அண்ணா அமைத்த கூட்டணி! - 1967

அண்ணா அமைத்த கூட்டணி! - 1967
Published on

இந்திய அளவில் 1967 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக முக்கியமான ஆண்டு. மிகவும் சக்திவாய்ந்த கட்சியாக ஆண்டுவந்த காங்கிரஸ் பல மாநிலங்களில் முறியடிக்கப்பட்ட ஆண்டு. 16 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எட்டு மாநிலங்களில் மட்டுமே ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. கேரளம், ஒடிஷா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மேற்குவங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்களில் பெரிய கட்சியாக மட்டுமே தேர்வாக முடிந்தது. ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை.

தமிழ்நாட்டில் டெல்லி ஆதிக்கத்துக்கு எதிரான கட்சியாக தன்னைக் கட்டமைத்து இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகவும் திராவிட நாடு கேட்டும் நடத்தப்பட்ட கட்சி திமுக. அதன் தலைவர் அண்ணா, காங்கிரஸின் வீழ்ச்சிக்கு வழி கோலினார். அதற்கானதொரு வலிமையான கூட்டணியையும் தேர்தலுக்கு முன்பாக அவர் அமைத்துக்காட்டினார்.

1949-இல் தோன்றிய திமுக 1952-இல் நடந்த முதல் தேர்தலில் போட்டியிட வில்லை. ஆனால் தங்கள் கொள்கைகளை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவு எனக் கூறியது. அதன்படி தங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட சுயேச்சைகளுக்கு மட்டும் ஆதரவு அளித்தனர். 41 பேர் இப்படித் தேர்வானதாகக் கூறப்பட்டது.

1957-இல் நடந்த இரண்டாவது தேர்தலில் திமுக கலந்துகொண்டு 120 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது. மூன்றாவது தேர்தலான 1962-இல் திமுகவுடன் கூட்டணி அமைக்க ராஜாஜியின் சுதந்திரா கட்சி,கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் அது நிறைவேறவில்லை. சிற்சில இடங்களில் இக்கட்சிகளுடன் உடன்பாடு இருந்தது! திமுக 142 இடங்களில் தனித்துப் போட்டியிட்டு 50 இடங்களில் வெற்றி பெற்றது. காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணா தோல்வியைத் தழுவி இருந்தார்.

1967 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது திமுகவின் கொள்கைகளில் மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தன. பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டு இருந்தது. 1962-இல் அண்ணா, மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு திமுக சார்பில் அனுப்பப்பட்டிருந்தார். அங்கிருந்த ஆண்டுகளில் அவருக்குப் புதிய தொடர்புகளும் புரிதல்களும் ஏற்பட்டிருந்தன.

காங்கிரஸ் கட்சியிலோ காமராஜர் முதல்வர் பதவியைத் துறந்து அகில இந்திய தலைவராக டெல்லிக்குச் சென்றிருந்தார். 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் பெரும் காங்கிரஸ் எதிர்ப்பலையை ஊட்டி இருந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக தொகுதி உடன்பாடு செய்துகொள்வதன்மூலம் பெரும்பாலான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறமுடியும் என திமுக உணர்ந்தது. ஆனால் ஆட்சியைப் பிடிக்கமுடியும்; தன்னால் முதலமைச்சர் ஆகமுடியும் என அண்ணா நினைத்தாரா என்று தெரியவில்லை. அவர் தென்சென்னை தொகுதியில் நாடாளுமன்றத்துக்குத் தான் போட்டியிட்டார். சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடவில்லை. தலைவர்கள் தங்களை முகமாக முன்னிறுத்தும் காலம் தமிழ்நாட்டில் அதுவரை வந்திருக்கவில்லை என்றுகூடச் சொல்லலாம்.

முன்னதாக திமுக சில இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தது. அதில் திருச்செங்கோடு நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகும். காங்கிரஸ்- திமுக இடையிலான நேரடிப் போட்டி இங்கே நடந்தது. திமுகவின் பிரிவினைக் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அச்சமயம் அண்ணா உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்தனர். முதலமைச்சரான காமராஜர் தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்திருந்தார். ஆனால் திமுகவின் வேட்பாளர் கந்தப்பன் வெற்றி பெற்றார். திமுகவின் வெற்றி அதன் வளர்ச்சியைக் குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதினர். காமராஜருக்கு இதுபற்றிக் கவலை தெரிவித்து நேரு கடிதம் எழுதினார்.

சித்தூர் தொகுதி இடைத்தேர்தலில் சுதந்தரா கட்சி வேட்பாளர் ரங்காவுக்கு திமுக ஆதரவு தெரிவித்து பணிசெய்தது. அவர் வெற்றியும் பெற்றிருந்தார்.

காங்கிரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என உறுதி கொண்டிருந்த ராஜாஜி, 1962-இல் இருந்தே அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் 1962-இல் அண்ணா சட்டப்பேரவைக்காகப் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து ராஜாஜி பிரச்சாரம் செய்தார். அவர் கலந்துகொண்ட மேடையில் இட நெருக்கடி. அண்ணா நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்தார். ஆச்சாரியார் காலடியில் அண்ணா! என்ற தலைப்புடன் புகைப்படம் வெளியானது! (காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை- ராவ், அந்திமழை வெளியீடு). இத்தேர்தலில் தோற்ற அண்ணாவை மாநிலங்களவைக்கு அனுப்ப ராஜாஜியின் ஆலோசனையே காரணம் என்றும் மூத்த பத்திரிகையாளர் ராவ் குறிப்பிடுகிறார்.

இந்த நட்புணர்வுதான் கொள்கைகளைத் தாண்டிய கூட்டணியாக மாறியது. 1967-இல் திமுக தலைமையில் சுதந்திரா கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிச கட்சி, முஸ்லிம் லீக், தமிழரசுக் கழகம், சங்கதா சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணி உருவானது. தேர்தலையொட்டி சென்னை விருகம்பாக்கத்தில் திமுக மாநாடு நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அதில் கலந்துகொண்டு பேசினார்கள். ராஜாஜி பேசுகையில், ‘படுத்துக்கொண்டே ஜெயிப்போம் என காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டாராம்! படுத்துக்கொண்டிருப்பது நிச்சயம்! ஜெயிப்பது சந்தேகம்!’ என காமராஜரைத் தாக்கியது கவனிக்கப்பட்டது! அதுவரை திமுகவை விமர்சித்துவந்த மபொசியும் இந்த கூட்டணியில் கடைசியாக வந்து இணைந்திருந்தார். இத்தேர்தலில் 173 இடங்களில் திமுக போட்டியிட்டது. சுதந்திரா கட்சி 27 இடங்களிலும் மார்க்சிய கம்யூனிஸ்ட் 20 இடங்களிலும் முஸ்லிம் லீக் 4 இடங்களிலும் பி.சோ.கட்சி 4 இடங்களிலும் போட்டியிட்டனர். சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மபொசியின் தமிழரசுக் கழகம் ஆகியவை திமுக சின்னத்திலேயே நின்றன.

முடிவுகள் வந்தபோது திமுக மட்டும் 138 இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் 49 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. காமராஜர் விருதுநகரில் பெ,சீனிவாசனிடம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்! முதல்வராக இருந்த பக்தவத்சலமும் திருப்பெரும்புதூரில் தோற்றுப்போனார்! காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அத்துடன் முடிவுக்கு வந்தது!

logo
Andhimazhai
www.andhimazhai.com