உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எதார்த்தமும் எளிமையும்

2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.

மாநிலம் முழுவதுமான நட்சத்திரப் பேச்சாளராக அவர் அறிமுகப்படுத்தப்பட்டது எல்லோருக்கும் ஓர் ஆச்சர்யம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தீர ஆலோசித்தே அந்த முடிவை எடுத்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்யணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அதில் அவருடைய பேச்சு மிக எதார்த்தமாக நகைச்சுவையாக அமைந்தது. அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதாக இருந்ததால் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுவரை அவரை குறைத்து மதிப்பிட் டவர்கள் அவரது பிரச்சாரத்தின் வீச்சை உணர ஆரம்பித்தார்கள். வெறும் எதார்த்தப் பேச்சு என்ற அளவோடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கு எப்படி இருக்கிறது என்பதில் கொண்டுபோய் தன் பேச்சை நிறுத்தினார். நீட் தேர்வு எதிர்ப்பில் தன் உயிரை மாய்த்துகொண்ட அனிதா பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

மெல்லிய நகைச்சுவையுடன் தென்றலைப் போல் வீசிக்கொண்டிருந்த அவர் பேச்சு, அனிதா குறித்துப் பேசுகையில் புயலாக மாற ஆரம்பிக்கும். கண்கள் சிவக்கும்; கண்ணீர்த் துளிகள் கூட வரும். அனிதா மரணத்தால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே அந்த உணர்வை அவர் மக்களிடத்தில் கடத்தினார். அதன் காரணமாக மோடிக்கு எதிரான மிகப்பெரும் அலை வீச ஆரம்பித்தது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தபோது அவரது பிரச்சாரத்தின் விளைவை எதிர்க்கட்சிகள் உணர்ந்தார்கள். அதற்கான அங்கீகாரமாகத்தான் திமுக இளைஞரணிச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும் இந்திமொழித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னணி செயல்வீரராக இருந்து வந்தார். சட்டமன்றத்தேர்தல் வந்தது. அதில் அதிமுக அரசின் அலங்கோலங்களை எடுத்துரைத்தார். இன்னொரு பக்கம் ஓர் ஒற்றைச் செங்கல்லை கையில் ஏந்தினார்.

மதுரையில் எயிம்ஸ் மருத்துவமனை வருகிறது என்று சொல்லி பல ஆண்டுகள் ஆகியும் அங்கு ஒரு செங்கல்தான் இருக்கிறது என்ற அவரது எளிய பிரச்சாரம் மக்களிடத்தில் மிக சிறப்பாக சென்று சேர்ந்தது. அந்த ஒற்றைச் செங்கல், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதற்கான அடையாளமாகத் திகழ ஆரம்பித்தது. சென்ற இடமெல்லாம் ஒற்றைச் செங்கலைத் தூக்கினாலே மக்கள் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கட்சியின் செயல்பாடு இவ்வாறு மக்களிடத்தே போய்ச் சேர்ந்தது. மாநிலமெங்கும் அலைந்து திரிந்து பிரச்சாரம் மேற்கொண்டதால் , அவர் தான் போட்டியிட்ட தொகுதியில் ஓரிருநாள் தான் பிரச்சாரம் செய்ய முடிந்தது. இருந்தாலும் அவர் வெற்றி பெற்றார்.

வெற்றிக்குப் பிறகு இப்படி ஒருவர் சுற்றமுடியுமா எனத் திகைக்கும் அளவுக்கு தன் தொகுதிக்குள் தெருத்தெருவாக வீடு வீடாக வலம் வந்தார். பிரச்னைகளுக்குக் காதுகொடுத்து தீர்த்து வைத்தார். இதன் காரணமாக அவரை முதலமைச்சர் அவர்கள் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். ஆனாலும் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என்கிற துறைதான் வழங்கப்பட்டது. கனமானதாக இல்லாமல் குறைத்து மதிப்பிடக்கூடிய துறையையே பெற்று அதில் அவர் காட்டிய வேகமும் பெற்ற வெற்றியும் ஆச்சரியத்தை அளித்தது.

உலகளாவிய போட்டிகளை நடத்தியதன் மூலம் நாடு முழுவதும் அவர் பேசுபொருளானார். தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றி கவனத்துக்கு வருகையில் அவர்களுக்கு என்ன உதவி தேவையோ அவற்றையெல்லாம் செய்துவருகிறார்.

இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டையும் சமீபத்தில் நடத்திக்காட்டினார். சுமார் ஐந்து லட்சம் இளைஞர்களை ஓரிடத்தில் திரட்டி ஒரு நாள் முழுவதும் வீற்றிருக்கச் செய்து அவர்களிடம் கட்சிக்கொள்கைக்ளைப் புகட்டுவது சாமானிய காரியமல்ல. அதற்காக அவர் மேற்கொண்ட திட் டமிடல் அபாரமானது.

ஒவ்வொரு கழக மாவட்டமாகச் சென்று அங்கே இளைஞரணி தோழர்களைத் திரட்டி அவர்களிடம் எதற்காக இந்த மாநாடு என்பதை மனதில்பதிய வைத்தார். மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு எனப் பெயர் சூட்டி அதை இளைஞர்களிடம் எடுத்துச்சென்றார். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை பைக் பேரணி நடத்தி மக்களிடம் மாநாட்டைப் பேசுபொருளாக்கினார். மாநாடும் மிக வெற்றிகரமாக நடந்தது.

அந்த வகையில்தான் வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்டார் பேச்சாளராக களமிறங்கி வலம் வரப்போகிறார். தமிழ்நாடு, புதுவையில் நாற்பதுக்கு நாற்பது என வெற்றி பெற்று மத்தியில் அமரும் ஆட்சியைத் தீர்மானிக்கும் நிலையை திமுக அடையும். அப்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முக்கியத்துவமும் அதிகரிக்கும்.

(எஸ். எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்)

எம்.எம்.அப்துல்லா

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் படிப்படியாக வளர்ந்தவர் இன்று திமுகவின் அயலக அணிச் செயலாளராக இருக்கிறார். அரசியல் மட்டுமின்றி இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். மாநிலங்களவையில் இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகளிலும் ரசிகர்கள் உண்டு. இவர் பேச எழுந்தாலே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு பி.பி. எகிறுவது வழக்கம். சமீபமாக திமுகவின் பிரச்சார முகங்களில் தவிர்க்க முடியாத இடத் துக்கு வளர்ந்திருக்கிறார். டிவி விவாதங்களில் அரிதாகவே கலந்துகொண்டாலும் சமூகவலைத்தளங்கள் மூலமாக தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கிறார்.

மனுஷ்யபுத்திரன்

சமகால தீவிர தமிழிலக்கியத்தில் தவிர்க்க முடியாத கவிஞர். நவீன இலக்கியத்தில் புழங்குபவர்கள் அவ்வப்போது கருத்துகள் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். மனுஷ்யபுத்திரனோ அரசியலிலும் களமிறங்கி ஒரு கை பார்க்கிறார். டிவி விவாதங்கள், மேடைப்பேச்சு என்று வருடம் முழுக்கவே பிஸியாக இருக்கும் கவிஞர்களுக்கு, திமுக தொண்டர்கள் மத்தியில் செம மாஸ் ரெஸ்பான்ஸ். சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவராக இருக்கும் மனுஷ்யபுத்திரன், திமுகவின் கருத்துகளை இதுவரை அக்கட்சி சென்று சேராத பல்வேறு தளங்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா வழக்கறிஞரான தமிழன் பிரசன்னா டிவி விவாதங்களில் திமுகவின் முக்கியமான முகமாக அறியப்படுகிறார். திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பிரசன்னா ஒரு விவாதத்தில் பங்கேற்கிறார் என்றால் சூடும், சுவையும் குறையாமல் கரம் மசாலாவாக விவாதம் அமையுமென டிவி விவாத ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம். இவரது மேடைப்பேச்சிலும் அனல் பறக்கும். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அதிரடியான விவாத பாணி இவருடையது. கட்சியின் இளைய தலைமுறைப் பேச்சாளர்களில் முன்வரிசையில் கட்சி இவரை வைத்துள்ளது.

ராஜீவ்காந்தி

வழக்கறிஞரான ராஜீவ்காந்தி, அரசியல் ஆர்வமிக்க குடும்ப பின்னணி கொண்டவர். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், அக்கட்சியின் தீவிர திராவிட எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் திமுகவுக்கு வந்தவர். இப்போது அக்கட்சியின் மாநில மாணவரணித் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை வலுவான ஆதரங்களோடு டிவி விவாதங்களிலும், இணையத் தளங்களிலும் எதிர்கொள்வதில் ராஜீவ்காந்தி பிரபலமாகி இருக்கிறார். வெகு அரிதாக ஆக்ரோஷம் காட்டினாலும், கட்சியின் கொள்கைகளை நியாயங்களை எதிர்த்தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆணித்தரமான ஆதாரங்களோடு பேசுவது இவர் பாணி. டிவி விவாதங்களில் பேசும்போது டிவி பார்க்கிறோமா அல்லது நீதிமன்றத்தில் இருக்கிறோமா என்று சந்தேகம் வரக்கூடிய வகையில் திறமையான வக்கீலாக தன்னுடைய கட்சிக்காக வாதாடுவார்.

பத்மப்ரியா

சுற்றுச்சூழல் ஆர்வலராக சமூகவலைத்தளங்களில் புகழ்பெற்ற பத்மப்ரியா, மக்கள் நீதி மய்யம் மூலமாக அரசியல் பிரவேசம் செய்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட் டவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறையால், திமுகவில் சேர்ந்த ஏராளமான மாற்றுக்கட்சி பிரபலங்களில் இவரும் ஒருவர். சமூகவலைத்தளங்களில் திமுகவுக்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டு, வைரல் செய்து கொண்டிருப்பவர்களில் பத்மப்ரியா முக்கியமானவர். இவருடைய ரசிகர்கள் பெரும்பாலும் 2கே கிட்ஸ் என்பதால், முதன்முறை வாக்காளர்களில் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியவராக இருக்கிறார்.

முனைவர் கோவி.செழியன்

தஞ்சை திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான இவர், பள்ளியிலேயே பேச்சாளராக மாறி, 1989ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலில் பிரச்சாரக் கூட்டத்தில் மைக் பிடித்திருக்கிறார். மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் செழியன், கடந்த பிப்ரவரி 16, 17, 18இல் நடைபெற்ற தி.மு.க.வின் மக்களவைப் பரப்புரைக் கூட்டத்தில் மூன்று இடங்களில் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பேச்சாளர். 1991 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போனபோது, சென்னை, கலைவாணர் அரங்கில் கவியரங்கத்தோடு அரங்கக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தலைமை செழியன். கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் பார்வையாளர்கள் வரிசையில்..! “என் முறை வந்ததும், தலைவர் கலைஞரே நீங்கள் ராசியில்லாதவர், ஒரு துர்பாக்கியவாதி என்று பேசினேன். நீங்கள் பேராசிரியரை நண்பராகப் பெற்றிருக்கிறீர்கள், ஆனால் துர்பாக்கியவாதி; உங்களின் கருத்துகளைப் பேசும் 200 பேச்சாளர்களைப் பெற்றுள்ளீர்கள், ஆனால் துர்பாக்கியவாதி... என அடுக்கிக்கொண்டே போனேன். இவன் என்னடா இப்படி தலைவரை வைத்துக் கொண்டு எதிர்மறையாகப் பேசுகிறானே என டிஆர் பாலு உட்பட்டவர்கள் பயந்தநிலையில், நான் சொன்னேன், தலைவரே, நீங்கள் இவ்வளவெல்லாம் பெற்றிருந்தும், நிகரில்லாத அரசியல் எதிரியைப் பெறவில்லையே; இதனால்தான் துர்பாக்கியவாதி என்றேன். தலைவர் கூலிங் கிளாஸைக் கழற்றி, நெற்றிக் கோடுகள் தெரியப் பார்த்து, மறுநாள் அறிவாலயம் வரச் சொன்னார். நேரில் போனபோது, நன்றாகப் படி என உற்சாகப்படுத்தினார்.' என்பதை நெகிழ்ச்சியோடு கூறுகிறார் செழியன்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com