இது தாண்டா கம்பேக்!

இது தாண்டா கம்பேக்!
Published on

கம் பேக் பற்றி கட்டுரை எழுத வேண்டும் என்றவுடனேயே என் நினைவுக்கு வந்தவர் ஒருவர் தான். கம் பேக் என்றால் அப்படி இருக்க வேண்டும். ஏழை, எளியவர் ஒருவர் சிரமப்பட்டு முன்னேறினார், வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கையில் ஒரு தடங்கல் வந்து விட்டது, அதை மீறி ஒருவர் எப்படி ஜெயித்தார் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் கம் பேக் அல்ல. நான் சொல்லப்போகும் கம்பேக் ஒரு காவியத்தன்மை வாய்ந்தது. காவிய சோகத்தின் உச்சத்திற்குச் சென்று அதன் பிறகு பவுன்ஸ் பேக் ஆகி தெறிக்கவிட்டவரைப் பற்றி.

 தரைத்தளத்தில் தடுக்கி விழுவது, சின்ன உயரத்தில் இருந்து விழுந்து மீண்டு எழுவது எல்லாம் சாதாரணம். உச்சாணிக்கொம்புக்குச் சென்று அதள பாதாளத்தில் விழுந்து மீண்டு எழுந்து வருவதற்குத்தான் கொடூர ஸ்டெமினா வேண்டும். நான் சொல்லும் ஸ்டெமினா நெஞ்சுரம்.

 இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், 10 இல் இருந்து வழுக்கி பூஜ்ஜியத்திற்கு வந்து மீண்டும் 10 ஐ தாண்டுவது பெரிய விஷயம் அல்ல. அதே போல பூஜ்ஜியத்திலேயே அமர்ந்துகொண்டு புலம்பிக்கொண்டிருப்பதற்கும் மரியாதை இல்லை. கோடிகளில் இருந்து வழுக்கி விழுந்து  பூஜ்யத்துக்கு வந்து மீண்டும் பயணம் செய்து அதே கோடியைத் தாண்டுவதற்கு வலுவான நெஞ்சுறுதி வேண்டும்.

 நான் சொல்லும் நபர் மர்மமான நபர் எல்லாம் இல்லை. இந்தியா முழுக்க ஒவ்வொருவருக்கும் தெரிந்தவர்தான். அவரின் முதல் சினிமா முயற்சிகளின் போது ஒதுக்கப்படுகிறார். உயரமாக இருக்கிறார், குரல் ஒரு மாதிரி கொரகொரவென ஆழத்தில் கிடக்கிறது, ஒரு வழக்கமான ஹீரோவுக்கான முகமோ, பர்ஸ்னாலிட்டியோ இல்லை என்ற விமர்சனங்களுடன் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதை எல்லாம் தாண்டி 1969 இல் முதல் படம் நடிக்கிறார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான தேசிய விருது வாங்குகிறார். அடுத்த நான்கு வருடங்களிலேயே கோபக்கார இந்திய இளைஞன் என்ற அடையாளத்தோடு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆகிறார்.

 இதன்பிறகு அவர் பெயரைச் சொல்லவும் வேண்டுமா? கட்டுரையில்  இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டால், அடுத்து , ‘ஆம் அவர்தான்’ என்று எழுதி அதன்பின்பு அவர் பெயரை எழுதி விடுவதுதான் மரபு. ஒரு மாஸ் ஆன கம் பேக் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும்போது மரபாவது மயிர்க்கால்களாவது?

 அதன்பின்பு திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லை. தொடர்ச்சியாக 1982 வரை ஏழு வருடங்கள் வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சிதான். ஷோலே உட்பட எல்லாப்படங்களும் அதிரி புதிரி ஹிட். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஆகிறார். அதையும் தாண்டி இந்தியாவின் ஐகான் என்னும் நிலையை அடைகிறார்.

 இந்த காலகட்டத்தில் கூலி ஷூட்டிங்கின் போது ஒரு ஆக்ஸிடண்ட் நடக்கிறது. உடலில் கன்னா பின்னாவென அடிபடுகிறது. நிறைய ஆப்பரேஷன்கள் செய்யப்படுகின்றன. அப்போது அவருக்காக இந்தியாவே பிரார்த்தனை செய்கிறது. நேஷனல் மீடியாவில் அவருடைய உடல்நிலை அப்டேடுகள் பிராதான இடம் பிடிக்கிறது.

 இப்போது ஐயா தன் வாழ்நாள் உச்சத்தில் இருக்கிறார்.அந்த விபத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

1984 இல் திடீரென முடிவெடுத்து அரசியலில் இறங்குகிறார். அலஹாபாத் தொகுதியில் நிறைய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். ராஜீவ் காந்திக்கு நெருக்கமான நண்பர் ஆகிறார். போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பிரச்சனையால் அரசியலில் இருந்து விலகுகிறார்.

 வாழ்க்கை ஒரே மாதிரியா போய்க்கொண்டு இருக்கும்?

 1988 முதல் ஐயா நடிக்கும் அனைத்துப் படங்களும் தொடர்ந்து ஊத்திக்கொள்கின்றன. சில படங்கள் மரண அடி வாங்குகின்றன. ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கை தனது  அட்டையில்  “ஃபினிஷ்ட்” என்று தலைப்பிட்டு கவர் ஸ்டோரி போடுகிறது.

 சில நேரங்களில் நடக்கும் எதுவும் நம் கண்ட்ரோலில் இல்லாதது மாதிரி இருக்கும். ஆனால் நுட்பமாக கவனித்துப் பார்த்தால் நாம் நமக்கே தெரியாமல் செய்த சின்னச் சின்னத் தவறுகள்தான்  திரண்டு நமக்கெதிராக ஆட்டம் காட்டிக்கொண்டு இருக்கும். அதுபோல இந்திய சூப்பர் ஸ்டார் என்ற ஹோதாவில் ஒழுங்காக கதை கேட்காமல் இருந்திருக்கலாம். நல்ல ப்ராஜக்டுகளை கவனமாக தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம். மாறி வரும் மக்களின் ரசனையைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். சரியான இயக்குநரைத் தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கலாம். இப்படி எத்தனையோ “லாம்” கள் இருக்கலாம். ஆனால் விளைவு ? ஒரு இந்திய சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவரின் கதை முடிந்தது என முடித்து வைத்து விட்டார்கள்.

 1992 இல் குதா கவா தான் என் கடைசி படம் என அறிவித்து நடிக்கிறார். அதுவும் பெரிய அளவில் போகவில்லை. சில வருடங்கள் தேமே என்றிருக்கிறார். இந்த இடம் மிகவும் முக்கியமானது. இந்திய அளவில் உச்ச ஸ்டார் அந்தஸ்தை அடைந்தபின்பு ஏற்பட்ட கொடும் தோல்வி. இப்போது வயது 50. 50 வயதில் 3 முதல் நான்கு வருடங்கள் “சும்மா” இருந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் மனதில் என்னென்ன போராட்டங்கள் நடந்திருக்கும்?

 வெற்றிகரமான ஸ்டார் ஆக இருந்தபோது எண்ணற்ற போன்கால்கள் வந்திருக்கும். சந்திக்க ஆட்கள் தவம் கிடந்திருப்பார்கள். மீடியாவில் எப்போதும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கும். ஒவ்வொரு படத்தின்  ரிஸல்ட், பாக்ஸ் ஆஃபீஸ் கலக்‌ஷன் என வண்ணமயமாக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை முட்டுச் சுவரில் முட்டி நிற்கிறது. இப்போது சீந்தக் கூட ஆளில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் ஐயாவை மறந்தே விட்டது. மீண்டெழுவதற்குத் தேவையான இளம் வயதும் இல்லை. அடப்போங்கடா என ரிட்டயர்மெண்ட் அறிவிக்கும் வயதும் இல்லை. அந்த உயரமான உருவம் கூனிக்குருகி அமர்ந்திருந்த காலம் இது.

 சாதாரண ஆட்களுக்கும் ஐகான்களுக்கும் யாராலும் கவனிக்கபடாத பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது. இதில் நான் சாதாரண ஆட்கள் எனக் குறிப்பிடுவது பொருளாதாரம் சார்ந்தல்ல. பர்ஸ்னாலிட்டி சார்ந்து. நான் சொல்லும் இந்த சாதாரண ரக ஆட்களில் 100 கோடி கோடீஸ்வரனும் அடங்குவான். இவ்வகை சாதாரண ஆட்களுக்குப் பிரச்சனை, சிக்கல் எனில் எவரிடமாவது உதவி கேட்டுப் போய் நின்றுவிடுவார்கள் அல்லது ஆலோசனையாவது கேட்டுப் பெறுவார்கள். நாட்டின் மிக உயர்ந்த ஐகான்களுக்கு ஒரு பிரச்சனை அல்லது சிக்கல் எனில் எவரிடமும் போய்  உதவி கேட்டு நிற்க முடியாது. அப்படி அவர்கள் உதவி கேட்பதை எவராலும் நம்பவும் முடியாது. அப்படி உதவி கேட்டால், கேட்கும் அந்தத் தருணத்திலேயே அந்த ஐகான் உடைந்து நொறுங்கும் அந்தக் கண்றாவியைக் காண நேரிடும்.

 ஒரு நாடே சூப்பர் ஸ்டார் என நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஒரு மாபெரும் ஐகான் எப்படி ஒருவரிடம் போய் உதவி கேட்டு நிற்க முடியும். தன் மீதான,நாட்டு மக்களின் நம்பிக்கையை தானே குலைக்க முடியுமா?

 செத்தாலும் சாவேனே தவிர நாறப்பயலுங்களா உங்க கிட்ட எல்லாம் ஒரு பைசா கேட்க மாட்டேன், என் கஷ்டத்தை பகிர்ந்துக்க மாட்டேன் என பாரதி போய்ச் சேர்ந்தது இப்படித்தான்.

 இங்கே நான் சொல்லும் சிக்கல்களோ சிரமங்களோ அவருக்கு பொருளாதாரம் சார்ந்து அல்ல. தன் இடம் மற்றும்  தன் வெற்றி சார்ந்தும், தன் அடையாளம் சார்ந்தும்.

 நிச்சயம் மனதளவில் அவர் நரக வேதனை அனுபவித்து இருப்பார். அந்தக் காலத்தில் வந்து ஓடிக்கொண்டிருந்த சூப்பர் ஹிட் படங்களை வெறுமையாகப் பார்த்தபடி அமர்ந்திருந்து இருப்பார். அந்தப் படங்களிலும் , எடுக்கப்படாத பல கற்பனைப் படங்களிலும் மனதளவில் நடித்துப் பார்த்தபடி இருந்திருப்பார். தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படங்களைப் பார்த்து கண்களில் நீர் கோர்க்க தற்காலிக மகிழ்ச்சி அடைந்திருப்பார். நள்ளிரவில் தூக்கம் வராமல் தான் வாங்கிய கோப்பைகளைத் தடவிப் பார்த்திருப்பார். தன்னுடன் நடித்த நடிகைகளின் முகங்களை மனதில் கொண்டு வந்து விம்மியபடி அதிகாலைத் தூக்கத்தில் அமிழ்ந்திருப்பார்.

 ஒரு காலகட்டம் அப்படியேவா போகும்? விட்டால் அப்படியேதான் போகும். இவருக்கு அப்படியே விட மனமில்லை. மூன்று கடினமான வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து ஏபிசிஎல் என்ற கம்பனியை ஆரம்பிக்கிறார். 95 - 96 கால கட்டம்.

 தன்னுடைய சொந்தப்பணம் மற்றும் வங்கிக் கடன் மூலம் ஆரம்பிக்கிறார். வேறு சிலரும் பணம் போடுகிறார்கள். சும்மா ஒரு குடும்ப பிஸினஸ் போல ஆரம்பிக்கவில்லை. பக்காவான கார்பரேட் கம்பனியாக ஆரம்பிக்கிறார். தான் பணம் போட்டுவிட்டோமே என தானே தானைத்தலைவராகவில்லை. சஞ்சீவ் குப்தா என்பவரை ஹிந்துஸ்தான் யூனி லிவர் நிறுவனத்தில் இருந்து அழைத்து வந்து சி ஈ ஓ ஆக்குகிறார்.

 ஏ பி சி எல்லை மிகவும் ஃப்யூச்சரிஸ்டிக்கான கம்பனியாக உருவாக்குகிறார். முன்னுதாரணமே இல்லாத நிறுவனமாக அறிமுகப்படுத்துகிறார். வழக்கமான மீடியா ஹவுஸ் அல்லது ப்ரொடக்‌ஷன் கம்பனி போல அல்லாமல், நடிக நடிகைகளை உருவாக்குவது, சினிமா எடுப்பது, ஈவண்டுகள் நடத்துவது, இசை , டெலிவிஷன்  என பல துறை நிறுவனமாக வடிவமைக்கிறார்.

 ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறி வளர ஆரம்பிக்கிறது. சில திரைப்படங்கள் வருகின்றன. தமிழில் வந்த உல்லாசமும் அதில் ஒன்று.

 1996 இல் பெங்களூரில்  மிஸ் வேர்ல்ட் போட்டியை இவரின் நிறுவனம் ஏற்று நடத்துகிறது. பல கோடி இன்வெஸ்ட்மெண்ட். அழகிப் போட்டிக்கு எதிராக பெங்களூரில் போரட்டம் வெடிக்கிறது. ஸ்பான்ஸர்கள் பதுங்குகிறார்கள். செலவு எகிறுகிறது. கடைசியில் பல கோடி நஷ்டம் ஆகிறது.

 இந்தியாவில் 2000க்கு பிறகுதான் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இவர் முன்னுதாரணமான நிறுவனம் , மிஸ் வேர்ல்ட் போன்றவற்றை எல்லாம் நடத்தித்  துன்புறுகிறார். நஷ்டமடைகிறார்.

 இதில் அவர் தவறு ஏதுமில்லை. இதையே அவர் 2000 க்கு பிறகு செய்திருந்தால் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும். கொஞ்சம் முன்கூட்டியே செய்து விட்டார். FMCG இல் அனுபவம் வாய்ந்த சஞ்சீவ் குப்தாவை சீ ஈ ஓ ஆக போட்டதும் ஒரு தவறு என்பார்கள் பலர். தோல்வியடைந்த பின் காரணம் சொல்ல ஓராயிரம் பேர்கள்.

 இதைப்போன்ற தருணங்களில், சரி நமக்குத் தெரிஞ்ச தொழிலுக்கே போகலாம் என்ற எண்ணம் பலருக்கும் வரும். ஐயாவுக்கும் வருகிறது. 1997இல் ம்ருத்யுதத்தா என்ற படத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடுகிறது. “தி கிங் ரிட்டர்ன்ஸ்” என்ற விளம்பரங்கள் தூள் பறக்கின்றன. படம் மரண ஃப்ளாப்.

 அட என்னடா இது  சனியன் என இருக்கையில் 1999 இல் ஏ பி சி எல் மொத்தமாக ஊத்தி மூடப்படுகிறது. கிட்டத்தட்ட 100 கோடி அளவில் நஷ்டம் எனக் கூறப்படுகிறது. நிறுவனம் திவால் ஆகிறது.

 ஐயா இந்த நிறுவனத்தில் தான் இதுவரை சம்பாதித்த பணத்தை போட்டதெல்லாம் காலி. நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் , நிறுவனங்கள் திவால் ஆனால் ஓனரை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம் ஐயா பெரும்பாலான கடன்களுக்கு சொந்த கியாரண்டி கொடுத்திருந்தார். தனது சொத்துக்களை அடமானம் வைத்திருந்தார். அதனால் ஐயா கிட்டத் தட்ட நடுதெருவுக்கு வந்தார். அந்த நிறுவனத்துக்கு எதிராக கிட்டத்தட்ட 55 வழக்குகள் பதியப்பட்டன.

 இந்தக் காலகட்டத்தில் திரு. திருபாய் அம்பானி இவருக்கு பொருளாதாரீதியாக உதவ முன்வந்ததாகச் சொல்வார்கள். ஆனால் நம்மாளு வேண்டாம் என மறுத்துவிட்டார். யாரும் எனக்கு பொருளாதாரரீதியாக உதவி செய்ய வேண்டாம் என நன்றியுடன் மறுத்து விட்டார்.

 முதல் தோல்வி ஒரு நடிகராக, ஒரு ஐகானாக. அடுத்தத் தோல்வி இன்னும் பெரிய அடி. பொருளாதார ரீதியாகவும் அடி வாங்கி சொத்துக்கள் எல்லாம் இழந்து, சேர்த்து வைத்த பணம் எல்லாம் இழந்து கோடிக்கணக்கில் கடனாளி ஆகி நின்ற சோகம்.

 இந்த நிறுவனம் படுத்தாலும், இந்த நிறுவனத்தின் சீ ஈ ஓ அடுத்து கோக்கோ கோலோ சீ இ ஓ ஆகி விட்டார் என்பது தனிக்கதை.

 நம்ம தம்பிக்கு வயது 57 ஆகி விட்டது.

 கையில் பணம் இல்லை,

நிறுவனம் இல்லை,

கரியர் இல்லை,

எவரும் சினிமா வாய்ப்பும் கொடுக்கவில்லை.

100 கோடி அளவுக்குக் கடனாளி.

 ஒருகாலத்தில் இந்திய சூப்பர் ஸ்டாராக இருந்தவர், இந்தியா முழுக்க…

ஏன் உலக அளவில் அறிந்தவர், இந்தியப் பிரதமர், பெரும் தொழிலதிபர்கள் உடன் எல்லாம் நெருக்கமாக இருந்தவர் செய்வதற்கு ஏதுமில்லாமல்  நடுத்தெருவில் நிற்கிறார்.

 ஒரு இந்திய ஐகான் நடுத்தெருவில் நிற்கிறது.

 ஒருநாள் காலையில் அதுவரை  மண்டையில் சேகாரம் ஆகியிருந்த எல்லாவற்றையும் அழித்து விட்டு யாஷ் சோப்ரா வீட்டுக்கு போய் நிற்கிறார்.

 “எனக்கு எதாச்சும் வேல இருந்தா குடுங்க” என்கிறார்.

 இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஒரு 57 வயது உயரமான இந்திய ஐகான் காலை நேரத்தில் நெடுஞ்சாண்கிடையாக நேர்க்குத்தாக  நின்றுகொண்டு, சுற்றி வளைக்காமல் நேரடியாக “எனக்கு வேலை குடுங்க” என்று கேட்பதை. 

 யாஷ் சோப்ரா பதறிப்போய் மொஹாபத்தினில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்.

 அப்போது , கோன் பனேகா க்ரோர்பதியை தொகுத்து வழங்க ஒரு வாய்ப்பு வருகிறது. அப்போதெல்லாம், இப்போது மாதிரி அல்ல. சினிமா ஸ்டார்கள் டெலிவிஷனில் தோன்றினால் கேவலம், அசிங்கம் என்றிருந்த காலம். நம்மாள் துணிந்து இறங்குகிறார். இந்தியாவின் அனைவர் வீட்டு வரவேற்பரைக்குள்ளும் செல்கிறார்.

 ஷோ ஹிட். மொஹாப்பத்தீனும் ஹிட். மொஹாபத்தீனில் ஐயா ஹீரோ அல்ல. சப்போர்டிங் ஆக்டர். கோன் பனேகா க்ரோர்பதி, மொஹாப்பத்தீன் என இரண்டிலும் துணிச்சலான  மாற்று முடிவுகளை துணிந்து எடுத்தார். அவர் அப்போது எடுத்த முடிவுதான் இன்று தற்போதைய திரைப் பிரபலங்கள் பிக் பாஸை  தொகுத்து வழங்கக்  காரணம்.

 அதன்பின்பு இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கிறது.

 கோன் பனேகா க்ரோர்பதியின் வெற்றி நிறைய விளம்பரப்பட வாய்ப்புகளைக் கொண்டு வந்து குவிக்கிறது. அனைத்து விளம்பரப்படங்களிலும் நடிக்கிறார். நான் கூட அப்போது ட்விட்டரில் ஒரு ட்வீட் எழுதினேன். “அமிதாப்பின் ஆண்மையை கணிக்க இவர்கள் யார்? அவரை ஏன் காண்டம் விளம்பரத்தில் நடிக்க வைக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று. அந்த அளவுக்கு டெலிவிஷனை ஆன் செய்தாலே அமிதாப் தோன்றும் அளவுக்கு ஆனார்.

 60 வயதுக்கு பின் கபி குஷி கபி கம் , சர்கார் , சீனி கம் , ப்ளாக் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததோடு அல்லாமல் தி லாஸ்ட் லியர் போன்ற நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தும் படங்களிலும் நடிக்கிறார்.

 தானே மீண்டும் சம்பாதித்து அனைத்துக் கடன்களையும் அடைக்கிறார்.

 தன்னுடைய 30 களில் பெற்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு மேலே மேலே உயர்கிறார். அவருடைய பெரும் வெற்றி அவருடைய இரண்டு மாபெரும் தோல்விகளுக்குப் பிறகுதான் வருகிறது.

 தம்பிக்கு இப்போது வயது 83. கல்கி என்ற பேன் இந்தியா  படத்தில் நடித்திருக்கிறார்.

 வருடம் 2000 த்தில்  தன்னுடைய 57 வயதில் தொடங்கிய கோன் பனேகா க்ரோர்பதியின் சீஸன் 18 வரப்போகிறது. அதே தம்பிதான் இப்போது தன்னுடைய 83 வது வயதில் புத்துணர்ச்சியுடன் தொகுத்து வழங்கப்போகிறார்.

 வாழ்க்கை நம்மை கேப் விடாமல் அடித்தாலும், எந்த அதள பாதாளத்துக்குத் தள்ளினாலும், நாம் கொஞ்சம் கேப் விட்டு அடித்தால் நொறுக்கி எடுத்து விடலாம் என்று காட்டியிருக்கிறார் இந்த உயரமான ஆசாமி.

 கம் பேக் எனில் வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல.

 பழைய தவறுகளைச் செய்யாமை, தன்னை மாற்றிக்கொள்ளுதல், புதிதாகச் சிந்தித்தல், ஓப்பன் மைண்டாக இருத்தல், புதியவற்றைத்  திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டு முயன்று பார்த்தால், புதிதாக கற்றுக்கொள்தல், மேம்படுதல், தானே வேறு ஒரு ஆளுமையாக , வேறு ஒரு ஐகானாக மாறுதல் என பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்த அமிதாப் ஜீ யின் கம்பேக் தான் தி ரியல் கம்பேக்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com