தலித் அரசியல்

தலித் அரசியல்

அன்றிலிருந்து இன்று வரை
Published on

இன்று நம்மிடையே அரசியல் புழங்கு சொல்லாக இருக்கக்கூடிய சாதி ஒழிப்பு எனும் கருத்தியல் எப்பொழுது தோன்றியிருக்கும் என ஆராய்ந்தால், சாதி எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே சாதி எதிர்ப்பும் தோன்றியிருக்கும் என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தாழ்ந்தவன் என்ற கருத்தாக்கத்தை மக்கள் மத்தியிலே பரப்ப நினைத்தவர்களை அவர்களின் சமகாலத்திலேயே எதிர்த்திருப்பவர்கள் இருந்திருப்பார்கள். புத்தரின் காலத்திலேயே இதை நாம் காண முடிகிறது ஆண், பெண் பாகுபாடு சாதிய பாகுபாடு தொழில் அடிப்படையிலான பாகுபாடு போன்றவைகள் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்ததை நூல்களின் வழியே காண்கிறோம். வேத மரபுதான் மனிதர்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கியது என்று புத்தரின் காலத்திலேயே அதற்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது. புத்தர் தனது சங்கத்தில் அனைத்து சாதியினருக்கும் இடம் அளித்தது, ஆண் பெண் பாகுபாடு அல்லாமல் பெண்களையும் பிக்குனிகளாக துறவறம் ஏற்கச் செய்தது போன்ற புரட்சிகர நடவடிக்கைகளால் இன்றளவும் பௌத்தம் என்பது ஒரு விடுதலைக்கான அரசியலாக, சமயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த பௌத்த கருத்தியலின் அடிப்படையில்தான் பண்டிதர் அயோத்திதாசரும், பாபாசாகேப் அம்பேத்கரும் தங்களது அரசியலை கட்டமைத்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் செயல்பட்ட பண்டிதர் அயோத்திதாசர் சாதியின் உருவாக்கத்தை ஆராய்ந்தார். தமிழ் இலக்கியங்களின் ஆதாரங்களைக் கொண்டு தீண்டாமை, சாதி போன்றவை சமய பாகுபாடுகளால் உருவானது என்று நிறுவியவர் பண்டிதர் அயோத்திதாசர். பௌத்தம் செழித்தோங்கியிருந்த காலத்தில் சாதி வேறுபாடுகள் குறைந்திருந்தது என்றும் பௌத்தம் வீழ்ச்சியுற்ற காலத்தில், வைதிக மதங்கள் எழுச்சியுற்ற காலத்தில் சாதி, தீண்டாமை எழுச்சி பெற்றது என்பது பண்டிதரின் வாதம். அவைதீக மதத்திற்கு எதிராக வைதீக மதங்கள் அரசர்களின் துணையுடன் எழுச்சி பெற்ற போது அவைதீக மதத்தை பின்பற்றுபவர்களை இழிவாக கருதுவதும், இழிவு படுத்துவதும் நடைமுறையாக இருந்துள்ளது. இதனாலேயே பௌத்தத்தை பின்பற்றியவர்கள் ஊருக்கு புறத்தே வைக்கப்பட்டதும், சமூகத்தில் அவர்கள் கீழான நிலையை அடைந்ததும் நடந்தது என்கிறார்.

இதனாலேயே அவர் புராணங்களின் மூலம் இங்கே சாதிய சமூகம் நிறுவப்பட்டிருக்கிறது என்று உணர்ந்து புராணங்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்களை அவர் மாற்றி அமைத்தார். புராணங்களை கட்டமைப்பதன் மூலமாகவே சமூகத்தை வடிவமைத்தனர் என்கிறார் பண்டிதர். ஆகவே ஏற்கனவே இருந்த புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் இலக்கியங்களுக்கும் சொல்லப்பட்ட விளக்கங்களை அவர் மாற்றி அமைக்கிறார். புராணங்களின் கதையாடல்களை மக்களை நம்ப வைத்திருக்கிறது என்பதால் அந்தப் புராணங்களுக்கு புதிய விளக்கங்கள் கொடுப்பதன் மூலமாக இந்த சமூகத்தை மாற்றி அமைக்க முடியும் என்று அவர் கருதினார். அவர் நடத்திய தமிழன் இதன் மூலமாக 1907 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அவர் எழுதி வந்தார்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய கல்விகளை கற்றதன் மூலமாக சாதி உருவாக்கம் தீண்டாமை போன்றவற்றை ஆராய்ந்தார். அவர் தனது ஆய்வில் சாதி என்பது காலங்காலமாக இருந்த ஒன்று அல்ல ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சில மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே சாதி அமைப்பு என்று தனது ஆய்வுகளின் மூலம் நிறுவினார். மேலும் பௌத்தத்தை இறுதிவரை பின்பற்றி வந்தவர்கள்தான் இன்றைய தீண்டப்படாதவர்கள். பௌத்தத்தை பின்பற்றியதாலேயே அவர்கள் ஊருக்கு வெளியே புறம் தள்ளப்பட்டனர் என்றும் தனது ஆய்வின் முடிவை அவர் வெளிப்படுத்தினார். பண்டிதர் அயோத்திதாசர் மேற்கத்திய கல்வி கற்றவர் அல்ல ஆனாலும் அவர் சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால் அந்த சான்றுகளையும் ஆராய்ந்தே அவர் மத, சமய பாகுபாடுகளின் வழியாகவே சாதிய பாகுபாடு விளைந்தது என்றார். இதே கருத்தை நவீன ஆய்வு முறை கொண்டு மேற்கத்திய ஆய்வுச்சட்டகங்களை பயன்படுத்தி பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் தனது ஆய்வின் மூலம் சாதி உருவாக்கத்திற்கும் தீண்டாமை பரவலாக்கத்திற்கும் அடிப்படை காரணம் இந்த மக்கள் பௌத்தத்தை பின்பற்றியதே ஆகும். இதனாலேயே அவர்கள் ஒடுக்கப்பட்டனர் என்றுரைத்தார்.

இந்து மதத்தில் இருக்கும் வரை சாதியும் தீண்டாமை ஒழியாது ஆகவே இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமாகவே சாதி ஒழிப்பு சாத்தியம் என்று உறுதியாக நம்பினார். ஆகவே அவர் 1956 ஆம் ஆண்டு பெரும் திரளான மக்களுடன் பௌத்தத்தை தழுவினார்.

பண்டிதர் அயோத்திதாசர் காலத்திலேயே தமிழ்நாட்டில் பௌத்தம் ஏற்பதும் சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுப்பதும் நடந்துவந்தது. சென்னை, கோலார் தங்க வயல், வேலூர், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் பௌத்த விகாரங்களை ஏற்படுத்தி தலித்துகள் சாதி கட்டமைப்புக்கு எதிராக பண்பாட்டு அரசியலை முன்னெடுத்தனர். 1940களுக்குப்பின் அம்பேத்கரை பின்பற்றிய தமிழர்களும் அம்பேத்கர் தொடங்கிய செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் அமைப்பில் இணைந்து பௌத்தம் ஏற்பது, சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுப்பது என்று தீவிரமாக செயல்பட்டனர்.

காலனிய காலத்தில் இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, வீரையன், எல்.சி. குருசாமி போன்றவர்கள் தீண்டாமைக்கு எதிராக பல இயக்கங்களைத் தொடங்கினர். சட்டத்தின் மூலமாக இங்கு இருக்கக்கூடிய சாதி ஆதிக்கத்தை ஒழித்து விட முடியும் என்று அவர்கள் நம்பினர். சென்னை மாகாண சட்டசபையில் பல சட்டங்களை முன்மொழிந்த அவர்கள் பொதுப் பாதையில் நடப்பது, தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற சட்டங்கள் நிறைவேறப் பாடுபட்டனர்.

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்

ஒவ்வொரு காலகட்டங்களிலும் தமிழ்நாட்டில் பல தலித் அமைப்புகள் தோன்றியுள்ளன. அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஹரிஜன நலத்துறை அமைச்சராக இருந்த அன்னை சத்தியவாணிமுத்து அக்கட்சியிலிருந்து வெளியேறியவுடன் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை 1974இல் தொடங்கினார். பின்பு அக்கட்சியைக் கலைத்துவிட்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. சார்பில் இரண்டுமுறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்பு அ.தி.மு.க.வின் ராஜ்ய சபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட இவர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

அம்பேத்கர் மக்கள் இயக்கம்

வை.பாலசுந்தரம் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி னார். தி.மு.க.வில் இருந்த அவர் சென்னை மேயராகவும், அச்சிறுபாக்கம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கசப்பால் அக்கட்சியிலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்டார். தலித் மக்கள் மத்தியில் வை.பா. என்று அறியப்பட்டார். இந்த இயக்கம் தென் தமிழகம் வரை பரவியிருந்தது. ஜான்பாண்டியன் முதன்முதலாக அரசியல் மேடை ஏறியது திருநெல்வேலியில் வை.பா. தலைமையில் நடந்த அம்பேத்கர் மக்கள் இயக்க மேடையில்தான்.

இந்திய மனித உரிமைக் கட்சி

எல்.இளையபெருமாள் தலித் அரசியல் ஆளுமைகளில் முக்கியமானவர். சிறு வயதிலேயே தீண்டாமை சாதி கொடுமைக்கு எதிராகக் களமாடியவர். பறையடித்தல் முறை இழிவானது என்று அதை ஒழித்துக் கட்டப் போராடினார்.

மூன்றுமுறை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அகில இந்திய அளவில் தீண்டாமை குறித்து ஆராய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்தக்கமிட்டியின் தலைவர் இளைய பெருமாள் ஆவார். இன்றளவும் இளைய பெருமாள் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் பொருந்தக்கூடிய அளவிற்கு இந்தியா முழுவதும் பயணம் செய்து அதை சமர்ப்பித்தார். தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார். காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 1989இல் இந்திய மனித உரிமைக் கட்சியைத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரை வென்றது இந்திய மனித உரிமை கட்சி.

அகில இந்திய செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் (1942)

1942 ஜூலை மாதத்தில் செட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் எனும் புதிய அமைப்பை பாபாசாகேப் அம்பேத்கர் நாக்பூர் கூட்டத்தில் அறிவித்தார். இந்த அமைப்பின் அகில இந்திய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை என்.சிவராஜ் நியமிக்கப்பட்டார். பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய பகிஸ்கிரித் ஹித்தகாரனி சபை (1924), சமாஜ் சமத சங்கம் (1927), சமதா சைனிக் தள் (1928), சுதந்திர தொழிலாளர் கட்சி (1936) போன்ற இயக்கங்களில் செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன் அமைப்புதான் தமிழ்நாட்டில் பரவலாக பரவி இருந்த அமைப்பாகும். இதற்கு முக்கிய காரணம் தந்தை என்.சிவராஜ். இதுபோக பள்ளி்கொண்டா கிருஷ்ணசாமி, தொண்டு வீராசாமி, ஆம்பூர் எம். ஆதிமூலம், ஜே.ஜே. தாஸ், சி.எம். மணவாளன், உரிமை ரத்தினம், எல். சுப்பிரமணியம், கே.எம்.சாமி, வி. வீரம்மாள் போன்றவர்கள் பெடரேஷனில் செயல்பட்டு வந்தனர். 

இந்திய குடியரசுக் கட்சி

பாபா சாகேப் அம்பேத்கர் தொடங்க நினைத்த அரசியல் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சியை அவரின் சீடர்கள் அவரது மறைவுக்குப் பின்பு நிறுவினர். கட்சியின் அகிய இந்திய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த தந்தை என்.சிவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் அம்பேத்கரியர்கள் மத்தியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றனர். இந்திய அளவில் பல பிரிவுகளாக இந்திய குடியரசு கட்சி உடைந்தபோது அது தமிழகத்திலும் பிரதிபலித்தது.

புரட்சி பாரதம்

பூவை மூர்த்தியார் 1984ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியை (APLF) தொடங்கினார். இந்த இயக்கம் 1998 ஆம் ஆண்டில் புரட்சி பாரதம் கட்சியாக பரிணமித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலித் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர்தான் தலித் இளைஞர்கள் சட்டம் பயில வேண்டும் அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டினார். இதன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான தலித் இளைஞர்கள் சட்டம் பயின்றனர். தலித்துகளின் உழைப்பைச் சுரண்டி சம்பளம் குறைவாக கொடுக்கும் தனியார் முதலாளிகளை எச்சரித்தார் பூவையார். சென்னை, அதன் சுற்றுப்பகுதிகளில் உருவான தொழிற்சாலைகளில் பெருந்திரளாக வேலை பார்த்த தலித் தொழிலாள வர்க்கத்தினரை ஒன்றிணைத்து தொழிற்சங்கங்களைக் கட்டி எழுப்பினார். இது ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியது. 2002இல் டாக்டர் பூவை மூர்த்தியின் மறைவுக்குப்பின்பு அவரது சகோதரர் ஜெகன் மூர்த்தி தலையேற்று கட்சியை நடத்தி வருகிறார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அரக்கோணம் தொகுதியிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் கே.வி.குப்பம் தொகுதியிலும் வெற்றிபெற்றார்.

புதிய தமிழகம்

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு 1993இல் உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி பொறுப்பேற்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஏர் உழவன் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பை ‘புதிய தமிழகம்’ என்ற அரசியல் கட்சியாக மாற்றினார்.

புதியதமிழகம் தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளர்ந்தது. 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். கொடியன்குளம் கிராமம் மீதான காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்தும் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங்கள் போன்றவை டாக்டர் கிருஷ்ணசாமி முன்னெடுத்த முக்கியமான போராட்டங்களாகும்.

ஆதித்தமிழர் பேரவை

தமிழ்நாட்டில் அருந்தியர்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதற்காக ஆதித்தமிழர் பேரவையை 1994ஆம் ஆண்டு இரா.அதியமான் நிறுவினார். அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்ததில் ஆதிதமிழர் பேரவைக்கு முக்கிய இடமுண்டு. தமிழகம் முழுவதும் அருந்ததியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இயக்கமாக விளங்குகிறது.

2021 ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் இரா. அதியமான். தொடக்கத்திலிருந்து இன்று வரை தி.மு.க. ஆதரவு நிலையைக் கொண்டுள்ளது ஆதித்தமிழர் பேரவை. அருந்ததியர்களை மையமாகக் கொண்டு நாகை திருவள்ளுவன் தலைமையில் தமி்ழ்ப்புலிகள், கு.ஜக்கையன் தலைமையிலான ஆதித்தமிழர் கட்சி போன்றவை செயல்பட்டு வருகின்றன.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

1980களில் தென்மாவட்டங்களில் தேவேந்திரர் சமூகத்திற்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டு கிளர்ந்து எழுந்தவர் பெ. ஜான் பாண்டியன். 1990களில் ஜான்பாண்டியன் எனும் ஒற்றைப் பெயர் தேவேந்திரர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தந்தது. தொடக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த ஜான்பாண்டியன் பின்னாட்களில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பலமுறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பைப் பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தாமரை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள்

1980களில் மஹாராஷ்டிராவில் உருவான தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு தமிழகத்திலும் காலூன்றியது. அந்த அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராக இருந்த மலைச்சாமி அவர்கள் மதுரையை மையமாகக் கொண்டு தலித்துகளின் விடுதலைக்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இதன் விளைவாக கிராமங்களில் நடக்கக்கூடிய தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். மக்களையும் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு அடையும்படி பல கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினார். 1990களின் தொடக்கத்தில் மலைச்சாமி அவர்களின் மறைவையடுத்து அரசு ஊழியராக இருந்த இரா. திருமாவளவன் தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்றார்.

தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியாவை விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயர் மாற்றம் செய்து அதற்கு நிறுவனராகவும் தலைவராகவும் திருமாவளவன் தலைமை ஏற்றார். இதைத்தொடர்ந்து மதுரை, அதன் சுற்று வட்டாரங்களில் சாதி வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். மக்கள் மத்தியிலே தனது அறச்சீற்ற உரைகளின் மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டதின் மூல்ம் தமிழகம் தழுவிய கவனத்தைப் பெற்றது விடுதலைச் சிறுத்தைகள். விளைவாக மதுரையில் தொடங்கப்பட்ட இயக்கம் வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் பற்றிப் பரவியது. அதுவரை தங்களுக்கு ஒரு கொடுமை நடந்தால் கேட்க நாதி இல்லை என்ற தலித் மக்களுக்கு மத்தியில், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை நிகழும் போது அங்கே விடுதலை சிறுத்தைகள் நிற்பார்கள் என்ற நம்பிக்கையை மக்களிடம் அவர் ஏற்படுத்தினார். தொடக்கத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற கொள்கையைப் பின்பற்றிய விடுதலைச் சிறுத்தைகள் 99 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பாதையில் நடைபோடத்தொடங்கினர். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை எனும் முழக்கத்தை கட்சியின் அடிப்படைக் கொள்கையாக விடுதலை சிறுத்தைகள் வரையறுத்தனர். சாதி வன்கொடுமைகளுக்கு அடிப்படை காரணம் சாதி அமைப்புதான் ஆகவே அந்த அமைப்பை ஒழித்துக் கட்டுவதன் மூலமாகவே சாதிய பாகுபாடுகளையும் ஒழித்துக் கட்ட முடியும் என்ற கருத்தியலை பொதுச் சமூகத்தில் பரப்பினர். பண்டிதர் அயோத்திதாசரின் கொள்கைகளையும் பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்தியல்களையும் அடிப்படையாகக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் செயல்பட ஆரம்பித்தனர். தேர்தல் அரசியலில் பங்கெடுத்ததன் மூலமாக அவர்கள் மாநில அளவிலான கவனத்தைப் பெற்றனர். தலித்துகள் மட்டுமல்லாது சாதி ஒழிப்பில், சமத்துவ அரசியலில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈர்த்தது. 

அரசியல் அதிகாரத்தில் ஓரளவு தங்களை தக்க வைத்துக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் இன்று தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளின் ஒருங்கிணைப்பு வெறும் சாதி ரீதியான ஒருங்கிணைப்பு அல்ல அது சாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை, வர்க்க விடுதலை, தமிழ் தேசிய விடுதலை, ஏகாதிபத்திய ஒழிப்பு போன்ற ஐந்து அடிப்படையான கருத்தியல்களை முன்மொழிந்தே மக்களிடம் சென்று சேர்ந்தது. இன்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளது.

2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் சமத்துவ அரசியல் என்பது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே நடந்து வருகிறது என்பதுதான் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. அடையாள அரசியல் என்பதின் கீழ் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களை ஒருங்கிணைக்காமல் கருத்தியலின் அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது வி.சி.க.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com