
என் அப்பா பகுத்தறிவும் சீர்திருத்த கருத்துகளும் கொண்டவர். என்னை வளர்க்கும்போது எவ்விதப் பாரபட்சமும் காட்டியதில்லை. அம்மா- அப்பாவுக்குத் திருமணமாகி பத்தாண்டுகள் கழித்துப் பிறந்த ஒரே குழந்தை நான். ஒரே குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துவிட்டதே என்று அப்பாவும் அம்மாவும் வருந்தியோ, சொல்லிலோ, நடவடிக்கையிலோ, சிறு முனகலாக கூட வெளிப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. ‘பன்னிதான் பத்துக்குட்டிப் போடும், சிங்கம் ஒரே குட்டிதான் போடும்’ (இப்படியெல்லாம் பகுத்தறிவுவாதி சிந்திக்கலாமா என்று நினைக்கக் கூடாது. எல்லாக் காலத்தில் சீர்திருத்தமும் பழுப்பேறிய பழைமையும் ஒன்றிணைந்துதானே கிடக்கின்றன.) என்று தன்னுடைய மகளின் பிறப்பைப் பெருமைப் படுத்திப் பேசிக்கொள்வார்.
தன் வாழ்க்கைச் சூழலுக்கு மீறிய பால்பாகுபடற்ற மேன்மையான குணம் அப்பாவிடம் இருந்தது. அவர் வாழ்க்கையில் இருந்த அம்மா, தங்கைகள், மனைவி எல்லோரையும்விட, மகளாகிய என்னிடம் அந்த மேன்மையான குணம் அதிகம் வெளிப்பட்டது. இருபது வயதில் எனக்கு அரசுப் பணி கிடைத்தது. வீட்டுக்கு ஒரே மகள். எல்லாக் குடும்பத்திலும் அடுத்த இலக்கு, திருமணம்தான். இருபத்தைந்து வயதுவரை, அப்பா என்னிடம் திருமணப் பேச்சை எடுத்ததே இல்லை. என் வயதுப் பெண்கள் ஒவ்வொருவராக திருமணம் செய்துகொண்ட போது, எந்த முன்முடிவுகளும் இல்லாமல் திருமணம் பற்றி என் விருப்பம் கேட்டார். திருமணத்திலேயே விருப்பம் இல்லை என்று சொன்னபோது, எங்களுக்குப் பிறகு, தனியாக இருப்பதின் வலி, துயரம் பற்றி உன்னால் இப்போது புரிந்துகொள்ள முடியாது, எங்கள் விருப்பம் என்று எதுவும் இல்லை, உனக்குப் பிடித்தவர் யாராக இருந்தாலும் எங்களுக்குச் சம்மதமே என்றார். அப்பா அப்படி ஓர் உத்தரவாதம் கொடுத்த பிறகும், இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தான் திருமணம் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.
அப்பாவைப் பற்றி, நான் சொல்லச் சொல்ல உங்களுக்குள்ளும் ஒரு பிம்பம் வளர்ந்துகொண்டே வருகிறதுதானே? நான் சொல்வதற்கும் நீங்கள் வளர்த்துவரும் பிம்பத்திற்கும் என்ன ஒற்றுமை வருகிறது என்று பார்ப்போம். எனக்குத் திருமணமாகி, வயிற்றுப் பிள்ளைக்காரியாக இருந்த நேரத்தில், எல்லாக் குடும்பத்தைப் போலவே வழக்கமான உரையாடல் எங்கள் வீட்டிலும் நடந்தது. ‘என்ன குழந்தை பிறக்கும்?’. ‘என்ன குழந்தை வேண்டும்?’ இரண்டு கேள்விகளுக்கும் ஒவ்வொரு பதில் வந்தபோது, முடிவு சொல்வதுபோல் என் அப்பா, ‘அதெல்லாம் இல்ல, பையந்தான் பொறக்கணும், பையன் தான் பொறப்பான்’ என்றார். எனக்கு உள்ளுக்குள் அதிர்ச்சி. அப்பாவா இப்படிச் சொல்வது என்று? ‘ஏன்ப்பா நீயும் எல்லார் மாதிரியும் பொண்ணு, பையன்னு வித்தியாசம் பார்க்கிறீயா?’ என்று கேட்டவுடன், ‘அதெல்லாம் வித்தியாசம் பார்க்கல. மொத கொழந்த பையனா இருந்தா நல்லா இருக்கும்’ என்றார் மறுபடியும்.
திராவிட இயக்கத்தவர்கள்மேல் நான் அவ்வப்போது விமர்சனம் சொல்வேன். ‘சும்மா பேருக்கு வெளியில பேசிட்டு, உள்ள எல்லாம் பழைய நூலாம்படைதான் இருக்கா?’ என்று. அன்றும் அப்படியொரு கேலிபேசிவிட்டு விட்டுவிட்டேன். ஆனால், உள்ளுக்குள் அப்பாவுக்கு ஏன் பேரன் வேண்டும் என்று விருப்பம் இருந்தது என்ற யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.
அப்பாவின் விருப்பத்தையடுத்து, எனக்கு என்ன குழந்தை வேண்டுமென்று, ஆன்மசுத்தியுடன் என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஆண், பெண் வேறுபாடெல்லாம் நாமும் பார்க்கிறோமா, வித்தியாசப்படுத்தி நினைக்கிறோமா என்று சந்தேகத்தோடு என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டேன். மேலடுக்குகளில் இருந்த எல்லாச் சமத்துவ சிந்தனைகளையும் கடந்து, உள்ளுக்குள் ஒரு மகன் பிறந்தால் நன்றாகத்தான் இருக்குமோ, அப்பா சொல்வதுபோல்? என்ற ஆசை இருப்பது தெரிந்தது. என் முகமூடியை நானே கொஞ்சம் விலக்கிப் பார்த்தவுடன் வெளிப்பட்ட உண்மை, எனக்குக் குற்றவுணர்வைத் தரவில்லை. அய்யோ, நம் சிந்தனைக்கும் செயலுக்கும் இடையில் நுழைந்துவிட்ட போலித்தனமா என்ற பதற்றம் வரவில்லை. ஏன் நமக்குக் குற்றவுணர்வு வரவில்லை என்று எண்ணிப் பார்த்தேன். பிறந்ததில் இருந்து தனியாக இருந்த எனக்கு, எப்போதுமே ஓர் அண்ணன் பற்றிய கனவிருந்தது. என்னைவிட உயரமாக, உறுதியாக, தோள்மேல் கைபோட்டு, உள்ளங்கைகளை இறுக்கிப் பிடித்தபடி, எதற்கும் நானிருக்கேன் என்று சொல்லும் ஓர் ஆதரவு (அக்கா சொன்னால் அந்த ஆதரவு கிடைக்காதா என்பவர்களுக்குப் பதிலில்லை. உள்ளுக்குள் அப்படியொரு ஏக்கம்.) சைக்கிளில் கூப்பிட்டுச் செல்லும் அண்ணன், சிறப்பு வகுப்பு முடியும் முன் வந்து காத்திருக்கும் அண்ணன், தோழிகள் வந்தால் சரிக்குச் சமமாகப் பேசி சிரிக்கும் அண்ணன் என்று எப்போதுமே ஓர் அண்ணனுக்கான தீரா ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. இருக்கவும் செய்கிறது. இளமையிலேயே என் சித்தப்பாக்கள் இருவரையும் அண்ணன் என்று அழைத்ததும் ஆழ்மன அண்ணன் விருப்பத்தின் பிரதிபலிப்பே.
அப்பா, எனக்கு மகன் பிறக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னதும், என்னுடைய ஏக்கங்களும் சேர்ந்து எனக்கு மெல்ல புரிந்தது, அப்பாவின் எதிர்பார்ப்பு என்பது பாலின வேறுபாடு கருதியது அல்ல, மகளையே மகன் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காதவர் பெயரன் வேண்டுமென்று சொன்னதுக்குப் பின்னால், இப்படிச் சின்னச் சின்ன ஆழ்மன ஏக்கங்கள் இருந்திருக்குமோ என்னவோ?
முதல் பிரசவத்தில் மகளே பிறந்தாள். பிறப்பதற்கு முன்னால், எத்தனை எதிர்பார்ப்புகள் இருந்ததோ அத்தனையும் தான் இருந்த இடத்தைக்கூட காட்டிக்கொள்ளவில்லை. அப்படியொரு பரவசம் அப்பாவுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும். அப்பாவுக்குத் தன் அம்மாவே பெயர்த்தியாகப் பிறந்ததாக பெருமை. கையில் துக்கிவைத்துக்கொண்டு, ‘எங்க அம்மாதானே நீ? கன்னியம்மாதானே நீ? மடியில படுத்துக்கவா?’ எனக் கொஞ்சுவார். குட்டியானை போல் இருக்குமவர், ஒரு வயதுக் குழந்தையின் மடியில் தலைவைத்துப் படுக்கப் போவது, யானை ஒன்று முழங்காலை மடித்து சிரமத்துடன் உட்காருவது போலிருக்கும். ஆண், தன் தாயை தன் சந்ததியிடம் தேடுவதும், பெண், தன் தந்தையைத் தேடுவதும் சிந்திப்பதற்கு ரசனைமிக்கதாக தோன்றினாலும், அதற்குப் பின்னால் தாய், தந்தையிடன் முழுமையாக நிறைவேறாத விருப்பங்களின் தொடர்ச்சியாகவே இவ்விருப்பம் எழுவதாக நான் நினைக்கிறேன்.
ஒரு குழந்தை போதுமென்று இருந்த நேரத்தில், எதிர்பாராமல் அடுத்த கருவுருதலும் பிரசவமும். குழந்தைகள் பிறக்கும்வரை இரட்டையர் என்பதை அறிவியல் தொழில்நுட்பங்களால் கண்டுபிடிக்க முடியாமலேயே (2000த்தில் தாங்க) பிறந்தனர். இருவரும் பெண் குழந்தைகள். இயற்கையான முறையில் பிரசவம் என்பதால், எனக்கு நன்றாக நினைவில் இருந்தது, இரண்டு பெண் குழந்தைகளையும் அருகில் காட்டி, மருத்துவர் சொன்னது, ’ரெண்டும் பொம்பளக் கொழந்தைங்க, கவலையே படாதீங்க, கடைசி காலத்துல நல்லாப் பார்த்துப்பாங்க’ என்று. பெண் குழந்தைகள் என்பதைவிட, நமக்கு மூன்று குழந்தைகளா என்று எண்ணத்தில்தான் எனக்கு மயக்கம் வந்தது. முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி நினைப்பேன். மூத்த மகளுக்கும் இரட்டை மகள்களுக்கும் 17 மாதங்கள்தான் இடைவெளி. சற்றேறக்குறைய மூன்று குழந்தைகளை வளர்க்கும் அனுபவம்தான்.
அப்போது எங்களின் பூர்வீக ஓட்டுவீட்டில்தான் இருந்தோம். மர உத்திரத்தில் வரிசையாக மூன்று தொட்டில்கள். காலை பத்து, பத்தரை மணிக்குள் மூன்று பேரையும் குளிக்க வைத்து, தொட்டிலில் போட்டு, ஆட்டிவிட்டு (ஒருவரே மூன்று தொட்டில்களை ஆட்டும் திறமையையும் வளர்த்துக்கொண்டோம்) கட்டாயமாகத் தூங்க வைத்துவிட்டுத்தான் எங்கள் சாப்பாடு, குளியல் எல்லாம். மூவரும் தூங்கும் நேரத்தில் சிறு சத்தம் வராமல் வேலை நடக்கும். வீட்டில் இருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து வைத்துவிடுவோம். கிராமத்தில் யாரும் கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் வரும் வழக்கம் இருக்காது. நீண்ட வீட்டின் தெருவிலேயே சத்தம் கொடுத்துக்கொண்டு உள்ளே வருவார்கள். ஓடிப்போய் அங்கேயே நிறுத்தி, “கொழந்தைங்க தூங்கறாங்க, சத்தமா பேசாதீங்க” என்று தடுத்தால், “ஊர்ல அதிசயமா பிள்ளை வளக்குறாளுங்க” என்று கேலி பேசுவோரும் உண்டு. கோபப்படுவோரும் உண்டு. மூவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்தான் எங்களுக்கான பண்டிகைகளே. கறிவிருந்துடன் விசேசமாக இருக்கும்.
மகள்கள் வளர வளர நானும் உடன் பிறந்து வளர்ந்தேன். என்னுடைய கவிதை ஒன்று இருக்கும், நட்சத்திரங்களை, நிலவை, சூரியனை, மழையை மகளுக்குக் காட்டி ரசிக்கையில் தான் புரிந்தது, இத்தனை நாள் அவை எனக்குப் பெயர்களாக மட்டும் இருந்தன என்று. மகள்கள் வழியாக வாழ்க்கையைப் புதிதாக தொடங்கினேன். ஒரே மகளாக, தனிமையில் வளர்ந்த எனக்கு, மூன்று மகள்களும் தோழிகளானார்கள். அவர்களின் தனித்துவமான ஒரு விநாடியையும் நான் தவற விட்டதில்லை.
பள்ளிக்கு அழைத்துச் செல்வது தொடங்கி, ஒவ்வொரு வேலையையும் நானே செய்வேன். என் டிவிஎஸ் வண்டிக்கு மினி டாடா ஏஸ் என்றுதான் பெயர். இரண்டு மகள்கள் பின்னிருக்கையில். ஒருவர் முன்னால். மூவரின் புத்தகப் பைகள், உணவுப் பைகள். என்னுடைய பை தோளில் கிடக்கும். காலை 9.15 மணிக்கு ருக்குமணி வண்டி வருதுபோல், டிவிஎஸ் பறக்கும். காலை பிரார்த்தனை கூட்டத்திற்குத்தான் சரியாக கொண்டு விடுவேன். பெரும்பாலான நேரங்களில் மதிய உணவு நேரத்துக்கும் சென்று பார்த்து வருவேன், சாப்பிட்டார்களா என்று.
மகள்களின் பள்ளி விஷயத்தில் நான் தலையிட்டால் மூன்று பேரும் சண்டை போடுவார்கள். “நீ எங்க மிஸ் யார்கிட்டயும் கம்ப்ளெயிண்ட் சொல்லக்கூடாது, நீ போன பிறகு எங்களைத்தான் திட்டுவாங்க’ என்று. அதெல்லாம் காதில் வாங்கவே மாட்டேன். பெரிய மகள் கவின்மொழியை முதல் வகுப்பில் சேர்த்திருந்தேன். கிறிஸ்தவப் பள்ளி. கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன கல்வி நிறுவனம். உணவு மட்டும் வகுப்பறையில் சாப்பிடக்கூடாது, மரத்தடியில்தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. பள்ளியில் சேர்த்த ஒரு வாரமும் தினமும் ஒரு பிரச்சினை. தலையில் காக்கா எச்சம், சாப்பிடும் போது பக்கத்தில், சாப்பாட்டு டப்பாவில் என்று காக்கைகள் அதன் வேலையைக் காட்டின. குழந்தைகள் மிச்சம் உணவு போடுவதால் காக்கைகள் சரியான நேரத்துக்கு வந்துவிடும். இரண்டொரு நாள் கவின் சாப்பிடுகையில் நான் போய்ப் பார்த்தால், பறவைகளின் எச்சத்திற்கு இடையில்தான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாள். தலைமை ஆசிரியரைப் பார்த்துப் பேசினேன். சாப்பிடுவதற்கு மட்டும் வகுப்பறைக்குள் அனுமதியுங்கள், பறவைகள் எச்சமிடும் இடத்தில் குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்று. அவர், “ஒரு நாளைக்கு இரண்டு முறை வகுப்பறையைச் சுத்தம் செய்ய முடியாது, அங்குதான் சாப்பிட முடியும்” என்று சொன்னார். அடுத்த நாளில் இருந்து எனக்கிருந்த 50 நிமிட உணவு இடைவேளையில், அவள் பள்ளிக்குச் சென்று அவளையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்து, திரும்ப பள்ளியில் விட்டு நான் என் பள்ளிக்குச் செல்வேன். அடுத்த ஆண்டு மகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன்.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கு, பகிர. நாங்கள் நால்வருமே ஐந்து மணிக்குள் வீடு திரும்புகிறவர்கள் என்பதால், ஐந்து மணிக்குப் பிறகு எங்களுக்குப் புதிதாக ஒரு நாள் தொடங்கி. பள்ளிப் பாடங்கள் முடித்து, புத்தகங்கள் வாசிப்பு, ஊரில் இருக்கும் இடங்கள் (ஒரே மலைதான், அதுவும் வருடத்தில் பாதி நாள் காய்ந்து கிடக்கும்), நண்பர்கள் சந்திப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம். சனி, ஞாயிறு காலைகளில் வீட்டையொட்டிய மலைப்பாதையில் கட்டாயம் ஒரு நடை இருக்கும். காலை தேநீருக்குச் சந்திக்கும் நண்பன் இஷாக், பதினோரு மணி தேநீருக்குச் சந்திக்கும் மருத்துவர் வெங்கிடேசன், என்றும் நீங்காமல் நினைவில் இருக்கும் நண்பன் ஆதி சுரேஷ், அப்துல் மஜீத் என ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்ற நண்பர்களால் நிறைந்திருந்தன எங்களின் நாட்கள். இந்திய ஆட்சிப் பணியாளரான டாக்டர் மு.ராஜேந்திரன் குடும்ப நண்பரான பிறகு, மாத த்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ முக்கியமான வரலாற்று இடங்களுக்குச் சென்று வருதல் வழக்கமாகிவிட்டது.
சனி, ஞாயிறுகள் கூடுதல் சிறப்பானவை. அவர்கள் தமிழ் வாசிக்கக் கற்றுக்கொண்ட நாள்கள் தொட்டு, எய்ட் இண்டியாவின் யுரேகா பதிப்பகம் வெளியிட்டிருந்த கதை அட்டைகள் வாசிப்பில் பொழுதுகள் கழியும். மதியம் நல்ல சாப்பாடு சாப்பிட்டு, சிறுவர் மணி, தினமணி கதிர் வாசித்துக் காட்டிக்கொண்டே குட்டித் தூக்கம். தூங்கி எழுந்தவுடன் கட்டாயம் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேரும் சிறு உலா சென்று வருவோம். முருகேஷின் கற்பனையில் பிறக்கும் கதைகள் ஒவ்வொரு இரவிலும் தொடரும். கிழக்குப் பதிப்பகத்தின் சிறார் நூல்கள், பிள்ளைகளுக்குப் பெரும் வரம். அத்தனையையும் படித்திருப்பார்கள். வீ.பா.கணேசன் மொழிபெயர்த்திருந்த சத்திய ஜித் ரேயின், ஃஃபெலுடா சீரிஸ் புத்தகங்கள் அவர்களுக்குப் பெரும் கொண்டாட்டமானவை. ஒவ்வொரு புத்தகத்தையும் இரண்டு மூன்று முறைகூட வாசித்திருக்கிறார்கள். இடையில் பாட்டு, நடனம், சிலம்பம் என்று அவர்கள் விரும்பிய, நாங்கள் விரும்பிய வகுப்புகளும் இருந்தன. எப்போதும் இடைவிடாமல் அவர்களிடம் இருந்தது இலக்கிய வாசிப்பு மட்டும்தான்.
அந்தந்தப் பருவத்திற்கான வாழ்க்கையின் மாற்றங்களும் இருக்கவே செய்தன. பத்தாம் வகுப்பு தொடங்கி, எங்களின் அன்றாடங்கள் மாறிப்போயின. பள்ளிப் படிப்பும், மதிப்பெண்களும் என்ன செய்யும்? என்று பொதுவாக நாமெல்லோருமே கேள்வி கேட்போம். எனக்கும் அந்தக் கேள்வி இருக்கிறது. இன்றைய கல்வி அமைப்பில் பொதுத்தேர்வின் மதிப்பெண்களே பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதால் மதிப்பெண்களும் முக்கியம் என்ற எண்ணத்தில் நான் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறேன். அதற்காக, பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி படி படி என்று நச்சரிக்கும் அம்மா இல்லை. படித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லாமல், ஒவ்வொரு தேர்விலும், ‘நாம் இதைப் படிக்க வேண்டுமே, இன்னும் அதை முடிக்கவில்லையே’ என்று அவர்களுடனே உட்கார்ந்து ஒவ்வொரு பாடத்தையும் படிப்பேன். என் பாடம் தவிர வேறு பாடத்தில் பாண்டித்தியம் இல்லையென்றாலும், அவர்கள் படிப்பின் அடிப்படையை அவர்கள் உடன் சேர்ந்தே கற்றுக்கொண்டேன். இரட்டையர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல், இரண்டாம் இடம் வந்ததெல்லாம் எதேச்சையாக நடந்தது இல்லை. அவர்களின் கடும் உழைப்பும் ஈடுபாடும் இருந்தது. மூவருமே தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் சேரும் வரை ஐந்தாண்டுகள் நானுமே பொதுத்தேர்வு எழுதும் மாணவியாகத்தான் இருந்தேன்.
கல்லூரிப் படிப்பு முடித்து, குடிமைப்பணிகள் தான் தங்களின் தேர்வு என அவர்கள் தயாரிப்பைத் தொடங்கிய பிறகு, நானும் போட்டித் தேர்வு மாணவியாக உடன் இருந்தேன். UPSC -க்குத் தயாராவதன் வழிமுறைகள், குடிமைப் பணிகள் தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறை, நேர்காணல் நடக்கும் முறைகள் என ஒவ்வொன்றாய் அவர்கள் உடனே நின்றிருக்கிறேன். அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்றது முதல் இப்போது குடிமைப்பணிகள் நேர்காணலுக்குச் சென்றது வரை, தேர்வு மையத்தின் வாசலை விட்டு நகர்ந்தது இல்லை. பிள்ளைகள் உள்ளே சென்று, தேர்வு தொடங்குவதற்கான மணி அடித்து, ஐந்து நிமிடங்கள் ஆன பிறகுதான் மையத்தைவிட்டு, நகர்வேன். ஏதேனும் அவசரம் என்று வெளியில் ஓடி வருவார்களோ என ஒவ்வொரு முறையும் நினைத்துக் காத்திருப்பேன். மூன்று பிள்ளைகளும் ஒவ்வொரு விதம். இரட்டை மகள்களில் ஒருவரான நிலாபாரதி, கண்பார்வை மறையும்வரை கையசைத்துக்கொண்டே செல்வாள். சில சமயங்களில் உள்ளே சென்று மீண்டும் சட்டென்று வெளியில் வந்து மறுபடியும் கையசைத்துச் செல்வாள். தேர்வு மையம் விட்டு, வெளியில் வரும்போதே, ஒரு வார்த்தையும் சொல்லாமல், கண்களிலேயே எப்படி இருந்தது கேள்வித்தாள் என்பதைச் சொல்லிவிடுவாள். ஒவ்வொரு தேர்வு மையத்தின் காட்சிகளும் அப்படியே நினைவில் நிற்கின்றன.
இன்று இரண்டு மகள்கள் குடிமைப்பணிக்குத் தேர்வாகிப் பயிற்சியில் இருக்கிறார்கள். ஒரு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறார். இருவர் வீட்டில் இல்லாத வெறுமையை, இனிமையான வெறுமையாக அனுபவிக்கிறேன்.
அம்மாவாக இருப்பது ஒருநிலை. தோழிபோல் குழந்தைகளுடன் நட்பாக இருப்பது ஒருநிலை. குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி, அவர்களைப் போலவே வளர்ந்து ஆளாகி நிற்பது ஒரு நிலை.
பிறந்த தேதியைக் கணக்கில் கொண்டால், எனக்குத் தற்போது 54 வயதென்றாலும், என் மகள்களுடன் சேர்ந்து, நானும் வளர்ந்து வந்துள்ளேன், தாயாக, தோழியாக, மகளாக.
இப்பிறவியின் இவ்வாழ்வில் எழுத்தைப் போலவே என் மகள்களும் என்னை நிறைவு ததும்பும் மனுஷியாக்குகிறார்கள்.
அமைதி நிறைந்த ஆழ் உறக்கத்தில் எப்போதாவது வரும் அண்ணன் பற்றிய ஏக்கம் துயரத்தின் சிறு கீறலாய் மேலெழும். என் மகள்களுக்கும் துயரத்தின் அச்சிறு கீறல் இருக்கவே செய்யும். முருகேஷ் உடன் பிறந்த மூன்று அண்ணன்களுக்கும் இரண்டு மகள்கள், மூன்று மகள்கள் என்று வீடு முழுக்க பெண் வாரிசுகள்தான். மூத்த அண்ணனுக்கு மட்டும் மூன்றாவதாய் ஒரே மகன். நாகா அதியன். என் மூன்று மகள்களுக்கும் அண்ணனாய் நாகா இருப்பதில் துயரத்தின் அந்தச் சிறு கீறல் அவர்களுக்கு மறந்து போகிறது.
அது, ஆண் என்ற கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தின் பிம்பத்தைக் கைக்கொள்வதால் மட்டும் அல்ல.