ஓளவையார்
ஓளவையார்

சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு!

ஒளவையார் பலர் வாழ்ந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.  சங்ககால ஔவையாரும் இடைக்காலத்தில்  சோழப் பேரரசு சிறந்து விளங்கியபோது தோன்றிய நீதிநூல் ஔவையாரும் ஆகிய இருவருமே மிகுந்த சிறப்புக்குரியவர்கள்.

நீதிநூல் ஔவையார் புகழ் தமிழகம் முழுவதும் பரவி, கற்றோரேயன்றி மற்றோரும் நினைவில் வைத்துக் கொண்டாடும்படி அமைந்தது. அதற்கு அவர் பாடிய எளிமை மிகுந்த ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்களே காரணமாகும். ஔவையார் பாடிய தனிப்பாடல்களும் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றன. அவரது புலமை, பாடல் புனையும் திறன், மக்கள் கவிஞராக விளங்கியமை என்பனவற்றால் பலவிதமான கதைகள் மக்களால்  சொல்லப்பட்டு வாய்மொழியாக வழங்கலாயின. அவரால் இயற்றப்படாத சில பாடல்களும் நூல்களும் கூட அவரோடு தொடர்புபடுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.

'தமிழ் நாவலர் சரிதை', 'புலவர்புராணம்', 'விநோதரசமஞ்சரி', 'பாவலர் சரித்திர தீபகம்' போன்ற பல நூல்களில் ஔவை வரலாறு காணப்படுகிறது. இவை வாய்மொழியாக வழங்கிய கதைகளின் தொகுப்பாக விளங்குவதால் இவற்றில் சிற்சில மாற்றங்களையும் நாம் காணலாம்.

ஔவை என்பதன் பொருள்

தாய், மூதாட்டி, பெண்துறவி, தவப்பெண் என்று ஔவை என்பதற்கு அகராதிகள் பொருள் கூறுகின்றன. அம்மை, அவ்வை ஒருபொருட்சொற்களே. தெலுங்கு, கன்னடம், துளு முதலிய திராவிட மொழிகளில் அவ்வா, அவ்வை, அவ்வாள் எனப் பலவாறு திரிந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஔவையார் பாடல்களில் கடவுள்

பெரும்பாலான ஔவையார் பாடல்கள் சிவநெறியை எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. சங்க கால ஔவையாரும் நீதி நூல்கள் பாடிய ஔவையாரும்

சிவபெருமானைப் பற்றியே பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். அதன் பின்னர் விநாயகப் பெருமான், முருகப்பெருமான் பற்றிய சிறப்புகளும், அக்கடவுளர்களின் அருட்டன்மையும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

சிவபெருமான்

தான் நெடுநாள் வாழ்வதிலும் ஔவையே நீண்ட காலம் வாழ வேண்டுமென எண்ணிய அதியமானின் அன்பையும் நற்பண்பையும் எண்ணியெண்ணி வியந்த ஔவையார்,

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை

ஆர்கலி நறவின் அதியர் கோமான்

போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயோ (புறம்.91)

என்று சிவபெருமானுடன் அதியமானை ஒப்பிட்டு வாழ்த்துகின்றார். பிறையையும் நெற்றிக்கண்ணையும் தலையில் அணிந்த நீலமணிமிடற்றினை உடையவனாகிய சிவபெருமானைப் போன்று அதியமானே நீ இவ்வுலகில் நிலைத்த புகழுடன் வாழ்வாயாக என்று ஔவையார் வாழ்த்தும் வாழ்த்தில் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு உலகைக் காத்த தொன்ம நிகழ்வை எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆத்திசூடியில்,

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

(ஆத்திசூடி, வரி, 1-2)

என்று சிவபெருமான ஆத்திமாலையைச் சூடியுள்ள-மையைக் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை என்றென்றும் மறவாது வணங்கி வழிபட வேண்டும். அது வீடுபேற்றிற்கு வழிவகுக்கும் என்பதை, ‘‘அரனை மறவேல்‘‘(ஆத்.,வரி, 30) என்று எடுத்துரைக்கின்றார்.

கொன்றைவேந்தன் நூலை ஔவையார்,

‘‘கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.‘‘

என்று சிவனை வணங்கித் தொடங்குகிறார்.

சிவபெருமான் கொன்றை மாலையை அணிந்திருப்பவன் என்று சிவன் அணியும் கொன்றை மாலையின்

சிறப்பினை எடுத்துரைத்து அத்தகைய கொன்றை வேந்தனாகிய செல்வன் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவோம் என்று ஔவையார் எடுத்துரைக்கின்றார். சிவபெருமானின் சிறப்பினை எடுத்தோதும் வகையில் அந்நூலுக்குக் கொன்றைவேந்தன் என்று சிவனின் பெயரினை இட்டு வழங்கியிருப்பது

சிவபெருமான் மீது ஔவையார் கொண்டிருந்த பக்தித் திறத்தைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.

இவ்விரண்டு பாடல்களையும் விநாயகப் பெருமான் குறித்த வணக்கப்பாடல்களாக சிலர் வலிந்து கூற முயல்கின்றனர். கொன்றை மாலையை அணிந்த

 சிவபெருமானையே இது குறிக்கும். ஆத்தி, கொன்றை எனச் சிவபெருமான் அணியும் மாலைகளைப் பற்றி குறிப்பிடுகின்ற இப்பாடல்கள், சிவ வணக்கப் பாடல்களேயன்றி விநாயகப் பெருமான் குறித்த வணக்கப் பாடல்கள் ஆகாது. இவற்றையும் விநாயக வணக்கமாக்க முயலுதல் கவிப்போக்குக்கு இயைந்தாக அமையவில்லை. கொன்றை வேய்ந்த செல்வன்' என்ற தொடரே, கொன்றை வேந்தன் எனச்

சொற்சுருக்கங் கருதி ஆளப்பட்டு நூலுக்குப் பெயரானது. சிலர் இதை அன்னையும் பிதாவும்' என முதல் அடியைக் கொண்டும் பெயரிட்டு அழைத்துள்ளனர். இவ்விரண்டு கடவுள் வாழ்த்துகளிலும் போற்றி வணங்குதல்' மட்டுமே எடுத்துரைக்கப் பெற்றிருப்பது நோக்கத்தக்கது. மேலும் சிவபெருமானை வணங்கி வழிபடுவதே தவம் செய்வதற்குரிய அழகாகும். அதுவே சிறந்ததுமாகும் என்பதை, ‘‘சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு‘‘(கொன்றை.28) என்று ஔவையார் குறிப்பிடுகின்றார்.

சிவபெருமானையும் திருவைந்தெழுத்தையும் நினைத்து கொண்டிருப்பவர்க்கு விதியால் வரும் துன்பம் இல்லை என்ற கருத்தை நல்வழியின் 15- ஆம் பாடல்,

“சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு

அபாயம் ஒரு நாளும் இல்லை – உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்

விதியே மதியாய் விடும்‘‘

என்று எடுத்துரைக்கின்றது. மந்திரமாகத் திகழும் திருநீறை அணிதல் வேண்டும். திருநீறில்லா நெற்றி அழகின்றிக் காணப்படும் என்பதை, ‘‘நீறில்லா நெற்றிபாழ்‘‘ (நல்வழி, 24) என்று நல்வழி எடுத்துரைக்கின்றது. இறைவனாகிய சிவனின் அருள் கிடைத்துவிட்டால் எந்தத் தீவினையும் நம்மை வந்து அனுகாது என்ற கருத்தை,

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல். (நல்வழி, 27)

என்று ஔவையார் வலியுறுத்துகிறார்.

திருமால்

சிவபெருமானை மட்டுமே பாடாது வைணவக் கடவுளான திருமாலைப் பற்றியும் ஔவையார் குறிப்பிட்டுப் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. காக்கும் கடவுளாகிய திருமாலுக்குத் தொண்டு செய்து வாழவேண்டும் என்பதை, ‘திருமாலுக்கடிமை செய்' (ஆத்.,57) என்று தெளிவுறுத்துகின்றார்.

விநாயகர்

முப்பது பாடல்கள் கொண்ட மூதுரையின் கடவுள் வணக்கப் பாடல்,

“வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு”

என்ற விநாயகர் வணக்கப் பாடலாக அமைந்துள்ளது. இதைப் போன்றே, நாற்பது பாடல்கள் கொண்ட நல்வழி நூலின் கடவுள் வணக்கப்பாடலும்,

‘‘பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ்மூன்றும் தா‘‘ (நல்.கடவுள் வாழ்த்து)

என்று விநாயகர் வணக்கப்பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விநாயகரைப் போற்றிப் பாடும், ‘‘சீதக் களப‘‘ என்ற விநாயகரகவல் விநாயகப்பெருமானின் சிறப்புகளையும் அவரை வழிபடுவதால் கிடைக்கும் பயன்களையும் விளக்குகின்றது.

ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகிய இரண்டின் கடவுள் வாழ்த்துப் பாடல் சிவ வணக்கமாய் அமைய, மூதுரை, நல்வழி ஆகிய இரண்டும் விநாயக வணக்கப் பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. அதனால் இந்நூல்கள் இரண்டும் பிற்காலத்தில் வந்த ஔவையார் பெயர் கொண்ட வெவ்வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கின்றது.

(முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்.,), புதுக்கோட்டை)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com