
எங்கள் இல்லறம் தொடங்கியது கடலூர் மாவட்டம் மருங்கூர் எனும் சிறு கிராமத்தில்.
முதலில் மகள் சிந்து பிறந்தாள். அடுத்தது ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமே. ஊரும் உறவும் அழுத்தத்தை உருவாக்கி இருந்தது. இரண்டாவதும் பெண் குழந்தை. ஊர் எங்களை அனுதாபத்தோடு பார்த்தது. ஆனாலும் குழந்தையின் கண்களில் பிரகாசம். சுடர் எனப் பெயரிட்டேன்.
சிந்து, சுடர் இருவரும் பள்ளி செல்ல ஆரம்பித்தார்கள். காலை எழுந்தது முதல் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடும் வரை பம்பரமாய் சுழல வேண்டியிருக்கும். இருந்தபோதும் இருவருக்கும் இரட்டை சடை கட்டிவிடும் அந்த நேரத்தை தமக்கான நேரமாக மாற்றி விடுவார்கள். அந்த நேரத்தில் உலகத்தின் ஏதோ ஒரு இடத்தில் அல்லது பக்கத்து தெருவில் நடந்த ஏதோ ஒன்றைப்பற்றி பேசிக் கொண்டிருப்போம். பெரும்பாலும் நான்தான் சொல்ல வேண்டியதாக இருக்கும். இருவரும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிந்து தொடக்கத்தில் சுமாராகத்தான் படித்தாள். பள்ளியில் தரும் ரேங்க் கார்டை ஒளித்து வைப்பாள். சுடரையும் வீட்டில் தெரியப் படுத்திவிடக்கூடாதென தன் கட்டுக்குள் வைத்திருப்பாள். பள்ளி வாகனம் வந்து வாசலில் நிற்கும். அந்த அவசரத்தில் ரேங்க் கார்டை காட்டி கையெழுத்து கேட்பார்கள் இருவரும். மதிப்பெண்களை சரிவர பார்க்கவோ அதுபற்றி விசாரிக்கவோ நேரம் இருக்காது.
ஒரு நாள் சிந்துவுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். டாக்டரின் வருகைக்காக காத்திருந்தோம். அவர் அங்கு வந்தபோது அனைவரும் எழுந்து நின்றார்கள். ஒரு அம்மா தன் குழந்தையைக் காப்பாற்றிய தெய்வம் என மருத்துவரைக் கையெடுத்துக் கும்பிட்டாள். அன்றிரவு,
'நானும் டாக்டருக்கு படிக்கப் போகிறேன்' என்றாள் சிந்து. அதன்பிறகு ரேங்க் கார்ட்டை ஒருநாளும் மறைக்கவில்லை. வகுப்பில் முதல் இரண்டு இடங்களை தவறவிடவுமில்லை. சுடருக்கும் அக்கா போலவே மருத்துவம் படிக்க ஆசை வந்திருந்தது. அவளும் முதல் ரேங்க்தான். உயர்நிலைக் கல்வி படிக்க அருகில் உள்ள நெய்வேலிக்கு இருவரையும் அனுப்பினோம். அது மத்திய அரசு சார்ந்த ஒரு பள்ளி. சொற்பமான கட்டணம். குழந்தைகளை 'படி' என்று வற்புறுத்தியதில்லை. வெகு நேரம் கண் விழித்துப் படித்தால் 'படுங்கள்' என்றுதான் சொல்லியிருக்கிறோம். டியூஷனுக்கும் அனுப்பியதில்லை. ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடைபெறும்.
கரும்பலகையில் சிந்து, சுடர் இருவரது பெயரும் பிரகாசிக்கும். 'யு ஆர் லக்கி பேரண்ட்ஸ்' எனப் பாராட்டுவார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிவிட்டு வந்ததும் சிந்து, சுடருக்கு என்னிடம் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். நானும் அப்போதுதான் பள்ளியில் இருந்து வந்திருப்பேன். சோர்வாக இருக்கும். ஆனாலும் பொறுமையாகக் கேட்பேன். அவர்களது கதைகளில் எனது சோர்வு அகலும்.
எங்கள் ஹால் சிறியது. எங்கள் படுக்கையறை சிறியது. எங்களது உணவு மேசை சிறியது. ஆனாலும் எங்கள் சிறிய வீட்டை தம் நற்பண்புகளாலும் அறிவுத்திறத்தாலும் இப்பெண் குழந்தைகள் விசாலமாக்கினார்கள். இவர்களோடு சேர்ந்து ஜெர்ஸி, ஃபெலீஷியா, லூஃபி இப்படி நாய்க்குட்டிகளும் வளர்ந்தன. அவர்கள் தம்மை வருத்திப் படித்ததில்லை. ரசித்துப் படித்தார்கள். சிந்து +2 முடித்தபோது, அவருக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அடுத்த ஆண்டு சுடருக்கு மருத்துவக் கவுன்ஸிலிங். அவரும் அக்கா படிக்கும் திருவாரூர் கல்லூரியை தேர்வு செய்தார்.
இருவரும் எம்.பி.பி.எஸ் முடித்த நேரம்.
நீட் தேர்வு வந்திருந்தது. சிந்துவுக்கு சர்ஜனாக விருப்பம். தனது அறையில் Keep working until oneday you can say 'scalpel please' என்ற வாசகத்தை எழுதி வைத்திருப்பார். அடுத்தடுத்த ஆண்டுகளில் பிஜி நீட் தேர்வுக்கு தயாரானார்கள். மீண்டும் மகள்களின் அறையில் விளக்குகள் எரிந்தன. அறிவுப் பசிக்கு இரவுகளை விழுங்கினர் பிள்ளைகள்.
சிந்துவுக்கு புகழ்பெற்ற எம்.எம்.சியில் இடம் கிடைத்தது. எம்.எஸ் (பொது அறுவை சிகிச்சை). அடுத்த ஆண்டு அதே கல்லூரி. அதே துறையில் சுடரும் சேர்ந்தார். இருவருக்கும் மணம் ஆயிற்று. சிந்துவின் திருமணம் காதல் திருமணம். மாப்பிள்ளை சபியாசாச்சியும் அறுவைச்சிகிச்சை நிபுணர். ஒடியாவை பூர்வீகமாகக்கொண்டவர். ராய்பூர் எய்ம்ஸ்சில் எம்.டி. படித்த பிரகதீஷ்வரன் சுடரின் மாப்பிள்ளையாக எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தார். சிந்துவுக்கு வியன் பிறந்தான். சுடருக்கு ஆழி.
வியனும் ஆழியும் முன் தொடக்கப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும் மகள்களின் படிக்கும் ஆசை குறையவே இல்லை.
சிந்து நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எழுதினார். அதே எம்.எம்.சியில் எம்.சி.ஹெச் (நியூரோ சர்ஜரி) படிக்கிறார். சுடர் சூப்பர் ஸ்பெஷாலிடி தேர்வுக்குத் தயாராகிறார்.
பெண் குழந்தைகளின் பாதைகள் வரலாற்றில் வளர்ந்தபடி இருக்கிறது. ராஜாராம் மோகன்ராய், பாரதியார், திரு.வி.க, பாரதிதாசன் போன்ற நல்ல மனிதர்கள், இந்தப் பாதையில் மைல் கற்களாக நிற்கிறார்கள். இந்தப் பயணத்துக்கு முடிவே இல்லை. சிந்து, சுடர் போன்ற கனவுகள் சுமந்த லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் வளர்க்கும் பாதை இது.