ரவுடியிசம் ஒழிந்த கதை
ஜீவா

ரவுடியிசம் ஒழிந்த கதை

கடந்த  2005 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் எஸ்பியாக பதவி ஏற்றேன். அங்கு என் முன்னால் பெரும்பாலும் நில அபகரிப்பு,ரவுடியிசம் போன்ற புகார்களே அதிகளவில் குவிந்தன. சட்டம், ஒழுங்கு, பொது அமைதிக்கு  சவாலாக அமைந்ததால் என் முதல் பணி ரவுடியிசத்தை ஒழிப்பதாகவே அமைந்தது. யார் மீது பெரிய அளவில்  புகார்களாக வருகின்றன என ஆராய்ந்தோம்.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ளது அந்த பிரச்னைக்குரிய பகுதி. கடற்கரையை ஒட்டிய கிராமப் பகுதியான அது மதுராந்தகம் சப்&டிவிஷனில் வருகிறது.  அங்கு இருந்த குமரப்பா மற்றும் லோகு (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோரின் பெயர்கள்தான் அச்சுறுத்தும் அளவில் பெரிதாக அடிபட்டன. இருவரும் சேர்ந்து பெரிய அளவில் நெட்ஒர்க்காக வைத்துக் கொண்டு பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் அந்த பகுதியில் சர்வ சாதாரணமாக கொலைகளை அரங்கேற்றி வந்தனர்.

இந்த ரவுடி கும்பல் பல சமயங்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்களையும் தாக்கத் தயங்குவதில்லை. இந்த ஊரில் நாங்கள்தான் பெரிய ஆள். போலீஸ் இங்கு நுழைக்கூடாது என்கிற ரேஞ்சுக்கு குமரப்பாவும், லோகுவும் நடந்துகொண்டனர். 

அந்த கடற்கரை கிராமத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது என்றால் அங்கு காவல் கண்காணிப்பாளர் 

செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரமாவது ஆகிவிடும். ஏனென்றால் எஸ்பி அலுவலகத்தில் இருந்து அந்த கிராமம் சுமார் 90 கி.மீ. இதுவே ரவுடிகளுக்கு அவர்கள் தப்பிச்

 செல்வதற்கு ஏதுவாக அமைந்தது.  அந்த கிராமத்தில் ரவுடியிசத்தை ஒழிப்பது என்பது எனக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த முக்கிய உத்தரவாக ஆனது.

முதலில் பேசிப்பார்ப்பது என முடிவு செய்தேன். அந்த இரு ரவுடிகளை அவர்களது குடும்பத்தினருடன்  எஸ்பி அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அவர்களும் வந்தனர். ‘இது வரை உங்கள் நடவடிக்கை எப்படிப்பட்டதாகவும் இருந்திருக்கலாம். இனி உங்கள் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தால் உங்களுக்கு நல்லது. கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு. ரவுடித் தொழிலை விட்டு கவுரவமான தொழில் செய்து சம்பாதித்து வாழுங்கள். சுயதொழில் ஏற்படுத்தித் தருகிறேன். இல்லையென்றால் உங்கள் அழிவை

நீங்களே தேடிக்கொள்ள வேண்டியதுதான்' என்று அறிவுரையும், ஆலோசனையும் எச்சரிக்கையுடன் கலந்து தெரிவித்தேன். பலன் இருந்ததா என்றால் இல்லை.  தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதையே திரும்பத் திரும்பக் கூறினர்.

அவர்கள், காவல் துறை தந்த எச்சரிக்கையை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம்போல தங்கள் கத்தி, அரிவாள் என கூலிப்படை கலாசாரத்தைத் தொடர்ந்தனர்.  கோஷ்டிமோதல், வாகனங்களை கொளுத்துவது, ஆயுதங்களை கொண்டு தாக்குவது என்று அடிக்கடி தொடர்ந்து லோகுவும், குமரப்பாவும் ரவுடியிசத்தில்  ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்த வழக்குகள் பாய்ந்தன. அந்த கடற்கரை கிராமத்தின் காவல் எல்லையில் ரவுடிகளை களையெடுக்க ஹிஸ்டரி ஷீட் தொடங்கப்பட்டு பட்டியலிட்டதில் குமரப்பா, லோகு தவிர மேலும் 45 ரவுடிகள் அப்பகுதியில் இந்த இருவருக்கு கீழ் சிறுகுறு மன்னர்கள் போல செயல்பட்டு வந்தனர். அத்தனை பேருக்கும் வரலாற்றுப் பதிவேடு தயார் ஆனது.

 போகப்போக 2006 -ஆம் ஆண்டில் குமரப்பா, லோகுவின்

அட்டகாசம் அத்துமீறத் தொடங்கியது. வேலைக்கு செல்பவர்களை மிரட்டி தாங்கள் சார்ந்து இருக்கும் ‘கட்சி'க்கு நிதி என்ற பெயரில் அவர்களது மாமூல் மிரட்டல் தொடர்ந்தது. 

ஒருமுறை அந்த கடற்கரை கிராமத்தில் வசிக்கும் அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்களை கடத்திச்

சென்று பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அது தொடர்பாக

போலீசார் லோகுவின் கூட்டாளியான ராஜா என்பவரைக் கைது செய்தனர். ஆனால் அவரை லோகு கும்பல் காவல் நிலையத்துக்

குள்ளேயே புகுந்து சினிமா பாணியில் விடுவித்து அழைத்துச்

சென்றனர். இது தொடர்பாக லோகுவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் கைது ஆவதும், பின்பு பிணையில் வெளிவந்து மீண்டும் ரவுடியிசத்தில் ஈடுபடுவதும் வாடிக்கை ஆனது.

இந்நிலையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இந்த இருவரில் லோகுவின் தங்கையை, குமரப்பா காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து இருவர் தலைமையிலும் இரண்டு குழுக்களாக பிரிந்துவிட்டனர். குமரப்பா தனது வகையறாவில் ஆதரவு குறைவு என்பதால் அங்கு பலமாக திகழ்ந்த மற்றொரு வகையறாவைச்

சேர்ந்த ரவுடியுடன் சேர்ந்து தன்னை பலப்படுத்திக் கொண்டான். குமரப்பாவின் அசுர வளர்ச்சியை லோகுவால் தடுக்க முடியவில்லை.  ஒரு சமயம் குமரப்பாவை கைது செய்து அந்த கடற்கரை கிராம எல்லை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது அங்கு 23 ரவுடிகள் அடங்கிய கும்பல் வந்து காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி போலீஸ் ஜீப்பை சேதப்படுத்தி குமரப்பாவை மீட்டுச் சென்றனர். என்ன தெலுங்குப் படத்தில் வரும் காட்சி போல உள்ளதா? இதெல்லாம் நிஜமாக நடந்தது என்றால் இந்த கும்பலின் வீரியத்தைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு குமரப்பா தலைமறைவாகி விட்டான். ஆனால் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.  அதன் பிறகு ஒரு தேர்தல் வந்தது. லோகு தரப்பினர் அச்சமயம் தாங்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வீடுகளில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைகள் ஒருபக்கம்  சென்று கொண்டிருக்க, லோகு தரப்பினரும், குமரப்பா தரப்பினரும் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு, அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தனர். பற்றவைத்த திரி.. எப்போதும் வெடிக்கலாம் என்ற சூழல்.

 அது ஆகஸ்ட் 1, 2007 ஆம் ஆண்டு. குமரப்பாவுக்கு லோகு தரப்பினர் குறித்திருந்த நாள். ஒரு வழக்குக்காக மதுராந்தகம் கோர்ட்டுக்கு வந்தார் குமரப்பா. அவரை நீதிமன்ற வாசலிலேயே லோகு தரப்பினர் சூழ்ந்துகொண்டு வெட்டிக் கொல்ல முயற்சி செய்தனர். அதில் குமரப்பாவின் வலது கை விரல்கள் துண்டானதோடு தப்பித்தார். இதன் தொடர்ச்சியாக லோகுவின் தம்பி கும்பல், குமரப்பா தரப்பைச்

சேர்ந்த நபர்களின் வீடுகளை

சேதப்படுத்தியதாகவும் குமரப்பாவுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்திலுள்ள பெண்களை தகாத முறையில் பயமுறுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருந்தன.

எப்படியும் குமரப்பா மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்க பதில் தாக்குதல் நடத்தப்படும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.  2009ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி. தன் வீட்டின் வாசல் முன்பு நின்று கொண்டிருந்தார் லோகு. ஒரு  டெம்போ டிராவலர் வந்து நின்றது. அதிலிருந்து பத்துக்கும்  மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுங்களுடன் குதித்தனர். லோகு மீது பாய்ந்தனர்.  இந்த தாக்குதலில் லோகு பிழைத்துக் கொண்டான்.

இதிலிருந்து நான்கு மாதம் கழித்து, 26.04.2009- ஆம் ஆண்டு மாமல்லபுரம் அருகிலுள்ள கடும்பாடி என்ற ஊரில் தனது மாமனார் வீட்டில் இருந்த போது குமரப்பாவை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். யார் செய்திருப்பார்கள் என்று சொல்லவே தேவை இல்லை!  லோகுதான்....

குமரப்பா இறந்த பின்பு அந்த இடத்துக்கு அவரது வலதுகரம் ராஜன் பொறுப்பேற்றார். குமரப்பா கொலைக்கு பழிக்குப்பழியாக 30.05.2009-ஆம் ஆண்டு லோகுவின் தகப்பனார் கஜேந்திரன், உறவினர் அருள் என்பவரையும் ராஜன் கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில் லோகுவின் தம்பி அருண் என்பவரது அட்டகாசம் அதிகமானது. இதனால் ராஜன் தரப்பினர் அவரையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக குமரப்பா ஆதரவாளர்களான ராஜன் தரப்பினர் சிறையில் இருந்த நேரத்தில் குமரப்பாவின் சித்தப்பா மகன் வசந்த் (எ) வசந்த்ராஜ் என்பவர் கல்லூரி விடுமுறையில் பொங்கல் பண்டிகைக்காக ஊர் வந்திருந்தார். அவரை லோகுவின் தரப்பினர் அருள்கொலைக்கு பழிக்குப் பழியாக வெட்டி கையநல்லூர் ஏரியில் வீசினர். ஒரே ரத்த களரி... பழிக்குப் பழி கொலைகள்!

இந்த சமயத்தில் நான் காஞ்சிபுரத்தில் இருந்து மாறி விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டிருந்தேன். வசந்த்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக லோகுவின் கூட்டாளிகளை காஞ்சிபுரம் போலீசார் தேடி வந்தனர். அப்போது, திண்டிவனம் அருகில் உள்ள மைலம் காட்டுப்பகுதியில் லோகுவின் கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. காஞ்சிபுரம் தனிப்படை மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மைலம் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி குமார் (பெயர் மாற்றம்) என்பவனை கைது செய்ய முயன்றனர். அப்போது அவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். அதிர்ஷ்டவசமாக தப்பிய போலீசார் தற்காப்புக்காக திரும்பச் சுட்டதில் குமார் மார்பில் குண்டு பாய்ந்தது. திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தபோது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டாக தெரிவித்தனர்.

சுமார் பத்து ஆண்டுகள் அந்த பிரபல கிராமத்தை ஆட்டிப்படைத்த கொத்து கொத்தாக காய்த்துக் குலுங்கிய ரவுடியிசம், இந்த ‘துப்பாக்கிச் சூடு' சம்பவம் மூலம் முடிவுக்கு வந்தது. தற்போது அந்த கிராமம் குண்டர்கள் சத்தம் அல்ல ஒரு குண்டூசி  சத்தம் கூட அங்கு இல்லை. அவ்வளவு அமைதியான அழகிய கடற்கரை கிராமமாக திகழ்கிறது.

( அ.அமல்ராஜ் ஐபிஎஸ், தாம்பரம் காவல் ஆணையர்)

எழுத்துவடிவம் : அமீர் ஹம்சா

மே, 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com