தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகமே புத்தகக் கண்காட்சிகளை முன்னின்று நடத்தும் என்ற 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு, மிக முக்கியமான வாசிப்பு இயக்கம் தொடர்பான முன்னெடுப்பு.
இதற்கு முன் சென்னைப் புத்தகக் கண்காட்சியும் மதுரைப் புத்தகக் கண்காட்சியும்தான் பபாஸி சார்பில் நடந்துகொண்டிருந்தன. இதைவிட்டால் ஈரோடு மக்கள்சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகக் கண்காட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. இவற்றை விட்டால் ஆங்காங்கே சில பதிப்பாளர்கள் இணைந்து நடத்திக் கொண்டிருந்தனர். புத்தாயிரம் ஆண்டின் தொடக்க ஆண்டுகளில் மதுரையில் ஆட்சித்தலைவராக உதயச்சந்திரன் இருந்தபோது மதுரை புத்தகக் கண்காட்சியை நட்சத்திரக் கண்காட்சியாக வளர்த்தெடுத்தார். பிற்காலங்களில் பெரம்பலூர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக இருந்த தாரேஷ் அகமது, நந்தகுமார் ஆகியோர் தம் சொந்த ஆர்வத்தால் அம்மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகளை நடத்தினர்.
கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக மாவட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு என வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு 38 கோடி ரூபாய் அளவுக்கு நூல்கள் முன்னைவிட கூடுதலாக விற்பனை ஆவதாக சொல்லப்படுகிறது. மாவட்ட தலைநகர்களுக்கு தூரத்தில் இருந்து சென்று தங்கி விற்பனையில் ஈடுபடும் பதிப்பாளர்களுக்கு ஏற்படும் செலவு பெருஞ்சுமையாக இருப்பதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் காலப்போக்கில் அதற்கும் வழிகள் கண்டறியப்படலாம்.
இவை அல்லாமல் பொருநை, சிறுவாணி, காவேரி, வைகை, சென்னை என இலக்கிய திருவிழாக்களையும் அரசே முன்னின்று நடத்துவதும் உள்ளூர் இலக்கிய ஆளுமைகள் அதில் பங்கேற்று உந்துதல் பெறுவதும் முக்கியமான விஷயங்களே.
தமிழ்ப்படைப்புகள் இம்மண்ணில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்படவேண்டும்; அதே சமயம் வெளியே இருந்தும் உள்ளே வரவேண்டும் என்பார்கள். இதற்கு தனிப்பட்ட படைப்பாளர்களும் பதிப்பாளர்களும் செய்துகொண்டிருந்த முயற்சிகளுக்கு ஒரு தளம் அமைக்கும் விதமாக சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி மூன்றாண்டுகளாக நடத்தப்படுகிறது. ‘1975-இல் டெல்லி புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது; கல்கத்தா புத்தகக் கண்காட்சி 1976-இல் தொடங்கினோம்.
1977-இல் சென்னை பபாஸி புத்தக்கண்காட்சி தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி என்பது எங்களை விட பல ஆண்டுகள் நீங்கள் முன்னோக்கிப் போய்விட்டீர்கள் எனக் காட்டுகிறது’ என்று மேற்குவங்க மூத்த அதிகாரி ஒருவர் தனிப்பேச்சில் சொன்னதாக இந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சி பொறுப்பாளர்களில் ஒருவர் அந்திமழையிடம் தெரிவித்தார். தொடர்செயல்பாடு எதையும் பெருமைமிகு அடையாளமாக மாற்றிவிடும் என்பதற்கு இந்த கண்காட்சி உதாரணமாக அமையுமா என்று பார்க்கவேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக பதிப்பாளர்களுக்கு நூலக ஆணையே வழங்கப்படவில்லை என்ற முணுமுணுப்பு ஒருபுறம் கேட்டுக் கொண்டிருப்பதையும் இச்சிறு கட்டுரையில் பதிவு செய்தாகவேண்டும். தற்போது வெளிப்படையான கொள்முதல் முறை என கொண்டுவரப்பட்டு நல்ல புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது அரசு. இந்த முறை பலனளிக்குமா ?