
திலீபன் என்ற அண்ணன் ஒருவர் தனது சலூன் வாசலில் ஒரு கரும்பலகையை வைத்திருப்பார். தினந்தோறும் அதில் எதாவது பாடலின் இடைவரிகளை எழுதி வைப்பது அவர் வழக்கம். மறக்காமல் எழுதிய கவிஞரின் பெயரை மட்டும் கீழே பொறிப்பார். பாடலின் ஆரம்பம் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டால் நீங்க கண்டுபிடிங்க என்று புதிர் தருவார்.
வருடத்தில் வெகு சில நாள்கள் மட்டும் திலீபன் கடை வாசல் கரும்பலகையில் அவருடைய சொந்தச் சரக்கு இடம்பெறும். அதன் கீழே தன் பெயரை எழுதி வைக்க மாட்டார் என்றாலும் எழுதியவர் பெயரற்றுத் தென்படுகிற வரிகள் அவருடையவை என்பது புரியும். அவர் காதலித்து அந்தக் காதல் உடைந்து போதும் எனப் பிரிந்த பிற்பாடு இனிக் காதல் இல்லை. கனவுகள் வேண்டாம். கவிதைகள் போதும் என்றெல்லாம் மனதினுள் சத்தியம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தவர். எங்களூரில் அந்த நிறைவேறாத காதலின் நிமித்தம் அவருக்கென்று ரசிகர்களே இருந்தோம். அவர் எழுதிய வரிகளில் இப்போது நினைவிலாடுவது இது:
“காதலில் இன்பமென்பது செய்கூலி துன்பமென்பது சேதாரம். புன்னகையைத் தொலைக்காமல் பொன்னகை கிடைக்காது.“
கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடலை இன்றைக்கும் ஆங்காங்கே கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. அதன் கூடுதல் சிறப்பென்ன தெரியுமா..?
ஒரே பாடலில் இரண்டு காதல் தோல்விகள்!
“உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட
ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது
அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான்
இப்போது தெரிந்ததம்மா”
ப்ரேக் அப் பாடல்கள் உட்பட்ட காதல் சோகப் பாடல்களின் வேலை என்ன..? ஒரு மனிதன் உடனிருந்து செய்ய வேண்டிய நற்காரியம் ஒன்றினை அரூபவடிவிலான பாடல்கள் செய்து காட்டுவது வாழ்வின் நல்விநோதம். எத்தனையோ தற்கொலைகளை, கொலைகளைத் தடுத்து வாழ்வின் கொந்தளிப்பான காலம் ஒன்றில் துக்கித்துத் தடுமாறுகிறவர்களை ஆற்றுப்படுத்துவதன் மூலமாக அவர்களை மீண்டும் வாழ்வின் பால் திரும்பிச் செல்ல வைப்பதை நிகழ்த்துகிற வகையில் மன நல மருத்துவத்தின் ஒரு பங்குபாகமாகவே பாடல்கள் செயலாற்றுவது பெருஞ்சிறப்பு. காதல் தோல்வி எனும் சொல்லே மாயவாதம் புரிவது தானே? நியாயமாகக் காதலர் தோல்வி என்றல்லவா சொல்லப்பட்டிருக்க வேண்டும்..? காதல் அங்கே அந்தத் தோல்வியைத் தன் தோள்களில் மாற்றிக்கொள்கிறது. இதற்கும் சேர்த்தே போற்றப்பட வேண்டிய வஸ்து தான் காதல் என்பது.
என் உறவுக்காரர் ஒருவர் சொல்லுவார், “காதல் அது பாட்டுக்கு ஊதாத பலூனாட்டம் சும்மாவே கெடந்திருக்கும். இந்த சினிமாதான் அதை ஊதி ஊதி பெரிசாக்கிக் காமிச்சது.” அவர் சொல்லுவதில் உண்மை இல்லாமல் இல்லை. காணாக் கனியாக, இல்லாப் பண்டமாகவே அருகி இருந்த ஒன்றைக் கைக்கெட்ட வைத்தது சினிமாதான். பாகவதர் காலத்தில், கணவன் சகலவல்லவன், மனைவியை மறந்து வேறு பெண்களிடம் போவான், படம் முடியும் தறுவாயில் திருந்தித் தொலைவான். எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் மேலே இடித்துவிடக் கூடாது என்று, கைகளை பேண்ட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு, தொலைதூரக் காதல், வெளிப்படுத்தாத காதல், காரணங்களால் சேர முடியாமற் போகும் காதல் என்றெல்லாம் தொடங்கி, காதலி செத்தபிறகு அல்லது மனைவி செத்தபிறகு மீண்டும் வரக் கூடிய புதிய காதல் என்றெல்லாம் ஆகி, முதல் ஜென்மத்தில் பலியாகி, மறுஜென்மத்தில் சேரும் காதல் வரை, வண்ணமயம் காட்டியது.
சினிமாவைத் தாங்கும் தூண்களாகவே பாடல்கள் ஆராதிக்கப்பட்ட கால நடுவாந்திரத்தில், காதல் ஒருதலைக் காதலாகவும், ஒத்துக்கொள்ளப்பட்ட இருமுனைக் காதலாகவும், கனிந்து ஊடாடிப் பிரிந்து, ஏங்கி, பல சிச்சுவேஷன்களாகப் பிரிந்து, படத்தின் மேனியெங்கும் பாடல்களை வார்த்தது. ப்ரேக்கப் என்கிற சொல் புதியது. அதைக் காதல் டைவர்ஸ் என்று கேலி செய்வான் நண்பன் பரணி. கண்மூடிக் கிறங்கி, காதல் போதும் என்று சொல்வதற்கும், கண்ணிமைக்காமல் உற்று நோக்கி, காதல் போதும் என்று விலகுவதற்கும் இடையில்தான் எத்தனை வேற்றுமை.
சகல காரணங்களுக்காகவும் காதலை முடித்துக்கொள்வது, காதலை நிறுத்திக்கொள்வது, விலகித் திசை வேறாவது, இவையெல்லாம் ப்ரேக்கப் வகையறாவில் வரும். காதலை ரொமாண்டிசைஸ் செய்வதில் எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, ஏறக்குறைய தொண்ணூறுகளின் இறுதி வரை, கொத்துக் கொத்தாகப் பல படங்களைச் சுட்டிக்காட்ட முடியும். கண்களுக்கு விருந்தாவதற்கு முன்பு, காதுகளையும் மனத்தையும் ஒருங்கே நிறைத்துத் தந்தவை பாடல்கள்.
உறவுக் குழப்பமாக, மேல்வர்க்கத்து விளையாட்டாக, பெரும்பாலும் கதையாளப்பட்டுக்கொண்டிருந்த காதலை, எளிய மனிதர்களின் இயல்பான வரித்தலாக, எழுபதுகளின் பின்பகுதிப் படங்கள் டீல் செய்தன. சாதி, வர்க்கம், இனம், மொழி, மதம் எனப் பல காரணங்கள், நிஜத்தை விடக் குரூரமாகத் திரைப்படங்களிலும், திரைப்படுத்த முடியாத வன்பொருளாக நிஜங்களிலும், மாறுவதற்கான வழிகளையும், சமூகமும் திரையும் சேர்ந்தே உற்பத்தி செய்தன. காதலைச் சொல்ல முடியாமற் போனபோதும், காதல் ஏற்கப்படாத கையறு நிலையிலும், பரஸ்பரம் காதலைப் பரிமாறிக் கொள்ள இயலாமற் போனபோதும், காதலைத் தொடர முடியாமற் போனபோதும், இன்ன பிற காரணங்களாலும் சேராக் காதல் திரைப்படங்களில் ஒரு காவிய அந்தஸ்தைப் பெறுவதற்கு வாழ்க்கையிலும் காதல் தோல்வி சார்ந்த துக்க மேலாண்மையை நிர்வகிப்பதற்கும், புண்களையும் மருந்துகளையும் ஒருங்கே அளித்தவை இத்தகைய ப்ரேக்கப் பாடல்கள் என்று சொல்லலாம்.
இன்று ஒருபுறம் ப்ரேக்கப் என்பது மிக எளிய, புழக்கத்துக்கான காதலின் இயல்பான ஒரு நீட்சியாக திருமணம் என்றால், அதன் வெளியேற்றமாக விவாகரத்தை முன்வைக்கிற அதே பாங்கில், இன்னொரு நீட்சியாக லிவிங் டுகெதர் எனப்படும் சேர்ந்து வாழ்தலையும், ப்ரேக்கப் எனப்படும் காதல் போதும் எனும் நிலையையும், கண்டு உணர முடிவது போல் முன்பு இருந்ததில்லை. காதலில் சேர்ந்தவர்கள் மட்டும் ப்ரேக்கப் எனும் நிலையை எய்தியதில்லை. மாறாக, சொல்லிக்கொள்ள முடியாத காதலில் தொடங்கி, இனித் தொடரமுடியாது என்றான பிறகு, முடிவெடுப்பது வரை எல்லாமும் அன்றைய ப்ரேக்கப்புகள்தான். காலம் வெவ்வேறானது என்பதற்குச் சான்றளிக்க, தன் காதலை ஏற்க மறுக்கையில் பெரும்பாலும் ஆடவன் காதலித்த பெண்ணை உடல்ரீதியாக பங்கப்படுத்துவது தொடங்கி, கொலை செய்வது வரை இன்று பெருகியிருக்கிறது. முன் பழைய காலத்தில், எண்பது தொண்ணூறுகளில் கூட, காதல் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சேர முடியாத, பிரிந்த, பழைய, ரகசிய காதல்கள் அனைத்தும் முன்பு புனிதமான ஓரிடத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்தன.
70களில் தமிழ் சினிமாவின் முகம் மாறியது காதல் வர்க்கங்களையும் சாதி மதத்தையும் நிலத்தையும் தாண்டி தாண்டிய ஒரு உணர்வாக படங்களில் இடம்பெறத் தொடங்கியது காதலின் அளவு கூடும் பொழுது அதன் எல்லை விரியும் பொழுது தோல்விக்கான சந்தர்ப்பங்களும் அதிகமாயின காதல் தோல்வி பாடல்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திலும் ஒன்றாவது இடம்பெறும் அளவுக்கு 70 களின் மத்தியில் இருந்து 90களின் எல்லை வரை காதல் தோல்விக்கான பொற்காலமாகவே கருதக்கூடிய அளவுக்கு பாடல்கள் வலுத்து ஒலித்தன
நெஞ்சே குழப்பத்தின் தாயல்லவா
நெஞ்சே குழப்பத்தின் தாய் அல்லவா என்று போகிற போக்கில் ஒரு வரியை சினிமா பாடல் ஒன்றின் நடுவில் யார் தான் எதிர்பார்த்து இருக்க முடியும்? ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ என்று தொடங்கும் அந்த பாடலில் ‘ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ’ என மனித மனதின் ஊசலாட்டத்தை வாழ்வின் பல்வேறு தருணங்களை உதாரணப்படுத்தி சொல்லிக் கொண்டே போக முடியும் என்றாலும் காதல் என்கிற சமாச்சாரம் மற்ற எதை விடவும் மனதை கலங்கடித்து விடக் கூடியதாக இருக்கிறது என்பதை இந்தப் பாடலின் இரண்டு வரிகள் எழுதி இசைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த பிறகும் மாறா சூரியன் போல அதே இடத்தில் நின்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ
இது ஏதோ ஒரு நாயகன் ஒரு நாயகி சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் என்று எண்ணி விட வேண்டாம் 70 களின் மத்தியில் தொடங்கி 90களில் பிற்பாடு வரை தமிழ் சாமானிய யுவயுவதியரில் மனவிளக்க வரைபடம் என்று இந்த இரண்டு வரிகளை சுட்டிக்காட்ட முடியும். அவ்வளவுதான் சார் லவ்.
தன் நண்பனுக்கு நிச்சயமான பெண் என்று தெரிந்ததும் காதலைத் தன் மனத்தோடு புதைத்துக்கொண்டு, தேம்பித் தேம்பிக் கண் கலங்குவார் ஆனானப்பட்ட எம்ஜிஆர். தன் முறைப்பெண்ணின் காதல் அறிந்து, அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பார் அசோகன். ப்ரேக்கப்பின் ஆரம்பகால வலிகளை “அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே,” (சிவாஜிக்கு மகளைப் பிரிந்த சோகம், முத்துராமனுக்குத்தான் அது ப்ரேக்கப், வலி) எனும் பாடலும், “நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன், திருக்கோவிலே ஓடிவா” என்ற பாட்டும் “அந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்” எனும் வரிகளும் “நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று” என்கிற வரைவிலக்கணமும் “என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,” எனும் கண்டனமும், “போனாள், அவள் போனால் நான் பார்ப்பேன் நூறிடம்” என்கிற ஏளனமும், இன்னும் பல நூறு பாடல்களும் ப்ரேக்கப் தோட்டத்துப் பாடல் மலர்களாகின.
முதல் மரியாதை படத்தைக்கூட காதலைத் தியாகம் செய்வதற்கான காரணங்கள் வெவ்வேறாக அடுக்கப் பட்டிருந்தாலும் அந்தக் காலகட்டத்தின் ப்ரேக் அப் என்று கூட அதனை வகைப்படுத்த முடியும்.
எண்பதுகளில் புயலாய்க் கிளம்பியவர் முரளி. இதயம் முரளி என்றே இன்றளவும் கொண்டாடப்படுகிற மறைந்தும் மறையாத நல் நடிகர். அவர் வரிசையாய்க் காதல் சார்ந்த படங்களைத் தேர்ந்து எடுத்து ஜொலித்தார். காதலின் பல அடுக்குகளைப் பிரதிபலித்தார் முரளி. காதலின் இருப்பும் இழப்பும் என்னவாக இருந்தாலும் அதனை மடைமாற்றித் தருவதற்கான மன-மேனேஜர்களாகவே முரளியின் பல பாடல்கள் இன்றளவும் ஒலிக்கின்றன. முரளியின் முதற்படமான பூவிலங்கு தொடங்கி கீதாஞ்சலி-பகல்நிலவு-காலமெல்லாம் காதல் வாழ்க-தினந்தோறும்-காதலுடன்-பூமணி-உன்னுடன்-ஊட்டி- என ஒரு டஜன் படங்களாவது காதலை மையப்படுத்தி நடித்தார் முரளி. அத்தனையிலும் கைக்கொள்ளாத சூப்பர் ஹிட் பாடல்களும் அமைந்த வகையில் ப்ரேக் அப் காலகட்டத்திலும் கொண்டாடப்படுகிற காதல் சோக ராஜாவாகவே முரளியைச் சொல்ல முடிகிறது.
எண்பதுகளின் காதல் ராஜா டி.ராஜேந்தர் தான். வசனங்களிலும் பாடல்களிலும் காதலைப் போற்றியும் சோகத்தைத் தொழுதும் பலவிதமான பங்களிப்புகளைத் தந்தவர் அவர்.
ஒருதலை ராகம் என்ற படம் ரிலீசாகும் பொழுது அது காதலர்களுக்கான சர்வகாலப் பிரகடனமாகவே மாறப் போகிறது என யாரும் யூகித்திருக்கவில்லை. கைகூடாத காதலை எண்ணி அந்த ஏக்கத்திலேயே உருக்குலைந்து தளர்ந்து மரணத்தை முத்தமிடும் தருவாயில் அவன் காதலை ஏற்கும் மனத்துடன் தேடி வரும் நாயகி என்று கதை செய்தார் ராஜேந்தர். அரங்கங்கள் கண்ணீர் மழையில் நனைந்தன. இது குழந்தை பாடும் தாலாட்டு நான் ஒரு ராசியில்லா ராஜா என் கதை முடியும் நேரமிது வசந்தம் பாடி வர என்றெல்லாம் ஒருதலை ராகத்தின் பாடல்கள் வான் கிழித்தன. தொடர்ச்சியாக ரயில் பயணங்களில் –உயிர் உள்ளவரை உஷா-மைதிலி என்னைக் காதலி என்றெல்லாம் பயணித்து மோனிஷா என் மோனலிசா வரை காதலுக்கான கதகளியாட்டமாகவே தன் இசையையும் பாடல்களையும் புனைந்தளித்தார் ராஜேந்தர். சுரேஷ் நதியா நடிப்பில் வந்த பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற படத்துக்கு இசையமைத்துக் கவியெழுதியவரும் ராஜேந்தரே.
ரஜினி எல்லாவற்றைப் போலவும், இதிலும் குழப்பவாதி. “நீ விரும்புகிற பெண்ணைவிட உன்னை விரும்புகிற பெண்ணைக் காதலி” என்று ஒருமுறை சொன்னார். சொப்பனத்தில் கண்ட அற்புதத்தை மலைவாசத்துக்குக் கடத்திச்சென்ற கமலஹாசன், “மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டிப் புனிதமானது” என்றார். இன்று மாண்புமிகு முதல்வராக இருக்கும் விஜய்யோ, இன்னும் ஒருபடி மேலே போய், “காதல் ஒருமுறைதான் பூக்கும், மறுபடியும் பூக்காது” என்றார். சென்ற நூற்றாண்டின் கட்டக் கடைசியில் கண்கவர்ந்த சிம்ரனை கரெக்ட் செய்வதற்காக, தான் ஒருமுறை கூட சந்தித்திராத ஜோதிகாவை, கவர்ந்து காதலித்து சேர்ந்து பிரிந்து தோற்றாற் போல் கதை புனைந்து அஜித் ஏமாற்றியது அல்டிமேட்.
மின்சாரக்கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கத் தாமரை மகளே என்கிற பாடல் காதல் ஏக்கத்தைப் பறைசாற்றும் பாடலாக அரவிந்த்சாமி தன் காதலி கஜோலை நினைத்துப் பார்க்கும் பாடி பார்க்கும் பாடலாக ஒலித்தது அந்தப் படத்தை பார்த்துவிட்டு என் நண்பன் ரமணி என்னிடம் “என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பாடல் ஒரு சோகப்பாடல்தான். காதல் தோல்வியை போலவே ஒரு தலைக் காதலின் ஏக்கமும் கூடக் காதல் தோல்விக்கு நிகரானது தான்,’’ என்று சொன்னான்.
மன்மதன் திரைப்படத்தில் சொல்ல முடியாத காதல் தனக்குள் என்னவாய் மலர்ந்து கிடக்கிறது என்பதை காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்கிற பாடலில் மறைந்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் குரலில் யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்பு நடித்தார். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான மிக மிக வன்மையான காதல் ஏக்கப் பாடலாக அதனை முன் வைப்பேன்.
90 களின் எல்லைவரை ஏன் இந்த நூற்றாண்டின் ஆதி வருடங்களில்கூட அன்பின்-நட்பின்-உறவின் எல்லா நாற்காலிகளையும் நிரப்புகிற மந்திரவாதத்தைப் பாடல்கள் செவ்வனே செய்தன. இன்றைய ப்ரேக் அப் காலத்தின் உலர்ந்த தருணங்களை நிரப்பித் தருவதற்கான பாடல்கள் இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் அப்படியான பாடல்களுக்கான தேவையும் இல்லை; ஆகவே அளிப்பும் இல்லை என்று புரிந்து கொள்வது தான் சரியாக இருக்கும். அந்த வகையில் ஒற்றை நாற்காலியில் தனியே அமர்ந்திருக்கும் நொறுங்கிய மனம் கொண்ட யாரேனும் தம்மை ஆற்றுப் படுத்திக் கொள்ள சென்ற நூற்றாண்டின் அதே-பாடல்களைத்தான் சரணடைந்தாக வேண்டும் என்பதும் திண்ணம்!