அவரது வேகத்துக்கு ஈடு  கொடுப்பது சவாலானது!

அவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பது சவாலானது!

அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டொரு நாளில் தன் திறப்பு விழாவிற்காகக் காத்துக்கொண்டிருந்தது.

திறப்பு விழாவிற்கு முன்பாக முதல்வரை அழைத்துச் சென்று நூலகத்தை சுற்றிக்காட்ட விரும்பினேன். முதல்வரின் செயலாளரிடத்தில் என் விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன்.

மாலை சுமார் 4 மணி இருக்கும்.

‘என்னய்யா லைப்ரரியைப் பார்க்கணும்ன்னு சொன்னியாமே?'

‘ஆமாங்கய்யா'

‘சரி! வா. போய்ப்பார்க்கலாம்'

‘அய்யா!... அதுவந்து... இல்லீங்கய்யா...'

கொஞ்சம் இழுத்தேன்.

‘என்னய்யா?'

‘ஒண்ணுமில்லைங்கையா...கொஞ்ச நேரங்கழிச்சு போனா லைப்ரரி லைட்ஸ் எல்லாம் போட்டு நல்லா இருக்கும்.. அதான்....'

ஓரிரு வினாடிகள் மறுமுனையில் அமைதி.

அடுத்த விநாடி அந்தக் கரகரத்தக் குரலில் ஒரு எள்ளலும் சேர்ந்து கொண்டது.

‘நான் லைப்ரரியப் பார்க்க வர்ரது அங்கே என்ன என்ன புத்தகங்கள் எல்லாம் வாங்கி வச்சுருக்கீங்கன்னு பார்க்கத்தான்யா.. நீ லைப்ரரிக்கு என்ன லைட்டு போட்டுருக்கன்னு பார்க்கறதுக்கு இல்லை'

நான் ஓடோடிப் போவதற்குள், அவர் நூலகத்தின் புத்தக அலமாரிகளைப் பார்வையிட்டு விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சமூக நீதி!

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சொந்த நூல் பிரிவு (Own Book Reading Section) !

தங்கள் வீடுகளில் படிப்பதற்கேற்ற சூழலோ அல்லது அதற்கேற்ற வகையில் வீடுகளோ அமையப்பெறாதவர்கள், தங்களின் புத்தகங்களை நூலகத்திற்கு எடுத்து வந்து அங்கே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர்ந்துபடிப்பதற்கான வசதி அது. அதுவரை வேறெந்தப் பொது நூலகங்களிலும் அது அமைக்கப் பெறவில்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அந்த வசதி உருவாக்கப்பட்டதன் பின்னணியில் தலைவர் கலைஞரின் உள்ளத்தில் எழுந்த மகத்தான சிந்தனை ஒன்று இருக்கிறது.

ஒரு முறை நூலகத்தைப் பார்வையிட வந்த முதல்வருக்கு பல்வேறு வசதிகளை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்னர், வாசலில் அவரை வழியனுப்பி வைக்க நின்று கொண்டிருந்தேன். அவரது வாகனத்திற்குள் செல்லும் முன்னர் இருக்கையில் அமர்ந்தவாறே நூலகத்தின் வெளிப்புறத் தோற்றத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டு என்னை அழைத்தார்.

‘வெளியே இருந்து பார்க்கும் போது பிரம்மாண்டமாய் இருக்குதுய்யா...ஆனால், எனக்குக் கொஞ்சம் அச்சமாகவும் இருக்கு'

நான் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘இதை வெளியே இருந்து பார்க்குற சாமானியமானவங்க, சாதாரண ஜனங்கள் எல்லாம் இதோட இந்த பிரம்மாண்டத்தைப் பார்த்துட்டு இது ஏதோ பெரிய அறிவாளிகள், ஆராய்ச்சி பண்றவங்க அல்லது கார்ல வர்ற ஆளுங்களுக்கு மட்டும்தான்னு நினைச்சுடக் கூடாதுய்யா.. அவங்களும் இந்த லைப்ரரி நமக்கானதுன்னு நினைச்சு தாராளமா உள்ள வந்து படிக்கணும்'

மெய்சிலிர்த்துப்போனேன்.

தன் உதிர அணுக்கள் ஒவ்வொன்றிலும் சமூக நீதிக்கான சிந்தனை நிறைந்த ஒரு தலைவரால் தான் அப்படி நினைக்க முடியும்.

அவரது எண்ணத்தின் விளைவே நான் முதலில் சொன்ன வசதி. பின்தங்கிய பிரிவினைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை; புத்தக வாசிப்பில் நாட்டம் உடைய வெகுமக்களை அத்திட்டம் பெரிதும் கவர்ந்து, அவர்களை நூலகத்தின்பால் ஈர்த்தது.

இன்றைக்கும் கோட்டூர்புரம் வழியே அந்த நூலகத்தைக் கடக்கும் போதெல்லாம் தலைவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் காதுகளில் ரீங்காரமிடத் தவறியதேயில்லை!

தங்கம் பெற்றது!

தலைவர் கலைஞரின் எண்ணத்தில் உருவான ஒவ்வொரு திட்டத்திலும் அவரது கைவண்ணம் இருக்கும். பூம்புகார், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை - அண்ணா அறிவாலயம்...என இந்தப் பட்டியல் நீளும். அண்ணா நூற்றாண்டு நூலகமும் அதற்கு விதிவிலக்கல்ல!

பேரறிஞர் அண்ணா அவர்கள் எவ்வாறு அமர்ந்து படிப்பார்; நூலக வாயிலில் அமையவேண்டிய அவரது திருவுருவச் சிலை எவ்வகையில் அமையப்பெற வேண்டும், என்பதை எல்லாம் ஒரு நாள் விளக்கி எனக்குப் ‘பாடம்' நடத்தினார். அதுமட்டுமல்ல; அண்ணா நூற்றாண்டு நூலகம் , மற்ற கட்டடங்கள் போலல்லாமல் கட்டட அமைப்பிலும், தொழில் நுட்ப ரீதியிலும், சுற்றுச் சூழலுக்கு இயைந்த வகையில் அமையப் பெற வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார். ஒரு நாள் என்னை அழைத்து, புதிய தலைமைச் செயலகம் போல நூலகமும் ‘பசுமைக் கட்டடம் (Green building)' என்ற தரத்தில் அமையப் பெற வேண்டும் என்று தெரிவித்ததோடு, அதன் வாயிலாகக் கிடைக்கும் பலன்களையும், சூழலியல் அடிப்படையிலேயே இது போன்ற பெரும் கட்டட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார். அவரது எண்ணப்படியே, நூலகத்தின் வடிவமைப்பு மட்டுமல்ல; ‘கார்ப்பெட்டில் இருந்து கழிவறை வரை' பசுமைக்கட்டட நிபந்தனைகளை நிறைவு செய்யக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அந்த நூலகம் கட்டப்பட்டது.

அதன் விளைவாக அண்ணா நூற்றாண்டு நூலகம் பசுமைக் கட்டடத்திற்கானத் ‘தங்கச் சான்றிதழ்' பெற்றது பெருமைக்குரியது. அந்தச் செய்தியைத் தலைவரிடம் போய் சொல்வதற்காகச் சென்றிருந்தேன். கழக முன்னணியினரோடு பேசிக் கொண்டு இருந்தார் . விவரத்தைச் சொன்னதும் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் திரும்பினார். ‘வேறொண்ணுமில்லை. தங்கம் வாங்கி இருக்கிற விஷயத்தை தங்கமே வந்து சொல்றாரு'

சவால்!

ஒரு முறை ஆசிரியப்பணி நாடுநர்களான மாற்றுத்திறனாளி நண்பர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டனர். அன்று காலை வேளையில் செய்தித்தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். முதல்வரின் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தது. போராட்டம் குறித்த தகவலைச் சொல்லிவிட்டு, ‘கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றார்கள். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு.

‘சி.எம் சொல்றதைப் பார்த்தால், ஒருவேளை அவங்களை எல்லாம் இன்னைக்கு சி.எம்மே நேரிலயே பார்க்க வாய்ப்பு இருக்கு. எதற்கும் நீங்கள் தயாராயிருங்கள்'.

நான் பரபரப்பானேன். குளித்து முடித்து, விரைவாக தயாராகி காரில் ஏறி அமர்ந்து முதல்வரின் செயலாளரைத் தொடர்பு கொண்டேன்.

‘சார், சி.எம் எத்தனை மணிக்கு அவங்களை பார்க்கிறமாதிரி இருக்கும்.? உத்தேசமா தெரிஞ்சா நான் ஆஃபிசர்ஸ் கிட்ட பேசி எல்லாரும் ரெடியா இருக்கோம்'

‘சி. எம் மா? அவர் அப்பவே நேரா போயி அவங்களை எல்லாம்பார்த்து பேசி போராட்டத்தை கை விடச்சொல்லி கேட்டுகிட்டு இப்போ வீட்டுக்கே வந்துட்டாரே!'

அவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பது சவாலானது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com