
வாசித்த நல்ல புத்தகங்கள் நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும். அப்படியொரு புத்தகத்தின் தாக்கத்திலிருந்துதான் இந்த நூலகத்திற்கான சிந்தனை துளிர்விட்டது!” என்கிறார் ’ஞானாலயா’ எனும் தமிழகத்தின் மிகப்பெரிய தனியார் ஆய்வு நூலகத்தை புதுக்கோட்டையில் நடத்திவரும் கிருஷ்ணமூர்த்தி (வயது - 84).
இரண்டு அடுக்கில் ஒரு தனி கட்டடமும், தான் வசிக்கும் இடத்தின் மேல் தளமுமாக மொத்தம் மூன்று தளங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல் வனத்தை தனது காதல் மனைவி டோரதியுடன் சேர்ந்து பாத்துகாத்து வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியை அந்திமழை இதழுக்காக சந்தித்த சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நூல்களை சுமந்து நிற்கும் இந்த நூலகத்தை உருவாக்கும் ஆசை உங்களுக்கு எப்படி வந்தது?
தாத்தா, அப்பா எல்லோரும் நன்கு படித்தவர்கள். எங்கள் வீட்டில் 12 குழந்தைகள். ஒன்பது பேர் நலமாக வளர்ந்தோம். ஆளுக்கொரு துறையில் கால் பதித்து, சாதனை செய்ய வேண்டும் என ஆசைப்பட்ட அப்பா, என்னை 1962இல் கணிதம் படிக்க வைத்தார். அப்போதெல்லாம் கணிதம் முடித்தவர்களுக்கு வங்கிப் பணியில் நல்ல வாய்ப்புகள் தேடிவந்தன. எனக்கு அவற்றின் மீது பெரியளவுக்கு நாட்டம் இல்லை. நாம் படித்த புத்தகங்கள் குறித்து யாருக்கேனும் சொன்னால்தான் மனநிறைவாக இருக்கும் என முடிவெடுத்து, ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் கல்லூரி படிக்கும் சமயத்தில் சென்னை மூர் மார்க்கெட்டுக்கு அடுத்து, திருச்சியில் தான் பழைய புத்தகக் கடைகள் அதிகம். நாலணா, எட்டணாவிற்கே மிக நல்ல பழைய புத்தகங்கள் கிடைக்கும். அப்படித்தான் பாரதியின் ‘சுதேச கீதங்கள்’புத்தகத்தை வாங்கினேன். அதில், 13ஆம் பக்கத்தில் இருந்து 17ஆம் பக்கம் வரை மதுரைப் புலவர் முத்துக்குமரனார் எழுதிய ‘என் மகன்’ என்ற 43 கண்ணிகள் கொண்ட ஒரு பாடலைப் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் தந்தையாரிடம் இது குறித்து கேட்டதற்கு, “பாரதி தன் கவிதைகளை வெளியிடுவதற்கு முன்னர், நாட்டுப்பற்றையும் மொழிப் பற்றையும் ஊட்டக்கூடிய பாடல்கள் எழுதியிருந்தால் தனக்கு அனுப்பும்படி மக்களிடம் கேட்டிருந்தார். அப்படி வந்த பாடல்களை அவரே தொகுத்து, 1908இல் வெளியிட்டார். அந்த முதல் பதிப்பில் மட்டும் தான் முத்துக்குமரனாரின் பாடல் இடம்பெற்றிருந்தது. இரண்டாம் பதிப்பில் மற்றவர்களின் பாடலை வெளியிடவில்லை. தன்னுடைய பாடல்களை மட்டும் வெளியிட்டார்” என்ற முக்கியமான தகவலை சொன்னார். அந்த நூலை ஒரு ரூபாய்க்கு வாங்கினேன். அதற்கு பின் வந்த எந்த பதிப்பிலும் முதற்பதிப்பில் இடம்பெற்றிருந்த மற்ற பாடல்கள் குறித்த ஒரு குறிப்புக் கூட இல்லை. அப்போதுதான் முதல் பதிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து புத்தகங்களைத் தேடித் தொகுக்கத் தொடங்கினேன்.
இந்த நூலகத்திற்கு ஞானாலயா என பெயரிட காரணம்?
1990இல் தான் இதற்கு ஞானாலயா என பெயர் சூட்டினேன். அதற்குமுன்னர் என் தாயார் பெயரில் “மீனாட்சி நூல் நிலையம்” என்று அழைத்து வந்தேன். ஆனால், எல்லோருக்கும் பொதுவானதாகவும், மனிதனை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என கருதி ஞானாலயா பெயரை வைத்தேன். 3000 புத்தகங்களோடு தொடங்கிய இந்த நூலகத்தில் இப்போது ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. அதெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்துதான் நல்ல ஒளியும், காற்றோட்டமும் இருக்குமாறு கட்டத்தை கிழக்கு நோக்கி வாசல் வைத்து கட்டினோம்.
இவ்வளவு சிறப்பாக இந்த நூல்களைத் தொகுத்துப் பராமரிக்க உங்கள் இணையரும் ஆர்வமாக இருக்கிறாரே…?
டோரதி என்னை விட வேகமாக வாசிக்கக் கூடியவர். அவர் ஒரு கவிஞர். கணையாழியில் கவிதை எழுதியிருக்கிறார். தாகூர் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். நூல்களை நானும், அவரும் சேர்த்து தான் பைண்டிங் செய்வோம்.
இந்த நூலகத்தில் என்னென்ன வகையான நூல்கள் உள்ளன?
இந்திய அச்சுப் புத்தகங்களோட வரலாறு ஏறத்தாழ 190 வருடம் என்றாலும், 1860-லிருந்துதான் நிறைய புத்தகங்கள் வரத்தொடங்கின. இதுவரை வந்துள்ள பத்திரிகைகள், தினசரிகள், வார, மாத இதழ்கள் என பலவற்றை சேகரித்து வைத்துள்ளேன்.
முன்னரே சொன்னதுபோல், நான் கல்லூரி படிக்கும் காலத்திலேயே புத்தகங்கள் சேகரிக்க தொடங்கி விட்டேன். மேக்மில்லன் வெளியிட்ட பச்சை அட்டையுடன் கூடிய தாகூரின் 24 புத்தகங்களை திருச்சி சுப்பையா செட்டியார் எனும் பழைய புத்தக விற்பனையாளரிடம் இருபது ரூபாய்க்கு வாங்கினேன். பழைய புத்தகக் கடைகளில் உலகப் புகழ் பெற்ற நூல்களை இரண்டு மூன்று ரூபாய்க்கு வாங்க முடியும். ஆண்டு மலர்கள், நினைவு மலர்கள், வரலாறு, தத்துவம், பிற மொழி படைப்புகள், இலக்கியங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. 1877 உவேசா வெளியிட்ட சீவகசிந்தாமணி முதல் பதிப்பு, ஜி. யு போப் 1885 இல் மொழிபெயர்த்த திருக்குறள் முதல் பதிப்பு என போன நூற்றாண்டில் வெளிவந்த பல முதல் பதிப்புகள் இங்கு இருக்கும். சங்க இலக்கியத்தில் முடிந்தவரை அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்.
இவ்வளவு பழைய நூல்களை எப்படி பராமரிக்கிறீர்கள்?
முன்பு ஐந்து பணியாளர்கள் இருந்தார்கள். இப்போதும் ஒரு பணியாளர் தினமும் தூசி நீக்கி, அடுக்கி வைக்கிறார். நானே ஆண்டுக்கு ஒரு முறை சில புத்தகங்களை கழித்துக் கொண்டும் இருக்கிறேன். கரையான் ஏறாது இருக்க கட்டடங்களுக்கு முறைப்படி இன்ஜெக்ட் செய்கிறோம்.
இங்கு பெருமளவு பெரியார், காந்தி, பாரதியார் நூல் தொகுதிகள் அதிக அளவில் காணப்படுகின்றனவே?
என்னுடைய இளமைக் காலத்தில் பெரியார், அண்ணா, ம.பொ.சி பேச்சைக் கேட்டு வளர்ந்தேன். “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் இயற்றல் வேண்டும், வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும், கவிப்பெருக்கும் பாய பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிப் பெற்று பதவி கொள்வார்” என்ற பாரதியின் கனவை நனவாக்க வேண்டும் என்ற வேகமும், வெறியும் தான் என்னை இந்த நூலகத்தை நடத்த உந்தியது.
இந்த நூலகத்தால் பயனடைந்தோர் பற்றி ஏதேனும் சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
வெளிநாட்டு அறிஞர்கள் பலரும் ஆய்வுகாக இங்கு வந்திருக்கிறார்கள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேன் (69) என்ற பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை வாரப்பூரில் டெரகோட்டா சிற்பம் கற்க வந்தார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஊதியத்தோடு இங்கு ஆறேழு மாதங்கள் தங்கியிருந்து குதிரை சிற்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார். அவருக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் மு.அருணாசலம் பேசிய சொற்பொழிவு நூல் உதவியாக இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு, நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். அவருக்கு இந்த நூலகம் உதவியாக இருந்தது.
மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஹேல், ராபின்சன் என்ற இருவர் இங்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் 150 பேராவது பிஎச்.டி, எம்.பில். இங்கு வந்து முடித்திருக்கிறார்கள். இங்கு பயன் பெற்றவர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ‘தேடலில் தெரிந்த திசைகள்’என்ற பெயரில் மலராக கொண்டுவந்தோம்.
இன்றைய வாசிப்பு, பொதுவான கற்றல் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?
தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்ட அளவுக்கு, இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள யாரும் முன்வருவதில்லை. தமிழும், ஆங்கிலமும் சோறு போடுமா எனக் கேட்கும் பெற்றோர்கள் தான் அதிகம். இது உலகளாவிய போக்காக மாறிவிட்டது. சர்வதேச அளவில் இந்த நிலை உருவாகிவிட்டது. தொழில்துறை உற்பத்தி, விஞ்ஞான கருவிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் முன்னிலையில் இருக்கிறது. இதெல்லாம் தேவைதான். ஆனால், மனிதன் இலக்கியத்தினால் தானே இளைப்பாற முடியும்.
இன்றைய மாணவர்களுக்கு நூல்கள் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?
பொருளீட்டுவதற்கான திறமையை வளர்க்கும் இன்றைய கல்விச் சூழல் மனித மாண்புகளை உருவாக்கும் கல்வியாகவும் மாற வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவற்றை கவனிக்கும் ஆற்றலை வளர்க்க வேண்டும். பாடப் புத்தகச் சுமையால் பிற புத்தகங்களைக் கண்டாலே மாணவர் அயர்ந்து ஒதுக்கும்படி இல்லாது வாசிப்பின் சுவையை மாணவர்கள் உணரும்படி இருக்க வேண்டும்.