பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
Published on

 இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

குறிப்பாக அண்மை ஆண்டுகளில் வெளியான ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ’ , ‘தி கேரளா ஸ்டோரி’ ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ ஆகிய படங்களை விசாரணைக்கு உட்படுத்தும் திறனாய்வாளர்கள் அவை கலைப் படைப்பாளிகளின் இயற்கையான வெளிப்பாடாக இல்லை, உள்நோக்கம் கொண்ட செயற்கையான தயாரிப்புகளாகவே இருக்கின்றன என்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்புகளுக்கு வரி விலக்கு, அதிகார பீடங்களின் அங்கீகாரம் ஆகியவை திரைப்படத் துறையை ஆளுங்கட்சியின் ஒரு பிரச்சார அணியாக மாற்றுகின்றன என்று விமர்சிக்கிறார்கள்.

சமூக நிகழ்வுகளால் மனக்குளத்தில் உண்டாகும் அலைகள் கலை–இலக்கியமாகப் பரிணமிக்கிறபோது அரசியல் பேசுவது புதிதல்ல.  அன்றைய இதிகாசங்கள் அரசியலையும் பேசுவதால்தான் இன்றைக்கும் துணை வருகின்றன. நாவல்கள், நாடகங்கள் உள்ளிட்ட ஆக்கங்களில் அரசியல் அக்கறை இருந்து வந்திருக்கிறது. பொதுவாக அவை அந்தந்தக் காலத்தின் அரசுகளைச் சாடியிருக்கின்றன. ஆள்வோரின் அத்துமீறல்களால் ஏற்படும் சமுதாய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. தமிழ் மண்ணில் அரசர்களை எள்ளி நகையாடும் தெருக்கூத்துகள் ஊர் ஊராய்ச் சென்றிருக்கின்றன.

பாரம்பரியத்துக்குக் கைவிலங்கு

ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாறுவதை, ஒரு குழந்தை சாலைச் சந்திப்புகளில் கையேந்தி வருவதை ஒரு கதை சித்திரிக்கிறது என்றால், அதில் மக்களுக்கு வறுமையை வழங்கும் அரசாங்க அநீதியை விமர்சிக்கும் படைப்புலகப் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால்,  கார்ப்பரேட் விசுவாச, மதவாத அரசியலுக்குச் சாதகமாகக் கதை–திரைக்கதை எழுதப்படுமானால் அந்தப் பாரம்பரியத்துக்கு விலங்கிடப்படுகிறது.

விடுதலைப் போராட்டக் காலத்தில், கல்கி எழுதி பி.என். ராவ் இயக்கத்தில் வெளியான ‘தியாக பூமி’ திரைப்படம், தலித் மக்களைக் கோவிலுக்குள் இட்டுச் செல்லும் ஒரு சாம்பு சாஸ்திரியின் கதையோடு, தேசிய இயக்கத்தில் பங்கேற்கச் செல்லும் அவரது மகளின் கதையையும் சொன்னது. பிரிட்டிஷ் அரசு தடை விதிக்கிற அளவுக்கு அன்றைய அரசியல் களத்தில் அந்தப் படம் பங்களித்தது. அதே ஆண்டில் எச்.எம். ரெட்டி இயக்கத்தில் பி.யு. சின்னப்பா நடித்த ‘மாத்ரு பூமி’ (தாய் மண்) வெளியானது. ஒரு கற்பனை நாட்டின் அரியாசனத்தைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்கிற படைத் தளபதியை நாயகன் முறியடிக்கிற ஒரு “சரித்திரக் கதை” என்றாலும், விடுதலைப் போராட்டத்தோடு ஒருமைப்படும் உரையாடல்கள் இடம்பெற்றன. தமிழில் முதல்முறையாக “வந்தே மாதரம்” பாடல் ஒலித்தது அந்தப் படத்தில்தான். அந்நாளின் எழுப்பப்பட்ட விடுதலை முழக்கமாகவே அது ஒலித்தது, இந்நாளில் புகட்டப்படும் மத மோக மந்திரமாக அல்ல.

இவ்விரண்டுக்கும் முன்னோடியாக 1933இல் ஏ. நாராயணன் தயாரித்து இயக்கிய ‘தேச பக்தி’ வெளியானது. சுதந்திரத்தின் லட்சியம் சமூக சீர்திருத்தங்களோடு இணைய வேண்டுமென்ற காந்தியச் சிந்தனைகளை முன்வைத்தது. கதாபாத்திரங்களைக் கதராடைகளோடு உலாவவிட்டதே கூட பிரிட்டிஷ் ஆட்சிக்கு சவால் விடுப்பதாக அமைந்தது.

பராசக்தி அதிர்வு

விடுதலைக்குப் பின், குறிப்பாக திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் திரைப்படத்தைத் தங்களின் அரசியல், சமூகச் சிந்தனைகளைப் பரப்புவதற்கான ஊடகமாகக் கையாண்டார்கள். இளவரசன்-இளவரசி;–எதிரி-மன்னன் கதைகளிலேயே அன்றைய காங்கிரஸ் ஆட்சியைச் சாடும் வசனங்களை வைத்தார்கள். 1952இல் ஏவிஎம் உதவியோடு ஏ. பெருமாள் தயாரித்த  ‘பராசக்தி’ தடை முயற்சிகளை முறியடித்து, கலைஞர் கருணாநிதியின் கூர்மையான உரையாடல்களோடு அரசியலையும் சமூக நிலைமையையும் கூண்டில் நிறுத்தியது. “கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதற்காக,” என நெருப்பு நாக்குடன் நீதிமன்றத்தில் வாதாடுகிற இளைஞனாக சிவாஜி கணேசன், பிற்காலத்தில் அரசியல் களத்திலும் செயல்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் உட்பட்டோர் அந்தப் படத்தின் வாயிலாகத்தான் தமிழ் சினிமாவுக்கு வநதார்கள்.

அந்தப் படத்திற்குத் தமிழக மக்கள் அளித்த வரவேற்பு, அது போல மேலும் பல படங்கள் வருவதற்குத் தூண்டுதலாக அமைந்தது. 1962இல் கலைஞரின் திரைக்கதை– உரையாடலில் ‘சிலப்பதிகாரம்’ காப்பியத்தைக் கொஞ்சம் மாற்றிச் சொன்ன ‘பூம்புகார்,’ பாண்டிய அரசியின் காற்சிலம்பைக் களவாடியது பொற்கொல்லர் அல்ல, ஒரு மந்திரி என்பதாகச் சித்தரித்ததில் நுட்பமான அரசியல் விமர்சனம் இருந்தது.

எம்.ஜி.ஆர். தன் படங்களில் நேரடி அரசியல் பேசியதில்லை. ஆனால் ‘நாடோடி மன்னன்’,எங்க வீட்டுப் பிள்ளை,’ ‘நம்நாடு’ போன்ற படங்களில் நுட்பமான முறையிலும், தனக்கான ஒரு நல்ல தலைவர் தோற்றத்தை உருவாக்கும் வகையிலும் படக்கதைகளை எழுத வைத்தார். பிற்காலத்திய ‘முகமது பின் துக்ளக்’,  ‘தண்ணீர் தண்ணீர்’ என ஆகப் பெரும்பாலான படங்கள் மக்களின் விமர்சனக் குரலை எதிரொலித்தன.

நடப்பாண்டுத் தொடக்கத்தில், ரெட் ஜெயன்ட் வெளியீடாக, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வந்த ‘பராசக்தி’, பழைய பெயரோடு அறுபதாண்டுகள் பழைய காலத்திற்கும் பயணப்பட்டது. 1960களில் இந்தித் திணிப்பை எதிர்த்துக் களம் கண்ட மாணவர்களின் எழுச்சியையும் அதை ஒடுக்குவதற்கு ஏவிவிடப்பட்ட  முயற்சியையும், அது முறியடிக்கப்பட்ட காட்சியையும் காட்டுகிறது. அத்துடன், வேறு பல மொழிகள் பேசுகிற மாணவர்களும் இணைந்து போராடியதாக ஒரு புனைவையும் சேர்த்து, இன்றளவும் தொடர்கிற மொழித்திணிப்பு அடாவடிகளை வெற்றிகொள்ள, அதை எதிர்கொள்ளும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒன்றுபட்ட இயக்கமாக எழ வேண்டும் என்ற கருத்தையும் நுட்பமாக முன்வைக்கிறது. அந்நாளைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் இந்தப் படத்தை இந்நாளைய பாஜக ஏன் பெரிய அளவுக்குப் பேசவில்லை என்பதிலும் ஓர் அரசியல் நுட்பம் இருக்கத்தானே செய்கிறது!

மதத்தில் தோய்ந்த வெறுப்பரசியல் குறித்து, 1990களின் பின்புலத்தில் பேசிடும் ‘சிறை’ இந்தப் பயணத்தின் தொடர் கண்ணிதான். சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்து, சென்ற ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளுக்கு வந்த இந்தப் படம், ஒரு காதல் கதை வழியாக, சிறுபான்மை மதத்தினர் மீது பின்னப்படும் பகைமைப் பிம்பத்தை உரித்துக் காட்டுகிறது.

சங்கிலிக் கண்ணிகள்

கோலிவுட்டுக்கு நிகராக, பாலிவுட் பங்காகப் பல படங்கள் வந்திருக்கின்றன. 2014இல் அமீர்கான் தயாரித்து நடித்த, ராஜ்குமார் ஹிராணி இயக்கிய ‘பி.கே.’ ஆன்மீகம் வணிகமாக்கப்படுவதையும், மத நம்பிக்கைகள் ஆதிக்கச் சூதுகளுக்குக் கடத்தப்படுவதையும் நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து கவனப்படுத்தியது.

2018இல் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வந்த ‘முல்க்’, இந்திய தேசம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் சொந்தமானது அல்ல என்று நீதிமன்றம் நீதி வழங்குகிற (வெறும் தீர்ப்பு அல்ல) காட்சியோடு நல்லிணக்க மாண்பை உயர்த்திப் பிடித்தது. இந்தியாவின் பிற மொழிகளில் வந்த படங்களிலும் இந்தப் பாரம்பரிய சங்கிலித் தொடர் இருக்கிறது.

மத வெறி, சாதி ஆணவம், ஆணாதிக்க வன்மம், உழைப்புச் சுரண்டல் என வகை வகையாகப் பிணைக்கப்பட்டுள்ள அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்பட வேண்டியவை. அந்தப் புரட்சிகரப் பணியில் இதுவரை  பல படங்கள் பங்களித்திருக்கின்றன. இந்தக் கலைப் பாரம்பரியச் சங்கிலியை அறுப்பதற்காக இன்று சில படங்கள் புறப்பட்டிருக்கின்றன.

குண்டாந்தடியும் பரப்புரையும்

“சர்வாதிகாரத்துக்கு குண்டாந்தடி எப்படியோ, அப்படியே ஜனநாயகத்துக்குப் பரப்புரை,” என்றார் தத்துவ அறிஞர் நோம் சோம்ஸ்கி. பெரு ஊடக நிறுவன விமர்சகர் எட்வர்ட் எஸ். ஹெர்மன் என்பாருடன் இணைந்து அவர் எழுதிய “ஒப்புதல் உருவாக்கம்: வெகுமக்கள் ஊடகங்களின் அரசியல் பொருளாதாரம்” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் ஒற்றை மையத்தில் குவிந்திருக்கிற அமைப்பில் மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதற்கு வன்முறைகள் ஏவப்படுகின்றன. அதிகாரப் பரவல் இருக்கிற ஜனநாயக அமைப்பில் அவ்வாறு ஒடுக்குவதற்குப் பரப்புரை ஏற்பாடுகள் கையாளப்படுகின்றன. அதெல்லாம் நியாயம்தான் என்று, மிகைப்படுத்தப்படும் சித்திரிப்புகளால் உண்மையென பொதுமக்களை நம்பவைப்பதுதான் பொது ஒப்புதல் தயாரிப்பின் நோக்கம்.

சமத்துவக் கோட்பாட்டாளர்களும், சமூகநீதிப் போராளிகளும், நல்லிணக்க மாண்புக் காவலர்களும் தங்களின் அந்தச் சிந்தனைகளை கலை–இலக்கியம் எனும் ஊடக வாகனத்தில் ஏற்றி மக்களிடையே அனுப்புகிறார்கள். செல்கிறார்கள். இந்த நெறிகளை அவமதிக்கிறவர்களோ அந்த வாகனச் சக்கரத்தின் அச்சை முறிப்பதில் இறங்குகிறார்கள்.

இருட்டடிக்கும் “ஃபைல்ஸ்”

அச்சு முறிப்பே ஒரு சங்கிலியாகுமானால், அதன் தொடக்க நிலைக் கண்ணிகளில் ஒன்றுதான் ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’. 2022இல், விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய, அவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து தயாரித்த இந்தப் படம், கடந்த காலங்களில் வலதுசாரிகள் காஷ்மீர் குறித்து உருவாக்கிய பிம்பத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, காஷ்மீர் பண்டிட் பிரிவினர் முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் சமூகத்தாலும் ஒடுககப்பட்டார்கள், வெளியேற்றப்பட்டார்கள் என்ற பரப்புரைக்கு உதவக்கூடிய புனைவுகளை  உண்மைத் தகவல்கள் போலச் சித்திரிக்கிறது. வரலாற்றின் ஒரு மூலையை மட்டும் காட்டிவிட்டு மொத்தக் கட்டடத்தையும் இருட்டடிக்கிற வேலை.

“ஒரு சினிமாவாக இந்தப் படம் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது, இடையறாத மதவாதத்தில் அச்சமூட்டுகிறது,” என்று ‘தி வயர்’ தளத்தில்,  திரை விமர்சகர் தனுல் தாக்கூர் எழுதினார் (2022 மார்ச் 20). “காஷ்மீரி ஃபைல்ஸ் பண்டிட்டுகளைப் பரப்புரைக்காகப் பயன்படுத்துகிறது, முஸ்லிம்கள் மீது வெறுப்பைப் பொழிகிறது,” என்றும் அந்தத் தளம் கூறியது.

இதன் இயக்குநருக்கு நேரடியாக அரசியல் தொடர்பு இல்லையாம். ஒன்றிய அரசால் இவர் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உறுப்பினராகவும், இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஷத்துக்கு விருது

2023இல் வந்தது ‘தி கேரளா ஸ்டோரி’. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கிய இந்தப் படம், கேரளத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத மாற்றத்திற்காக இந்துப் பெண்களைக் காதலித்து மணந்துகொள்கிறார்கள் என்ற நச்சுப் பரப்புரைக்குக் கதையாக உயிரூட்ட முயல்கிறது. ‘லவ் ஜிஹாத்’ ஏற்பாட்டில் 32,000 இந்துப் பெண்கள் மதம் மாற்றப்பட்டார்கள் என்று அந்தப் படம் அப்பட்டமாகப் பொய் சொன்னது. வலுவான எதிர்ப்பைத் தொடர்ந்து 3 பேர் என்று மாற்றப்பட்டது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின், நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளான அந்தப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன.

2024இல் தீரஜ் சர்னா இயக்கி, விக்ராந்த் மாசி நடித்து, மூன்று பேர் கூட்டுத் தயாரிப்பில் வந்தது ‘தி சபர்மதி எக்ஸ்பிரஸ்’. 2004இல் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிந்ததையும், அதன் மீதான ஊடக விசாரணையையும் மையமாகக் கொண்ட கதை. சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் ஆயுள் சிறையாக மாற்றப்பட்டு, இப்போதும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது வழக்கு. “பிரச்சார ரயிலில் ஏறியிருக்கிறார் விக்ராந்த் மாசி” என்று ‘தி ஹிண்டு’ விமர்சனம் குறிப்பிடுகிறது.

இந்தப் படங்களை பிரதமர் நரேந்திர மோடி உட்பட உயர் மட்டத் தலைவர்களும், சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்தோரும் பாராட்டி மகிழ்ந்துள்ளனர். அவர்களின் செயல்திட்டத்திற்கு உற்ற கலைத் துறைத் துணையாக வரும்போது பாராட்ட மாட்டார்களா என்ன? நாடு ழுமுவதும் கட்டமைக்க முயல்கிற வெறுப்பரசியலுக்கு ஆதரவாக மக்களின் பொது மூளையில் அரிமானத்தை ஏற்படுத்த முயலும்போது மகிழ்ந்திட மாட்டார்களா என்ன?

இந்திய சினிமா வழியாக, மக்களின் ஒருமைப்பாட்டுப் பண்பாட்டைப் பாதுகாப்பது இன்றைய தேவை. வெள்ளைத் திரையில் பல வண்ணங்களைக் காட்டுவதல்ல, சமுதாயத்தின் பல வண்ணங்கள் சிதைவின்றிப் பிரதிபலிக்கச் செய்வது சினிமா. செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒப்புதலைத் தகர்த்து, நல்லிணக்கப் பாரம்பரியச் சங்கிலியை வலுப்படுத்துவது திரைக் கலைஞர்கள், திறனாய்வாளர்கள், அரசியல்–சமூக அக்கறையாளர்கள், ரசிகத் திரளாகிய குடிமக்கள் அனைவரது கூட்டுப் பொறுப்பு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com