அமர்ந்துவிட்டனர். அங்கே மட்டுமல்ல, இந்த தகவல் மாநிலமெங்கும் பரவி பல இடங்களில் மறியல்கள், போராட்டங்கள் நடை பெற ஆரம்பித்தன. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று பேருந்துக் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்திலும் சுமார் ஐம்பது பேருந்துகளுக்குச் சேதம்.

சட்டம் ஒழுங்கைக் காக்க ஒட்டுமொத்த மாவட்ட காவல்துறையையும் உடனடியாகக் களமிறக்கினோம். உதவி ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் களமிறக்கப்பட்டனர். தேர்தல் சமயம் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறக்கூடாதே என்ற அச்சம் அனைவரையும் சூழ்ந்தது!

இதற்கிடையே தங்கள் கட்சிக்கு இருக்கும் நன்மதிப்பைக் கெடுத்து, தேர்தல் சமயத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளை மடைமாற்றுவதற்காகவே இந்த வேலையில் யாரோ இறங்கி இருப்பதாகக் குற்றம் சாட்டி, பாமக நிறுவனர் மருத்துவர் அதே தினம் திண்டிவனத்தில் மறியலில் அமர்ந்துவிட்டார்.

அம்பேத்கர் சிலை இருந்த இடத்தில் பெருங்கூட்டம். சிலையை அவமரியாதை செய்தவர்களைக் கைது செய்யாமல் இந்த காலணிமாலையை அகற்ற விடமாட்டோம் எனப் போராட்டக் காரர்கள் பிடிவாதமாக இருந்தனர். அங்கிருந்த 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரால் ஏதும் செய்ய இயலவில்லை.

இப்படியொரு பரபரப்பான சூழலில் நான், எனது பாதுகாவலர் கோவிந்தராஜ்... நாங்கள் இருவர் மட்டுமே விழுப்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சைரன் வைத்த அம்பாசடர் காரில் கிளம்பினோம். வழியெங்கும் கடும் போக்குவரத்து நெருக்கடி. போகின்ற வழியிலே ஒரு பூமாலை இருந்த கடையைப் பார்த்தேன், கோவிந்தராஜிடம் ஒரு தண்ணீர்ப் பாட்டிலும், பெரிய மாலை ஒன்றும் வாங்குமாறு கூறினேன்.  அதை எனதருகில் வைத்துக் கொண்டேன். உள்மனது சொல்லியது, அதன்படிதான் அதை வாங்கி வரச்சொன்னேன்.

 சைரன் ஒலிக்க, சம்பவ இடத்துக்கு அருகே கார் போனது. சுற்றிலும் போராட்டக்காரர்களும் காவல்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நிற்க, வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டுபோல அச்சூழல் பயங்கரமாக இருந்தது! 

அந்த சிலையோ பீடத்தின் மீது 12 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருந்தது.  அதற்கு செய்யப்பட்டிருந்த அவமரியாதையால் என் ரத்தம் கொதித்தது. காரில் என் ஷூக்களை கழற்றி வைத்தேன். பின்பு கதவைத் திறந்ததும், அதிகாரிகள் சூழ்ந்தனர். காவலர்கள் சல்யூட் வைத்தனர்.  ‘கோவிந்தராஜ்!' என்றேன்... ஒரே நொடியில் அவர் நான் சொல்லியிருந்ததுபோல் சிலை அருகே சென்று பீடத்தின் மீது தாவிஏறி நின்றுகொள்ள, நானும் பீடத்தின்மீது குதித்து மாலை மற்றும் தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தேன். பின்பு, தாவிக் குதித்து அவரது இரு தோள்கள் மீதும் எனது கால்களை வைத்து நின்று அம்பேத்கர் சிலை மீதிருந்து அந்த அவமான சின்னத்தை கழற்றி வீசினேன். தண்ணீர் பாட்டிலைத் திறந்து சிலை மீது ஊற்றிக் குளிப்பாட்டிவிட்டு, நான் கொண்டுபோயிருந்த ரோஜா மாலையை அணிவித்தேன்.

இவையனைத்தும் ஏழெட்டு நொடிகளுக்குள் நடந்துமுடிந்துவிட்டன. யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு. கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நொடி திகைத்துப் போயிருந்தார்கள். அந்த கலவர சூழலில் ஒரு பூ பூத்ததுபோல் யாரோ ஒருவர் முதலில் கைத்தட்டத் தொடங்கினார். அடுத்த நொடியில் அங்கிருந்த ஒட்டுமொத்த மக்கள் திரளும் ஓங்கிக் கரவொலி எழுப்பினார்கள்.

அதன் பின்னரே நான் கீழே இறங்கினேன்.

சட்டம் ஒழுங்குப் பிரச்னையை தீர்ப்பதில் இருக்கும் அடிப்படை விஷயமே ஒரு பிரச்னையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் தூண்டுகோலை (Object curiosity) களைவதாகும். அதன் அடிப்படையில் நான் மேற்கொண்ட அச்செயல், உடனடியாக மக்களிடையே அழுத்தத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தைக்கு வந்தனர், எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினர். வழக்கமாக நடக்கவேண்டிய தடியடி, பலப்பிரயோகங்கள் ஏதும் நடத்தப்படாமல் தீர்வுகண்டோம்.

உடனடியாக குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்தோம். இதற்கிடையில் மருத்துவர் ராமதாஸ் மறுநாளே குற்றவாளிகளைப் பிடிக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையார் வந்து பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

பிறகு தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி முடிந்தது. குற்றவாளிகள் ஒரு மாதத்தில் பிடிபட்டதோடும் பிரச்னை முடிவுக்கு வந்தது.

சம்பவம் நடந்த விழுப்புரம் மாவட்டத்தில் எந்த வித அசம்பாவிதங்கள் இல்லாமல் சமாளித்தோம்.ஆனால் பிற மாவட்டங்களில் குறிப்பாக நாகை, கடலூர் மாவட்டங்களில் கலவரத்தை அடக்க தடியடி நடத்தப்பட்டன. நாகையில் துப்பாக்கிச் சூடே நடத்தவேண்டி இருந்ததாக எனக்கு நினைவு.இருப்பினும் சம்பவம் நடந்த மாவட்டத்தில்  சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இல்லை. எனக்கு இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்துவிட்டது! துப்பாக்கியைவிட சமயோசிதம் பல பிரச்சனைகளைத்தடுக்கும்.

மே, 2023 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com