
சென்னை கெருகம்பாக்கத்தில் வசிக்கும் மதுகேசவ பொற்கண்ணனின் இயற்பெயர் ராஜசேகர். சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள தீபாம்பாள்புரம். பூண்டி புஷ்பம் கல்லூரியில் பிகாம். பிறகு தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியர் பணி. அடுத்து கைத்தறித் துறையில் பணி. இன்று துணை இயக்குநராக ஓய்வுபெற்ற நிலையில், தன் பெருங்கனவான பத்தாயிரத்தும் அதிகமான தமிழ் நூல்களுடன் தனிநபர் நூலகத்தை உருவாக்கியவராக மிகுந்த உற்சாகத்துடன் அந்திமழைக்காகப் பேசினார்.
“என் சிறு வயதில் இருந்து புத்தகங்களின் மீது தீராத ஆர்வம் இருந்தது. எங்கள் தாத்தா சிவசிதம்பரம் பிள்ளைதான் அதற்குக் காரணம். 1963 ஆம் ஆண்டு முதன்முதலில் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் கரங்களில் தேசிய நல்லாசிரியர் விருது வாங்கியவர். தமிழ்நாட்டில் இரண்டு பேருக்குக் கொடுத்தார்கள். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தாத்தாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. வெண்பா இயற்றுவதில் வல்லவராக இருந்தார். புலி வெண்பா வேந்தர் என்றே அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது.
நாகபந்தம், ரதபந்தம், விருச்சிக பந்தம் என சித்திரக் கவிகள் எழுதுவார். திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தின் தெய்வீகப் பேரவைச் செயலராக இருந்து சிறந்த ஆன்மிகப் பணியாற்றியவர். அவரது சேகரிப்பில் நிறைய பக்தி இலக்கிய நூல்கள் இருக்கும். அதெல்லாம் சிறுவயதிலேயே படிக்கும் ஆர்வமும் வியப்பும் ஏற்பட்டது. அதுதான் புத்தக சேகரிப்புக்கான முதல் புள்ளி என்று சொல்வேன்.
கல்லூரிக்கு வந்த பிறகு புத்தகங்கள் வாங்கும் பழக்கம் இருந்தது. ஆனால் நாமே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. யார் கேட்டாலும் கொடுத்துவிடுவேன். சில நேரங்களில் மறந்துவிடுவேன். 1995 காலகட்டத்தில் சென்னை புத்தகக் காட்சியில் தீ விபத்து ஏற்பட்டது. விலைமதிப்புமிக்க பல ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பாலாயின. அந்த துன்பியல் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாக மாறியது. அப்போதுதான் திருச்சியில் இருந்து பணி மாற்றலாகி சென்னைக்கு வந்திருந்தேன்.
அந்த சம்பவத்தை செய்தித்தாளில் படித்துவிட்டு அலுவலகம் செல்கிறேன். அதுபற்றி யாருமே பேசவில்லை. அதுபற்றிய சிறு அக்கறைகூட இல்லாமல் இருந்தார்கள். இந்த நிலையை நினைத்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அந்த சம்பவம் பற்றி ஒரு சிறுகதை எழுதி சிற்றிதழில் வெளிவந்தது. அந்தளவுக்கு என் மனத்தை தீ விபத்து பாதித்தது.
யாழ்ப்பாணம் நூலகம் எரிந்தது, இந்த சம்பவம் எல்லாம் எனக்குள் ஒரு சிந்தனையை விதைத்தது. நாம் புத்தகங்களை இழந்துவிடாமல் காப்பாற்றவேண்டும். அதற்கு முதல்கட்டமாக நாமே தனிநபராக சேகரித்துப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. 1995 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய பழக்கம். எந்த புத்தகக் கண்காட்சியையும் நான் தவறவிட்டதில்லை. என்னிடம் இன்று தோராயமாக பத்தாயிரம் புத்தகங்களுக்கும் மேல் இருக்கும். திரைப்படப் பாடல்கள் தொடர்பாக நான் ‘பாடுகளம்’ என்ற நூலை எழுதியுள்ளேன்.
தமிழ் இலக்கியம் குறிப்பாக சங்க இலக்கிய நூல்கள், தொல்காப்பியம், தண்டியலங்காரம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள், தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக 100 நூல்கள், சாதி வரலாற்று நூல்கள், ஏகே செட்டியார், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், சிற்பி முதலியோரின் தொகுப்பு நூல்கள், சாகித்ய அகாதெமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூல்கள், அபிதான சிந்தாமணி, விநோதரசமஞ்சரி, தமிழ் சினிமா வரலாறு, உலக சினிமா வரலாறு, திரைப்படப் பாடல்கள் தொடர்பாக 300 நூல்கள், சென்னை லெளகீக சங்கம் பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள், தமிழ்நாட்டில் முதலில் ஏற்பட்ட பஞ்சம் பற்றிய அறிக்கை, கடந்த 40 ஆண்டுகளில் கைத்தறி துறை சார்ந்த குழுக்களின் அறிக்கைகள், ப. ஜீவானந்தம் தொகுப்பு, பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் தொகுப்பு நூல்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆரம்ப காலத்தில் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்கி சேகரித்தேன். உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் அங்கேதான் கிடைத்தன. புத்தகக் கண்காட்சிகளில் முக்கிய புத்தகங்களை வாங்குவேன். போரும் வாழ்வும், புத்துயிர்ப்பு, சக்கரவர்த்தி பீட்டர், ஜெருசலேம் உள்ளிட்ட பல நூல்களை வாங்குவேன். நாம் மறந்துபோன தமிழ் இலக்கிய இதழ்களையும் வாங்கி வைத்திருக்கிறேன்.
என் ஆத்மதிருப்திக்காகத்தான் இதைச் செய்தேன். அதை சமூகப் பயன்பாட்டிற்காக எப்படி கொண்டுவரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் வீட்டின் மாடியில் எனக்கான இடத்தில் புத்தகங்களை வைத்திருக்கிறேன். இதற்கென ஒரு தனி வீடு கிடைத்தால், அதை எல்லோரும் படிப்பதற்கான நூலகமாக மாற்றலாம். அதற்கான காலமும் பொருளாதாரமும் கைவந்தால் செய்யும் திட்டம் இருக்கிறது.
என் வாழ்க்கையில் புத்தகங்கள் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. புத்தகங்களை வாசிக்க வாசிக்க முதலில் மனம் பண்படுகிறது. அந்த படைப்பாளி படைத்த உலகத்துக்குள் நாமும் ஒரு வாசகனாக உள்ளே சென்றுவிடுகிறோம். அந்தப் படைப்பில் வரும் அறம், அறத்தை மீறுதல் எல்லாமும் நம்மை பண்படுத்துகிறது. அரசுப் பணியில் இருந்ததால் பல ஊர்களுக்கு மாறவேண்டியிருந்தது. திருச்சி, ஈரோடு, திருச்செங்கோடு என எல்லா ஊர்களுக்கும் என்னுடன் பயணித்த இந்த புத்தகங்கள் சென்னைக்குத் திரும்பியிருக்கின்றன.
கடந்தகால படைப்பாளிகளை மீட்டெடுப்பதற்கும், நிகழ்கால படைப்பாளிகளுடன் வாழ்வதற்கும், எதிர்கால படைப்பாளிகளை கண்டடைவதற்கும் புத்தகங்கள் பாலமாக இருக்கின்றன,'' என முடித்தார் அவர்.