அஞ்சாமையால் மீண்டு வந்த அரியணை!

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
Published on

இந்தியப் பிரதமர்களில் மிக உறுதி வாய்ந்த ஒருவர் யார் என்று கேட்டால் தயக்கமில்லாமல் இந்திரா காந்தியைச் சொல்ல முடியும். அஞ்சாமை இந்திராவின் உடைமையடா என்று பாடினாலும் தவறில்லை. தீர்மானமான முடிவு, ஆளுமை, தன்னம்பிக்கை, அபார துணிச்சல் ஆகிய அவரது குணாதிசியங்களே அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றன. அதே சமயத்தில் வீழ்ச்சிக்கும் சோதனைக்கும் அவைதான் காரணிகளாக இருந்தன.

1964 மே 27-ம் தேதி நேரு காலமானார். பின்னர் பிரதமர் பதவியேற்ற லால்பகதூர் சாஸ்திரி 1966 ஜனவரி 10ஆம் காலமானார்.

அதன்பின்னர் மூத்தவராக இருந்த மொரார்ஜி தேசாயுடன் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்திரா காந்தி பிரதமர் வேட்பாளராக தேர்வு பெற்றார்.

ஆட்சியிலும் கட்சியிலும் சர்வ வல்லமை படைத்தவராக தன்னை நிலை நாட்டிக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினார்.

1972 ஆம் ஆண்டில் தான் மக்களவைத் தேர்தல் முறைப்படி நடக்க வேண்டும். ஆனால் அதற்கு ஓராண்டு முன்னரே தேர்தலைச் சந்திக்க இந்திரா முடிவு செய்து அமோக வெற்றியையும் ஈட்டினார்.

வங்கதேசத்தை முன்னிறுத்தி நடந்த இந்தியா- பாக் போரில் 13 நாட்களில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் சரணடைந்தனர். பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய் இந்திராவை துர்க்கையின் அவதாரம் என்று பாராட்டினார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அதாவது 342 இடங்கள் இருந்ததால் சட்ட திருத்தங்களைச் செய்து அதிகாரங்களை குவித்தார். இந்திராவின் அதிகார ஆசை நாடாளுமன்றத்தைத் தாண்டி உச்சநீதிமன்றம் வரை சென்றது மூன்று சீனியர் நீதிபதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஏ.என்.ரேவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தார். இதனால் எதிர்ப்பு அதிகரித்தது

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சி போராட்டம், அகில இந்திய ரயில்வே ஸ்ட்ரைக் ஆகியவை மிகப்பெரிய சவால்கள். ஆனால் இந்திரா காந்தி எதற்கும் அஞ்சவில்லை.

ஆனால் அவருக்கான அச்சுறுத்தல் வேறு வடிவில் வந்தது. 1971-ல் ரேபரேலி தொகுதியில் இந்திராவை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயணன் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தில் வி. ஆர். கிருஷ்ணய்யர் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து இந்திரா பதவி விலகக் கோரி போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மூலம் அரசியலமைப்புச் சட்டம் 352-வது பிரிவின் கீழ் "உள்நாட்டில் நிலவும் அசாதாரண குழப்ப நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக நெருக்கடி நிலை உத்தரவு பிறப்பிக்க வைத்தார். அச்சமயம் நாடே அராஜகத்தில் ஆழ்ந்தது.

17 மாதங்கள் கழித்து எமர்ஜென்சி உத்தரவு வாபஸ் பெறப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்திரா ரேபரேலி தொகுதியில் 55,202 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜ் நாராயணனிடம் தோற்றார். சஞ்சய் காந்தி அமேதியில் தோற்கடிக்கப்பட்டார். ஜனதா ஆட்சி அமைந்தது. அவ்வளவுதான் இந்திராவின் கதை என பலர் நினைத்தார்கள்.

ஆனால் தோற்றாலும் இந்திரா சோர்வடைந்து உட்கார்ந்து விடவில்லை 1977 மே மாதத்தில் பீகார் மாநிலம் பெல்ச்சியில் நடந்த 11 தலித்துகள் படுகொலையை அடுத்து அங்கு தனது பயணத்தை மேற்கொண்டார். மழை காரணமாக சாலைகள் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. அரசாங்கமும் போக்குவரத்துக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்திரா காந்தி பெல்ச்சி கிராமத்தை அடைய யானையின் மீது அமர்ந்து பயணம் செய்தார். மீண்டு எழுவேன் என்பதை அறிவிக்கும் பயணம் அது. சிக்மகளூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

ஷா கமிஷன் முன்பு ஆஜரானவர்கள் அளித்த சாட்சியங்களை ஆதாரமாகக் கொண்டு இந்திராவை கைது செய்ய உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங் முடிவெடுத்தார். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த நடவடிக்கையால் இந்திரா காந்தி கைதாகவில்லை. பல்வேறு உட்கட்சிக் குழப்பங்களால் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.

நிலையான ஆட்சி தரமுடியாத ஜனதா கட்சியினர் பல பிரிவுகளாக பிரிந்து நின்று 1980 மக்களவைத் தேர்தலை சந்தித்தனர். இந்திராவை ஒடுக்க, சிறையில் அடைக்க முயற்சி போன்றவற்றால் இந்திரா மீது மக்கள் அனுதாபம் கொண்டனர். நெருக்கடி நிலை அடக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி கூட இந்திராவுடன் கூட்டணி அமைத்தார். "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக" என்ற கோஷத்தை முன்வைத்தார்.

1971-ஐ விட கூடுதலாக அதாவது 353 இடங்களில் இந்திரா வென்று பிரதமர் ஆனார். வீரம் நிறைந்த போராட்டக் குணமே அவர் மீண்டெழக் காரணமாக இருந்தது.

(கட்டுரையாளர் தி.சிகாமணி, பத்திரிகையாளர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com