தனியாக ஜெயிக்க முடியாது; ஜனநாயக சாத்தியம் இதுதான்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. கால் நூற்றாண்டாக அரசியல் இயக்கமாகப் பயணம் செய்திருக்கும் வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவனை அந்திமழை சார்பாக சந்தித்து விரிவாகப் பேசினோம்.
முதல் முறையாக மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற்றிருப்பது குறித்து... அதன் முக்கியத்துவம் என்ன எனக் கருதுகிறீர்கள்?
இது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நீண்டகாலப் போராட்டம் இது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது இரட்டை இலை சின்னத்தில் நிற்கும்படிக் கூறினார்கள். நாங்கள் தனிச் சின்னத்தில் நின்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற விரும்புகிறோம் எனக் கூறினோம். ஜெயலலிதா அம்மையார் மறுப்பேதும் இன்றி இசைவு தந்தார். அப்போது இரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றோம். பின்னர்வந்த தேர்தல்களில் இதை முன்னிறுத்திதான் இடங்களைக் கேட்டுப்பெறுவது என்ற முயற்சியில் ஈடுபட்டோம். இரு எம்.பி.கள் வெற்றி பெறுவது, 7 எம்.எல்.ஏ.கள் வெற்றி பெறுவது, 8 சதவீத வாக்குகள் பெறுவது என தேர்தல் ஆணையத்தில் சில வரையறைகள் உண்டு. இதைத்தான் பூர்த்திசெய்ய இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. தனித்துப் போட்டியிட்டு எங்கள் வாக்கு வங்கி என்ன என்று இதுவரை நாங்கள் காணவில்லை. தொடக்க காலத்திலிருந்து கூட்டணியில்தான் இடம்பெற்றோம். பல கட்சிகள் இருக்கும்போது தொகுதிகளைப் பகிர்வதில் சிக்கல் உண்டு. எனவே அதிக இடங்களில் போட்டியிட முடியவில்லை. இம்முறை தனிச் சின்னத்தில் இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அந்த வேட்கை நிறைவேறி உள்ளது. மகிழ்ச்சி!
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்புரீதியாக உருவானபோதே தேர்தல் புறக்கணிப்பு என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இன்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம்.. நீண்ட தொலைவு வந்துவிட்டீர்கள் அல்லவா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது சாதி அமைப்பு என்கிற பார்வை உண்டு. இது ஒரு சவால். இப்படி முத்திரை குத்தி ஓரங்கட்டப்படும் முயற்சியை எதிர்கொண்டு வந்துள்ளோம். அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சி என்ற அங்கீகாரத்தை வென்றெடுக்கவேண்டும். அதற்கான செயல்திட்டங்களை வகுப்பது சாதாரணமான விஷயமில்லை. நாம் தலித் பிரச்சனைகளை மட்டும் பேசவேண்டும். அத்துடன் நின்றுகொள்ளவேண்டும் என்கிற பார்வை பலரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. நாங்கள் அதிகமாக ஈழத்தமிழர் பிரச்னை, தமிழ் தேசியம் பேசுவதாக சொன்னார்கள். எங்களுக்கு பொருளாதார, ஊடகப் பின்னணி, அரசியல் பாரம்பரியம் இல்லை. இவ்வளவு பின்னடைவுகள் இந்தக் களத்திலே உண்டு. இதைத் தாண்டி தாக்குப் பிடிப்பதே ஒரு சாதனை. எங்களுடன் தொடங்கிய பல இயக்கங்கள் காணாமல் போய்விட்டன. இன்று பொதுநீரோட்ட அடையாளத்தைப் பெற்றிருக்கிறோம் என்றால் அந்தப் பயணத்தை இந்த ஒரு பேட்டியில் சொல்லிவிட முடியாது.
இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?
சமூக அமைப்பு என்கிற கட்டத்திலிருந்து அரசியல் அமைப்பு என்ற அங்கீகாரத்தை அடைய 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. அதுவும் முழுமையாக அரசியல் கட்சி என்ற பரிணாமம் பெற்றுவிட்டது எனச் சொல்ல முடியாது. கருத்தியல்ரீதியாக பெற்றுள்ளோம் என்றாலும் கட்சிக்குள் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டுமே உள்ளது. ஒரு அரசியல் கட்சி என்ற முழுமையைப் பெறுவதற்கு உள்ளீடான மேலும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. எனவே இதை அகநிலை மாற்றங்களுக்கு உட்படுத்தி வருகிறோம். கட்சிக்குள் தலித் அல்லாதார், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளே வரவேண்டும் என மாறுதல்கள் செய்துவருகிறோம். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் தலித் அல்லாதோர் இடம்பெறவேண்டும். இதற்காக நாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளான சமத்துவம், சாதி ஒழிப்பு ஆகியவற்றை விட்டுவிட்டோம் என அர்த்தம் இல்லை. இவற்றை உள்வாங்கிக் கொண்ட தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளே வரவேண்டும். முக்கிய அதிகாரப் பொறுப்புகளில் அவர்கள் இடம்பெற வேண்டும். அதனால் கட்சியை மறுசீரமைப்புக்கு உட்படுத்துகிறோம். தலித் அல்லாதோருக்கு 10% பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கி இருக்கிறோம். மேல் மட்டத்தில் பொறுப்பு தரலாம்; ஆனால் மாவட்ட அளவில் தருவதில் பிரச்னை ஏற்படும். அதைச் சமாளித்து அவர்களை அரசியல்படுத்தி ஒன்றிய, மாவட்ட நிர்வாகங்களில் தலித் அல்லாதோரை உள்வாங்கி வருகிறோம். பெண்கள், இளைஞர்களைக் கொண்டுவருகிறோம். இதை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு செயல்திட்டமாக்கி, 25% இளைஞர்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கி உள்ளோம். 10% பெண்களுக்கு மா.செ. பொறுப்பு வழங்கி உள்ளோம். இதை ஏற்கும் பக்குவம் எங்கள் கட்சிக்குள் உருவாகி உள்ளது. இதுதான் முழுமையான அரசியல் கட்சி என்கிற பரிமாணத்தைத் தரும். அதன் பின்னர்தான் நாங்கள் சாதிக்கமுடியும்.
தமிழ்நாட்டின் பிற கட்சிகளுடன் உறவும் பிரிவும் கொண்டிருந்த அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறது... எந்தெந்தக் கட்சித் தலைவர்கள் உங்கள் இதயத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள்?
நாங்கள் அரசியலுக்கு வரலாம்; ஒரே ஒரு தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று முடிவெடுத்தபோது, முக்கியமான குறுக்கீட்டைச் செய்தவர் மூப்பனார். நான் தேர்தல் அரசியலுக்கு வெளியே இருந்த வரையிலும் அவரை ஒரு நிலச்சுவான்தார் மனப்பான்மை உடையவர் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் எங்களை அழைத்துப் பேசியபிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது. அவரைச் சந்திக்கச் செல்லும்போது அக்கட்சியின் மூத்த தலைவ்ர்கள் சிலர் அவரைச் சந்திக்கவிடாமல் தடுப்பார்கள்.
அதை எப்படியோ தெரிந்துகொண்டு அவர் நான் செல்லும்போது முதல் மாடியிலிருந்து கீழே வந்து என்னை அழைத்துச் செல்வார். நான் அப்போது அரசு வேலையில் இருந்தேன். அதனால் வேறொருவரை எங்கள் கட்சியிலிருந்து நிறுத்தலாம் என்று சொன்னேன். அப்போது நான் பெரிய அளவு தெரியப்பட்ட ஆளும் இல்லை. ஆனால் அவரோ என்னை அரசு வேலையை விடும்படி சொன்னார். தேர்தல் அரசியல் வேண்டாம் என்று சொன்னவன் நான்; எனவே போட்டியிட வேண்டாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர் சொன்னபடி வேலையை ராஜினாமா செய்தபோது என் மீது இருந்த ஒரு விசாரணைக் கோப்பால் அது ஏற்கப்படவில்லை. நல்லதாகி விட்டது என நான் அவரிடம் சொன்னபோது, என் முன்பாகவே சத்தியமூர்த்திபவனிலிருந்து உள்துறைச் செயலாளருக்கு போன்செய்து என்னை ரிலீவ் செய்யுமாறு சொன்னார். அதன் பின்னர்தான் நான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு உந்துசக்தியாக அவர் இருந்திருக்கிறார். எனக்கு எதிராக அப்போது விமர்சனங்கள் வந்தபோது அவர் திருமாவளவன் சாதாரண மக்களின் குரலை ஒலிக்கிறார் என்றும் அவர் பக்கம் நிற்பேன் என்று பிரகடனமாக அறிவித்தார். கலைஞர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களும் என்னை அரவணைத்திருக்கிறார்கள். ஆதரவு காட்டி இருக்கிறார்கள்.
மருத்துவர் ராமதாசுடன்கூட நெருக்கமாக இருந்தீர்கள்?
அந்தக் காலகட்டத்தில் அவர் என்மீது உண்மையாக அன்பு செலுத்தினார். அதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் அவரது அரசியல் உத்தி மாறியபோது என்னை எதிர்த்தரப்பாக சித்திரித்துவிட்டார். தலித் எதிர்ப்பு, திருமாவளவன் எதிர்ப்பு என்பதே வன்னியர் வாக்குகளைப் பெறும் வழி என்பதை அவர் ஓர் உத்தியாக கையில் எடுத்தபின்னர்தான் நிலைமை மாறியது.
வன்னியர், தலித் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் பேசியிருந்த வீடியோ ஒன்று, சமீபத்தில் வைரல் ஆனது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்கெனவே அதைக் கடந்துவந்தவர்கள் நீங்கள்...
இத்தனை தொகுதிகளை வெல்லலாம் என்கிற அரசியல் ஆதாயக் கணக்கு ஒரு போதும் வெற்றி பெறாது. நானும் ராமதாஸ் அவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்ளும் கொள்கையை அவர் ஏற்கவேண்டும்; அவர் சொல்வதை நான் ஏற்கவேண்டும். நான் சாதி ஒழிப்பில் உறுதியாக இருக்கிறேன். அவர் அதில் உறுதியாக இருக்கிறாரா? அதெல்லாம் இல்லை. தேர்தலுக்காகத்தான் சேர்கிறோம் என்றால் உண்மையான ஒற்றுமை இருக்காது. தேர்தலுக்காகச் சேர்ந்ததால்தான் அது உடைந்துபோயிற்று. இரண்டு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று அப்போது நான் நம்பினேன். ஆனால் அது தேர்தல் கணக்கு என்பது பின்னர் புரிந்தது. தேர்தல் கணக்கில் மக்கள் எதிராக மாறினார்கள். திமுக, பாமக, விசிக மூன்று சேர்ந்து நின்றே 2011 தேர்தலில் வட மாவட்டங்களில் பெரிய தோல்வி. திமுக மூன்றாவது இடம் சென்று, விஜயகாந்த் எதிர்க்கட்சி ஆனார். அப்போது திமுகவுக்கு எதிராக 2ஜி பிரச்சாரம் இருந்தது. ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. வன்னியர், தலித் வாக்குகள் ஒன்றாக இருந்தபோது வெற்றி கிடைக்காமல் போனது. சேர்ந்தே ஜெயிக்க முடியவில்லை; எனவே எதிர்த்து ஜெயிப்போம்; அப்போதுதான் வன்னியர்களை ஒருங்கிணைக்கமுடியும் எனக் கணக்கிட்டு, அதை சமூகக் கட்டுமானம் (Social Engineering) என்று அவர் சொல்கிறார்.
இதேபோல, தலித்துகளும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணையவேண்டும்; ஆனால் அந்த ஒருங்கிணைப்பை நீங்கள் தடுப்பதாக விமர்சனமும் உள்ளதே?
இது அரசியல் புரிதல் இல்லாத ஒரு விமர்சனம். நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அரசியல் இயக்கமாக இருந்து இந்த விஷயத்தைப் பார்த்தால் நான் சொல்வதன் நியாயம் புரியும். ஒரு சாதிய இயக்கமாக மட்டும் இருந்து நான் சொல்வதைக் கேட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சின்ன கணக்கு... சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 4 லட்சம் தலித் வாக்குகள் இருப்பதாகக் கொள்வோம். 100 விழுக்காடு அவர்கள் எனக்கு வாக்களித்தாலும் நான் வெல்லமுடியுமா? இதுபோல உலகத்தில் எங்கும் 100 விழுக்காடு மக்களும் ஒருசேர வாக்குப்போடவும் மாட்டார்கள். ஐந்து லட்சம் வாக்குகள் வாங்கி நான் ஜெயிக்கிறேன். இதில் மூன்றரை லட்சம் வாக்குகள் தலித் வாக்குகள் என வைத்துக்கொண்டாலும் மீதி ஒன்றரை லட்சம் வாக்குகள் தலித் அல்லாதார் வாக்குதானே..? இதுதானே அரசியல்?
முன்னர் உ.பி.யில் பாஜகவுடன் சேர்ந்துதானே சாதித்தார்கள்? நேர் எதிரான கட்சியான பாஜகவுடன் கன்சிராம் கூட்டணி வைத்து அதிகாரத்தைப் பிடித்தார். அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்றால் தலித் அல்லாத ஜனநாயக சக்திகளின் ஆதரவும் தேவைப்படுகிறது. திமுக, அதிமுக மாதிரி அமைப்புரீதியாக நாம் வளர்ந்திருக்கிறோமா என்றால் இல்லை. எஸ்.சி. மட்டும் ஒருங்கிணைந்திருந்தால் அவர்களால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 20% பூத்களில் மட்டும்தான் ஆள் போடமுடியும். இந்தியா முழுக்கப் பார்த்தால் 20%தான் தலித் வாக்குகள்... இதெல்லாம் நடைமுறைச் சிக்கல்கள்.
தலித்துகளை ஒன்றிணைப்பது ஓர் உத்தி. சாதியவாத நோக்கில் அது சரி. ஆனால் ஜனநாயக நோக்கில், சமத்துவம் என்கிற கோட்பாட்டில் அது வெற்றியைக் கொடுக்காது. தலித் ஒன்றிணைவு எவ்வளவு முக்கியமோ அதுபோல ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவும் முக்கியம். சமூக ஒற்றுமை என்பதும் அரசியல் வெற்றி என்பதும் வேறு வேறு. அரசியல் வெற்றியை நோக்கி நகர அரசியல் இயக்கமாக இருந்து பிரச்னைகளை அணுகவேண்டும். சமூக இயக்கத்தின் இலக்கும் அரசியல் இயக்கத்தின் இலக்கும் வேறானவை.
சுயசாதி பெருமை பேசுகிறவர்கள் உண்மையான அம்பேத்கரியர்களாக இருக்கமுடியாது. அம்பேத்கர், பெரியாரைப் பேசுகிறவர்களுக்கு சாதிப்பற்று இருக்காது. சாதிப்பெருமை பேசுகிறவர்கள் சனாதன சக்திகளுக்குத் துணைபோகிறார்கள். திமுகவுடன் இருப்பது தலித் ஒற்றுமைக்கு எதிரானது இல்லை. அவங்க ஓட்டு நமக்கு; நம்ம ஓட்டு அவங்களுக்கு. தனியாக நின்றால் எல்லா இடங்களிலும் வாக்கு வாங்கலாம்; ஆனால் ஜெயிக்க முடியாது. சாதி ஒழிப்பு என்பதே மைய நீரோட்டத்துடன் கலப்பதுதான். உனக்கு தனிக் கோவில் என்றால் இல்லை உன் கோவிலில்தான் கும்பிடுவேன். தனிப் பள்ளி என்றால் இல்லை, எல்லோருக்குமான பள்ளியில்தான் படிப்பேன். உனக்குத் தனிப்பாதை என்றால் இல்லை எல்லோருக்குமான பாதையில்தான் நடப்பேன். இதுதான் சாதி ஒழிப்புப் போராட்டம்! தனித்துப் போனால் சுய தனிமைக்கு இட்டுச் செல்லும்.
உங்கள் தனிப்பட்ட உலகம்.. இசை… சினிமா இப்படி?
நான் படிக்கும்போதுகூட சினிமாக்களுக்குப் போவதைவிட அரசியல் கூட்டங்களுக்குத்தான் போயிருக்கிறேன். நிறைய மார்க்சிய மாணவர்கள் என் விடுதிக்குத் தேடி வருவார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தேடி வந்துள்ளனர். இசை கேட்பதுண்டு.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்குப் பின் நீங்கள் இரண்டு நாள்கள் அங்கே இருந்தீர்கள்... விசாரணையின் போக்கு எப்படி இருக்கிறது?
எனக்கு மிக அதிர்ச்சி அளித்த நிகழ்வு அது. சரண்டர் ஆனவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பத்திரிகையாளர்களுக்குச் சொன்னதன் காரணம் இவர்களுக்குப் பின்புலமாக இருப்பவர்களை விட்டுவிடக்கூடாது என்ற பதற்றத்தில். என்னுடைய கவலை இந்த மாதிரி கொலை நடக்கையில் இதற்குத் திட்டமிட்டமிட்டவர்கள், ஏவியவர்கள் ஆகியோரைத் தேடி காவல்துறை வேர்வரை போவது இல்லை. சரணடைந்தவர்களைக் கைது செய்வதுடன் நிறுத்திக்கொள்வார்கள். பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகளில் இவர்கள் விடுதலை ஆகிவிடுவார்கள். காசுக்காக சரண் அடைந்தவர்களாக இருப்பார்கள். இந்தக் கொலையில் இவர்களே உண்மையாகச் செய்திருந்தாலும் திட்டமிட்டவர்கள் வேறு யாராவது இருப்பார்கள் என்பதால்தான் சொன்னேன். இதன் பிறகு காவல் ஆணையர் மாற்றப்பட்டு வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்போது இதன் பின்னால் இருக்கும் வலைப்பின்னல் வெளிவருகிறது. பாஜகதான் முதலில் சிபிஐ விசாரணை கேட்டது. எடுத்த எடுப்பில் ஏன் அவர்கள் கேட்டார்கள்? மாயாவதியும் சிபிஐ விசாரணை கேட்டார். அவர் கேட்டதில் ஒரு நியாயம் உள்ளது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இருக்கிறது, ஆனால் மாயாவதி சொன்னதை புறக்கணிக்க முடியாது என்றேன். ஆனால் சமூக வலைதளங்களில் நான் சிபிஐ விசாரணை கேட்டதாகப் பரவி விட்டது. பாஜககாரர்களுக்கு தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லாதபோது எனக்கு எப்படி சிபிஐ மீது நம்பிக்கை வரும்? இந்தப் புலன்விசாரணையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிக வேகமாக நடக்கிறது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த விசாரணையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ரஞ்சித் நடத்திய கூட்டத்துக்குப் போகவேண்டாம் என நீங்கள் சொன்னது சர்ச்சை ஆகிவிட்டதே…
இது கோ இன்சிடென்சாக(coincidence) நடந்துவிட்ட ஒரு நிகழ்வு! ஜூலை 20 ஆம் தேதி இப்படி ஒரு கூட்டம் நடப்பதாக அவருடைய இரு உதவியாளர் தம்பியர் என்னைச் சந்தித்து அழைத்தனர். அந்த நாளில் எனக்கு மா.செ. கூட்டம் இருந்தது. மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன், யோசித்துச் சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு நான் அரியலூருக்குச் சென்றுவிட்டேன். அங்கே இரவு பதினொன்றரை மணிவரை நிகழ்ச்சிகள். அந்த சமயம் இந்த தம்பிகள் போனில் அழைத்திருக்கிறார்கள். இரவில் தாமதமாக அவர்களை அழைத்தேன். சென்னை வந்து பேசுகிறேன் என்று கூறினேன். 19ஆம் தேதி எனக்கு நிறைய நிகழ்ச்சிகள். 20ஆம் தேதி மா.செ. கூட்டத்தை ஜூம் கூட்டமாக நடத்த முடிவுசெய்தோம். அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டம். நான் செல்லவேண்டும். 20, 21, 22இலிருந்து நாடாளுமன்றம். அச்சமயம் என்னிடம் போனில் அழைத்த அந்தத் தம்பிகளிடம், ’என்னுடைய நிகழ்ச்சிகள் இப்படி இருக்கின்றன; வேண்டுமானால் சிந்தனைச் செல்வன் அவர்களை கலந்துகொள்ளச் சொல்கிறேன்; யோசித்துச் சொல்லுங்கள்’ என்றேன். அதன் பின்னர் அவர்கள் என் லைனில் வரவே இல்லை.
இதற்கிடையில் எங்கள் தோழர்களுக்கு பேஸ்புக் லைவில் பேசினேன். மா.செ. கூட்டம் ஜூமில் நடப்பதை அறிவித்தேன். இன்னொரு விசயம் நாம் சிபிஐ விசாரணை கேட்டதாக நம்மீது சமூக ஊடகங்களில் தவறாகச் சொல்கிறார்கள் என்பதை விளக்கிச் சொன்னேன். ’நம் கட்சித் தோழர்கள் பல மாவட்டங்களில் ஆம்ஸ்ராங் கொல்லப்பட்டதை அறிந்து தன்னியல்பாக மறியலில் ஈடுபட்டார்கள். சில மாவட்டங்களில் பிஎஸ்பி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டங்களில் பல உதிரி கட்சிகள், பாஜகவினர் கலந்துகொண்டு திமுகவுக்கு எதிராக கோஷமிடுகிறார்கள். அதில் நாங்கள் கலந்துகொள்வதா என பொது வழிகாட்டல் கொடுங்கள்’ எனக் கட்சித் தோழர்கள் கேட்டிருந்தனர். எனவே நான் பேச வேண்டியதாயிற்று. இச்சமயம் நிறைய உதிரிகள் இந்தப் பிரச்னையில் எனக்கு எதிராக பல விஷயங்களைப் பரப்பினர். எனக்கும் கொலையில் தொடர்பிருப்பதாகவும் பரப்பிக்கொண்டே இருந்தனர். எனவே தான் ‘சிலர் கூலியைப் பெற்றுக்கொண்டு, சமூக ஊடகங்களில் திமுகவைவிட விசிகவை விமர்சிக்கிறார்கள். இத்தகைய சக்திகள் பங்கேற்கும் கூட்டங்களில் நீங்கள் பங்கேற்க வேண்டாம், ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து விசிக தனியே நிகழ்ச்சி நடத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருந்தேன். இதை அடுத்த நாள் நடக்கவிருந்த பேரணியில் நான் கலந்துகொள்ளவேண்டாம் என்று சொன்னதாக ஆகிவிட்டது. முன்னதாக இந்தப் பேரணியைப் பற்றி எனக்கு ஒரு தயக்கம் இருப்பதை அந்தத் தம்பிகளிடம் கூறினேன். எல்லாவற்றையும் தள்ளிவிட்டு பேரணிக்கு வருவதாக இருந்தால்கூட, யாரை அழைக்கப்போகிறீர்கள் எனத் தெரியாது; எனக்கெதிராக கோஷம் எழுப்பக்கூடும்; நான் இருப்பதாலேயேகூட நீங்கள் அரசை விமர்சித்துப் பேசத் தயங்கக்கூடும்; இந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்த என்னிடம் எந்த நாள் வசதியாக இருக்கும் என்று ஆலோசனை நடத்தி இருக்கலாம். செய்யவில்லை. அறிவித்துவிட்டு இரண்டு நாள் இடைவெளியில் சொல்கிறார்கள்.
இதெல்லாம் ஒருங்கிணைப்பில் முக்கியமான விஷயங்கள் இல்லையா? இந்த விஷயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்கிற முக்கிய பிரச்னை பற்றிய விவாதத்தை திருமா- ரஞ்சித் என்று மடைமாற்றம் செய்கிறது. இந்தப் படுகொலை விஷயத்தில் எங்கள் கட்சியால் நேர்மையாக என்ன செய்யமுடியுமோ அதைச் செய்திருக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் 40 எம்பிக்கள் இருந்தும் பிரயோசனம் இல்லை… என சொல்பவர்கள் பற்றி?
இது அவர்களின் அரசியல் அறியாமையைக் காட்டுகிறது. எம்.பி. என்பவன் சட்டத்தை உருவாக்குகிறவன். முக்கியமான விசயங்களில் நான் என்ன பேசுகிறேன் என்பதுதான் முக்கியம். இதில் நாற்பது பேரும் கேண்டீனுக்குப் போகிறார்கள் எனச் சொல்வது அறியாமை.