நான் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து ஓரிரு ஆண்டுகளாகியிருந்த நேரம். அப்போது நான் வேலை செய்த நிறுவனத்தில் எனக்கு மேலாளராக இருந்தவர் சொந்தத் தொழில் தொடங்க விரும்பினார், 'ஒரு வேளை, நான் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினால் நீயும் என்னுடன் இணைந்துகொள்வாயா?' என்று கேட்டார்.
மேலாளராக இருக்கிறவர் இப்படிக் கேட்கும்போது தொழிலாளனாக இருக்கிறவன் வேறென்ன பதில் சொல்லமுடியும்? 'கண்டிப்பாக இணைந்துகொள்கிறேன்' என்றேன்.
ஆனால், என் குரலில் சிறு ஐயம் இருந்தது. அதை என் மேலாளர் கவனித்திருக்கவேண்டும், 'இந்தத் தொழிலை எப்படித் தொடங்கி நடத்தவேண்டும், அதில் என்னென்ன சிக்கல்கள் வரலாம், அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்றெல்லாம் நன்கு சிந்தித்துத் தெளிவாகத் திட்டம் உருவாக்கியிருக்கிறேன். அதனால், நமக்கு எந்த ஆபத்தும் வராது!' என்று நம்பிக்கையாகப் பேசினார்.
அப்போது, என் மேலாளருடைய குருநாதர்களில் ஒருவர் அதே ஊரில் சொந்த நிறுவனம் தொடங்கிச் சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தார். அதனால், நாங்கள் இருவரும் அவரைச் சந்திக்கச் சென்றோம். என் மேலாளர் தான் தொடங்கவிருக்கும் புதிய நிறுவனத்தைப்பற்றி நன்கு விளக்கமாகப் பேசினார், அதன்பிறகு, 'இந்தத் திட்டம் சரிப்படுமா, அல்லது, இதில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யவேண்டுமா என்று எனக்கு அறிவுறுத்துங்கள்' என்று அவரைக் கேட்டுக்கொண்டார்.
அவருடைய குருநாதர் கரகரப்பான குரலில் 'திட்டமெல்லாம் சரியாகத்தான் உள்ளது. வாழ்த்துகள்' என்றார், 'ஆனால், ஒரு விஷயம் சொல்லவேண்டும்! உன்னுடைய திட்டத்தில் பலவிதமான ஆபத்துகளை, சறுக்கல்களை, எதிர்மறை விளைவுகளை எதிர்பார்த்து அதற்கெல்லாம் நல்ல மாற்று ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கிறாய். ஆனால், ஒரு வேளை, அதில் இல்லாத ஓர் ஆபத்து வந்தால் என்ன செய்வாய்?'
என் மேலாளர் திகைத்தார், 'நான் இன்னும் ஆழமாக யோசித்து மேலும் பல ஆபத்துகளைச் சேர்க்கவேண்டுமா?' என்று பதற்றத்துடன் கேட்டார்.
'இல்லை' என்று சிரித்தார் அவர், 'நீ எதிர்பார்க்காத, சிறிதும் எதிர்பார்க்கமுடியாத ஆபத்துகளும் கண்டிப்பாக வரும். அதற்கெல்லாம் யாரும் திட்டமிடமுடியாது. அதனால், பதறக்கூடாது, அந்த ஆபத்துகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும், சூழ்நிலையை ஆராய்ந்து, தீர்வுகளைக் கண்டறிந்து, அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துச் சிறந்த தீர்வைச் செயல்படுத்தி முன்னேறவேண்டும். அது சரிப்படாவிட்டால் இன்னொரு தீர்வு, இன்னொரு தீர்வு என்று சிக்கல் தீரும்வரை விடாமுயற்சியுடன் முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அதுதான் வழக்கமான நிறுவனங்களுக்கும் சிறந்த நிறுவனங்களுக்கும் நடுவிலிருக்கிற வேறுபாடு' என்றார்.
இந்த அறிவுரையைக் கேட்டபிறகு பெரிய நிறுவனங்களின் வெற்றிகளைக் கண்டு வாய் பிளப்பதைவிட, அவர்கள் தோல்விகளை, எதிர்பாராத சறுக்கல்களை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அந்தச் சிக்கல்களெல்லாம் நமக்கும் அப்படியே வந்துவிடப்போவதில்லை. ஆனால், நாம் எதிர்கொள்ளும் சிறிய, பெரிய சிக்கல்களைச் சமாளிப்பதற்கு அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, இனி எதிர்காலமே இல்லையோ என்கிற திகைப்பான சூழ்நிலையிலிருந்து மீண்டுவந்த நிறுவனங்கள் நமக்குப் பெரிய வாத்தியார்கள்.
எடுத்துக்காட்டாக, இன்று எல்லாருக்கும் தெரிந்த, நம் ஒவ்வொருவருடைய உள்ளங்கைப் பொழுதுபோக்காக இருக்கிற நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் திரைப்படங்களின் DVD தகடுகளை அஞ்சல்மூலம் அனுப்பிவைக்கிற சேவையாகத்தான் தொடங்கியது. நினைத்த நேரத்தில் படங்களை வாடகைக்கு எடுக்கலாம், நினைத்த நேரத்தில் திருப்பிக் கொடுக்கலாம், எல்லாம் நம்முடைய வீட்டு வாசலில் நடக்கும் என்பதால், அமெரிக்கர்கள் அந்நிறுவனத்துக்குப் பெரிய ஆதரவைக் கொடுத்தார்கள். மளமளவென்று வருவாய் கூடியது, லாபம் பெருகியது, மிக விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் ஊரறிந்த முன்னணி நிறுவனமாகிவிட்டது.
ஆனால், DVD அனுப்பிவைக்கும் தொழிலில் நன்கு கொழித்துக்கொண்டிருந்தபோதே அவர்கள் Streaming எனப்படும் இணையம் மூலம் படங்களை வாடிக்கையாளர்களுடைய வீட்டுக்கே இறக்குகிற தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மோப்பம் பிடித்துவிட்டார்கள். அப்போது இணையத்தின் வேகம் அவ்வளவாக இல்லாவிட்டாலும், இந்தப் புதிய சேவையைத் தொடங்கி மக்களை ஈர்த்தார்கள்.
அப்போது, நெட்ஃப்ளிக்ஸ் தலைவராக இருந்த ரீட் ஹேஸ்டிங்குக்கு ஒரு யோசனை: DVD, Streaming என இரண்டுக்கும் ஒரே சந்தா வாங்குவதைவிட, இவற்றை இரண்டாகப் பிரித்துத் தனித்தனிச் சேவைகளாக மாற்றினால், யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதைமட்டும் வாங்கிக்கொள்வார்கள், நமக்குச் செலவு குறையும், லாபம் கூடும்.
அவருடைய யோசனை சரியானதுதான். ஆனால், மக்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை. நெட்ஃப்ளிக்ஸ் தன்னுடைய சந்தாவை இருமடங்காக உயர்த்திவிட்டது என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து கடும் எதிர்ப்பு. லட்சக்கணக்கானோர் இந்த மாற்றத்தை எதிர்க்கும்வகையில் நெட்ஃப்ளிக்ஸிலிருந்து வெளியேறினார்கள். இந்தப் போக்கு தொடர்ந்தால் அந்நிறுவனம் என்ன ஆகுமோ என்று எல்லாரும் திகைத்தார்கள். அதன் பங்கு மதிப்பு நான்கே மாதங்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.
நல்ல வேளையாக, நெட்ஃப்ளிக்ஸ் தன்னுடைய தவற்றை விரைவில் உணர்ந்துவிட்டது. அதன் பெருந்தலைகள் 'நாங்கள் பெரிய நிறுவனம். இங்கு நாங்கள் வைப்பதுதான் சட்டம்' என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல், வாடிக்கையாளர்களுடைய நம்பிக்கையைத் திரும்பப் பெறுவதுதான் முதன்மையானது என்று களத்தில் இறங்கினார்கள். அடுத்த சில ஆண்டுகளில் நெட்ஃப்ளிக்ஸின் சேவைகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டன; தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி விட்டதைப் பிடித்தார்கள்; இன்று உலகெங்கும் கால் பரப்பி, கோடிக்கணக்கான சந்தாதாரர்களுடன் தங்கள் துறையின் அசைக்கமுடியாத அரசர்களாக இருக்கிறார்கள்.
சில சமயங்களில், பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல்பாட்டுப் பொறுப்புகளில் இருக்கிறவர்கள் அது எதிர்கொள்ளும் சிக்கலையே உணர்வதில்லை, அல்லது, 'அது ஒன்றும் பெரிய சிக்கலில்லை' என்பதுபோன்ற மனநிலையுடன் அதை எதிர்கொள்கிறார்கள். அப்போது, யாராவது அவர்களை உலுக்கி எழுப்பவேண்டியிருக்கிறது, அல்லது, தானே பொறுப்பேற்றுக்கொண்டு சிக்கலைச் சரி செய்யவேண்டியிருக்கிறது.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, உலகப் புகழ் பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனம். சுவையான காஃபி, அதைவிடச் சுவையான கடை அனுபவம் என்கிற வாக்குறுதியுடன் அமெரிக்காவைச் சுற்றி வளைத்து ஆளத் தொடங்கிய இந்நிறுவனம் மிக விரைவில் ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்தது, 'நாம் எங்கு சென்றாலும் பக்கத்தில் ஒரு ஸ்டார்பக்ஸ் இருக்கும்; அங்கு தரமான காஃபியைக் கதகதப்பான சூழலில் அனுபவிக்கலாம்' என்று மக்கள் நம்பும் அளவுக்குப் பெயர் பெற்றது.
ஆனால், ஒரு கட்டத்தில் இந்த விரைவான வளர்ச்சியே அவர்களைக் கீழிழுக்கத் தொடங்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் ஸ்டார்பக்ஸ் கடைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மும்மடங்காக வளர்ந்தாலும், வருவாயும் லாபமும் பெரிதாக வளரவில்லை. அதைவிடப் பெரிய சிக்கல், ஸ்டார்பக்ஸின் மிக முதன்மையான சொத்தாக இருந்த வாடிக்கையாளர் பிணைப்பு, உணர்வு சார்ந்த ஒன்றுதல் வலுவிழக்கத் தொடங்கியிருந்தது. இந்நிலை தொடர்ந்தால், போட்டியாளர்கள் எளிதில் தங்களுடைய சந்தையைக் கைப்பற்றிவிடுவார்கள் என்பதை அப்போதைய ஸ்டார்பக்ஸ் தலைவர்கள் உணர்ந்திருந்ததாகத் தெரியவில்லை.
அப்போது, ஸ்டார்பக்ஸின் முன்னாள் CEO ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் இன்னாள் தலைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார், 'நாம் கண்ணாடியைப் பார்த்து நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் இது, உண்மையான ஸ்டார்பக்ஸ் அனுபவத்தை மீட்டெடுக்கவேண்டிய நேரம் இது!' என்று சுட்டிக்காட்டி விழிப்பூட்டினார்.
அவர் அதோடு நிற்கவில்லை, எட்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் CEOஆகப் பொறுப்பேற்றுக்கொண்டார், ஸ்டார்பக்ஸின் சிக்கல்களை நுணுக்கமாக ஆராய்ந்து, ஒவ்வொன்றுக்கும் தற்காலிக, நிரந்தரத் தீர்வுகளைச் சிந்தித்துச் செயல்படுத்தத் தொடங்கினார். இதை அவர் தனியாகச் செய்யவில்லை. வாடிக்கையாளர்களுடைய ஸ்டார்பக்ஸ் அனுபவத்தை உருவாக்குகிற அல்லது முறிக்கிற கடைப் பொறுப்பாளர்களுடன் நேரடியாகப் பணியாற்றி என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
இதையெல்லாம் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஸ்டார்பக்ஸின் புதுமைச் சிந்தனை வண்டியும் நின்றுவிடவில்லை. ஒரு பக்கம் புதிய முயற்சிகள், இன்னொரு பக்கம் பழைய முயற்சிகளில் களையெடுத்தல் என்று படிப்படியாக ஸ்டார்பக்ஸைச் சரிவின் விளிம்பிலிருந்து மீட்டு மீண்டும் வெற்றிகரமான நிறுவனமாக்கின்றார் ஸ்கல்ட்ஸ். பழையபடி ஸ்டார்பக்ஸின் வெற்றிக் கொடி எங்கும் பறக்கத் தொடங்கியது.
மேற்சொன்ன கதையில் ஸ்டார்பக்ஸுக்குப் பதில் ஆப்பிளைப் பொருத்தினால், ஸ்கல்ட்ஸின் இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் இருப்பார். ஆனால் அவர் ஆப்பிளில் நிகழ்த்திக் காட்டிய 'U வளைவு' இன்னும் பெரியது, திடுக்கிடும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது, மிகப் பெரிய வெற்றிக்கு வழிவகுத்தது.
ஆப்பிளின் நிறுவனர்களில் ஒருவர் ஜாப்ஸ். வெறுமனே பணம் போடுகிற 'முதலாளி'யாக இருக்காமல், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், ஆப்பிள் அறிமுகப்படுத்தி வெற்றியடைந்த பல ஆக்கங்களுக்கும் முதன்மைப் பங்களித்திருந்தார் அவர். ஆனால், பத்தே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகிவிட்டது. அவர் தொடங்கிய நிறுவனமே அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கியது.
இந்த வீழ்ச்சிக்கு ஜாப்ஸும் ஒரு காரணம்தான். அவருடைய முரட்டுத்தனமான அணுகுமுறை பலருக்குப் பிடிக்கவில்லை. 'என்னதான் மிகப் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் இவரோடு ஒவ்வொரு நாளும் மன்றாட இயலாது' என்று அவர்கள் அவரை வெளியில் அனுப்பிவிட்டார்கள்.
ஆனால், ஜாப்ஸ் இல்லாத ஆப்பிளும் தொடர்ந்த வீழ்ச்சியைத்தான் சந்தித்தது. அந்நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள் எவற்றையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள், நிதித் தொல்லைகள். படிப்படியாக, எந்த நேரத்திலும் இழுத்து மூடவேண்டியதுதான் என்கிற நிலைமை வந்துவிட்டது.
அப்போது, நம் ஊர்த் திரைப்படங்களில் வருவதுபோல், 'இந்த நிலைமையைச் சமாளிக்கக்கூடிய ஒரே ஆள்' என்று அவர்களுக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவு வந்தது. 'தம்பி வா, மீண்டும் தலைமை ஏற்க வா' என்று அவரைத் திரும்ப அழைத்தார்கள். அவரும் அலட்டாமல் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஜாப்ஸ் ஆப்பிளிலிருந்து வெளியேறியதற்கும் திரும்ப வந்ததற்கும் இடையில் பன்னிரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த இடைவெளியில் அவர் நிறைய மாறியிருந்தார். அவரிடம் முதிர்ச்சி தெரிந்தது. அதே நேரம், சில பழைய பிடிவாதங்களும் எஞ்சியிருந்தன. இந்தக் கலவை வேலை செய்யுமா என்று பலருக்கு ஐயம் இருந்தது.
ஆனால், ஆப்பிள் பழைய உயரத்துக்குச் செல்லும் என்பதில் ஜாப்ஸுக்கு எந்த ஐயமும் இருக்கவில்லை. பழைய ஊக்கத்துடன் வேலையில் இறங்கினார், ஆப்பிளில் சேர்ந்திருந்த குப்பைகளைக் களைந்தார், பழைய எதிரியான மைக்ரோசாஃப்ட்டுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுச் சில சிக்கல்களைத் தீர்த்தார். சரியான பொருட்களில்மட்டும் கவனம் செலுத்துதல், மேம்பட்ட சந்தைப்படுத்தல் ஆகியவற்றின்மூலம் விற்பனையைக் கூட்ட முயன்றார்.
இதையெல்லாம்விட, புதுமைச் சிந்தனைதான் அவருடைய வலிமை. அதை ஜாப்ஸ் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். அழகான, செயல்திறன் மிக்க ஆக்கங்களை நுகர்வோர் எந்த விலை கொடுத்தும் வாங்குவார்கள் என்ற அவருடைய நம்பிக்கையைச் சந்தை உறுதிப்படுத்தியது. ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய ஐமேக், ஐபாட், ஐஃபோன், ஐபேட் என ஒவ்வொன்றும் மக்களை மகிழ்ச்சி கலந்த திகைப்பில் ஆழ்த்தின. இவை அவருடைய சொந்தக் கண்டுபிடிப்புகளாக இல்லாவிட்டாலும், அவற்றை எப்படிச் சிறப்பாக உருவாக்கிச் சந்தைப்படுத்துவது என்பதில் அவர் மன்னராக இருந்தார்.
ஜாப்ஸ் தலைமையில் ஆப்பிள் உலகின் முன்னணி நிறுவனமாகப் பெயர் வாங்கியது, உலக வரலாற்றில் முதலாவது டிரில்லியன் டாலர் நிறுவனமாகப் புகழ் பெற்றது.
கணினியைப் போன்ற பெரிய விலைப் பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள் மட்டுமில்லை, பொம்மைகளைப் போன்ற சிறிய விலைப் பொருட்களைச் செய்கிற நிறுவனங்களுக்கும் இப்படிப்பட்ட பெரிய சிக்கல்கள் வரலாம். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு, 'லெகோ' என்கிற புகழ் பெற்ற பிளாஸ்டிக் கட்டுமானப் பொம்மை நிறுவனம்.
அமெரிக்காவிலும் மற்ற பல உலக நாடுகளிலும் 'Lego Bricks' என்றால் குழந்தைக்குக் கூடத் தெரியும். வெவ்வேறு வண்ணங்கள், வடிவங்களிலான சிறு துண்டுகளைப் பொருத்தி விதவிதமான உருவங்களை உருவாக்குகிற இந்த விளையாட்டு குழந்தைகளின் படைப்புணர்வைத் தூண்டுகிறது. ஆனால், இதைக் குழந்தைகள்மட்டும் விளையாடுவதில்லை. இதில் பித்துப் பிடித்தாற்போல் மூழ்கியிருக்கிற பெரியவர்களும் உண்டு. இன்னும் இன்னும் நிறைய லெகோ பிரிக்ஸைக் கொண்டு மிகப் பெரிய, சிக்கலான உருவங்களை உருவாக்கவேண்டும் என்கிற சுவையான சவாலில் உலகெங்கும் ஏராளமானோர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதனால், லெகோ நிறுவனம் மிக நன்றாக வளர்ந்தது, பெரிய அளவில் லாபம் சம்பாதித்தது. வழக்கமான லெகோ பிரிக்ஸுடன் திரைப்படங்கள், காமிக்ஸ் புத்தகங்களோடு கூட்டணி போட்டுக்கொண்டு புதுமையான பொருட்களை உருவாக்கியபோது அவர்களுடைய விற்பனை மேலும் உயர்ந்தது.
ஆனால், இந்த விரைவான வளர்ச்சியில் லெகோ சில பெரிய பிழைகளையும் செய்தது. அதனால், தேவைக்கு மேலான பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதன்மூலம் அந்நிறுவனம் மூழ்கிவிடும் சூழலுக்கு மிக அருகில் வந்துவிட்டது.
2004ம் ஆண்டில், ஜோர்கன் விக் நட்ஸ்ட்ராப் லெகோவின் தலைவரானார். தோல்வியின் விளிம்பில் உள்ள நிறுவனத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டிய பெரும் பொறுப்பை அவர் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார். அங்கு உருவாக்கப்படும் பொம்மைகள் அனைத்தையும் விரிவாக ஆராய்ந்து, தேவையில்லாதவற்றை உடனடியாக நிறுத்தினார். மற்றவற்றைச் சரியான அளவில் உருவாக்குவதற்கு ஆவன செய்தார். நிறுவனத்தின் எதிர்காலத் தோற்றத்துக்குப் பொருந்தாத பிரிவுகளை மூடினார். புதிய பொம்மைகளை உருவாக்குவதற்குத் தேவையான கூட்டணி ஒப்பந்தங்களை அமைத்தார்.
ஜோர்கனின் வழிகாட்டுதலில் லெகோ நிறுவனம் சிறப்பாக வளர்ந்தது. நஷ்டத்திலிருந்து லாபம், மேலும் லாபம் என்று படிப்படியாக முன்னேறியது. முன்பு செய்த தவறுகளைத் தவிர்த்து வலுவான அமைப்புகளின் உதவியுடன் முந்தைய புகழையும் வெற்றியையும் திரும்பப் பெற்றது. இன்றும் உலகச் சந்தையில் மிகப் பெரிய பொம்மை நிறுவனமாகத் திகழ்கிறது.
எப்பேர்ப்பட்ட பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, திறமைமிக்க தனி நபர்களானாலும் சரி, சிறிய, பெரிய சறுக்கல்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அந்நிலையில் அவர்கள் நிரந்தரச் சரிவை நோக்கிச் செல்கிறார்களா, அல்லது மீள்கிறார்களா என்பது, அவர்கள் அந்தச் சறுக்கலை எவ்வளவு விரைவாகப் புரிந்துகொண்டு மாற்றுத் தீர்வுகளைச் சிந்திக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அதைத் துணிந்து செய்வதற்கு ஒரு சிறப்பான, இலக்கில் முழுக் கவனம் செலுத்துகிற மனநிலை தேவைப்படுகிறது. அது வாய்க்கப்பெற்றவர்கள் எந்தப் புயலிலும் பாதுகாப்பாகக் கரை சேர்ந்துவிடுவார்கள்.