பிரிதலும் காதலே!

பிரிதலும் காதலே!
பிரிதலும் காதலே!
Published on

இன்றைய ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலும் இயல்பானதாக இருக்கிறது. காதலை ஏற்றுக்கொள்வதைப் போல பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை இன்று பார்க்க முடிகிறது.

ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்ற நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. அந்த வகையில் காதலின் நிமித்தம் ஒரு பக்குவம் இன்றைய இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு காதல் உருவாகுவதற்கு அந்த ஆண்-பெண் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பு, மரியாதை, முதிர்ச்சி, அக-புற சூழல்கள் என பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்த காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போல ஒருவரின் அக, புற சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. காதல் ஏற்படுவதற்கான இந்த காரணிகள் எல்லாம் ஒரு கட்டத்தில் நீர்த்துப்போகும்போது அங்கு காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்கு காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்து கட்டாயப்படுத்தும் போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தை காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும்.

பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு முந்தைய காலங்களில் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாக சித்திரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வை களுடன் இருக்கின்றனர். அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவை பெண்கள் சுயநலமாகவும் அவர்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது.

‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்திரிப்பை பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து

ஏற்றுக் கொள்கிறார்கள். பிரிதலை பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்த காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது.

பிரிவும் காதலின் இயல்பாக மாறிவிட்ட இந்த சூழலில், பெரும்பாலான காதலர்கள் இந்த பிரிதலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி நிற்பதையும் எனது அனுபவத்தில் பார்க்கிறேன்.

உளவியல் ரீதியாக பிரிவை எப்படி எதிர்கொள்வது?

“எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னால தான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க”

தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படி பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாக தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தை தாண்டிய ஒரு உறவு தவறு என்று தெரிந்த பின்னரும் கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாக செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது- எனப் பிரிவது என்ற முடிவை எப்படி எடுப்பது அல்லது எப்படி எதிர்கொள்வது என என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

இன்றைய காலத்தில் ‘லிவிங்கில்’ இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூட பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறைய பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியை தாங்க முடியாமல் இருப்பதே!

ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மை பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையை பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒரு ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்கு கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும். அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

பிரிவதற்கான படிநிலைகள்:

பிரிவதற்கான காரணங்களை உணர்வது

பிரிவதற்கான முடிவை பரஸ்பரமாக எடுப்பது

முடிவை ஏற்றுக்கொள்வது

பிரிவின் வலியைக் கடந்து வருவது

பிரிவில் இருந்து முழுமையாக வருவது

பிரிய வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பர குற்றச்சாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதை தொடர வேண்டாம் என்பதை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்னை வருகிறது. அது இந்த பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது.

ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவை தெளிவாக இணையருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்த காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதை சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு.

அதேபோல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்னும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்த பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாக தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கே கூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படி பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” என சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவை சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும்.

ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் எதையும் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்துகொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும்.

பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரை சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்த துயரத்தை தவிர்க்க முடியாது. அந்த துயரமே அத்தனை கால காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும்.

“என்னால அவளோட நினைவுகளைத் தாங்கிக்க முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறைய பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும்.

பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தை கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக கொண்டது.

முழுமையாகப் பிரிவது தான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்து கொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள்.

மதுவை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதைப் போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விடமுடியாது. தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக, நிறைய காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

“நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ்கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என சொன்னேன்.

ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்து விட்டால் அதற்குப் பிறகு அதன் முந்தைய நிலைக்கு மீண்டும் செல்வது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் என சொல்லும் போது அதில் எப்படி சாத்தியமில்லையோ அதைப் போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும்.

உன்னதமான உறவு என்பது எத்தனை காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது முடிவுக்கு வந்தால் அந்த பிரிவின் முடிவை எத்தனை முதிர்ச்சியுடன் அந்த உறவால் அணுக முடிந்தது என்பதில் தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும். அந்த வகையில் பக்குவமான பிரிதலும் ஒரு காதலே!.

(கட்டுரையாளர் மனநல மருத்துவர். படங்கள் சித்திரிப்புக்காக மட்டுமே)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com