ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊடகம் மூலம் கருத்துகளை எடுத்துச்செல்வது கட்சிகளின் இயல்பு. முன்னர் செய்தித்தாள், தொலைக்காட்சி என இருந்தது. டீ கடைகளில் பேசப்பட்ட அரசியல் இப்போது மொபைலில்தான் என்றாகிவிட்டது. சமூக ஊடகம் என ஒன்று வந்தபிறகு, யார் பயன்படுத்தும் சமூக ஊடகமாக இருந்தாலும் அதில் அரசியல் தவறாமல் இடம்பெறுகிறது. மக்கள் எதைப் பயன்படுத்துகிறார்களோ எந்தக் கட்சியும் அதைக் கைக்கொள்ள வேண்டும். வாட்சாப்பை மட்டும் எடுத்துக்கொண்டாலே ஒரு குடும்பத்தில் ஒரு நபரே பல குழுக்களில் இருக்கிறார். ஒரு தகவலை அவர் பல குழுக்களிலும் பகிர்ந்துகொள்கிறார். இப்படி நாடளவில் பல நூறு கோடிக்கணக்கில் ஒரே தகவல் பகிரப்படுகிறது. இந்தப் பின்னணியில் தகவல் தொழில்நுட்பம் மூலம் மக்களை அடைவது தவிர்க்கவே முடியாதது.
மரபான கட்சி செயல்பாட்டு முறைக்கும் இதற்கும் மாறுபாடு எனச் சொல்லமுடியாது. ஏற்கெனவே முரசொலி மூலம் கட்சியினர், பொதுமக்களுக்கு கட்சியின் கருத்துகள் எடுத்துச்செல்லப்பட்டது. அதற்கென ஒரு டீம் இருந்தது. அதைப்போலத்தான் இப்போது ஐ.டி. விங். இதிலும் கட்சியின் கொள்கைப் பிடிப்புள்ள சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இணைந்து செயல்படுகிறோம். பெரும்பாலானவர்கள் கட்சி வரலாறு, கொள்கை, அரசியலை நன்கறிந்த முதல் தலைமுறை அரசியல்வாதிகள். திராவிடக் கொள்கைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுகிறோம்.
இதில் வெளியார் பணி பற்றி கேட்கிறீர்கள். 2016இலேயே எங்கள் ஐ.டி. அணியைத் தொடங்கிவிட்டோம். 2021ஆம் ஆண்டு தேர்தலில்தான் வெளியார் ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. எந்த முடிவையும் கட்சித் தலைமைதான் எடுக்கும். கட்சியின் கட்டமைப்பின் மூலமாகத்தான் அவர்களுடைய எதுவும் செயல்படுத்தப்படும். அதுவும் தேர்தல் முடிவோடு தானாகவே அந்த ஒப்பந்தம் முடிந்துவிடும். அது மிகக் குறுகிய காலம்தான். அது ஒரு முயற்சி. பல மாநிலங்களில் ஆளும் கட்சியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த சூழலில், அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் ஏற்பாடு, அவ்வளவுதான். நம்முடைய மண், மக்களைப் பற்றி கட்சிக்குதான் தெரியும். மக்களுக்குப் பொருத்தமான கருத்துகள், எண்ணங்கள் என்னவோ அவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். இன்னொன்று, அவர்களும் இங்கு வந்து அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஒருவகையில் இது பெறுதல் மட்டும் அல்ல, கொடுத்தலும்தான். இதை கார்ப்பரேட் எனச் சொல்லமுடியாது.
நாங்கள் மட்டுமல்ல, மற்ற கட்சிகளும் தேர்தல் அறிக்கை போன்ற பணிகளில் மூத்த ஊடகத்தினரை ஆலோசனைக்கு வைத்துக்கொள்வது உண்டு. ஏனென்றால், பெரிய பேராசிரியர்கள், துறை
சார்ந்த வல்லுநர்களைத் தாண்டி இவர்கள் மக்களோடு நேரடித் தொடர்பு வைத்திருப்பவர்கள். அவர்களின் மனவோட்டங்களை அறிந்துவைத்திருப்பார்கள். அதைப்போலத்தான் இந்த ஆலோசனையும்! இன்னொன்று, இதில் வாழ்வா சாவா என்கிற நிலைதான்... எங்கள் கட்சியினுடையது அல்ல, மக்களின் வாழ்க்கையை முன்வைத்து தேர்தலைச் சந்திக்கிறோம். அதில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
இந்த பாணியில் சவால் என்பது, போலிச்செய்திதான். முன்னரெல்லாம் கிசுகிசுவாகப் பரவி ஒரு மட்டம்வரை போய், அதற்குள் அது மறைந்தே போய்விடும். அதிகபட்சம் டீ கடை விவாதம்வரைதான் அதன் ஆயுள் இருக்கும். இப்போது அப்படியல்ல, எங்கும் மொபைல் இருக்கிறது. பெரிய அளவில் சீர்குலைக்கக்கூடிய பாதிப்புகள் இதனால் வருகின்றன. இவற்றை முறியடிப்பது பெரும் வேலையாகிவிட்டது. நாட்டு மக்களில் 10 சதவீதம் பேரிடம் இந்தப் போலிச்செய்தி போனாலே என்ன ஆகும்? இப்படித்தான் 2014இல் தகவல்தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத காலகட்டத்தில் போலியாக பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். 2015&16வாக்கில்தான் விழிப்புணர்வு மெல்ல மெல்ல வரத் தொடங்கியது. அப்படித்தான் எங்கள் ஐடி அணியின் பணியும் தொடங்கியது.
எங்கள் மீதும் இப்படி குற்றம்சாட்டப்படுகிறதே எனக் கேட்கிறீர்கள். பொதுவாகவே, போலிச்செய்திக்கான ஆயுள் இப்போது குறைந்துபோய்விட்டது. மக்கள் முன்னரைப் போல இல்லை. ஒரு தகவல் ஒரு சமூக ஊடகத் தளத்தில் வருகிறது என்றால், அதற்கெதிராக அதே தளத்தில் நான்குவிதமான செய்திகளும் இடம்பெறுகின்றன. ஆனால் இப்படியான போலிச்செய்திகளால் எதை நம்புவது நம்பாமல் இருப்பது என்கிற நிலைமை வந்துவிட்டது. மதவாத பாசிச அரசியல் முழுமூச்சாக இப்படிச் செய்வதால், வேலையில் இருபதுமுப்பது சதவீதம் பொய்ச் செய்திகளை முறியடிப்பதற்கே போய்விடுகிறது.
அண்மையில், பொய்ச்செய்தியை முறியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜுபைருக்கு தமிழக அரசின் சார்பில் விருது அளிக்கப்பட்டது தெரியும். இதுவே நடக்கும் நிலவரத்தை உணர்த்தக்கூடியது. அவர்களின் ஆல்ட்நியூஸ் போன்ற போலிச்செய்தி முறியடிக்கும் தளங்கள் வந்தால்தான் இன்னும் நம்பிக்கை வரும். ஊடகம் சமூக ஊடகமாக பரவலானபிறகு அதிகரித்துள்ள போலிச்செய்திகளை அடையாளம்கண்டு முறியடிப்பதற்கு இவை உதவியாக இருக்கும்.
உத்தியைப் பற்றிக் கேட்கிறீர்கள், எங்களைப் பொறுத்தவரை, தலைவர், கட்சி, கொள்கை, வரலாறு, சாதனை என மையமாகக் கொண்டு எங்களுடைய பணியை அமைத்துக்கொள்கிறோம்.
நவீன பாணி வேலையால் மரபார்ந்த முறையில் கட்சி வேலைகள் பாதிக்கிறதா எனக் கேட்கிறீர்கள். ஒரு காலத்தில் ஒரு பெரிய கூட்டம் என்றால்,
நீண்ட தொலைவு பயணம்செய்தால்தான் முடியும். பேச்சாளர்களும் ஊர் ஊராகப் போகவேண்டும். ஆனால், இப்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நேரலையில் ஆங்காங்கே இருந்தபடி அதேபோன்ற கூட்டப் பேச்சைக் கேட்கமுடிகிறது. கட்சியின் பொதுக்குழுவையே இணையவழியில் நடத்தியும் காட்டியது ஒரு சாதனை. ஆனாலும், எங்கள் இளைஞரணிச் செயலாளர் கூறியதைப் போல களத்திலும் இருக்கிறோம்; தளத்திலும் இருக்கிறோம். அரசியல் இலக்கை நோக்கிய பயணத்தில் இதனால் எந்தத் தளர்வும் இல்லை. வலுவாகத்தான் இருக்கிறோம்.
அகில இந்திய அளவில் பாஜக அரசியலுக்கு எதிராக ஒரு மாநிலக்கட்சியான தி.மு.க.தான் சமூக ஊடகங்களில் வலுவான சக்தியாக எதிர்த்து நிற்கிறது. பல நேரங்களில் எங்களின் பிரச்சாரத்தை வெவ்வேறு மொழிகளில் எடுத்துப் பரப்புவதைப் பார்க்கமுடிகிறது.
இசை, துணைச்செயலாளர், தி.மு.க. தகவல்தொழில்நுட்ப அணி
(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)