அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025இல் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, அவர் எழுதிய ‘கனவுப்படிக்கட்டுகள்’ நூல் வெளியீடு ஆகிய இரு விழாக்களும் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கடந்த ஜூலை 19ஆம் தேதி மாலை நடைபெற்றன.
மாநில போக்குவரத்து - மின் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அந்திமழை இளங்கோவன் எழுதிய ‘கனவுப்படிக்கட்டுகள்’ நூலை வெளியிட, எழுத்தாளர் இமையம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்வில் எழுத்தாளர் இமையம்,
“இன்றைய சூழலில் அச்சுப் பத்திரிகையை நடத்துவதென்பது பெரும் சவால் நிறைந்தது. இன்றைய வாழ்வை ஆவணமாக்கி அடுத்த தலைமுறைக்கு சொத்தாக மாற்றுகின்ற வேலையை அந்திமழை செய்கிறது. அதற்கு வித்திட்ட இளங்கோவன் நம் நினைவில் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.” என மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசி முடித்தார்.
அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசுகையில் “துறைசார்ந்த வேலைகளுக்கு இடையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக் காரணம் அந்திமழை இளங்கோவனின் அன்பு, பாசம், பழக்கம்தான். நான் மிகப்பெரிய ஆளுமைகளாக மதிக்கின்ற பல பேர் அந்திமழையில் வரும் என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு, அழைத்துப் பாராட்டியுள்ளார்கள். அந்திமழை மிகப்பெரிய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது. நாம் எழுதுவது எங்கேயோ, யாரையோ சென்றுசேர்ந்து சரிசெய்யும். எழுத்து நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும், வழிநடத்தும். அதனால் எழுத்தைக் கைவிடாமல், அதைக் கைகொள்ள வேண்டும்.” என ஊக்கமாகவும் பாசிட்டிவாகவும் பேசினார்.
அரங்கு நிறைந்த இந்த நிகழ்வில், எழுத்தாளர்கள், பத்திரிகை யாளர்கள், வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.