
எங்கள் தங்கம்(1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம். அதில் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் கவிஞர் வாலி. ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்றொரு வரியை எழுதிவிட்டார். அடுத்த வரிக்காக யோசித்துக்கொண்டிருக்கிறார். வெற்றிலை பாக்கை மென்று மென்று கன்னமே சிவந்துவிட்டது. வரியைக் காணவில்லை. அச்சமயம் அங்கே வருகிறார் கலைஞர். ‘என்ன எழுதியிருக்கிறீர்கள்?’ என்கிறார். முதல் வரியைச் சொல்லிவிட்டு அடுத்தவரிக்காக யோசிக்கிறேன் என்கிறார் வாலி. ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்று போடுங்கள் அடுத்த வரியை என எடுத்துக் கொடுக்கிறார் கலைஞர். இது வாலி பகிர்ந்து மிகப் பிரபலமான சம்பவங்களில் ஒன்று.
இந்திய வரலாற்றில் கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த முதல் நடிகர் என்றபெருமைக்கு சொந்தக்காரரான எம்ஜிஆரின் வெற்றிக்கு அவரது திரைப்படங்களில் காட்டப்பட்ட பிம்பம் உதவியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படங்களில் வெளியான பாடல்வரிகள் அவரது பிம்பத்தை மென்மேலும் மெருகூட்டியதுடன் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றன.
அவர் மட்டுமல்ல; அவரைக் கொண்டு படம் எடுத்தவர்களும் பாடல் எழுதியவர்களும் எம்ஜிஆரின் திரைபிம்பத்தை வலுவாக்கும் வரிகளையே எழுத விரும்பினார்கள். இதற்கு கலைஞரும் கூட விதிவிலக்கல்ல என்பதை மேற்சொன்ன நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. எம்ஜிஆரின் வள்ளல் பிம்பத்தை மேலும் மேலும் திரைப்பாடல்கள் உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தன.
இன்றும் அதிமுக மேடைகள் தோறும் எம்ஜிஆர் அபிமானிகளின் கூடுகைகள் தோறும் இந்தப் பாடல்கள் ஒலித்து மீண்டும் மீண்டும் அவரது பிம்பத்தை நிறுவிக்கொண்டே இருக்கின்றன. 1953-இலிருந்து 1972- வரை அவர் திமுக உறுப்பினர். அதுவரை எழுதப்பட்ட திரைப்பாடல்கள் எம்ஜிஆரின் கதாநாயக பிம்ப வலுவாக்கலுக்கு உதவின. அவர் சார்ந்த கட்சிக்கும் கொள்கைக்கும் உதவின.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்றுவரை பல அதிகார விழைவுகொண்டவர்களுக்கான கனவுப்பாடல். அது நனவானது எம்ஜிஆருக்கு மட்டும்தான். “அவருக்கு மட்டும்தான் அம்மாதிரி பாடல்களை எழுதமுடியும்; அதற்கான வரிகளை நான் தெரிவு செய்து எழுதினேன்,” என்றார் வாலி. இந்தப் பாடல் கூட முதலில் நான் அரசெனென்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் தொடங்கி இருக்கிறது. ஆனால் சென்சாரில் இது வெட்டுக்குள்ளாகும் என எம்ஜிஆர் கருதியதால் நான் ஆணையிட்டால் என முதல் வரி மாற்றப்பட்டிருக்கிறது.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தாலும் என் பேச்சிருக்கும்- இது தெய்வத்தாய்(1964) படத்தில் வாலியால் எழுதப்பட்டது. எம்ஜிஆர் ரசிகர்களிடம் இப்பாடலுக்குத் தனி இடம் உண்டு. ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ போன்ற பல அற்புத நற்குணங்களைச் சொல்லும் பாடல்.
கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா- பணம் படைத்தவன் (1965) படத்தில் வரும் இப்பாடலில் வருகின்ற ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ - என்கிற வரிகள் சாகாவரம் பெற்றவை.
கண்ணதாசன் எம்ஜிஆருக்காக ஏராளமான பாடல்களை இயற்றியவர். ஆனால் அவை பெரும்பாலும் கதைக்காக அழகோடு எழுதப்பட்டவை. ‘பேசுவது கிளியா. இல்லை பெண்ணரசி மொழியா. கோயில் கொண்ட சிலையா. கொத்து மலர் கொடியா’ என்ற பாடல் ஓர் உதாரணம். அதிலும் சேரனுக்கு உறவா, பாரிவள்ளல் மகனா என்றிருப்பார். அதே சமயம் அவற்றில் பலபாடல்கள் உலகியலையும் அரசியலையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தவை. மன்னாதிமன்னன் படத்தின் தொடக்கத்தில் வருகிற, ‘அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்கிற பாடல் திராவிடக் கொள்கைப்பாடல். அதன் மீதான முற்றுரிமையில் பெரும்பகுதிக்கு அதில் தோன்றி நடித்ததாலே எம்ஜிஆர் சொந்தக்காரர் ஆனார் என்பதை மறுக்கமுடியாது.
எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேறிய வேகத்தில் எடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படத்தை ஓடவிடக்கூடாது என அவரது பழைய கட்சி விரும்பியதாகவும் அதை மீறித்தான் இப்படம் ஓடியது என அரசியல் நோக்கர்கள் சொல்வார்கள். இப்படத்தின் தயாரிப்பின் போது எம்ஜிஆரை வாலி சந்திக்கிறார். ‘உங்களுக்கு இப்படத்தில் பாட்டே இல்லை’ என்று எம்ஜிஆர் வேண்டுமென்றே சொல்ல, வாலியோ… ‘இந்த படத்தில் என் பெயர் இல்லாவிட்டால் இந்த படமே வராது’ என்கிறார். எம்ஜிஆர் அதிர்ந்துவிட, வாலி, ‘அண்ணே… படத்தின் பேரே உலகம்சுற்றும் வாலிபன்.. இதில் வாலியை எடுத்துட்டா உலகம் சுற்றும் பன் என்றுதான் வரும்’ எனச் சொல்லி இருக்கிறார். இது ஒரு சுவையான நிகழ்வு.
நேற்று இன்று நாளை(1974) படத்தில் வருகிற தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று; அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று என்ற பாடல் அதிமுகவின் மிக முக்கியமான கொள்கைப்பாடல். இதை எழுதியவர் வாலி. இப்பாடலால் மிகக் கவரப்பட்ட எம்ஜிஆர் படத்திலேயே இதை எழுதியவர் வாலி என்று சொல்லிவிட்டுத்தான் பாடவே ஆரம்பிப்பார். ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றை மட்டும் கண்ணாய் எண்ணுவார்’ என்ற வரிகள் நேரடியாக எதிர்தரப்பைத் தாக்கி எழுதப்பட்டவை. புலமைப்பித்தன், முத்துலிங்கம், அவினாசி மணி, புலவர் வேதா என பலர் குறிப்பிடத்தக்க பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.
‘காலத்தை வென்றவன் நீ; காவியம் ஆனவன் நீ’ - அடிமைப்பெண்ணில் (1969) வரும் இப்பாடலை எழுதியவர் அவினாசி மணி. அதே ஆண்டு் வெளியான நம்நாடு படத்தில் ஜெயலலிதா பாடும் ‘வாங்கய்யா வாத்தியாரய்யா. வரவேற்க வந்தோமைய்யா…’ இந்த பாடல் அதிமுக தொண்டர்களிடம் பிரபலமான பாடல். அதுவும் ஜெ கைக்கு அதிமுக வந்தபின் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டது. பாடல்: வழக்கம்போல் வாலிதான். இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்து பின்னாளில் அரசியல் ரீதியாக மிகப்பொருத்தமாகப் புகழ்பெற்ற பாடலைப் பார்த்துவிடுவோம்.
தொட்ட இடம் துலங்கவரும் தாய்க்குலமே வருக..
கண்பட்டவுடன் பூமலரும் பொன்மகளே வருக
என்ற ஒரு பாடல் ஜெயலலிதா முத்துச் சிப்பி தோன்றுகையில் வரும். சீர்காழி கோவிந்தராஜன் குரலில் வரும் இப்பாடல் அதிமுக மேடைகளில் ஜெ.வின் புகழைப் போற்றி இசைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்த பாடலையும் எழுதி கவிஞனின் வார்த்தைகள் பலிக்கும் என நிறுவியவர் வாலிதான்!
“நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”- இது உலகம் சுற்றும் வாலிபன் டைட்டில் பாடல். புலவர் வேதா எழுதிய இந்த பாடல் அதிமுகவின் போர்முழக்கப் பாடலாக கொடிகட்டிப் பறந்தது.ரசிகர்களையும் தொண்டர்களையும் ர்ந்த அளவுக்கு அரசியல் மயப்படுத்தி உணர்ச்சி பொங்க இது வைத்திருக்கும் என்பது சீர்காழி கோவிந்தராஜனின் கனத்த குரலில் இதை இன்று கேட்டாலும் புரியும்.
இதயக்கனி(1975) படத்தில் தேயிலைத் தோட்டத்தில் அதிமுக கொடி ஏற்றிவிட்டு எம்ஜிஆர் நிற்கையில் பாடப்படும் ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற... நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்ற பாடல் புலமைப்பித்தனால் எழுதப்பட்டது. கட்சியின் பிரச்சாரப் பாடலாகவே அமைந்தது.
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள் அதிமுகவுக்கு எந்த அளவுக்கு வலுச் சேர்த்தன எனச் சொல்லாமல் இந்த கட்டுரையை முடிக்க முடியாது. இன்றுபோல் என்றும் வாழ்க(1977) படத்தில் வரும் அன்புக்கு நான் அடிமை; தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை- அவரது ரசிகர்களின் தேசிய கீதம் ஆனதென்றால் அதே படத்தில் வெளியான ’இது நாட்டைக் காக்கும் கை; இது வீட்டைக் காக்கும் கை’ என்ற பாடலும் அரசியல்ரீதியாக பலன்களை அள்ளித் தந்த பாடல்.
‘இது நாட்டைக் காக்கும் கை – உன் வீட்டைக் காக்கும் கை’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது.
எம்.ஜி.ஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் இரண்டு அரசியல் பாடல்கள் இருந்தன - ‘தாயகத்தின் சுதந்திரமே' மற்றும் 'வீரமகன் போராட’ இதில் ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை' என்று தொடங்கும் அந்தப் பாடலின் சரணத்தில் ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்' என்று ஒரு வரி எழுதி இருந்தேன்.
சென்சார் போர்டு அதிகக் கெடுபிடி செய்து கொண்டிருந்த காலகட்டம். அதனால் எம்.ஜி.ஆர். அந்த வரி குறித்து யோசித்தாா். ‘இதில் நமது கொடி என்பதற்கு பதிலாக மீன் கொடி என்று போட்டுக் கொள்ளலாம்,’ என்றார்.
நான் உடனே ‘மீன் கொடிக்குப் பதிலாக மகரக் கொடி என்று போட்டால் வாயசைப்பில் வித்தியாசம் தெரியாது’ என்றேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். “மகரக்கொடி, நமது கொடி என்று இரண்டு விதமாக ரெக்காா்ட் செய்து கொள்ளலாம். சென்சாரில் நமது கொடியை வெட்டி விட்டால் மகரக்கொடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,’ என்றார்.
நானும் சரி என்று கூறி விட்டுக் கிளம்பிவிட்டேன். பாடல் பதிவு செய்யப்பட்டு எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டப்பட்டது.
அதில் நமது கொடி என்று மட்டுமே இருந்தது. எம்.ஜி.ஆர். கோபத்துடன் எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் போனேன். இன்டர்காமில்தான் பேசினார். ‘நமது கொடி, மகரக்கொடி என்று இரண்டு பதிவு செய்யச் சொன்னேனே…’ என்றார். ‘இதை எடுக்கமாட்டார்கள் சென்சாரில். நான் சென்சார் அதிகாரியைச் சந்தித்து இப்படி எம்ஜிஆர் பாடுவதாக வருகிறது…அனுமதிப்பீர்களா?’ எனக்கேட்டேன். அவரும் அனுமதிப்போம் என்றார். அதன் பிறகுதான் இப்படி வைத்திருக்கிறோம் தலைவரே’ என்றேன். எம்ஜிஆர் நம்பாதது போல், ‘சென்சார் அதிகாரி பெயர் என்ன?’ என்றார். ‘ராகவன்’ என சொன்னேன். அதன் பிறகுதான் விட்டார்” என்று நேர்காணல் ஒன்றில் கூறுகிறார் முத்துலிங்கம்.
மீனவநண்பன்(1977) படத்தில் எல்லா பாடல்களும் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் எம்ஜிஆரை போய் சந்தித்தார் முத்துலிங்கம். அவருக்கு பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தால் உதவிசெய்ய எம்ஜிஆர் விரும்பினார். பாடலுக்கு வேறு காட்சி இல்லையே என்று இயக்குநர் தரும் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரும் சொன்னார்கள். உடனே பரவாயில்லை கனவுப் பாடலாகப் போடுங்க என்று சொல்லி வாய்ப்பளித்தார்.
அப்படி அவர் எழுதியதுதான் ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். தன்னை நம்பியவருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அது பின்னாளில் அவரை அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர். முன்னதாக கண்ணதாசனையும் புலமைப் பித்தனையும் அரசவைக் கவிஞராக்கி இருந்தார் எம்ஜிஆர்.
”எம்ஜிஆர் சொல்லி இப்படி எல்லாம் நான் எழுதவில்லை. அவரைப் பற்றிய மக்கள் மனநிலை, அவர் தகுதி ஆகியவற்றைக் கொண்டுதான் நான் எழுதினேன் என என்னிடம் தனிப்பேச்சில் சொல்லி இருக்கிறார் கவிஞர் வாலி. எம்ஜிஆர் வெறும் திரைக் கதாநாயகனாக மட்டும் இல்லை; பல ஆண்டுகளாக அரசியல் பிம்பமாகவும் இருந்தார். பொதுமக்களுடன் தொடர்பில் இருந்தார். அவரைப் பற்றிய இந்த உயர்வு நவிற்சிப் பாடல்களை மக்கள் உவந்து ஏற்றுக்கொண்டனர்,” என்று அந்திமழையிடம் தெரிவிக்கிறார் கவிஞர் பழநிபாரதி.
திரைப்பாடல்கள் மூலமாக இதயத்தில் இடம்பிடித்த காலம் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது என்பதற்காக எம்ஜிஆர் பாடல்களில் சிலவற்றை மட்டும் தொட்டுக்காட்டினோம். இந்த இதழில் திரைப்படங்களில் இடம்பெறும் அரசியல் குறித்த விரிவான அலசல்களை பலரும் எழுதியிருக்கிறார்கள். கொஞ்சம் இந்தி, ஹாலிவுட் படங்களைப் பற்றியும் தொட்டிருக்கிறோம். பிரிக்கமுடியாதது அரசியலும் சினிமாவும் அல்லவா?