ஏஞ்சலா மெர்கெல்!

ஐரோப்பிய தேவதை!
ஏஞ்சலா மெர்கெல்!
Published on

கடந்த கால்நூற்றாண்டில் உலகில் பலம் வாய்ந்த பெண் தலைவராக யார் இருந்தார்கள் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஏஞ்சலா மெர்கல் என்று சொல்லிவிடலாம்!

2005-இல் இருந்து 2021 வரை ஜெர்மனியின் அதிபராக ஆண்டவர்! கிறித்துவ ஜனநாயக ஒன்றியம் தான் இவரது கட்சியின் பெயர்! குவாண்டம் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று ஆய்வாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மெர்கல், அரசியலில் குதித்தார். கிழக்கு ஜெர்மனியில் செயல்பட்ட இவர், பின்னர் 1990 இல் கிழக்கு- மேற்கு ஜெர்மனிகள் இணைந்தபின்னர் ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிபரான ஹெல்மட் கோல் என்பவரின் நம்பிக்கைக்கு உரியவரான இவர், அமைச்சர் பதவிகள் வகித்துள்ளார். 1998-இல் இவரது கட்சி, தேர்தலில் தோற்று எதிர்க்கட்சியாக அவையில் அமர்ந்தது. அதன் பின்னர் கட்சியின் முதல் பெண் தலைவராக தேர்வானார்!

2005-இல் நடந்த தேர்தலில் இவரது கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்றாலும் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். ஜெர்மனியின் முதல் பெண் அதிபர் ஆனார்!

அதிபர் ஆகி தன் அலுவலகத்துக்கு அவர் சென்ற முதல் நாள் ஒரு சனிக்கிழமை. தனிமையில் அவர் தான் அளிக்க வேண்டிய உரையை வாசித்துப்பார்த்தார்! அவருக்கு தன் மக்களுக்கு தம் அரசு சீர்திருத்தங்களில் நம்பிக்கை உடையது என்று சொல்ல வேண்டி இருந்தது! அப்போதைய பெரும் பிரச்னையாக இருந்தது 4.5 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர் அதைச் சரி செய்யவேண்டி இருந்தது! இதற்கு முன்பு கூட்டணி அரசு ஜெர்மனியில் அமைந்தது 1966-இல் தான்! 40 ஆண்டுகள் கழித்து வேறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகளைச் சேர்த்து ஒரு அரசு! அனைவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும். 1966-இல் கூட்டணி அரசின் துணை அதிபராக இருந்த வில்லி பிராண்ட் ( இவர் பிறகு அதிபர் ஆனார்! நோபல் பரிசும் பெற்றவர்) ஒருமுறை சொன்னார்: நாம் இன்னும் அதிக அளவிலான மக்களாட்சியைப் பெற முயல்வோம் என!. மெர்கல் தன் உரையில் இதைச் சுட்டிக்காட்டி, ‘நாம் இன்னும் அதிகம் சுதந்தரம் பெற முயல்வோம்’ என்று சொன்னார்.

இன்னும் பத்தாண்டுகளில் ஜெர்மனி தன்னுடைய பழைய முதல் மூன்று ஐரோப்பிய நாடுகளில் ஒன்று என்ற இடத்தை அடையவேண்டும் என்பது இலக்கு. ஜெர்மனியின் பட்ஜெட் நிதிநிலைமை அப்போது தள்ளாட்டத்தில் இருந்தது. அதனால் வரிகளை உயர்த்துதல், செல்வ வரி விதித்தல், அரசு அதிகாரிகளின் கிறிஸ்துமஸ் போனசை பாதியாகக் குறைத்தல், போன்றவற்றுக்கு கூட்டணி அமைத்தபோதே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஜெர்மனி நாடாளுமன்றம் 1949க்குப் பிறகு மிகப்பெரிய வரி உயர்வுக்கு இப்போதுதான் அனுமதி அளித்தது! பென்ஷன் வழங்குவதற்கான வயதை 67 ஆக உயர்த்துவது என்பது இன்னொரு சீர்திருத்தம். 2029-இல் இருந்து இது அமலுக்கு வர இருக்கிறது. ஆய்வுத்துறைக்கு ஜிடிபியில் 2.4% ஆக செலவழித்ததை 3%ஆக 2010 வாக்கில் உயர்த்த முடிவெடுத்தது இன்னொரு சீர்திருத்தம்! ஆனால் இந்த இலக்கை 2017-இல் அடைய முடிந்திருக்கிறது!

பெற்றோர் உதவித்தொகை இவரது அரசு ஆரம்பத்தில் கொண்டுவந்த இன்னொரு முக்கியத் திட்டம். குழந்தைப் பேறுக்குப் பிறகு அதைப் பேணிப்பாதுகாப்பதில் பெற்றோருக்கு ஏற்படும் நிதியிழப்பைச் சரிசெய்யும் திட்டமாகும் இது! மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பார்த்துகொள்ள 2,30,000 குழந்தைப் பாதுகாப்பு இல்லங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டன. இது உரிமையாகக் கருதப்பட்டு சில ஆண்டுகளில் இதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. சில மாநிலங்களில் இந்த பாதுகாப்பு இல்லங்களைப் பயன்படுத்த விரும்பாத குடும்பங்களுக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

ஜெர்மன் சமூகத்தில் புலம்பெயர்ந்து வந்த பல்வேறு சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்பதற்காக ஒருமைப்பாடு மாநாடுகள் தொடங்கி நடத்தப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளிலும் உலக நாடுகள் மத்தியிலும் ஏஞ்சலா மெர்கலின் மதிப்பு உயர்ந்தது அவர் மேற்கொண்ட வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளால்தான். 2007இல் ஐரோப்பிய கவுன்சில் தலைவராக பதவி வகித்தார். 2008-இல் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்தார்! 2015-இல் மேற்காசியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஐரோப்பாவுக்குள் புகலிடம் கேட்டுப்புகுந்தார்கள். 11 லட்சம் பேருக்கு அந்த ஆண்டு ஜெர்மனி புகலிடம் அளித்தது! உள்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்தாலும் ‘we can do this’ என்றார் மெர்கல்!

ஜெர்மன் மக்கள் தொடர்ந்து அவர்மீது நம்பிக்கை வைத்தார்கள். நான்குமுறை அவர் அதிபராகத் தேர்வானார். கூட்டணி ஆட்சிதான் நான்கு முறையும்! பின் அவரே அதிபர் போட்டியிலிருந்து தானாக முன்வந்து விலகிக் கொண்டார்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com